வெள்ளி, 14 ஜூலை, 2023

 சந்திரயான்-2வின் 47 நாள் பயணம் ஏன்? (reprint)
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
நிலவின் மீது மிக மென்மையாகத் தரையிறங்கப் 
போகிறது சந்திரயான்-2. ஒரு குழந்தையைத் 
தொட்டிலில் கிடத்துவது போன்ற மென்மையான 
நிகழ்வு இது. இதுவரை கவிஞர்களின் ஆளுகையில் 
இருந்து வந்த நிலவு தற்போது விஞ்ஞானிகளின் 
ஆளுகைக்குள் வந்து விட்டது.

சந்திரயான்-2 திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் 
இரண்டு பெண் விஞ்ஞானிகள் இருந்து வரலாறு 
படைக்கின்றனர். முத்தையா வனிதா திட்ட 
இயக்குனராகவும் (project director), ரித்து கரிதால் 
மிஷன் இயக்குனராகவும் (mission director) பொறுப்பேற்று  
இஸ்ரோவுக்குப் பெருமை சேர்க்கின்றனர்.

ஒன்றில் மூன்று!
--------------------------
சந்திரயான்-2 தன்னுள் மூன்று நோக்கங்களைக் 
கொண்ட ஒரு ஒன்றில் மூன்று திட்டம் 
(three in one mission). 
சந்திரனைச் சுற்றி வரப்போகும் ஒரு கோள்சுற்றி 
(orbiter), சந்திரனில் தரையிறங்கும் ஒரு தரையிறங்கி 
(lander), சந்திரனின் தரையில் சிறிது தூரம் நடந்து 
சென்று ஆராயும் ஒரு நடைவண்டி (rover) ஆகிய
மூன்றும் அடங்கிய திட்டமே சந்திரயான்-2 ஆகும்.

இந்திய விண்வெளித் துறையின் தந்தையாகக் 
கருதப்படும் விக்ரம் சாராராய் நினைவாக 
தரையிறங்கிக்கு (lander) விக்ரம் என்று பெயர் 
சூட்டப் பட்டுள்ளது. நடைவண்டிக்கு (rover) 
பிரக்ஞான் என்று பெயர். இதற்கு ஞானம் 
என்று பொருள்.

சந்திரயான்-2ன் மொத்தச் செலவு ரூ 978 கோடி 
மட்டுமே (142 மில்லியன் அமெரிக்க டாலர்). 
பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களின் செலவை
விட இது மிகவும் குறைவாகும். 2017ல் வெளிவந்த 
உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டோபர் நோலன் 
இயக்கிய டன்கிர்க் (Dunkirk) திரைப்படத்தின் 
செலவு 150 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 
இது சந்திரயானின் செலவை விட ரூ 50 கோடி  
அதிகம். பிரசித்தி பெற்ற அவஞ்சர்ஸ் எண்ட் கேம் 
(Avengers End Game) படத்தின் செலவு 356 மில்லியன் 
அமெரிக்க டாலர்; அதாவது ரூ 2443 கோடி ஆகும். 

சந்திரயானின் செலவைப் போல் இது இரண்டரை 
மடங்கு அதிகம் ஆகும்

செலுத்து வாகனம்!
----------------------------
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 384,400 கிமீ 
மட்டுமே. சந்திரனில் இருந்து புறப்படும் ஒளி  
1.3 வினாடியில் பூமிக்கு வந்து சேர்ந்து விடும்.
சந்திரயான்-2 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 
22 ஜுலை 2019 இந்திய நேரம் 1443 மணிக்கு
(IST 14:43; UTC 09:13) வெற்றிகரமாக விண்ணில் 
செலுத்தப் பட்டது.

ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த ஒரு 
'செலுத்து வாகனம்' (launch vehilcle) வேண்டும். இதுவே 
ஏவுகணை (rocket) என்று மக்களால் அழைக்கப் 
படுகிறது. சந்திரயான்-2ஐ  விண்ணில் செலுத்திய
ஏவுகணை GSLV Mark-III எனப்படும் புவி ஒத்திசைவு 
செலுத்து வாகனம் ஆகும்.

முன்னதாக 2008 அக்டோபரில் சந்திரயான்-1ஐ 
PSLV C-11 என்னும் துருவப்பாதை செலுத்துவாகனமே 
விண்ணில் செலுத்தியது. 2013 நவம்பரில் செவ்வாய்க் கோளைச் சுற்றிய மங்கள்யானை விண்ணில் 
செலுத்தியதும் PSLV XL C-25 என்னும் துருவ வாகனமே.

GSLV தேர்வானது எப்படி?
-------------------------------------
சந்திரயான்-2ஐச் செலுத்த துருவ வாகனத்தைத்  
(PSLV) தவிர்த்து புவி ஒத்திசைவு வாகனத்தை 
(GSLV) இஸ்ரோ தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்குச் சிறப்பான காரணங்கள் உண்டு.

PSLVயானது தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதையில் 
(Low Earth Orbit)  விண்கலன்களைச் செலுத்தும் 
விதத்தில் இஸ்ரோவால் வடிவமைக்கப் பட்டது. 
பூமியை ஆராயும் செயற்கைக் கோள்களை
(Earth Observation satellites) விண்ணில் செலுத்த 
உருவானது PSLV. தாழ்புவி சுற்றுப்பாதையானது 
2000 கிமீ உயரம் அல்லது அதற்கும் குறைவான 
உயரத்தைக் கொண்டது. இவ்வளவு குறைந்த 
உயரத்தில் சுற்றினால்தான் பூமியை நன்கு 
கூர்நோக்கி அறிய இயலும். தொலைதொடர்பு 
செயற்கைக் கோள்களைப்போல 36,000 கிமீ 
உயரத்தில் சுற்றி வந்தால் பூமியைக் கூர்நோக்கி
அறிய இயலாது.

துருவச் சுற்றுப்பாதையும் (Polar orbit) தாழ்நிலை 
புவிச் சுற்றுப்பாதையே. ஒவ்வொரு சுழற்சியின்போதும் 
சுற்றப்படும் பொருளின் (இங்கு பூமி) இரண்டு 
துருவங்களையும் (pole to pole) செயற்கைக்கோள் 
கடந்து செல்லும் விதத்தில் அமைந்ததே துருவச் 
சுற்றுப்பாதை. PSLVயானது 1750 கிலோகிராம் வரை 
நிறையுள்ள பளுவை (payload) சூரிய ஒத்திசைவு 
துருவச் சுற்றுப்பாதையில்
(SSPO = Sun Synchronous Polar Orbit) செலுத்த வல்லது.


PSLV நான்கு கட்டங்களைக் கொண்டது. முதல் 
கட்டத்திலும் மூன்றாவது கட்டத்திலும் திடநிலை 
எரிபொருளும், இரண்டாம் மற்றும் நான்காம் 
கட்டத்தில் திரவநிலை எரிபொருளும் கொண்டது.
PSLVயில் கிரையோஜெனிக் எஞ்சின் இல்லை.

GSLVயானது கிரையோஜெனிக் என்ஜினைக் 
கொண்டது. அதிகமான நீள்வட்டத் தன்மை கொண்ட 
(highly elliptical) சுற்றுப்பாதையில் (250 x 36,000 கிமீ) செயற்கைக்கோள்களைச் செலுத்த வல்லது.

சந்திரயான்-2ஐ விண்ணில் செலுத்திய 
GSLV Mark-III என்னும் செலுத்து வாகனம் மூன்று 
பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி திடநிலை 
எரிபொருளால் இயங்குவது. இரண்டாம் பகுதி
திரவநிலை எரிபொருளாலும், மூன்றாம் பகுதி 
கிரையோஜெனிக் எரிபொருளாலும் இயங்குவதாகும். 
செலுத்து வாகனமும் செயற்கைக்கோளும் சுதேசித் 
தொழில்நுட்பத்தால் இஸ்ரோவால் தயாரிக்கப் 
பட்டவை.

GSLV Mark-IIIயானது 4000 கிலோகிராம் நிறையுள்ள 
பளுவை (payload) புவி ஒத்திசைவு இடமாற்றப் 
பாதையில் (GTO = Geosynchronous Transfer Orbit) 
செலுத்த வல்லது.

துருவச் சுற்றுப்பாதையில் விண்கலன்களைச் 
செலுத்தும் நோக்கில்தான் PSLV உருவாக்கப் பட்டது. 
எனினும் அதன் திறன் மற்றும் நம்பகத் தன்மை 
காரணமாக புவி ஒத்திசைவுச் சுற்றுப் பாதையிலும் 
(Geosynchronous), புவிநிலைப்புச் சுற்றுப் பாதையிலும் 
(Geostationary) குறைந்த நிறையுள்ள பளுக்களைச்
செலுத்த (1425 கிகி வரை) இது பயன்படுத்தப் பட்டது.

சந்திரயான்-2ல் உள்ள கோள்சுற்றி 2379 கிகி 
நிறையுள்ளது. விக்ரம் தரையிறங்கி 1471 கிகி 
நிறையுடனும், பிரக்ஞான் நடைவண்டி 27 கிகி 
நிறையுடனும் உள்ளன. இம்மூன்றும் சேர்ந்து 
3877 கிகி நிறையைக் கொண்டுள்ளன. PSLVயானது
1425 கிகி நிறை வரையுள்ள பளுவை மட்டுமே 
கையாள வல்லது. எனவேதான் இஸ்ரோ 
GSLVஐ தேர்ந்தெடுத்தது.

ஏவுகணை நாயகன்!
----------------------------------
இஸ்ரோ இதுவரை 105 விண்வெளி ஆய்வுத் 
திட்டங்களை (spacecraft missions) மேற்கொண்டு 
அவற்றுக்கான செயற்கைக் கோள்களை விண்ணில் 
செலுத்தி உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைச் 
சேர்ந்தவை. மேலும் 33 நாடுகளின் 297 செயற்கைக் 
கோள்களையம் விண்ணில் செலுத்தி உள்ளது. 
இவை தவிர, சந்திரயான், மங்கள்யான் போன்ற 
பளுவுடன் கூடிய (payload launch missions) 75 ஆய்வு விண்கலன்களையும் மாணவர்களின்
10 செயற்கைக் கோள்களையம் விண்ணில் 
செலுத்தி உள்ளது.

ஆனால் 1975ல் நமது முதல் செயற்கைக்கோளான 
ஆர்யபட்டாவை நம்மால் விண்ணில் செலுத்த 
இயலவில்லை. அதற்கான செலுத்து வாகனம் 
நம்மிடம் இல்லாமல், ரஷ்யாவின் உதவியுடன்
ரஷ்ய விண்வெளித் தளத்தில் இருந்து 
செலுத்தினோம்.

நமது இரண்டாம் செயற்கைக்கோளான 
பாஸ்கராவும் ரஷ்ய உதவியுடன்தான் 
செலுத்தப்பட்டது. இதன் பின்னரே நமது
சொந்த முயற்சியில் பல்வேறு செலுத்து 
வாகனங்களைத் தயாரித்தோம். இன்று 
வெளிநாடுகளின் செயற்கைக்
கோள்களை நாம் விண்ணில் செலுத்தும் அளவுக்கு
வளர்ந்து இருக்கிறோம். இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட
விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், இந்தியாவின்
ஏவுகணை நாயகன் (missile man) டாக்டர் 
அப்துல் கலாம் ஆகியோரை இத்தருணத்தில் 
நினைவு கூர்வோம்.

உலக சாதனை!
------------------------
பெப்ரவரி 2017ல் இஸ்ரோ ஓர் உலக சாதனையை 
நிகழ்த்தியது. ஒரே செலுத்து வாகனத்தின் மூலம் 
104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. 
இவை PSLV C-37 மூலம் செலுத்தப்பட்டன.
இந்த சாதனையை இன்று வரை யாரும் 
முறியடிக்கவில்லை.

முன்னதாக 2014ல் ரஷ்யா ஒரே முறையில் 
37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி 
இருந்தது. ரஷ்ய சாதனையை எளிதில் முறியடித்தது 
இந்தியா. ஒரு காலத்தில் செயற்கைக்கோளைச்
செலுத்துவதற்கான ஏவுகணை இல்லாமல் ரஷ்ய 
உதவியை நாடிய இந்தியா இன்று ரஷ்ய சாதனையை 
முறியடித்திருக்கிறது. விண்வெளித் துறையில் 
இந்தியாவின் அசுர வளர்ச்சியை இது காட்டுகிறது.

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற எலான் மஸ்க் 
(Elon Musk)  ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்னும் தனியார் 
விண்வெளி நிறுவனத்தின் தலைவர். மின்சாரக் 
கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின்
தலைவரும் இவரே. அமெரிக்காவில் தனியாருக்கும் 
செயற்கைக் கோள்களைத் தயாரிக்கவும் விண்ணில் 
செலுத்தவும் அனுமதி உண்டு. இவரின் ஸ்பேஸ் எக்ஸ் 
நிறுவனம் மே 2019ல் ஒரே செலுத்து வாகனத்தின் 
மூலம் ஒரே முறையில் 60 செயற்கைக் கோள்களை 
விண்ணில் செலுத்தி உள்ளது. என்றாலும் இவராலும் 
இன்று வரை இஸ்ரோவின் சாதனையை முறியடிக்க 
இயலவில்லை.

வட்டப்பாதையில் சுற்றுதல்!
-------------------------------------------
சந்திரயான்-2ன் கோள்சுற்றியின் (orbiter) வாழ்நாள் 
ஓராண்டு ஆகும். இந்த ஓராண்டு காலமும் இது 
சந்திரனைச் சுற்றி வந்து முப்பரிமாண படங்களை 
எடுக்கும். இதில் 8 அறிவியல் கருவிகள் வைக்கப்பட்டு 
உள்ளன.இது சந்திரனை 100 x 100 கிமீ என்ற துருவச் 
சுற்றுப்பாதையில் (lunar polar orbit)  சுற்றி வரும். 

சந்திரனுக்கு அருகில் வரும்போது 100 கிமீ தூரமும் 
(periselene), சந்திரனை விட்டு அப்பால் செல்லும்போதும் 
100 கிமீ தூரமும் (aposelene) கொண்டது இந்தச்
சுற்றுப்பாதை. உண்மையில் இது மையப்பிறழ்ச்சி 
பூஜ்யம் கொண்ட (eccentricity = 0) வட்டச் சுற்றுப் 
பாதையே ஆகும்.

இந்த இடத்தில் சந்திரயான்-1 நவம்பர் 2008ல் இதே 
போன்ற துருவச் சுற்றுப்பாதையில் சந்திரனைச் 
சுற்ற ஆரம்பித்தபோது எப்படிச் சுற்றியது 
என்பதைப் பார்ப்போம்.

அப்போது 200 x 200 கிமீ அளவுள்ள சுற்றுப்பாதையில் 
அது சுற்றியது. தற்போது சந்திரயான்-2 சந்திரனை 
முன்பை விட 100 கிமீ நெருங்கி 100 x 100 கிமீ  
அளவுள்ள வட்டச் சுற்றுப்பாதையில் சுற்றப் 
போகிறது. எனவே இது எடுக்கும் படங்களும் 
மேற்கொள்ளும் ஆய்வுகளும் முன்பை விடத் 
துல்லியமாக இருக்கும்.  

மென்மையான தரையிறக்கம்!
------------------------------------------------
விக்ரம் சந்திரனின் தென் துருவத்தில் 
மென்மையாகத் தரையிறங்கப் போகிறது. இந்த 
மென்மைத் தரையிறக்கம் (soft landing) முக்கியத்துவம் 
வாய்ந்தது.இதுவரை மூன்று நாடுகள் மட்டுமே 
(ரஷ்யா, அமெரிக்கா, சீனா) இவ்வாறு வெற்றிகரமாக 
மென்மைத் தரையிறக்கம் செய்துள்ளன. 

செப்டம்பர் 7ஆம் தேதியன்று விக்ரம் சந்திரனில் 
மென்மையாகத் தரையிறங்கத் திட்டமிடப் 
பட்டுள்ளது. இறங்கியதும் அறிவியல் பரிசோதனை 
செய்வதற்காக விக்ரமில் நான்கு கருவிகள் 
வைக்கப் பட்டுள்ளன.

சந்திரயான்-1 சந்திரனைச் சுற்றி வருவதை மட்டுமே 
முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதில் 
இருந்த ஒரு கருவி (moon impact probe) சந்திரனின் மீது
வேகமாக மோதித் தரையிறங்கியது. இது மோதி 
இறங்குவதாகும் (crash landing). இது எளிது. ஆனால் 
மெதுவாகத் தரையிறங்குவது சிக்கலானது.
இது திகில் நிறைந்த 15 நிமிடங்களைக் கொண்டது  
என்கிறார் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன்.

பூமியின் துருவப் பகுதிகள் போன்றே சந்திரனின் 
துருவப் பகுதிகளும் அதீத வெப்பநிலைக்கு 
ஆட்படாமல் இருப்பதால், பிற பகுதிகளை விட  
துருவப் பகுதிகளை ஆராய்வது சந்திரனைப் பற்றிய 
உண்மைகளை . வெளிக் கொணரும். சந்திரனின் 
வட துருவத்தை விட தென் துருவம் அதிகமாக 
நிழலில் மூழ்கி இருக்கும் பகுதி. இங்கு நிரந்தர 
நிழல் பிரதேசங்கள் நிறையவே உண்டு;  எனவே 
தென்துருவப் பகுதியில் தரையிறங்குகிறது விக்ரம்.

சந்திரனின் தென்துருவத்தில் விக்ரம் எங்கே 
தரையிறங்கும்? இதற்காக இரண்டு இடங்களை 
இஸ்ரோ தெரிவு செய்துள்ளது. இவை இரண்டும்
32 x 11 கிமீ அளவுள்ள நீள்வட்டங்கள் ஆகும். 
இவ்விரண்டில் எதில் தரையிறங்குவது என்று 
சந்திரனின் துருவச் சுற்றுப்பாதையில்
கோள்சுற்றியானது நிலைநிறுத்தப்பட்ட பின்னர் 
இஸ்ரோ முடிவு செய்யும்.

விக்ரமின் வாழ்நாள் ஒரு சந்திர நாள் (one lunar day) 
மட்டுமே. இது பூமியின் 14 நாட்களுக்குச் சமம். 
சந்திரனில் பகல் அதிக வெப்பமாகவும் இரவு 
அதிகக் குளிராகவும் இருக்கும். பகலில்
127 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இரவில் 
மைனஸ் 173 டிகிரி செல்சியஸ் குளிரும் இருக்கும் 
(சற்றுத் தோராயமாக).

 சந்திரனின் தரையில் பரிசோதனை!
---------------------------------------------------------
விக்ரம் தரையிறங்கிய பின், அதிலிருந்து பிரக்ஞான் 
நடைவண்டி (rover) வெளிக்கிளம்பும். சந்திரனின் 
தரையில் அரை கிமீ தூரம் வரை இந்த ஆறு சக்கர 
வண்டியால் நடந்து செல்ல இயலும்.

இதில் அறிவியல் பரிசோதனைக் கருவிகள் 
இரண்டு வைக்கப்பட்டு உள்ளன. விக்ரமும் 
பிரக்ஞானும் நிலவின் தரையிலேயே 
பரிசோதனைகளை மேற்கொள்ளும் (in situ experiments). 
தரையிறங்கிய இடத்திலேயே பரிசோதனைகளைச் 
செய்வது பூமியில் செய்யும் பரிசோதனைகளை 
விடத்  துல்லியமானது.

சந்திரயானின் கோள்சுற்றியும், விக்ரம் 
தரையிறங்கியும் பெங்களூருக்கு அருகில் உள்ள 
பைலாலு (Byalalu) என்ற ஊரில் உள்ள ஆழ்வெளி 
மையத்துடன் (IDSN = Indian Deep Space Network)
தொடர்பு கொள்ளும். அங்கிருந்து கட்டளைகளைப் 
பெறும். பிரக்ஞான் நடைவண்டியால் விக்ரமுடன் 
மட்டுமே தொடர்பு கொள்ள இயலும். இவ்வாறு 
விண்ணில் பறக்கும் சந்திரயானை
பூமியில் இருந்தே வழிநடத்துகிறோம்.

நிலவில் தண்ணீர்!
---------------------------
நவம்பர் 14, 2008ல் சந்திரயான்-1ல் இருந்த கருவியானது
(Moon Impact Probe) நிலவில் மோதி நிலவின் தரையின் 
கீழ்ப்பரப்பில் உள்ள மண்ணை (subsurface debris) 
அள்ளிக் கொண்டு வந்தது. இதைப் பகுத்தாய்ந்து, 
சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதைக் 
கண்டறிந்தது. எனினும் குளம் அல்லது ஏரியில் 
தண்ணீர் இருப்பது போல நிலவிலும் தண்ணீர் 
இருக்கிறது என்று இதற்குப் பொருள் கொள்ளக் 
கூடாது. நிலவில் தண்ணீர் திரவ நிலையில் இல்லை. 
ஆனால் உறைந்த நிலையில் இருப்பதை சந்திரயான்-1 
கண்டறிந்தது.

உறைந்த நிலையில் தண்ணீர் என்பதன் பொருள் 
நம் வீட்டில் உள்ள குளிர்பதனப் பெட்டியில் தண்ணீர் 
உறைந்து பனிக்கட்டியாக இருப்பது போன்றதல்ல. 
ரஷ்யாவில் உள்ள சைபீரியா பனிப்பாலைவனப் 
பகுதியில் நிலத்தடி உறைபனியாக (permafrost) 
தண்ணீர் உள்ளது. இது போலவே நிலவிலும் 
நிலத்தடி உறைபனியாக தண்ணீர் இருக்கக்கூடும்

அல்லது தண்ணீர் தனித்து இல்லாமல் ஏதேனும் 
கனிமங்களுடன் கலந்து உறைந்து அந்தக் 
கனிமமாகவே மாறிப்போன நிலையிலும்
இருக்கக்கூடும். உதாரணமாக ஆபடைட் (apatite) 
என்னும் பாஸ்பேட் குழுவைச் சேர்ந்த கனிமத்தில் 
ஹைடிராக்சில் அயனிகள் (hydroxyl ions) உள்ளன. 
இந்த வடிவிலும் தண்ணீர் இருக்கக் கூடும்.

47 நாள் நீண்ட பயணம்!
---------------------------------------
முதன் முதலில் சந்திரனில் மென்மையாகத் 
தரையிறங்கிய பெருமை அன்றைய சோவியத் 
ஒன்றியத்துக்கு (இன்றைய ரஷ்யா) உரியது. 
சோவியத்தின் லூனா 9 என்ற விண்கலன் 
31 ஜனவரி 1966ல் புறப்பட்டு, 3 பெப்ரவரி 1966ல் 
சந்திரனில் தரை இறங்கியது. இதற்கு வெறும் 
80 மணி நேரமே ஆனது.

இதற்கு நான்கு மாதம் கழித்து, அமெரிக்காவின் 
சர்வேயர் 1 என்ற விண்கலன் 1966 மே 30ல் புறப்பட்டு  
1966 ஜூன் 2ல் சந்திரனில் மென்மையாகத் தரை 
இறங்கியது. இதற்கு 63 மணி 30 நிமிடம் ஆனது.

சீனா 2013ல் முதன் முறையாக சந்திரனில் 
மென்மையாகத் தரை இறங்கியது. சாங்கே 3 
விண்கலன் இதற்கு 14 நாள் எடுத்துக் கொண்டது 
( 1 டிசம்பர் 2013 முதல் 14 டிசம்பர் 2013 வரை).

ஆனால் ஜூலை 22, 2019ல் புறப்பட்ட இந்தியாவின் 
சந்திரயான்-2  செப்டம்பர் 7ல் சந்திரனில் 
தரையிறங்கத் திட்டமிட்டு உள்ளது. இது
47 நாள் கொண்ட நீண்ட பயணம் ஆகும். 
மற்ற நாடுகள் 64 மணி நேரத்திலும் 80 மணி 
நேரத்திலும் சந்திரனில் தரை இறங்கும்போது 
இந்தியா ஏன் 47 நாட்கள் எடுத்துக் கொள்கிறது?

இதற்கு ஒரே காரணம் பணம்தான்! நம்பவே முடியாத 
அளவு குறைந்த செலவில் இந்தியா இத்திட்டத்தைச் 
செயல்படுத்துகிறது. அமெரிக்காவின்
செலுத்துவாகனமான Saturn V அளவில் பெரியது; 
110 மீட்டர் உயரமும் 3000 டன் நிறையும் கொண்டது. 
பெரும் பொருட் செலவில் உருவாக்கப் பட்டது. 

இந்தியாவின் GSLV Mark III 43.4 மீ உயரமும் 640 டன் 
நிறையும் கொண்டது. வல்லவனுக்குப் புல்லும் 
ஆயுதம் என்பது போல குறைந்த செலவில் 
நிறைந்த சாதனைகளைப் படைக்கிறது இந்தியா.
****************************************************















               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக