லெனினை கொண்டாடுவதும் - பாசிசத்தைக் கொண்டாடுவதும் ஒன்று தான்!
-----------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------
மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வடிவத்தில் கட்சி கட்டிக் கொள்ள வேண்டும்; அதுதான் சரியானது. ஆனால், இதற்கு மாறாக தனி நபரோ, சிறுகுழுவோ கொள்கை முடிவெடுத்து மக்களை அடிமையாக நடத்தும் வடிவத்தில் கட்சி கட்டுவதற்கு கோட்பாடு ரீதியான வடிவம் கொடுத்தவர்தான் லெனின்.
லெனின் இப்படி தவறான முடிவை எடுத்து, அதை நியாயப்படுத்துவதற்கு மூல காரணமாக இருந்தவர் மார்க்ஸ். சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தனிச்சொத்துடைமையை ஒழித்து ‘பொதுவுடைமை’ கொண்டு வரவேண்டும் என்கிறார் மார்க்ஸ். மார்க்ஸ் கூறும் ‘பொதுவுடைமை’ என்பது ஒரு கொள்கை முடிவாகும்.
இந்த கொள்கை முடிவு எந்த அரசியலமைப்பு சட்ட வடிவத்திற்குள் உருவாகும் என்பது குறித்து மார்க்ஸ் தெளிவாக எந்த வரையறையையும் கொடுக்கவில்லை. (இங்கு நான் அரசியலமைப்பு சட்ட வடிவம் என்று குறிப்பிடுவது ஒவ்வொரு தனி நபரும் தொடர்ச்சியாக சம மதிப்பீட்டில் அரசியல் பொருளாதாரம் குறித்து முடிவெடுக்கும் உரிமைப் பங்கீடு பற்றியதாகும்.)
வெறும் கொள்கையை மட்டும் கூறிவிட்டு அரசியலமைப்பு சட்ட வடிவம் பற்றி மார்க்ஸ் தெளிவுபடுத்தாததால் எதேச்சதிகார வடிவத்தில் லெனின் கட்சி கட்டுவதற்கு அது உதவியாகி விட்டது. கட்சி என்பது அரசு வடிவத்தின் முன்னோடியாகும். ஆனால் லெனினோ புரட்சிகர கட்சி என்றால் அதற்கு புரட்சிகர கொள்கை வேண்டும் என்கிறார்.
லெனின் குறிப்பிடும் புரட்சிகர கொள்கை என்பது தனிநபரோ, சிறு குழுவோ எடுப்பதாகும். இப்படி எடுக்கப்பட்ட கொள்கை முடிவை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் எதேச்சதிகாரமாக மேலிருந்து கட்சி கட்டப்படுகிறது. இதனால் அரசியல் பொருளாதாரம் குறித்து முடிவெடுக்கும் உரிமையிலிருந்து மக்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
எதேச்சதிகார வடிவத்தில் கட்சி கட்டுவதற்காக ‘பொதுவுடைமை’ என்ற கொள்கையை லெனின் கையில் எடுத்தார். அதன் நீட்சியாக மற்றவர்கள் இனம், மதம், ஜாதி, மொழி உள்ளிட்ட காரணங்களைக் காட்டி எதேச்சதிகாரமாக கட்சி கட்ட அது உதவி செய்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராவது என்பது ஏதோ புனிதமானது போலவும், அது உயர்ந்த நிலை என்பது போலவும் கருத்தியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் கமிட்டிக்கு கட்டுப்பட்டு மக்களிடம் தங்களது உணர்வுகளுக்கு மாறாக முக்கிக் கொண்டு பொய் பேசுவதுதான் அரசியல் நாகரிகம் என்ற கருத்தியல் கட்டமைப்பையும் கட்சி மார்க்சியவாதிகள் உருவாக்கியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியில் பஞ்சம கமிட்டி உறுப்பினராக (பரிச்சார்த்தக் குழு அல்லது கருக்குழு) சேர்ந்த ஒருவரை கட்சி உறுப்பினராக தரம் உயர்த்துவது யார்? அவருக்கான தகுதி என்ன? அவருக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது? என்று யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை.
கடவுளை புனிதமாகக் காட்டி அரசியலில் எதேச்சதிகாரமாக செயல்படுவது ஒரு வகை என்றால், கட்சி உறுப்பினர் என்பதையே புனிதமாக காட்டி அரசியலில் எதேச்சதிகாரமாக செயல்படுவதை மற்ெறாரு வகையாக்கி விட்டார்கள் மார்க்சியர்கள்.
ரகசியமாக கூடி குசு குசு என்று பேசுவதன் மூலம், தங்களை உழைக்கும் மக்களை விட மேலானவர்களாக கட்சி மார்க்சியர்கள் கருதிக் கொள்கிறார்கள். இடைக்கமிட்டியில் ரகசியமாக கூடி குசு குசு என்று பேசுகிறவர்கள், மாவட்ட கமிட்டிக்கு சென்று குசு குசு என்று பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மாவட்ட கமிட்டியில் உள்ளவர்கள் மாநிலக் கமிட்டிக்கும், மாநில கமிட்டியில் உள்ளவர்கள் தேசிய கமிட்டி அல்லது அகில இந்திய கமிட்டிக்கு சென்று குசு குசு என்று பேச வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இது ஒரு இடம் மாறும் மனு தர்ம கோட்பாடு போன்று செயல்படுகிறது.
ரகசியமாக கூடி குசு குசு என்று பேசுவதை கட்சி மார்க்சியர்கள் ‘சுய இன்பத்தை’ போல் அனுபவிக்கின்றனர். ஆளுகின்ற அரசு மீது மக்கள் மத்தியில் விமர்சனம் செய்ய உரிமை உள்ள ஒரு நாட்டில், மக்களுக்காக கட்சி கட்டுகிறேன் என்று கூறி விட்டு, மார்க்சியவாதிகள் தாங்கள் கட்டும் கட்சியில் விமர்சனம், சுயவிமர்சனத்தை அறைக்குள் கூடி குசு குசு என்று பேசுவதுதான் சரி என்று கூறுகின்றனர். இதனால் இதை ‘சுய இன்பத்தை’ போன்றது என்று விமர்சிப்பதில் தவறில்லை.
உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து கண்டுபிடிப்புகளும் உழைப்பவனாலேயே கண்டுபிடிக்கப்பட்டது என்பது தான் எதார்த்த உண்மையாகும். ஆனால் லெனினோ ‘உழைப்பவனுக்கு அறிவு குறைவு’ என்று கண்டுபிடித்திருக்கிறார். லெனினின் இந்த ‘அரிய’ கண்டுபிடிப்பை எழவெடுத்த தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று மார்ச்சியவாதிகள் எரிச்சல் அடைகின்றனர்.
ஸ்வர்திலோவ் பல்கலைக்கழகத்தில் அரசு எனும் தலைப்பில் லெனின் உரையாற்றும்போது, அரசு வடிவம் சிக்கலானது என்று கூறி மழுப்புகிறார். அரசு வடிவத்தை விளக்கினால் தன்னுடைய எதேச்சதிகாரம் அம்பலப்பட்டு விடும் என்று கூட தெரியாதவரா லெனின்?
மக்களை அடிமையாக நடத்த லெனின் உருவாக்கிய ‘ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு’ எதேச்சதிகாரம் என்பதால் அதை கடைபிடிப்பவர்கள் யாரும் ஒற்றுமையாக இருக்க முடியாது. தங்களுக்குள்ளேயே பல்வேறு குழுக்களாக பிரிந்து கொண்டு துரோகி, திரிபுவாதி, கலைப்புவாதி, ஓடுகாலி, போலி மார்க்சியவாதி, ஏகாதிபத்தியக் கைக்கூலி, வர்க்க விரோதி என்று மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொண்டும், அடித்துக்கொண்டும் சாவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
கொள்கை முடிவு என்பது ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்டதாகும். லெனின் உருவாக்கிய ‘ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு’ அடிப்படையில்தான் உலகம் முழுவதும் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்படுகிறது. இப்படி கட்டப்பட்ட கட்சியிலிருந்து சிறு குழுவாக அல்லது சிறுபான்மையாக பிரிந்து வெளியே வருபவர்கள் கட்சி ஜனநாயகப் பூர்வமாக கட்டப்படவில்லை என்று கூற மாட்டார்கள். மாறாக கொள்கை தான் பிரச்சினை என்பார்கள். இவர்களுக்கும் பதவி கொடுத்திருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டார்கள். நான் மீண்டும் கூறுகிறேன் கொள்கை முடிவு என்பது ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்டதாகும். கொள்கையை காரணம் காட்டி கட்சி உடைய முடியாது.
மேல் கமிட்டிக்கு கீழ் கமிட்டி கட்டுப்பட வேண்டும் என்கிறார் லெனின். மத நூல்களை வைத்துக் கொண்டு அதில் உள்ள ெகாள்கையை பாதுகாக்கிறேன் என்ற பெயரிலும், தங்களை மேலானவர்கள் என்று கூறிக் கொண்டும் பலர் எதேச்சதிகாரமாகக் கட்சி கட்டுவது ேபால், மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களை வைத்துக் கொண்டு அதில் உள்ள கொள்கையை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் தங்களை மேலானவர்களாக அல்லது மேல்கமிட்டியாக வரையறுத்துக் கொள்வதைத்தான் மேல் கமிட்டிக் கீழ் கமிட்டி கட்டுப்பட வேண்டும் என்கிறார் லெனின்.
ஒரு மலை கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்றுமையாக, சமத்துவத்துடன் வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த மலை கிராமத்தில் மார்க்சியவாதி புகுந்தால் என்ன ஆகும் தெரியுமா? அங்குள்ள மக்களில் ஒரு பகுதியை பிரித்து அந்த ஒரு பகுதிக்குள் மேல் கமிட்டி கீழ் கமிட்டி உருவாக்கி விடுவார்கள். மேலும் உழைப்பவனுக்கு அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு அறிவு புகட்ட ேவண்டும் என்றும் பயிற்சி கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அறைக்குள் எப்படி பேச வேண்டும், மேல்கமிட்டிக்கு கட்டுப்பட்டு தங்களது உணர்வுகளுக்கு மாறாக மக்களிடம் எப்படி பொய் பேச வேண்டும், நிர்வாகிகளை எப்படி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கற்றுக் கொடுப்பார்கள்.
இப்படி அந்த மலைவாழ் கிராமத்தில் உருவாகிய மார்க்சியவாதிகள், சில ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்குள் நிலவும் முரண்பட்ட கருத்தால், குழுக்களாக பிரிந்து கலைப்புவாதி, துரோகி, ஓடுகாலி, திரிபுவாதி, போலி மார்க்சியவாதி, ஏகாதிபத்திய கைக்கூலி, வர்க்க விரோதி என்று குற்றம் சாட்டிக் கொண்டும் அடித்துக் கொண்டும் சாக ஆரம்பித்து விடுவார்கள். சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் இருந்த அந்த மலை கிராமம் அலங்கோலமாக காட்சியளிக்க ஆரம்பித்துவிடும்.
கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசக்கூடாது என்று சமூக வலை தளங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுதி வருவதை நாம் பார்க்கிறோம். இவர்கள் கட்சியையே ‘தனிச்சொத்துடைமையாக மாற்றியதை’ இது வெளிப்படையாகவே காட்டுகிறது.
அரசின் வடிவத்தோடு இணைத்து அரசின் பொருளாதாரக் கொள்கையை மார்க்ஸ் ஆய்வு ெசய்திருந்தால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் புதிய, புதிய உற்பத்தி உறவுகள் பிறக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டார்.
மார்க்ஸ் அரசு வடிவத்தை கூறாமல், வெறும் கொள்கையை மட்டும் கூறிவிட்டு சென்றதும், அதன் தொடர்ச்சியாக எதேச்சதிகார வடிவில் கட்சி கட்ட லெனின் கோட்பாடு உருவாக்கியதும் உலகம் முழுவதும் கொள்கையின் பெயரில் பாசிஸ்ட்டுகள் உற்பத்தியாவதற்கு வழிவகை செய்தது. பொதுவுடைமை, இனம், மதம், ஜாதி, ெமாழியின் பெயரில் உலகம் முழுவதும் பாசிஸ்ட்கள் உற்பத்தியாவதை மார்க்சியத்திலிருந்தான் பார்க்க வேண்டும்.
மார்க்ஸ் காலத்திற்கு முன்பு கடவுளின் பெயரால் எதேச்சதிகார முடியாட்சி இருந்தது. அவருக்கு பிறகு பல்வேறு கொள்கையின் பெயரிலும் எதேச்சதிகார அரசு உருவாக ஆரம்பித்து விட்டது.
மக்களின் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடமிருந்து பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பிரதிநிதிகளை மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வடிவத்தில் கட்சி கட்டினால், அது ஒரு கட்டத்தில் அரசு வடிவமாக உருமாறிவிடும். அரசியல் பிரதிநிதிகள் மக்களின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வெறும் ஊழியர்களாக மாற்றப்படுவதால் அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்ட மாட்டார்கள்.
இன்று கொள்கையின் பெயரில் அரசியல் கட்சிகள் எதேச்சதிகாரமாக கட்டப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினார்கள். அதேபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடக்கும் போராட்டத்தில், அங்குள்ள மக்கள் அரசியல் கட்சியை ஒதுக்கிவைத்து விட்டு, தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும். இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து மக்களின் உணர்வுகளை தொடர்ச்சியாக பிரதிபலிக்கும் வடிவத்தில் கட்சி கட்ட வேண்டி இருக்கிறது.
அரசியல் கட்சிகளை ஒதுக்கிவைத்து விட்டு மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள் என்றால், அங்கு ஜனநாயகப்பூர்வமாக கட்சி கட்டப்படவில்லை என்று அர்த்தம். இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் மார்க்சியவாதிகள் தன்ெனழுச்சி போராட்டத்தை ஒரு பக்குவமற்ற நிலையில் மக்கள் இருப்பதாக மட்டுமே குறுக்கிப் பார்க்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக