வெள்ளி, 28 ஜூலை, 2023

 40 நாளில் நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3.
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------ 
இந்த பூமிக்கு வெளியே கால் வைப்பதற்கு சிறிது இடம் 
கிடைத்தால் தம்மால் இந்த பூமியைப் புரட்டித் தள்ளி 
விட முடியும் என்று ஆர்க்கிமிடிஸ் கூறியதாக ஒரு கதை 
உண்டு. நெம்புகோல் கோட்பாட்டின் படைப்பாளரும் 
ஏடறிந்த வரலாறு கூறும் உலகின் முதல் கணித 
மேதையுமான ஆர்க்கிமிடிஸ் (Archimedes BCE 287-212)
காலத்தில், விண்வெளி மானுடத்தின் அறிவெல்லைக்கு 
அப்பாற்பட்டதாகவே இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் கடந்த 
பின்னரும்கூட இதே நிலைமைதான் நீடித்தது. 

ஜெர்மானிய வானியல் அறிஞர் ஜோஹன்னஸ் கெப்ளர்
(Johannes Kepler 1571-1630) நிலவுக்குச் செல்வதாகக் 
கற்பனை செய்து  சோம்னியம் (Somnium) என்ற 
நாவலை எழுதினர். சோம்னியம் என்ற லத்தீன் 
சொல்லுக்கு கனவு என்று பொருள். 1634ல் பதிப்பிக்கப்பட்ட 
இந்த நாவலில் கெப்ளர் கண்ட கனவு, 335 ஆண்டுகள் கழித்து 
1969ல் நெயில் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் காலடி வைத்தபோது 
நனவாகியது. 

1957 அக்டோபர் 4ஆம் நாளன்று அன்றைய சோவியத் 
ஒன்றியம் (இன்றைய ரஷ்யா) ஸ்புட்னிக்-1 என்ற விண்கலத்தை
விண்வெளிக்கு அனுப்பியபோது ஆயிரம் ஆண்டுகாலத் 
தேக்கம் உடைந்தது.. அந்த நாள் முதல், உலகில் 
விண்வெளி யுகம் (Space era) பிறந்து விட்டது; விண்வெளி 
மனிதனுக்கு வசப்படத் தொடங்கி விட்டது     

இந்திய விண்வெளி வரலாற்றின் சிறப்பு மிக்க நாட்களில் 
ஒன்று கடந்த ஜூலை 14, 2023. அன்றுதான் சந்திரயான்-3
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 
சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் 
செலுத்தப் பட்டது. விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் 
அரிய காட்சியைக் காண வருமாறு இஸ்ரோ விடுத்த 
அழைப்பை ஏற்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் 
ஸ்ரீஹரிகோட்டாவில் திரண்டு சந்திராயன்-3 விண்ணில் 
ஏறும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தனர்.

சந்திரயான்-3ன் திட்ட இயக்குனராக தமிழ்நாடடைச் சேர்ந்த
வீரமுத்துவேல் பணியாற்றி வருகிறார். சந்திரயான்-3 
திட்டத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களாகப் 
பணியாற்றியோரில் 54 பேர் பெண்கள் என்பது 
பெருமிதத்திற்கு உரியது.    

கோள்சுற்றி இல்லை!
--------------------------------- 
சந்திரயான்-3 என்பது சந்திராயன்-2வின் தொடர்ச்சியே ஆகும்.
(Follow on mission of Chandrayan-2) 2019 ஜுலையில் விண்ணில் 
செலுத்தப்பட்ட சந்திரயான்-2  என்பது "ஒன்றில் மூன்று" 
(three in one) கூறுகள் உள்ளடங்கிய விண்கலம் ஆகும். 
அ) கோள்சுற்றி (orbiter)
ஆ) தரையிறங்கி (lander)
இ) தரையுலாவி (rover)
ஆகியவையே அம்மூன்று கூறுகளாகும்.

இவற்றில் கோள்சுற்றி (orbiter) மட்டுமே வெற்றிகரமாக சந்திரனைச் 
சுற்றி வந்தது. ஆனால் விக்ரம் லேண்டரால் சந்திரனில் 
திட்டமிட்டபடி  மென்தரையிறக்கம் (soft landing)  செய்ய இயலவில்லை.
அதன கருவிகள் பழுதுற்று சந்திரனுக்குச் சற்று உயரத்தில் 
இருந்து சந்திரனின் தரையில் ஏதோ ஓரிடத்தில் விழுந்து
காணாமல் போனது. லேண்டர் தோல்வியுற்றதால் 
அதன் வயிற்றுக்குள் இருந்து வெளிவர வேண்டிய
ரோவர் வெளிவரவில்லை. ஆக சந்திராயன்-2வைப் 
பொறுத்தமட்டில் லேண்டரும் ரோவரும் தோல்வி 
அடைந்து, கோள்சுற்றி மட்டுமே வெற்றி கண்டது.

சந்திரயான்-3ல் கோள்சுற்றி கிடையாது. சந்திரயான்-2வின் 
கோள்சுற்றி வெற்றி அடைந்து விட்டதால் மீண்டும் 
ஒரு கோள்சுற்றியை அனுப்பும் தேவை எழவில்லை. 
எனவே முன்பு தோல்வியுற்ற பணிகளை நிறைவேற்றும் 
பொருட்டு லேண்டர் ரோவர் ஆகிய இரண்டும் மட்டுமே  
சந்திரயான்-3ல் இடம் பெற்றுள்ளன. லேண்டரின் பெயர் 
விக்ரம். ரோவரின் பெயர் பிரக்ஞான். சந்திரயான்-2ல் 
உள்ள அதே பெயர்கள்தான். பெயர்களில் மாற்றம் இல்லை.  

சந்திரனில் மென்மையாகத் தரையிறங்கிய நாடுகள்
(soft landing) இதுவரை மூன்று மட்டுமே. அவை: அ) அமெரிக்கா 
ஆ) ரஷ்யா இ) சீனா. 2023 ஆகஸ்டில் திட்டமிட்டபடி  
சந்திரயான்-3 வெற்றி அடையுமானால் சந்திரனில் 
மென்தரையிறங்கும் நான்காவது நாடாக இந்தியா 
விளங்கும்.     

தென்துருவ ஆய்வே பயனளிப்பது!
------------------------------------------------------ 
இந்தியாவின் சிறப்பு என்னவெனில் மற்ற நாடுகளைப் 
போலன்றி சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்க 
முனைவதாகும். சந்திரயான்-3 வெற்றி அடையுமெனில் 
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் நாடு 
என்ற பெருமையை இந்தியா பெறும்.

பூமியின் துருவப் பகுதிகள் போன்றே சந்திரனின் 
துருவப் பகுதிகளும் அதிக வெப்பநிலைக்கு 
ஆட்படாமல் இருப்பவை. இதனால் பிற பகுதிகளை விட  
துருவப் பகுதிகளை ஆராய்வது சந்திரனைப் பற்றிய 
உண்மைகளை வெளிக் கொணர உதவும். சந்திரனின் 
வட துருவத்தை விட தென் துருவம் அதிகமாக 
நிழலில் மூழ்கி இருக்கும் பகுதி. இங்கு நிரந்தர 
நிழல் பிரதேசங்கள் நிறையவே உண்டு. இங்குள்ள 
பள்ளங்களில் (craters) தண்ணீர் உறைந்த நிலையில் 
இருக்கக்கூடும்.  இக்காரணங்களால் சந்திரனின் 
தென்துருவ ஆய்வு பெரும் முக்கியத்துவம் உடையது.

கோள்சுற்றியான சந்திரயான்-1 2008 அக்டோபரில் 
விண்ணில் செலுத்தப்பட்டு 2009 ஆகஸ்ட் வரை 
வெற்றிகரமாக இயங்கி தகவல்களை அனுப்பியது.
சந்திரயான்-1ல் முதலில் கோள்சுற்றியை மட்டுமே 
அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. டாக்டர் 
அப்துல் கலாமின் ஆலோசனைப்படி கோள்சுற்றியுடன் 
மோதித்தாக்கும் ஒரு இம்பாக்டர் (impactor) கருவியையும்      
அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு Moon impact probe
என்று பெயர். சந்திரனின் தரையில் மோதித்தாக்கி 
அதன் மேற்பரப்பில் உள்ள மண்ணை (sub surface debris) 
இக்கருவியின் மூலமாகத்தான் எடுக்க முடிந்தது.

சந்திரயான்-1ல் நாசாவின் அறிவியல் பரிசோதனைக் கருவி 
(Moon Mineralogy Mapper) வைக்கப் பட்டிருந்தது. இம்பாக்டர் 
எடுத்துத்தந்த மண்ணை இக்கருவி ஆராய்ந்தபோதுதான் 
சந்திரனில் தண்ணீர் உறைந்த நிலையில் இருக்கிறது 
என்ற உண்மையைக் கண்டறிய முடிந்தது. இவ்வாறு 
சந்திரனில் தண்ணீர் இருப்பதை இந்தியா  உலகிற்கு 
முதன் முதலில் அறிவித்தது.

சந்திரனைக் கைப்பற்றுவோம்!
------------------------------------------------
உலகின் இன்றைய மக்கள்தொகை 8 பில்லியன்; அதாவது 
800 கோடி. இதில் இந்தியாவின் மக்கள்தொகை மட்டும் 
140 கோடி. ஜப்பானின் டோக்கியோ நகரம் 1 கோடியே
40 லட்சம் பேருடன் மக்கள்தொகையைப் பொறுத்து 
வெடித்துச் சிதறுகிறது (population explosion). தொடர்ந்து 
அதிகரித்துக் கொண்டே செல்லும் மக்கள்தொகையும்  
பூமி மென்மேலும் மாசடைந்து வருவதும் நமது பூமியை 
வாழத்தகுதியற்ற கோளாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.     
இந்நிலையில், மனிதர்கள் பூமியைமட்டுமே நம்பி இராமல் 
வேறொரு  கோளை ஆக்கிரமித்துக் கைப்பற்றிக்கொண்டு, 
எதிர்காலத்தில்  அங்கு சென்று வாழத் தயாராக வேண்டும் என்று 
மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் கூறியது பொருள் பொதிந்தது.

பூமிக்கு மிக அருகில் 384,000 கிமீ தொலைவில் சந்திரன் 
உள்ளது. ஒளியின் வேகத்தில் செல்லும் ஒரு சமிக்ஞை 
பூமியில் இருந்து சந்திரனை அடைய வெறும் 1.3 நொடிதான் 
ஆகும். எனவே சந்திரனைக் கைப்பற்றுவதும் அங்கு 
சென்று வாழ்வதும் ஒப்பீட்டளவில் எளிது. சந்திரனில் 
தண்ணீரும் இருக்கிறது என்று இந்தியா மூலம் 
உலகம் அறிந்து கொண்டுள்ளது. சந்திரனில் தண்ணீர் 
இருப்பதானது சந்திரன் மீதான காதலை வெகுவாக 
அதிகரித்துள்ளது. எனவே சந்திரனைக் கைப்பற்ற  
விரும்பும் மனிதகுலத்தின் எதிர்காலத் திட்டங்களுக்கு 
சந்திரயான் போன்ற உருப்படியான தென்துருவ ஆய்வுகள் 
மிகப் பெரிதும் பயனளிக்கும்.   

பயணத் திட்டமும் நோக்கமும்!  
-------------------------------------------
சந்திரயான்-3 ஜூலை 14, 2023 அன்று விண்ணில் செலுத்தப் பட்டது.
இது நிலவின் தென்துருவத்தில், 40ஆம் நாளன்று  
ஆகஸ்டு 23, 2023 அன்று மென்மையாகத் தரையிறங்கும் என்று  
எதிர்பார்க்கப் படுகிறது.

LVM3 என்று பெயரிடப்பட்டுள்ள  GSLV M-3 என்னும் செலுத்து வாகனமே சந்திராயன்-3ஐ விண்ணில் ஏவியது.   

சந்திரயான்-3ன் திட்டச் செலவு மொத்தம் ரூ 615 கோடி
மட்டுமே. கிறிஸ்டோபர் நோலனின் அண்மைப் படமான
ஓப்பன்ஹீமர் 100 மில்லியன் அமெரிக்க டாலர் 
செலவில் எடுக்கப் பட்டது. அதாவது இந்திய மதிப்பில் 
இது ரூ 800 கோடிக்குச் சமம். சந்திரயான்-3ன் செலவு 
கிறிஸ்டோபர் நோலனின் படத்திற்கு ஆன செலவை விட 
ரூ 185 கோடி குறைவு.
    
பின்வரும் மூன்று விஷயங்களை சந்திரயான்-3ன் 
நோக்கங்களாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அ) இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு 
எடுத்தியம்புவது (technological demonstration).
ஆ) சந்திரனின் தரையில் ரோவர் நடந்து செல்வது.
இ) சந்திரனில் எந்த இடத்தில் இறங்கினோமோ, அதே 
இடத்தில் அறிவியல் பரிசோதனைகளைச் செய்வது
(conducting in situ experiments). இதற்காக லேண்டரில்
ஏழு அறிவியல் கருவிகள் வைக்கப் பட்டுள்ளன. 

பிற விவரங்கள்!
-----------------------------
லேண்டர், ரோவர் இவ்விரண்டின் வாழ்நாள் ஒரு சந்திர நாள் 
(1 lunar day) மட்டுமே. இது பூமியின் 14 நாட்களுக்குச் சமம்.
4 கிமீ x 2.4 கிமீ பரப்பளவுள்ள இடத்தில் சந்திரயான்-3
தரையிறங்கும்.   

விண்ணில் ஏவப்பட்டபோது சந்திரயானின் மொத்த நிறை 
(launch mass) 3900 கிலோகிராம் ஆகும். உந்துசக்திக்கூறு 
(propulsion module) 2148 கிகி நிறை உடையது. லேண்டரும் 
ரோவரும் சேர்ந்து 1752 கிகி நிறை உடையன. இதில் 
ரோவர் மட்டும் 26 கிகி நிறை உடையது.

விக்ரம் சந்திரனில் தரையிறங்குகையில் அதன் 
வேகம் பின்வருமாறு அமையும்.
செங்குத்து வேகம் (vertical velocity) = வினாடிக்கு 2 மீட்டர் 
அல்லது அதற்கும் குறைவு. இது மணிக்கு 7.2 கிமீ 
என்ற வேகத்திற்குச் சமம் ஆகும். அன்றாட வாழ்க்கையில் 
ஒரு ஸ்கூட்டரில் மணிக்கு 40 கிமீ என்ற வேகத்தில் செல்லும் 
நமக்கு, மணிக்கு 7.2 கிமீ வேகம் என்பது எவ்வளவு 
மெதுவானது என்பதை உணர முடியும். 

கிடைமட்ட வேகம்  (horizontal velocity = வினாடிக்கு அரை மீட்டர் 
அல்லது அதற்கும் குறைவு. இது மணிக்கு 1.8 கிமீ என்ற 
வேகத்திற்குச் சமம். இது சைக்கிளில் மெதுவாகச் செல்லும் 
ஒருவரின் வேகம் போன்றது. இவ்வளவு குறைவான 
வேகத்தில் சென்றால்தான் மென்மையாகத் 
தரையிறங்க முடியும்.

40 நாள் பயணம் ஏன்?
--------------------------------
1969ல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நிலவுக்குச் சென்ற 
அமெரிக்கா நிலவில் தரையிறங்க  4 நாட்களே 
(102 மணி நேரத்திற்குச் சற்று அதிகம்) எடுத்துக் கொண்டது.
ஆனால் இந்தியாவின் சந்திரயான்-3ன் நிலவுப் பயணம் 
40 நாள் ஆகிறது. முந்தைய சந்திரயான்-2ன் 
பயணமும் 47 நாள் ஆனது. நிலவுப் பயணத்திற்கான 
நேரம் அமெரிக்காவுக்கு மணிக்கணக்கிலும் இந்தியாவுக்கு 
மாதக்கணக்கிலும் ஆவது ஏன்? இந்தியாவிடம் தொழில்நுட்பக்க 
குறைபாடு ஏதேனும் உள்ளதா? 

நிலவுப் பயணத்திற்கு இந்தியா அதிக காலம் எடுத்துக்
கொள்வதற்கான காரணம் குறைந்த செலவில் 
நிலவுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற 
நோக்கமே. விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா 
யாருக்கும் சளைத்தது அல்ல. இந்தியா தனது 
தொழில்நுட்ப வலிமையை மென்மேலும் அதிகரித்துக் 
கொள்ள இயலும். ஆனால் அதற்கு கோடானுகோடி ரூபாய் 
செலவாகும். செலவைச் சுருக்கும் பொருட்டே 
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் நிலவுப் பயணத்தை 
அதிக நாட்கள் கொண்டதாக அமைக்கிறார்கள்.   
சந்திரயான்-3ன் வெற்றிக்குப் பின்னர் இந்தியா 
ஒரு விண்வெளி வல்லரசு என்ற உண்மை உலகெங்கும் 
பிரகடனம் செய்யப்படும். அதற்கு இன்னும் சில 
நாட்கள் பொறுத்திருப்போம்.    
************************************************* 
 
 




  


  

      


 




 
  .   

  


    
    
              

  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக