சனி, 15 டிசம்பர், 2018

பொருளுக்கு பௌதிக இருப்பு இல்லை என்று
மறுப்பது ஆதிசங்கரரின் அத்வைதமே!
இது அப்பட்டமான கருத்துமுதல்வாதமே!
( தோழர் மதியவன் இரும்பொறைக்கு மறுப்பு)
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
இயற்கையை உள்ளது உள்ளபடி  அறிந்து
வெளிப்படுத்துவது தத்துவத்தின் கடமை.
நாம் விரும்புவது போலவோ, இயற்கை
இப்படித்தான் இருக்கும் என்று நாம் வரித்துக்
கொண்ட சட்டகத்தில் (frame)  அடங்குவதாகவோ
இயற்கை இருப்பதில்லை.

இயற்கை இப்படி இப்படி இருக்கிறது என்று
காலந்தோறும் அறிவியல் வெளிப்படுத்திக்
கொண்டு இருக்கிறது. இது ஒரு தொடர்ச்சியான
நிகழ்ச்சிப் போக்கு.  புதிய தரவுகளும், புதிய
பரிசோதனை முடிவுகளும் கிடைக்கிறபோது,
புதிய முடிவுகளை அறிவியல் வந்தடைகிறது.
இப்படித்தான் டாலமியின் (Ptolemy) புவிமையக்
கொள்கையைக் கைவிட்டு கோப்பர் நிக்கசின்
சூரிய மையக் கொள்கையை அறிவியல் ஏற்றது.
இதில் எவ்வித சுயமுரணும் இல்லை. இதனை
அறிவியலின் சுயமுரணாகப் பார்ப்பது
பிற்போக்கான நிலவுடைமைக் காலச் சிந்தனை
(feudal thought) ஆகும்.

1) பௌதிக இருப்பு உடையவை அனைத்தும்
பொருள் ஆகும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
அடித்துக் கூறுகிறது. இதைக் கல்வெட்டில்
எழுதி வைக்கவும் உறுதியுடன் இருக்கிறோம்.

2) எவையெல்லாம் பௌதிக இருப்பு உடையவை
என்றும் எமது பதிவுகளில் கூறியுள்ளோம்.
அவற்றை மீண்டும் பார்ப்போம்.

அ) நிறையுடைய பொருட்கள். உதாரணம்: எலக்ட்ரான்.
ஆ) நிறையற்ற துகள்களாக அறிவியல் கூறும்
துகள்கள். உதாரணம்: ஃபோட்டான் (photon)
இ) புலங்கள் (fields). Classical fields, quantum fields  உள்ளிட்ட
அனைத்துப் புலங்களும். உதாரணம்: மின்புலம்,
ஹிக்ஸ் புலம் முதலியன.

மேற்குறித்த மூன்றையும்  பௌதிக இருப்பு
உடையனவாகவும் அதன் காரணமாக (ipso facto)
பொருட்கள் எனவும் அறிவித்துள்ளோம். இவை மட்டுமின்றி பௌதிக இருப்பு உடைய அனைத்துமே
பொருட்கள் ஆகும் என்பதே எமது உறுதியான நிலை.

பொருள்சார் துகள்களான ஃபெர்மியான்களும்
ஆற்றல்சார் துகள்களான போசான்களும்
பொருட்களே.(All Fermions and all Bosons are matter)

நிறை என்பதை பௌதிக இருப்புக்கான
நிபந்தனையாகவோ அல்லது சோதனையாகவோ
நியூட்டன் அறிவியல் மன்றம் முன்வைக்கவில்லை.
அறிவியல் அறிந்த யாரும் அப்படி ஒரு
நிபந்தனையை முன்வைக்க மாட்டார்கள்.
அவ்வளவு ஏன், பாடத்திட்டத்தில் உள்ள
இயற்பியலை ஒழுங்காகப் படித்த ஒரு 12ஆம்
வகுப்புச் சிறுவன் கூட, நிறை இருந்தால் மட்டுமே
பௌதிக இருப்பு என்று கூற மாட்டான்.

ஆனால் பிரதிவாதி பயங்கரம்
அங்கண்ணாச்சாரியாராக மாறியுள்ள தோழர்
மதியவன் இரும்பொறை அவர்கள் நிறை என்ற
அம்சத்தை மட்டும்  பிடித்துக் கொண்டு
தொங்குகிறார்.

நிறை என்பதை பொருளின் இருப்புக்கு
நிபந்தனையாக நியூட்டன் அறிவியல் மன்றம்
முன்வைக்கிறது என்கிறார். அப்படி எந்த
நிபந்தனையையும் நாங்கள் முன்வைக்கவில்லை
என்று தெளிவு படுத்துகிறோம்.

எமது முந்தைய பதிவில் இப்படிக்
கூறியுள்ளோம்:. "மின்புலம், காந்தப் புலம் ஆகிய 
புலங்களும் (fields), எலக்ட்ரான், நியூட்ரினோ ஆகிய 
நுண் துகள்களும், கால்பந்து பூசணிக்காய் போன்ற 
பொருட்களும் ஆற்றல் துகள்களான 
போசான்களும் பொருட்களே".

மின்புலம், காந்தப் புலம் ஆகிய மரபார்ந்த
புலங்களும் (classical fields), குவான்டம் புலங்களும்
பௌதிக இருப்பு உடையவை. இதைப் பலமுறை
கூறியுள்ளோம். இந்தப் புலங்களைப்  பொறுத்த
மட்டில், நிறை (mass) என்று அறிவியல் பேசுவதில்லை.
நிலைமை இப்படியிருக்க. நிறையைக்
கொண்டிருந்தால்தான் பொருள் என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் கூறுவதாக நமது பிரதிவாதி
அவர்கள் கருதிக் கொண்டால், அதற்கு யாம்
பொறுப்பல்ல.

புலங்களுக்கு பௌதிக இருப்பு உண்டு. அவை
வெளிகாலத்தில் உணரப் படுகின்றன. எனவே
அவை பொருட்களே.என்கிறோம்.

ஆனால் நமது பிரதிவாதி அவர்கள் புலங்களைப்
பற்றிப் பேச மறுக்கிறார். தேவையே இல்லாமல்,
நிறையைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு
இருக்கிறார்.இப்படிப் பேசுவது தொடர்புரையில்
(conversation) வராது. இது soliloquy ஆகும். அதற்குப்
பதிலளிக்கத் தேவையில்லை.

இதற்கு முந்திய பதிவில் உள்ள எனது
கட்டுரையானது  "இயற்பியலே இன்னும் ஒரு
முடிவுக்கு வராதபோது பொருள் பற்றிய
வரையறையில் நிறையைச் சேர்க்க இயலாது"
என்ற தலைப்பிலானது. நிறை பற்றி ஆணித்தரமாக
அழுத்தம் திருத்தமாக எமது கருத்தைச் சொல்லி
விட்டோம்.  

இதற்கு அப்புறமும் தோழர் மதியவன் எழுதிய
பதிலில் நிறையைப் பற்றி மட்டுமே
பேசிக்கொண்டு இருக்கிறார். இது தனக்குத்தானே பேசிக்கொள்வதற்குச் சமம்.இதுதான் soliloquy.

சில பையன்கள் தேர்வில் கேட்கப்பட்ட
கேள்விக்குப் பதில்  எழுத மாட்டார்கள்.
தங்களுக்குத் தெரிந்த வேறு எதையாவது எழுதி
வைத்து விடுவார்கள். சுமேரிய நாகரிகம் பற்றி
எழுது என்று தேர்வில் கேட்டிருந்தால், தோழர்
மதியவன் போன்றவர்கள் தங்கள் ஊர் கோவில்
திருவிழா  பற்றி எழுதிவிட்டு வந்து விடுவார்கள்.
இந்த விவாதத்திலும் தோழர் மதியவன்
அப்படித்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்.

இறுதியாக வெளிகள் குறித்து. பிரபஞ்சத்தை
வர்ணிக்க இயற்பியலாளர்கள் பல்வேறு
வெளிகளை உருவாக்கி உள்ளனர். யூக்ளிட்டின்
வெளி, மின்கோவ்ஸ்கி வெளி, ஹில்பெர்ட் வெளி,
இயங்குவெளி (phase space) மற்றும் இழைக்கொள்கை
(string theory) கூறும் கலாபி -யாவ் வெளி எனப்
பல்வேறு வெளிகள் உள்ளன. ஒரு பொருளை
இவ்வெளிகளில் இதில் பொருத்துவது என்பது
இயற்பியலின் அக்கறை. தத்துவ வரையறையைப்
பொறுத்து, பௌதிக இருப்பு என்பதை மட்டுமே
யாம் யாப்புறுத்துகிறோம்.

இதை  மறுப்பது அப்பட்டமான கருத்துமுதல்வாதம்.
அப்பட்டமான அத்வைதம். பொருளுக்கு பௌதிக
இருப்பு இல்லை என்ற மதியவனின் கூற்று
பொருளுக்கு மானசீக இருப்பு மட்டுமே உண்டு
என்ற ஆதிசங்கரரின் கருத்தே ஆகும்.  

தோழர் மதியவனின் அத்வைதத்தை ஏற்பதற்கில்லை.
இது முடிந்த முடிவு.        

நியூட்டன் அறிவியல்  மன்றத்தின் அறிவியல்
புலமை, தர்க்க ஞானம் ஆகியவை குறித்து
தோழர் மதியவன் சான்றிதழ் வழங்க
முற்படுகிறார். தன்னைப் பல்கலைக் கழகத்
துணைவேந்தராக நினைத்துக் கொண்டு
அடையும் சுயஇன்பத்தைத் தவிர்த்து விட்டு,
தம் தரப்பு வாதத்துக்கு கருத்தியல் ரீதியாக
வலு சேர்க்க அவர் முயலட்டும். அதற்கு அவர்
வணங்கும் ஆதிசங்கரர் அருள்புரியட்டும்.
*********************************************** 
   
  

     


          
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக