புதன், 19 டிசம்பர், 2018

தவ்ஹீத் ஜமாத் ஜெய்னுலாப்தீன்களும்
மார்க்சிய ஜமாத் ஜெய்னுலாப்தீன்களும்!
பருப்பொருளின் வரையறையில் பௌதிக இருப்பு!
ஆதிசங்கரரின் இரண்டாவது மரணம்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
பொருள்முதல்வாதம் பருப்பொருள் (matter) என்று
சொல்கிறது. மனித மனத்திற்கு வெளியே இருக்கும்
அத்தனையும் பருப்பொருள் என்று சொல்கிறது.
இதற்கு நிகராக இயற்பியல் கூறும் பிரபஞ்சம் (universe)
என்பதைக் கருதலாம்.

பூமி சூரியன் சந்திரன் கோள்கள் உள்ளிட்ட நமது
சூரியக் குடும்பம் மட்டுமின்றி பிற காலக்சிகள்
நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியது
பிரபஞ்சம்.

பிரபஞ்சம் (universe) என்பதற்கு அறிவியல் கூறும்
வரையறை  அற்புதமானது. "Whatever that exists is universe"
என்பதே பிரபஞ்சம் என்பதன் வரையறை.
எதெல்லாம் இருக்கிறதோ, எதெல்லாம் நின்று
நிலவுகிறதோ, எதெல்லாம் இருப்பை உடையதோ
அதெல்லாம் சேர்ந்ததே பிரபஞ்சம். இந்த
வரையறையின் மூலம்   பெரும் மேதைமையின்
உச்சத்தைத் தொட்டு விடுகிறது இயற்பியல்.

ஒரு வரையறை என்பது தேவையானதும்
போதுமானதுமான நிபந்தனைகளை
(necessary and sufficient) நிறைவு செய்திருக்க வேண்டும்
என்கிறது கணிதம். பருப்பொருள் பற்றிய
லெனினிய வரையறையானது "தேவையானது"
(necessary) என்ற நிபந்தனையை நிறைவு செய்கிறது.

லெனினிய வரையறையுடன்  "பருப்பொருளுக்கு
பௌதிக இருப்பு இருக்க வேண்டும்" என்ற
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் வரையறையைச்
சேர்க்கும்போது "போதுமானது"(sufficient) என்ற
நிபந்தனை நிறைவு செய்யப் படுகிறது.

இப்போது பருப்பொருளின் இலக்கணம் பின்வருமாறு
அமைந்து முழுமை பெறுகிறது. "பருப்பொருள்
என்பது மனித மனத்திற்கு வெளியில் சுதந்திரமான
புறநிலை யதார்த்தமாக இருப்பதும் பௌதிக
இருப்பைக் கொண்டிருப்பதும் ஆகும்". இந்த
வரையறையானது தேவையானது மற்றும்
போதுமானது (necessary and sufficient) என்ற இரண்டு
நிபந்தனைகளையும் நிறைவு செய்து
பருப்பொருளின் வரையறையை
கூர்மையானதாகவும் கறார்த்தன்மை
உடையதாகவும் ஆக்கி விடுகிறது.
(The definition is sharp and rigorous). பருப்பொருளின்
வரையறையில் உள்ள தாராளவாதம் முடிவுக்கு
வந்து விடுகிறது. 

இந்த வரையறைக்குப் பின்னர், எதை 
வேண்டுமானாலும் பொருளின் கணக்கில்
சேர்க்கலாம் என்ற நிலைமை முடிவுக்கு
வந்து விடுகிறது. பட்டா ஒருவன் பெயரில்
என்றாலும் பாத்தியதை பலருக்கு என்ற
அவலம் முடிவுக்கு வருகிறது. இனிமேல்
பட்டா எவருக்கோ அவருக்கு மட்டுமே
பாத்தியதை என்பது உறுதி செய்யப்பட்டு
விடுகிறது.

வள்ளி தெய்வானை சமேதராய் முருகன்,
ராதா கிருஷ்ணன், ஆதி சிவன்,பெருமாள்,
கர்த்தர், கர்த்தபர், அல்லா, குல்லா, முல்லா,
புல்லா என்றுள்ள அனைத்து விதமான
கசடுகளும் (all scums) இனி யார் எவராலும்
பொருளாகக் கருதப்பட முடியாது.

மானசீகமான இருப்பை மட்டுமே
(presence in one's mind only) கொண்டிருக்கிற கடவுள்கள்
தேவதைகள் பேய் பிசாசுகள் முனிகள் உள்ளிட்ட
யாவும் பருப்பொருளின் மாளிகையில் இருந்து
நிரந்தரமாக அடித்து விரட்டப் படுகின்றன.

"பொருள் என்னடா பொருள்? பொருளுக்கு
மானசீக இருப்பு மட்டுமே உண்டு" என்று
கொக்கரித்த ஆதிசங்கரர்  தலைமறைவாகி
விடுகிறார்.

பொருள்முதல்வாதமானது பௌதிக இருப்பு
இல்லாத விஷயங்களையும் பொருளாகக்
கருதுகிறது; அந்த விதத்தில் பொருள்முதல்
வாதம் ஓர் அரை அத்வைதமே (semi Advaida) என்று
அத்வைதிகள் இனி வாதம் செய்ய முடியாது.

எஸ் என் நாகராஜன், ஞானி போன்றோர்,
புதிய கான்டியவாதிகள் (Neo Kantians) மற்றும்
கான்டிய விலகல் (Kantian deviation) உடையவர்கள்
இத்தியாதி நபர்களின் தர்க்கம் தூக்குப்
போட்டுக் கொள்கிறது. சுருங்கக் கூறின்,
ஆதிசங்கரர் இரண்டாம் முறையாக இறந்து
விடுகிறார்.

பௌதிக இருப்பு என்னும் இந்த வரையறை
முற்ற முழுக்க நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு
மட்டும் சொந்தமானது. It is our/my brain child).
இதற்கு வேறு எவரும் சொந்தம் கொண்டாடி
விடக்கூடாது.

பொருளின் பௌதிக இருப்பு என்னும் எமது
வரையறை பொருள்முதல்வாதத்திற்கு ஒரு
பங்களிப்பு என்பதை நியூட்டன் அறிவியல்
மன்றம் மிகுந்த  தன்னடக்கத்துடன் தெரிவித்துக்
கொள்கிறது. இதை peer reviewக்கு சமர்ப்பிக்கிறேன்.
இது தவறு என்றால், கருத்தியல் ரீதியாக
எவரும் அதை நிரூபிக்கலாம்.

கணித மொழியில் இந்த வரையறை ஒரு
தேற்றமாகக் கருதப்படும் (a theory). சமகால
அறிவியலில் தற்போது ஒரு மரபு நிலவுகிறது.
எவர் ஒருவர் எந்த ஒரு அறிவியல் கொள்கையை
முன்வைத்தாலும், அது FALSIFIABLE ஆக
இருக்க வேண்டும்;(Any scientific theory must be falsifiable)
எனவே எந்தெந்தச் சூழலில் அக்கொள்கை
தவறாகி விடும் என்பதையும் அக்கொள்கையை
முன்வைப்பவர் கூறவேண்டும்.

எனவே இந்த மரபைப் பின்பற்றி, பின்வரும்
சூழலில் பௌதிக இருப்பு என்னும் எமது
கொள்கை தவறாகி விடும் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.
1. மானசீக இருப்பு உடையதும் பொருள்
 என்பதற்கு சான்று கிட்டும்போது.
2. பௌதிக இருப்பு இல்லாததும் பொருள்
என்பதற்குச் சான்று கிட்டும்போது.

முற்றிலும் அறிவியல் வழியில் எமது வரையறையை
முன்வைக்கிறோம். வசவுகள், அவதூறுகளைத்
தவிர்த்து விட்டு, கருத்தியல் ரீதியாக எமது
வரையறையைத் திறனாய்வு செய்யலாம்.

மார்க்சியம் என்பது மதமல்ல. மார்க்சியர்கள்
என்பவர்கள் ஜெய்னுலாப்தீன்கள் அல்லர்.
அல்லாஹு அக்பர் என்பது போல் மார்க்சுஹு
அக்பர் என்று கோஷமிடுவது மார்க்சியம் அல்ல.
மார்க்சிய அமைப்புகள் ஜமாத்தும் அல்ல. இந்தப்
புரிதல் உடையவர்கள் மட்டுமே மார்க்சியர்கள்.

எமது வரையறை மார்க்சியத்திற்கு திருத்தம்
முன்மொழிவதல்ல. மாறாக பொருள்முதல்
வாதத்தில் ஒரு வரையறையைச் சேர்க்கிறோம்.
பொருள்முதல்வாதம் என்பது மார்க்சியம்
பயன்படுத்தும் ஒரு கருவி (tool). இந்தக் கருவியை
நன்கு சாணை பிடித்துக் கூர்மையாக்கி
மார்க்சியத்திடம் ஒப்படைக்கிறோம். இது
மார்க்சியத்துக்கு எதிரானது என்ற கூச்சல்கள்
அர்த்தமற்றவை; விடலைத் தனமானவை.

பொருள்முதல்வாதம் ஓர் அறிவியல் தத்துவம்.
இத்தத்துவத்திற்கு ஓர் அறிவியல் வரையறையைச்
சேர்ப்பதற்கு நியூட்டன் அறிவியல் மன்றத்திற்கு
உரிமையும் அருகதையும் உண்டு.
***************************************************    


2 கருத்துகள்:

  1. 1. பூதப்பொருளும் பூதயிருப்பும் (Physical Objects and Physical Existence):

    மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பூதப்பொருட்களைக் (physical objects) கருதுகையிலும் கையாள்கையிலும், கூடவே அவற்றின் பூதயிருப்பையும் (physical existence) தன்னியல்பாக - தெரிந்தோ தெரியாமலோ - கணக்கிற்கொள்ளவே செய்கின்றனர். அதாவது, பொருட்களைக் குறித்த தமது எண்ணங்களுக்கும் கருத்துகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் விருப்புவெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டு, அவற்றுக்கெல்லாம் கட்டுப்படாமல் புறத்தே இடப்பொழுதினூடே பொருட்கள் தாமாகவே நிலவுவதை மக்கள் தமது நடைமுறையில் நாள்தோறும் அறியநேர்கின்றனர். மிகக் கண்டிப்பான அகநிலைக் கருத்துமுதலியர்களாக (subjective idealists) தம்மைக் கருதிக்கொள்வோரும்கூட, அவர்தம் உணவு உறைவிடம் உடல்நலம் உறவுகள் உடைமைகள் என்பனவாகிய இன்றியமையா வாழ்க்கைத் தேவைகளின்போது தமது புலனுணர்வுகளுக்குள்ளேயே அடைந்து புதைந்துகிடக்காமல், வேறுவழியின்றி, புறவுலகையும் பொருளிருப்பையும் ஏற்று நாடிப் பயனுறவேண்டிய நிலைக்கே தள்ளப்படுகின்றனர்; அத்தகையோர், ஒருபுறம், தமது கண்ணோட்டத்தோடு தாமே முரண்படுவதைக்கூட அறியாத அசட்டு மண்ணாந்தைகளாகளாகவும், மறுபுறம், அப்படியே அறிந்தாலும் அது குறித்த கூச்சம் கவலை குற்றவுணர்ச்சி வியப்பு திகைப்பு கேள்வி தற்சிந்தனை தன்னாய்வு அறிவுநேர்மை என ஏதுமற்ற எருமைத்தோல் கயவர்களாகவும் மட்டுமே நீடிக்கமுடியும்.

    பூதப்பொருட்கள் யாவும் வெளியில் (in relative space) நீண்டு அகன்று ஆழ்ந்து உடலம் நிரம்புவதும், காலத்தில் முன்னோக்கி நீடிப்பதுமான தவிர்க்கவியலா வெளிப்பாட்டு வடிவங்களில் பூதயிருப்பைக் கொண்டிருக்கின்றன. பூதயிருப்பற்ற பூதப்பொருள் இருக்கவியலாது, ஏனெனில் பூதயிருப்பு பூதப்பொருளின் பிரிக்கவியலாத உள்ளார்ந்த (innate and intrinsic) பூதத்தன்மையாகும். சுருங்கச் சொல்வதெனில், பூதப்பொருளும் அதன் பூதயிருப்பும் ஒன்றேயாகும் (one and the same). ஆகவே பூதப்பொருள் என்பதிலேயே அதன் பூதயிருப்பும் மறைவாக (implicitly) அடங்கியிருக்கும்.

    ---

    2. புறநிலை உண்மை (Objective Reality):

    உண்மை (Reality) என்பது பூதப்பொருள் மனம் (தன்னுணர்வு, கருத்துகள்) ஆகியவற்றின் உள்ளபடியான இருத்தலாகும் (as-it-is existence). அதாவது, உண்மையானது பூதயிருப்பாகவும் மனவிருப்பாகவும் (mental existence) இருவகைப்பட்டது. பூதப்பொருள் மனத்தின் தீர்மானிப்பு ஏதுமின்றி தனிமுழுமையாய் தனிமுதலாய் (absolute) தன்போக்கில் நிலவுகிறது. மாறாக, உயரொழுங்குற்ற பூதப்பொருளின் - உயிர்ப்பொருளின், மூளையின் - இயக்கமே மனமாகும் (mind is the function of the highly organised bio-matter; the brain). மூளை என்ற பூத அடிமானமின்றி (physical substatum), மூளையின் பூதத்தன்மையான உடற்செயலியற் கூறுகளும் புரிகைகளுமின்றி மனம் நிலவமுடியாதெனினும், மனம் எவ்வகையிலும் பூதப்பொருளோ அல்லது உடற்கூறோ அன்று. உயர்வளர்ச்சியுற்ற உயிர்ப்பொருளானது தான் உள்ளிட்ட தனது பூதச்சூழலை, புலனுணர்வு புலனறிவு கருத்து ஆகிய குறியீடுகளின்வழி படம்பிடித்து பதிந்து அறிந்து புரிந்து பொருள்கொண்டு உணர்ச்சியுற்று உரிய எதிர்வினையாற்ற உந்துவதாகிய ஓர் உயரியக்கமே மனமாகும். திட்டவட்டமாகச் சொல்வதெனில், புலனுறுப்புகள் (sense organs) மூளையில் தோற்றுகிற புலனுணர்வு-புலனறிவு (sensual perceptions) எனும் முதற்குறியீட்டமைப்பும் (first signal system), முதற்குறியீடுகளின் குறியீடுகளாய் அமைகிற சொற்களாகிய (மொழி, பேச்சு) இரண்டாம் குறியீட்டமைப்புமே (second signal system as the signal of first signal system) மனமாகும். ஆக, மனமென்பது பூதப்பொருட்களைப் பற்றிய அறிதற்குறியீடுகளால் நிகழும் மூளையின் மேன்மையான இயக்கமேயன்றி, அதுதானே ஒரு பூதப்பொருளன்று!

    ஆக, பூதயிருப்பே முதன்மையானது (primary). மனவிருப்பானது முற்றிலுமாக பூதயிருப்பைச் சார்ந்ததும், பூதயிருப்பிலிருந்து மட்டுமே முளைத்தெழுவதுமாகும் (secondary and derivative). பூதயிருப்பு மனவிருப்புக்கு புறத்தே இருப்பதால் அது புறநிலை உண்மையாகும் (objective reality). மனவிருப்பு அகநிலை உண்மையாகும் (subjective reality).

    ----

    பதிலளிநீக்கு

  2. 3. பருப்பொருள் (Matter):-

    இப்பெரும்பேரண்டத்திலிருக்கும் குறிப்பான (Particular), தனியான (Individual), ஒற்றையான (Singular) பூதப்பொருட்கள் யாவற்றையும் அவற்றின் பூதத்தன்மையின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாய்த் தொகுத்து, அருவமாக்கிப் பொதுமைப்படுத்துவதே பருப்பொருள் அல்லது பொருளம் (Matter) என்ற மீப்பொதுக் கருத்தாகும் (Universal Concept). அவ்வகையில் அது மெய்ஞ்ஞான வகைபாடுமாகும் (Philosophical Category). பருப்பொருள் எங்கனம் எல்லாப் பூதப்பொருட்களையும் பொதுமைப்படுத்துகிறதோ அங்கனமே பொருண்மையிருப்பு (Material Existence) என்ற மீப்பொதுக் கருத்து எல்லாப் பூதயிருப்புகளையும் பொதுமைப்படுத்துவதாகும். பருப்பொருளின் பிரிக்கவியலாத உள்ளார்ந்த தன்மையே பொருண்மையிருப்பாதலின், அவையிரண்டும் ஒன்றே.

    ---

    4. பருப்பொருள் என்பது புறநிலை உண்மையாகும் (Matter is the Objective Reality)

    பருப்பொருள் குறித்த லெனினின் வரையறையானது, ஒட்டுமொத்த பூதவுலகத்தையும் - ஆகவே உள்ளார்ந்த பொருளில் ஒட்டுமொத்த பூதயிருப்பையுமேகூட (பொருண்மையிருப்பு) - மிகச் சுருக்கமாகவும் மிக நேர்த்தியாகவும் மிகச் செறிவாகவும் பொதுமைப்படுத்துகிற ஒரு மெய்ஞ்ஞான வரையறையாகும். பருப்பொருள், புறநிலை உண்மை ஆகிய தத்துவக் கருத்தாக்கங்களில் தவிர்க்கவியலாவண்ணம் பொருண்மையிருப்பும் (பூதயிருப்பு) உள்ளடங்கியே இருப்பதால், லெனினின் வரையறை முழுநிறைவானது.

    பருப்பொருள் என்றாலேயே அதன் உள்ளார்ந்த பொருண்மையிருப்பு சொல்லாமலேயே விளங்கும் என்பது அடிப்படைப் பாடம். மெய்யாகவே மார்க்ஸியத்தைப் பயின்ற பயிலும் அறிஞர்களும் மாணாக்கர்களும் அதையறிவர். அப்புரிதல் வாய்க்காதவர்கள், வேண்டுமாயின் தமது வசதிக்காக "பருப்பொருள் என்பது பூத(பௌதிக) இருப்பைக் கொண்டதுமாகும்" என்று தம்மளவில் விரித்துப் பொருள்கொள்ளலாம்தான். கற்றலை மேம்படுத்துகிற எதுவும் நல்லதே.

    ஆனால், பொருளின் பூதயிருப்பு (பொருண்மையிருப்பு) என்பதை ஏதோ தானே புதிதாகக் கண்டறிந்துவிட்டது போலவும், அது ஏதோ இப்போதுதான் தன்னால் பெற்றெடுக்கப்பட்ட அறிவுக்குழந்தை போலவுமெல்லாம் மிகையாய் எண்ணிக்கொள்வதும், அதன்மூலம் பருப்பொருளின் வரையறைக்கு "போதிய பங்களிப்பு புரிந்து" அதைக் "கூர்ப்படுத்திச் செழுமைப்படுத்திவிட்டதாய்" தனக்குத்தானே "தன்னடக்கத்தோடு" மகுடம் சூட்டிக்கொள்வதுமெல்லாம் என்ன வகையான மனப்பிறழ்வு! Your delusions of grandeur are disgusting, dude! Get out of them.

    பதிலளிநீக்கு