திங்கள், 17 ஜூலை, 2023

பொருள் என்பதன் வரையறை!
------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
அரிஸ்ட்டாட்டில் காலந்தொட்டு நியூட்டன் 
காலம் வரை பொருள் பற்றிய நான்குமூலக் 
கொள்கையே (Four elements theory) மேற்கில் 
ஆட்சி செலுத்தியது. கிழக்கில்  இது 
பஞ்சபூதக் கொள்கையாக இருந்தது.
நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய ஐந்துமே 
பஞ்ச பூதங்கள் என்பதை நாம் அறிவோம். 

அரிஸ்டாட்டில் ஐந்தாவதாக நாம் கூறிய 
ஆகாயத்தைத் தவிர்த்து நான்கோடு நிறுத்திக் 
கொண்டார். சாராம்சத்தில் பொருள் பற்றிய 
மேற்கின் வரையறையும் கிழக்கின் 
வரையறையும் சமமே.

மார்க்சும் எங்கல்சும் தங்கள் காலத்தில் 
நிலவிய அரிஸ்டாட்டிலின் வரையறையை 
அப்படியே  பின்பற்றினர். மார்க்சின் ஆசான் 
லூத்விக் ஃபாயர்பாக்கும் அரிஸ்ட்டாட்டிலின் 
வரையறையையே ஏற்றுக் கொண்டிருந்தார்.

மார்க்சின் காலத்தில் ஜான் டால்டன் என்னும் 
ஆங்கில விஞ்ஞானி அணுக்கொள்கையை 
அறிவித்தார்.

எனினும் பொருள் பற்றிய அப்போது நிலவிய 
அரிஸ்டாட்டிலின் வரையறையை டால்டனின் 
கொள்கை மாற்றி அமைக்கவில்லை. அதற்கான 
தேவை எதுவும் அப்போது இல்லை.

மார்க்சும் எங்கல்சும் 19ஆம் நூற்றாண்டில் 
பிறந்து  வாழ்ந்து 19ஆம் நூற்றாண்டிலேயே 
மறைந்தும் விட்டனர். (மார்க்ஸ் மறைவு 
1883ல்; எங்கல்ஸ்  மறைவு 1895ல்). அவர்கள் 
காலத்தில் பொருள்  குறித்த அரிஸ்டாட்டிலின் 
வரையறையை மாற்றுவதற்கான தேவை 
எதுவும் எழவில்லை.

ஆனால் இருபதாம் நூற்றாண்டு அப்படியல்ல.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில 
விஞ்ஞானி ஜே ஜே தாம்சன் எலக்ட்ரானைக் 
கண்டுபிடித்தார். தமது பெயரால் அமைந்த 
அணுச் சித்திரத்தை (Thomson's atomic model) 
வெளியிட்டார். இச்சூழலானது அறிவியலில் 
புதிதாக இரண்டு துறைகளை (atomic physics, 
nuclear physics) உருவாக்கியது.

மேற்கூறிய காரணிகள் பொருள் பற்றிய 
அரிஸ்ட்டாட்டிலின் வரையறையை 
மாற்றுமாறு  வற்புறுத்தின. இக்காலத்தில் 
எர்னஸ்ட் மாக் (Ernest Mach) என்னும் 
இயற்பியல் விஞ்ஞானி பொருள் என்பது 
நிலைத்திருப்பதல்ல என்று அறிவித்தார். 
இயற்பியல் விஞ்ஞானிகள் நடுவே பொருள் 
குறித்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
அவை தீவிரப் பட்டன.    

இக்காலக்கட்டத்தில் மார்க்சியத்தின் 
தலைமைப் பொறுப்பில் லெனின் இருந்தார். 
பொருள் குறித்த சரியான வரையறையை 
உருவாக்க வேண்டியதன் தேவையை அவர் 
உணர்ந்திருந்தார். எர்னஸ்ட் மாக் போன்ற 
விஞ்ஞானிகளின் கருத்தை மறுத்து 
பொருள் பற்றிய சரியான வரையறையை 
உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு 
இருந்தது. எனவே பொருள் என்பது புறநிலை 
யதார்த்தம் (an objective reality) என்ற தமது 
புகழ் பெற்ற வரையறையை அவர் உலகிற்கு 
அளித்தார். (அது பற்றி அடுத்த பகுதியில் 
பார்ப்போம்).


தொடர்ச்சி... பகுதி-2; 
பொருள் பற்றிய லெனினின் வரையறை!
------------------------------------------------------------- 
பொருள் பற்றிய லெனின் வரையறை 
வருமாறு:-
"பொருள் என்பது மனித சிந்தனையைச் 
சாராமல், அதற்கு அப்பால் புறநிலையில் 
இருக்கின்ற யதார்த்தம் ஆகும். புலன்கள் 
வாயிலாக பொருள் நமது மூலையில் 
பிரதிபலிக்கப் பட்டு அதன் இருப்பை 
நாம் உணர்கிறோம்."

எர்னஸ்ட் மாக் போன்றோரின் பொருள் 
பற்றிய பிறழ்ந்த பார்வையை லெனினின்
வரையறை சரிப்படுத்தியது. லெனினின் 
வரையறையே சரியானது என்பது 
அனைவராலும் உணரப் பட்டது. இன்றளவும் 
லெனினின் "பொருள் என்பது புறநிலை 
யதார்த்தம் (objective reality)" என்ற வரையறை 
பொருந்துகிறது.

லெனின் தமது வரையறையை இருபதாம் 
நூற்றாண்டின் தொடக்கத்தில், அதன் முதல் 
தசாப்தத்தில் (decade) வழங்கினார். அப்போதைய 
அணுக்கருவியலின் வளர்ச்சி குழந்தைப் 
பருவத்தில்தான் இருந்தது. புரோட்டான் 
அப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை. 
ருதர்போர்டின் அணுச்சித்திரம் அப்போது 
வெளியாகி இருக்கவில்லை.   

இன்று இந்த 2023ல் லெனினின் வரையறை 
கூறப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகி 
விட்டது. இந்த நூறாண்டு காலத்தில் அறிவியல் 
குறிப்பாக இயற்பியல் அசுரத்தனமாக 
வளர்ந்துள்ளது. Atomic physics, Nuclear physics
ஆகியவற்றைத் தாண்டி Particle physics, 
High energy physics ஆகிய துறைகளைக் 
கொண்டதாக  இயற்பியல் வளர்ந்துள்ளது.

வளர்ந்துள்ள சூழலுக்கு ஏற்ப, பொருளின் 
வரையறை அகல்விரிவானதாகவும் 
ஆழமானதாகவும் (comprehensive and deep)
இருக்க வேண்டும். முழுமையானதாகவும் 
துல்லியமானதாகவும் இருக்க வேண்டும்.
இது நவீன அறிவியலின் தேவை.

பொருள் பற்றிய முழுநிறைவான வரையறையே 
வேறு எதனையும் விட பொருள்முதல்வாதத்திற்கு 
முக்கியமானது. லெனினின் வரையறை 
இன்றளவும் பொருந்தும் என்றபோதிலும், 
பொருள் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் 
விடையளிக்க வல்லதாகவும் அறிவியல் 
வழிப்பட்டதாகவும் உள்ள ஒரு வரையறையை 
நவீன அறிவியல் கோருகிறது.    

கருத்துமுதல்வாதத்தைக் களத்தில் சந்தித்து 
முறியடிக்க வல்லதாக, போக்குணம் 
மிக்கதாக நமது பொருள்முதல்வாதம் இருக்க 
வேண்டும் என்று லெனின் விரும்பினார். பொருள் 
பற்றிய வரையறை கூர்மையானதாகவும் 
முழுமையானதாகவும் துல்லியமானதாகவும் 
இருந்தால்தான் பொருள்முதல்வாதம் 
போர்க்குணம் உடையதாக இருக்கும்.

பொருள் என்பது புறநிலை யதார்த்தம் 
என்னும் லெனினின் பிரசித்தி பெற்ற 
வரையறையானது  தத்துவ வழிப்பட்ட 
வரையறை (philosophical definition) ஆகும். 
அதாவது அவ்வரையறை அறிவியல் 
வரையறை அல்ல. மாறாக அது 
epistemological definition ஆகும்.

லெனின் மறைந்த இந்த நூறாண்டுகளில் 
பொருளின் சாத்தியமான எல்லாப் பண்புகளும் 
(properties of matter) கண்டறியப் பட்டுவிட்டன.
பொருளும் ஆற்றலும் சமம் என்பது பல்லாயிரக் 
கணக்கான பரிசோதனைகளில் உறுதிப் 
படுத்தப் பட்டுள்ளது. இப்போதெல்லாம் 
உயர் ஆற்றல் இயற்பியலில் (high energy physics) 
துகள்களின் நிறையானது அதன் சொந்த 
அலகுகளில் (மில்லி கிராம் etc) குறிப்பிடப் 
படுவதில்லை. மாறாக ஆற்றலின் அலகுகளில் 
குறிப்பிடப் படுகிறது. உகாரணமாக ஹிக்ஸ் 
போஸானின் நிறை 125 GeV/squared ஆகும்.
அதாவது கிக்கா எலக்ட்ரான் வோல்ட் பெர் 
சி ஸ்கொயர்டு என்பதுதான் நிறையின் அழகு.   

சுருங்கக் கூறின் பொருள் குறித்த 
வரையறையானது ஆற்றலையும் 
உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
லெனினுக்குப் பிந்திய நூறாண்டுகளின் 
அறிவியல் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக 
இருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பொருள் 
குறித்த வரையறையை பின்னர் காணலாம்.
--------------------------------------------------------------------  

                



    

   




        



         
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக