வியாழன், 20 டிசம்பர், 2018

கடவுள் என்ற கருத்தை (idea) பருப்பொருள் (matter)
ஆக்கி விடும் நெகிழ்ச்சியான இலக்கணம்!
கடவுள் பக்தன் உறவு கருத்தா பொருளா?
தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
பெற்ற தாய்க்கும் பிள்ளைகளுக்கும் ஓர் உறவு
இருக்கிறது. உடன்பிறந்தவர்களுக்கு இடையில்
ஓர் உறவு இருக்கிறது. இவையெல்லாம் ரத்த
உறவுகள்! ரத்த உறவுகள் பொருளா அல்லது கருத்தா?
பொருள்முதல்வாதம் என்ன சொல்கிறது?

இவை தவிர குடும்ப உறவுகள் இருக்கின்றன.
கணவன் மனைவி உறவு, மாமனார் மருமகன்
உறவு, மாமியார் மருமகள் உறவு இப்படிப்பல.
இந்த உறவுகளில் பெருத்த வில்லங்கமான உறவு
மாமியார்  மருமகள் உறவு. இந்தக் குடும்ப உறவுகள்
பொருளா கருத்தா?

இவை தவிரவும் சமூக உறவுகள் உள்ளன.
அ) ஒரு ஆலையில், சூப்பர்வைசருக்கும் லேபருக்கும்
உள்ள உறவு
ஆ) ஒரு தொழிலில், உதாரணமாக, கட்டிடம் கட்டுதலில், மேஸ்திரிக்கும் சித்தாளுக்கும் உள்ள உறவு,
கொத்தனாருக்கும் இஞ்சீனியருக்கும் உள்ள உறவு
இவை எத்தகையவை? கருத்தா அல்லது பொருளா?

ஒரு அலுவலகத்தில் மேனேஜருக்கும் அவருக்குக்
கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கும் உள்ள
உறவு எத்தகையது? பொருளா கருத்தா?

ஒரு கிராமத்தில் மேல்சாதியினரும் கீழ்  சாதியினரும்
வாழ்ந்து வரும்போது, அவர்களுக்கு  இடையிலான
உறவு எத்தகையது? கருத்தா அல்லது பொருளா?

நண்பர்களுக்கு இடையிலான நட்புறவுகளை
எப்படிப் பார்ப்பது? கருத்தாகவா  அல்லது
பொருளாகவா?

மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் இடையிலான நட்பு
எத்தகையது? கோப்பெருஞ்சோழனுக்கும்
பிசிராந்தையாருக்கும் இடையிலான நட்பு
எத்தகையது? கருத்தா அல்லது பொருளா?

வைகோவை திமுகவில் இருந்து நீக்கியபோது
சில தொண்டர்கள் தீக்குளித்துச் செத்தார்களே,
அப்படியானால், தலைவனுக்கும் தொண்டனுக்கும்
உள்ள உறவு எத்தகையது?

நடிகர் விஜய் நடித்த ஏதோ ஒரு படம் வெளியாவதில்
சிக்கல் இருந்தபோது, அதைக் கண்டித்து ஒரு
ரசிகர் தீக்குளித்துச் செத்தாரே! அப்படியானால்
நடிகனுக்கும்  ரசிகனுக்கும் உள்ள உறவு எத்தகையது?
அது கருத்தா அல்லது பொருளா?

சுருங்கக் கூறின், 1) உற்பத்தி உறவுகள், 2) வர்க்க
உறவுகள், 3) சாதிய உறவுகள், 4) ஆசிரியர் மாணவர்
உறவுகள் 5) தலைவன் தொண்டன் உறவுகள்
6) மேலதிகாரி ஊழியர் உறவுகள் 7) நட்புறவுகள்
உள்ளிட்ட  அனைத்து விதமான சமூக உறவுகளை
பொருள்முதல்வாதம் எப்படிப் பார்க்கிறது?
அவை கருத்தா அல்லது பொருளா?

மேலும், 8) கணிதத்தில் வரும் சிக்கல் எண்
(complex number) என்பது பொருளா கருத்தா?
9) கோள்கள் சூரியனைச் சுற்றுவது பற்றிய
கெப்ளரின் விதிகள் (Kepler's laws of planetary motion)
பொருளா அல்லது கருத்தா?
10) குவான்டம் கொள்கையும் ஐன்ஸ்டினின்
சார்பியல் கொள்கையும் பொருளா அல்லது
கருத்தா?

11) கோட்பாடுகள், கருத்தாக்கங்கள், சித்தாந்தங்கள்
ஆகியவை கருத்தா அல்லது பொருளா? அதாவது
காந்தியம், அத்வைதம், மார்க்சியம் ஆகிய
தத்துவங்கள் பொருளா அல்லது கருத்தா?

கேள்விகள் நீளக்கூடும். இந்த 11 கேள்விகளுடன்
நிறுத்திக் கொள்வோம். இக்கேள்விகள் பதிலுக்குக்
காத்திருக்கின்றன.

இவை அனைத்தும் வாசகர்கள் கேட்ட கேள்விகள்.
நியூட்டன் அறிவியல் மன்றம் அவற்றைத்
தொகுத்துள்ளது. அவ்வளவே. மார்க்சியம்
கற்றவர்கள் விடையளிக்கலாம்.

12ஆவதாக ஒரு கேள்வி இருக்கிறது. அது
முக்கியமான கேள்வி. கடவுளுக்கும் பக்தனுக்கும்
உள்ள உறவு எத்தகையது? அது பொருளா அல்லது
கருத்தா?

மனித சிந்தனைக்கு வெளியே புறவயமாக (objective)
உள்ளவை பொருளே ஆகும் என்கிறது
பொருள்முதல்வாதம். அண்ணன் தம்பி உறவு
என்பது மனித சிந்தனைக்கு வெளியே
புறவயமாக உள்ளது. எனவே அது பொருளே
என்கின்றனர் பொருள்முதல்வாதம் அறிந்தோர்.

கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவும்
புறவயமாக உள்ளதுதானே! அப்படியானால்
அதுவும் பொருள்தானே என்கின்றனர் சிலர்.
இல்லை, அது பொருளாகாது என்று அவசரமாக
மறுக்கிறார் ஒரு பொருள்முதல்வாதி.

அது எப்படி?  எங்கோ இருக்கும் ஐயப்பனை வணங்க
ஒரு மண்டலம் விரதம் இருந்து  இருமுடி கட்டி
சபரிமலைக்குச் செல்கிறானே பக்தன்! அழகான
பெண்கள் தங்கள் அழகை  இழந்து திருப்பதியில்
போய் மொட்டை அடித்துக் கொள்கிறார்களே!
வேண்டுதல், நேர்த்திக்கடன், அலகு குத்துதல்,
தீச்சட்டி எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல்,
தேர் இழுத்தல் என்றெல்லாம் உள்ள நிகழ்வுகள்
புறவயமாக இருந்து நம்மைப் பாதிக்கின்றனவே!

கோவில் நுழைவுப் போராட்டங்கள், சேரித்
தெருவுக்குள் தேர் வர வேண்டும் என்று போராட்டங்கள்,
தமிழில்  அர்ச்சனை என்று போராட்டங்கள்
என்று பலவும் நம்மைப் பாதிக்கின்றனவே!
மேற்கூறிய நிகழ்வுகள் புறவயமாக இருந்து
நம்மைப் பாதிக்கவில்லையா?

அப்படியானால் கடவுளுக்கும் பக்தனுக்கும்
உள்ள உறவு பொருள்தானே! அது எப்படி
கருத்தாகும்? சாதியம் (casteism) என்பது பொருள்
என்றால், கடவுளும் பொருள்தான்! சாதி என்பது
பொருள், ஆனால் கடவுள் என்பது கருத்தா?
இது என்ன நியாயம்? தலைக்கு ஒரு சீயக்காய்,
தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று சிலர் தங்களின்
வாதத்தை ஆவேசமாக முன்வைக்கின்றனர்.

புறவயமாக இருப்பதெல்லாம் பொருள் என்று
முடிவு கட்டும்போது, கடவுளுக்கும் பக்தனுக்கும்
உள்ள புறவயமான உறவு, கடவுளையும் பொருளாக்கி
விடுகிறது. இது தர்க்கத்தின் தவிர்க்க இயலாத
நீட்சி ஆகும்.

கடவுள் என்பது வெறும் கருத்தே. கடவுள் என்பது
ஒருபோதும் பொருள் அல்ல. ஆனால் பொருள்
என்பதற்கான வரையறை நெகிழ்வாக இருப்பதால்
கடவுள்  என்னும் கருத்தும் பொருளாகி விடுவது
ஒரு பெருங்குறை.

எனவேதான் நியூட்டன் அறிவியல் மன்றம்
பொருள் என்றால் பௌதிக இருப்பு இருக்க
வேண்டும் என்று முன்வைக்கிறது. பௌதிக
இருப்பு குறித்து இன்னும் விரிவாக  அடுத்துக்
காணலாம்.
***************************************************

விவாதத்தில் வாசகர்கள் எழுப்பும் கேள்விகள்!
கடவுள் என்பது வெறும் கருத்தே, பொருள் அல்ல!
---------------------------------------------------------------------------------
சாதியம் குறித்தும் சாதி என்பது பொருளா கருத்தா
என்பது பற்றியும் கடந்த சில நாட்களாக
விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்திற்கு
மூல காரணம் தோழர் தீக்கதிர் முருகேசன்.
சாதி என்பது பொருள்முதல்வாதம் ஆகும்  என்று
கூறி இருந்தார் தீக்கதிர் குமரேசன்.

நானும் தோழர் தியாகு அவர்களும் குமரேசனை
மறுத்து சாதி பொருள்முதல்வாதம் ஆகாது
என்று எழுதினோம். தொடர்ந்து பருப்பொருள்
பற்றி எனக்கும் தியாகு அவர்களுக்கும் விவாதம்
நடந்து வருகிறது.

இந்த விவாதங்களில் யாரும் எதையும் நிறுவவில்லை.
விவாதங்களில் உற்சாகமாகப் பங்கேற்கும் பல
தோழர்கள் தங்கள் கேள்விகளை முன்வந்து பதில்களைக் 
கோருகிறார்கள்.கடவுளுக்கும் பக்தனுக்கும்
உள்ள உறவு புறவயமாக இருக்கும்போது, கடவுள்
என்பது பொருள்தான் என்று ஒரு தோழர்
கேள்வி எழுப்புகிறார். அதற்கு விடையளிக்க
வேண்டும்.

விவாதம் நடக்கிறது..உரையாடல் தொடர்கிறது.
இதுவரை யாரும் எதையும் நிறுவவில்லை.
தாங்கள் அருள்கூர்ந்து இப்பொருளில் சில
நாட்களாக நான் எழுதி வரும் பதிவுகளைப்
படித்தால், தங்களுக்கு இந்த விவாதம் பற்றிய
ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கக் கூடும்.

கடவுள் என்பது கருத்தே. அது ஒருபோதும்
பொருளாக இருக்கவில்லை என்பதே எனது
நிலைபாடு.
---------------------

      
 



  





     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக