எரிக் ஹாப்ஸ்பாம் வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை
00000000000000000000000000000000000000000000000000000000000
1996 காலகட்ட்த்தில் நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதி மீண்டு, அன்று இங்கே பேசப்பட்டு சற்றே ஓய்ந்துவிட்டிருந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை மூலநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றபோது நித்ய சைதன்ய யதியின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் கிடைத்தது. பின்நவீனத்துவச் சிந்தனைகளை வாசிக்கையில் நேர் எதிரான இருவகை சிந்தனைகளை இருபக்கமும் நிறுத்திக்கொண்டு வாசிப்பதே சமநிலையை உருவாக்கும் என்று நித்யா சொன்னார். ஒன்று மார்க்ஸிய இலட்சியவாதம். இன்னொன்று நரம்பியல் தொகுப்புநோக்கு.அவர் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒருபக்கம் எரிக் ஹாப்ஸ்பாம்இருந்தார். மறுபக்கம் ஆலிவர் சாக்ஸ் இருந்தார்
பின்நவீனத்துவத்தைத் தர்க்கத்தின் கொண்டாட்டம் எனலாம்.நிறுவப்பட்ட எல்லாவற்றையும் இலக்கு இல்லாத, தர்க்கம் மட்டுமேயான தர்க்கம் மூலம் உடைக்கும் ஒரு வேகம் மட்டுமே அது. ஒரு கோணத்தில் அதை புதுமறுப்புவாதம் [neo nihilism] எனலாம்.
நித்யாவைப்பொறுத்தவரை ஒரு பெரும் இலட்சியவாதக் காலகட்டத்தின் முடிவுக்கும் இன்னொன்றின் பிறப்புக்கும் இடைப்பட்ட சிறிய, மிகமிகச் சிறிய, இடைவெளியில் நிகிலிசங்கள் உருவாகும். கிரேக்க இலட்சியவாதத்துக்கும் கிறித்தவ இலட்சியவாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டம்தான் ஐரோப்பிய சிந்தனையின் முதல் ஐயவாதத்தின், மறுப்புவாதத்தின் காலகட்டம். கிறித்தவ இலட்சியவாதம் சரிந்து இடதுசாரி இலட்சியவாதமும் நவீனஜனநாயக இலட்சியவாதமும் உருவாவதற்கு இடைப்பட்ட காலகட்டமே இவான் துர்கனேவின் ’தந்தையும் தனயர்களும்’ நாவல் சித்தரிக்கும் ருஷ்ய மறுப்புவாதத்தின் சூழல்.
இடதுசாரி இலட்சியவாதமும் நவீன தாராளவாத ஜனநாயக இலட்சியவாதமும் தோற்றுப்போய் விழுந்த இடைவெளியே பின்நவீனத்துவ நிகிலிசத்தின் பிறப்புக்கான பின்னணி . ஆனால் மானுடம் இலட்சியவாதமில்லாமல் இருக்க முடியாது என்று நித்ய சைதன்ய யதி அழுத்தமாக நம்பினார். மார்க்ஸிய இலட்சியவாதம் மீது அவருக்கிருந்த ஈடுபாடு கடைசி வரை நீங்கவும் இல்லை. சோவியத் ருஷ்யா உடைந்த நாட்களில் அவர் தன் நண்பர்களான இடதுசாரித் தலைவர்களுடன் கொண்ட நீண்ட கடிதப்பரிமாற்றங்கள் நூலாக வெளிவந்துள்ளன. அதில் அந்நம்பிக்கையைப் பேணிக்கொள்ள நித்யா முயல்வதைக் காணமுடிகிறது
1997ல் வெளிவந்த ’வரலாறைப்பற்றி’ என்ற நூலில் எரிக் ஹாப்ஸ்பாம் சென்ற தொண்ணூறுகளில் ஆற்றிய பல பல்கலைக்கழக உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் பின்நவீனத்துவ சிந்தனைகளை எதிர்கொண்டு கடந்துசென்ற காலகட்டம் என தொண்ணூறுகளைச் சொல்லலாம். இந்நூல் முழுக்க அந்தக் கருத்துமோதலின் மார்க்ஸியத்தரப்பை நாம் காணமுடிகிறது. இன்று ஓர் இடைவெளிக்குப்பின் நான் கட்டுரைகள் நடுவே எழுதிவைத்த குறிப்புகளுடன் சேர்த்து இந்நூலை வாசிக்கும்போது ஒட்டுமொத்தமாக இந்நூலை வரலாற்றின் புறவயத்தன்மையை நிறுவுவதற்கான முயற்சி என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.
வரலாறு என்ற அடிப்படை உருவகம் மீது ஆழமான தாக்குதல்களைத் தொடுத்தவர் என்று ஜெர்மானியச் சிந்தனையாளர் நீட்சேயை சொல்லலாம். வரலாறு என்பது நினைவில் உருவாக்கி நிறுத்தப்படும் வம்சாவளி வரலாறுமட்டும்தான் என்றார் நீட்சே. பிற எல்லா வரலாறுகளும் சமகாலத்தில் அதிகாரத்தை உருவாக்கி நிலைநாட்டும் நோக்கத்துடன் கட்டமைக்கப்படுபவை மட்டுமே. இன்றைய கருத்தியல்களுக்கு ஏற்ப நேற்றை உதவிகரமான தகவல்களின் அடிப்படையில் கட்டி எழுப்பக்கூடியவை. அத்தகவல்களைத் தேர்வுசெய்வது வரிசைப்படுத்துவது ஆகியவற்றில் வரலாற்றெழுத்தாளனின் நோக்கம் செயல்படுகிறது. ஆகவேதான் வரலாறு ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்க்கப்படுபவர்களுக்கும் நடுவே, வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் நடுவே முழுமையாக வேறுபடுகிறது.
நீட்சே பின்நவீனத்துவகால சிந்தனையாளர்களில் ஆழமான பாதிப்பை உருவாக்கியவர். இன்றைய கருத்தியல்தேவைக்கு வரலாற்றைப் பின்னணியாக்குவதை வரலாற்றுவாதம் என ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கும் பின்நவீனத்துவர்கள் வரலாறென்பது ஒட்டுமொத்தமாகவே ஒரு புனைவுதான் என்று கூறினார்கள். அந்தப் பெரும்புனைவுக்குள் இனமேன்மைகள், குலமேன்மைகள் ,தனித்துவம் கொண்ட பண்பாட்டுப் பாரம்பரியங்கள், தேசியங்கள் போன்ற பெரும்புனைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் உண்மையில் மொழிக்குள் நிகழக்கூடிய சொல்லாடல்கள் மட்டுமே. பெருமொழிபுகள் என பின்நவீனத்துவம் இவற்றை ஒட்டுமொத்தமாக அடையாளப்படுத்தி இவையெல்லாமே அதிகாரத்தை அடைந்து ஆள்வதற்கான உத்திகள் மட்டுமே என தீர்மானிக்கிறது. எந்தப் பெருமொழிபும் உள்ளடக்கத்தில் ஆதிக்கத்தையே கொண்டிருக்கும் என்கிறது.
இந்த அணுகுமுறைக்கு எதிராகவே என்றும் இடதுசாரி வரலாற்றாய்வாளர்கள் நிலைகொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை வரலாற்றின் புறவயத்தன்மை என்பது எப்போதும் சற்று மழுங்கலானதுதான், ஆனால் அதைவைத்துப் புறவயமான வரலாறு என்பதே கிடையாது என்று வாதிடுவது என்பது அபத்தமானது. இப்படி வாதிடுபவர்கள் தங்கள் வாதங்கள் மட்டும் புறவயமானவை என்று நம்புவதைக் காணலாம், அந்த வாதங்களும் அவற்றின் சொற்களன்களும் கூட அகவயமானவை என்றால் அறிவுத்தளத்தில் புறவயமாக என்னதான் இருக்கிறது என்கிறார்கள் மார்க்ஸியர்கள்.
வரலாற்றை ஒரு பெரும்புனைவாக எடுத்துக்கொண்டால்கூட அது புறவயமான பெருந்தர்க்கம் கொண்ட, கூட்டான பெரும்புனைவு. மொழிக்குள் உள்ள நிகழ்வாகவே எடுத்துக்கொண்டாலும் கூட,தன் எல்லைக்குள் அது புறவயமான விதிகளை, இயங்குமுறைகளைக் கொண்டுள்ளது. அதன் இயக்கவிதிகள் சமகாலத்தை அறிந்துகொள்ள உதவக்கூடியவை. ஆகவே வரலாற்றின் பெருமொழிபுத்தன்மையைக் கணக்கில்கொண்டு வரலாற்றை விவாதிக்கும் புதுவரலாற்றுவாதச் சிந்தனையாளர்கள் உருவாகி வந்து பின்நவீனத்துவம் வரலாற்றுக்கு அளித்த விவரணைகளை நிராகரித்தார்கள்
புதுவரலாற்றுவாதத்தை உருவாக்கிய ஆரம்பகட்டச் சிந்தனையாளர்களில் ஒருவர் என எரிக் ஹாப்ஸ்பாமைச் சொல்லலாம். இடதுசாரி வரலாற்றுக் கோட்பாட்டாளரான ஹாப்ஸ்பாமின் ’வரலாறு குறித்து’ என்றநூலின் முன்னுரையிலேயே இந்தத் திட்டவட்டமான நிராகரிப்பும் நிலைபாடும் வந்துவிடுகிறது. புறவய வரலாற்று உண்மை சாத்தியமே இல்லை என நம்பும் சமகால மோஸ்தரை நிராகரிக்கும் எரிக் ஹாப்ஸ்பாம் ’சுருக்கமாகச் சொன்னால் எது உள்ளது எது இல்லை என்ற திட்டவட்டமான வேறுபாடு இல்லாமல் வரலாறே இல்லை’ என்கிறார்.
இப்படிச் சொல்வதை positivism என்று ஒற்றைச் சொல்லில் பின்நவீனத்துவர் நிராகரிப்பதைச் சுட்டிக்காட்டும் எரிக் ஹாப்ஸ்பாம் ரோம சாம்ராஜ்யம் பூனிக் போர்களில் கார்தேஜை தோற்கடித்து அழித்தது என்பது ’உள்ள’ விஷயம், அதை எந்த வரலாற்றெழுத்தும் ’இல்லா’மலாக்காது என்கிறார். அதற்கான காரணங்களை விளக்குவதில் மட்டுமே அகவயத்தன்மை வரமுடியும். இன்றைய சார்புவாதிகள் [relativists] வரலாற்றை ஒரு வெறும் விவாதக்களனாகச் சித்தரிக்க முயல்கிறார்கள் என்று சொல்லும் எரிக் ஹாப்ஸ்பாம் ‘இன்றைய வரலாற்றெழுத்தில் சார்புவாதத்துக்கு உள்ள அதிகபட்ச இடம் என்பது ஒரு நீதிமன்றத்தில் உள்ள அளவுக்கே’ என்கிறார்
தன்னை ஒரு மார்க்ஸிய வரலாற்றாய்வாளர் என்று குறிப்பிட விழையும் எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்ஸியநோக்கு இல்லையேல் தனக்கு வரலாற்றை ஆராய்வதற்கான நோக்கம் இல்லாமலாகிவிட்டிருக்கும் என்கிறார். அது வரலாற்றை ஆராய்வதற்கான கருவிகளை அளிப்பது இரண்டாம் பட்சமே , ஏன் வரலாற்றை ஆராயவேண்டும், அதிலிருந்து எதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தெளிவே மார்க்ஸியம் அளிக்கும் முக்கியமான பங்களிப்பு. வரலாற்றாய்வில் ஒரு இலட்சியவாத அம்சத்தைச் சேர்த்தது மார்க்ஸியமே என்கிறார் ஹாப்ஸ்பாம்.
ஹாப்ஸ்பாம் மார்க்ஸிய வரலாற்றாய்வே மானுடவரலாற்றின் பரிணாமச்சித்திரத்தை அளிக்கக்கூடியது என நம்புகிறார். மார்க்ஸிய அரசியல் மட்டுமே நல்லது என்றோ, அல்லது போதுமானது என்றோ தான் நம்பவில்லை என்று சொல்லும் ஹாப்ஸ்பாம் ஆனால் மார்க்ஸிய வரலாற்றாய்வுமுறைமையே நவீன வரலாற்றாய்வில் ஒப்புநோக்க அதிக முழுமையும் ஒருங்கிணைவும் உள்ளது என இந்நூலில் மீண்டும் மீண்டும் வாதிடுகிறார்.
மார்க்ஸிய ஆதரவாளரல்லாத எர்னஸ்ட் கெல்னர் [ Ernest Gellner] கூறிய மேற்கோள் ஒன்றை ஒரு இடத்தில் ஹாப்ஸ்பாம் எடுத்துக்காட்டுகிறார். இன்றுவரை வரலாற்றாசிரியர்கள் மனிதனின் வரலாற்றுப் பரிணாமத்தை விளக்கக் கையாண்ட கருவிகளில் மார்க்ஸியமே முக்கியமானது, பிற அனைவரும் தங்கள் சொந்த ஐயங்களையும் மறுப்புகளையும் மட்டுமே முன்வைக்க முடிந்திருக்கிறதே ஒழிய ஒரு மாற்று வரலாற்று மொழிபை உருவாக்க முடிந்ததில்லை என்கிறார் கெல்லர்.
புதுவரலாற்றுவாதத்தின் அடிப்படைச்சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடிய மூன்று முக்கியமான கட்டுரைகளை எரிம் ஹாபஸ்பாமின் இந்நூலில் காணலாம். மிக விரிவான விவாதத்துக்குரியவை அக்கட்டுரைகள். வரலாற்றெழுத்தாளர்கள் மார்க்ஸுக்கு எவ்வகையில் கடன்பட்டிருக்கிறார்கள் என்ற கட்டுரையில் எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்ஸியம் ஒன்றே வரலாற்றை ஒரு பரிணாமத்தொடர்ச்சியில் வைத்து பார்க்கிறது, தனிநிகழ்வுகளை ஒட்டுமொத்ததில் பொருத்துவதற்கான விரிவான சட்டகத்தை அளிக்கிறது என்கிறார்.
நூறு வருடத்தில் வரலாற்றெழுத்தில் மார்க்ஸியம் செலுத்திய செல்வாக்கு காரணமாகவே வரலாறு சமூகவியலுக்கு இத்தனை நெருக்கமானதாக ஆகியது, பண்பாட்டாய்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். இன்று எல்லா சமூக அறிவியல்துறைகளுமே ‘வரலாற்றுமயமாக்க’ப்பட்டிருப்பதற்கு மார்க்ஸ் காரணம். பாசிட்டிவிச நோக்கின் மிதமிஞ்சிய எளிமைப்படுத்தல்களை தாண்டி வரலாற்றை நடைமுறைநோக்கில் தொகுத்துப்பார்க்கும் ஆய்வுமுறைமைகளை அது அளித்திருக்கிறது.
சம்பிரதாய மார்க்ஸியர்களின் ஒற்றைப்படையான கோட்பாட்டு விசுவாசத்தை ‘அசிங்கமான மார்க்ஸியம்’ என நிராகரிக்கும் ஹாப்ஸ்பாம் எவ்வகையான எளிமைப்படுத்தல்களையும் ஏற்பதில்லை. வரலாற்றாய்வின் மூலம் வாழ்க்கை பற்றியோ சமூகம் பற்றியோ வாய்ப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளமுடியாதென்றே அவர் நினைக்கிறார். வர்க்கநலன், அடித்தளம்-மேற்கட்டுமானம் போன்றவற்றை எளிய உருவகங்களாகப் பயன்படுத்தி வரலாற்றை ஆராயும் முறையை அவர் ஏற்பதில்லை. ஆனால் மார்க்ஸிய அடிப்படைகளான முரணியக்கப் பொருள்முதல்வாதமும், உபரிக்கோட்பாடும் வரலாற்றை விளக்குவதற்கான, எல்லைக்குட்பட்ட, உபயோகமான கருவிகள் என நினைக்கிறார்.
நூறு வருட வரலாற்றெழுத்தில் மார்க்ஸின் செல்வாக்கை நான்கு அடிப்படைக் கருத்துக்களாக ‘மார்க்ஸும் வரலாறும்’ என்ற கட்டுரையில் தொகுத்தளிக்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ஒன்று, உலகமெங்கும் சோஷலிசத்தை ஏற்றுக்கொள்ளாத சமூகங்களில் இன்றும் மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை ஆராயும்போக்கு வலுவாகவே உள்ளது. மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திவந்த அடிப்படைக் கருதுகோள்கள் பல இன்று மையநீரோட்ட வரலாற்றின் அடிப்படைகளாகவே ஆகிவிட்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு வரலாற்றுக்காலகட்டத்தின் உற்பத்தி முறைகள் உபரிசேமிப்பு பற்றிய புரிதல் அந்த வரலாற்றுக்காலகட்டத்தை அறிவதற்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பது.
[தமிழகத்தில் இருந்து உதாரணம் காட்டவேண்டுமென்றால் மார்க்ஸியரே அல்லாத கெ.கெ.பிள்ளை சோழர்காலகட்ட உற்பத்தி மற்றும் வரிவசூல் முறைகளைப்பற்றி ஆராய்ந்ததைச் சொல்லலாம். அவரது கருவிகள் மார்க்ஸியத்தால் உருவாக்கப்பட்டவையே. ஆனால் அவர் மார்க்ஸிய ஆய்வாளராக அல்ல, மையநீரோட்ட ஆய்வாளராகவே கருதப்படுகிறார். பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா போன்ற சோழர்வரலாற்று ஆய்வாளர்களும் மார்க்ஸிய ஆய்வுமுறைகளை இயல்பாகவே பயன்படுத்துகிறார்கள்]
இரண்டு, மார்க்ஸிய வரலாற்றாய்வுமுறை கையாளப்படும் எல்லா நாடுகளிலும் மார்க்ஸ் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கிறாரே ஒழிய முடிவுப்புள்ளியாக அல்ல. அதாவது வர்க்கப்போர், புரட்சி, பொதுவுடைமைச் சமூகம் போன்ற இலக்குகளை வந்தடைவதற்காக அந்த ஆய்வுகள் நிகழ்த்தப்படவில்லை. முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்குடன் வரலாற்றைப் பார்ப்பதை மட்டுமே மார்க்ஸிடம் இருந்து இந்த வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்
[இந்திய அளவில் உதாரணம் சொல்வதாக இருந்தால் டி.டி.கோசாம்பியை மார்க்ஸியவரலாற்றுநோக்குள்ள ஆய்வாளர் என்று சொல்லலாம். அவரது வழிவந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், ஆர்.எஸ்.சர்மா போன்ற வரலாற்றாசிரியர்கள் மார்க்சிய அரசியல் செயல்திட்டத்துக்குள் சென்றவர்களே அல்ல. அவர்கள் இந்தியாவின் வரலாற்றை ஒரு பெரும் சமூக-பொருளியல் பரிணாமமமாகப் பார்ப்பதற்கு மட்டுமே மார்க்ஸியத்தைக் கைக் கொள்கிறார்கள்]
மூன்றாவதாக, மார்க்ஸிய வரலாறு நோக்கு என்பது இன்று மிகுந்த பன்மைத்தன்மையுடன் உள்ளது. அது ஒரு கோட்பாட்டு வழிமுறையோ அரசியல்பார்வையோ ஆக இல்லை. ஒரு பெரிய விவாதப்பரப்பாகவே உள்ளது. உலகம் முழுக்க அப்படித்தான். வரலாற்றை விளக்குவதற்கு மார்க்ஸியம் ஒரு வழிமுறையை அளிக்கிறது என்பதை விட வரலாற்றைப்பற்றிய ஒரு விரிவான விவாதத்தை உருவாக்குகிறது என்று சொல்வதே சரியானதாக இருக்கும்
நான்காவதாக, இன்று மார்க்ஸிய நோக்கிலான வரலாற்றாய்வுகளைப் பிற வரலாற்றாய்வுகளில் இருந்து பிரித்துநோக்க முடியாது. இது இருமுனை கொண்டது என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ஏனென்றால் நெடுங்காலமாக மார்க்ஸிய வரலாற்றாசிரியர்கள் பிற வரலாற்றாய்வுகளைத் தரவுகளுக்காக அன்றி பொருட்படுத்தியதில்லை. மார்க்ஸியர்களுக்கும் பிறருக்குமான கொள்கைமோதல்கள் நீடிக்கிறதென்றாலும் மார்க்ஸிய வரலாற்றெழுத்து இல்லாமல் ஒட்டுமொத்த வரலாற்றெழுத்து நிறைவடையாது என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது.
[இந்திய அளவில் நோக்கினால் டி.டி.கோசாம்பியைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்ட இந்திய மார்க்ஸிய நோக்கிலான வரலாற்றெழுத்து நெடுநாட்களாகக் கல்வித்துறைக்கும் சம்பிரதாய வரலாற்றெழுத்துக்கும் வெளியேதான் நின்றுகொண்டிருந்தது. எண்பதுகளுக்குப்பின் அந்த நிலை மாறிவிட்டிருப்பதை சமீபகால ஆய்வேடுகளைப்பார்த்தால் அறியலாம். இன்று அதிகம் மேற்கோள்காட்டபடும் வரலாற்றாசிரியர்கள் பலரும் கோசாம்பியின் மரபைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதற்கு ஜவகர்லால் நேரு பல்கலை ஒரு முக்கியமான காரணமாகவும் உள்ளது]
முடிவாக எரிக் ஹாப்ஸ்பாம் ‘நம்மால் ஊகிக்கக்கூடிய வருங்காலத்திற்காக நாம் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கில் தாக்குதல் தொடுப்பவர்களிடமிருந்து மார்க்ஸையும் மார்க்ஸியத்தையும் காத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதன் வழியாக நாம் உண்மையில் வரலாறு என்பதையே காத்துக்கொள்கிறோம், இந்த உலகம் இந்த இடத்தை நோக்கி எப்படி வளர்ந்து வந்து சேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள மனிதனால் முடியும் என்பதையும் இன்னும் மேலான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல மனிதனால் முடியும் என்பதையும் நிறுவிக்கொள்கிறோம்’ என்கிறார்.
இந்நூலில் எரிக் ஹாப்ஸ்பாமின் ஆர்வமூட்டும் உரைகள் அத்தியாயத் தொடர்ச்சியுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோணங்களில் வரலாற்றைப்பற்றிய வினாக்களை எழுப்பிக்கொண்டு முன்செல்லும் இந்நூல் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு கேள்விகளுடன் அணுகப்படவேண்டிய ஒன்றாகும். ‘வரலாறு முன்னகர்ந்திருக்கிறதா?’ ‘சமூகவியல் வரலாறும் சமூகத்தின் வரலாறும்’ போன்று தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆர்வத்தை எழுப்பக்கூடியவை.
உதாரணமாக, வரலாற்றை நீங்கள் உள்ளே நின்று பார்க்கிறீர்களா இல்லை வெளியே நின்று பார்க்கிறீர்களா என்பது எப்போதுமே முக்கியமானது என ’வரலாற்றுக்கு உள்ளேயும் வெளியேயும்’ என்ற கட்டுரையில் ஹாப்ஸ்பாம் விவாதிக்கிறார். வரலாற்றுக்கு வெளியே நின்று விவாதிப்பதென்பது பெரும்பாலும் அன்னிய வரலாற்றை ஆராய்வதிலேயே சாத்தியம். ஐரோப்பா இந்தியாவை அப்படி ஆராயலாம். சோவியத் ருஷ்யாவை முதலாளித்துவ ஐரோப்பா அப்படி ஆராயலாம். அது புறவயத்தன்மையை அடையக்கூடும் என்பது ஒரு சாதகமான அம்சம் என்றால் அது அந்த வரலாறுமீதான அன்னியனின் தீர்ப்பளிப்பாக ஆகிவிடுமென்பது எதிர்மறையான அம்சம்.
சோவியத் ருஷ்யாவின் வரலாற்றில் ஸ்டாலின் ஆட்சிக்காலகட்டம் மிகமோசமான ஒடுக்குமுறைகளாலானது என்பதை ஹாப்ஸ்பாம் ஒத்துக்கொள்கிறார். ஆனால் 1930களில் அந்தக் கம்யூனிச ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஏழைமக்களில் கணிசமானவர்களுக்கு அது பொற்காலமாக இன்றும் நினைவில் நீடிக்கிறது என்பதும் உண்மை. சுதந்திரமான படைப்பூக்கத்தை இறுக்கமான நிர்வாகம் மூலம் தடைசெய்தது, நெகிழ்வின்மைகாரணமாகப் புதிய வணிகச்சூழல்களுடன் ஒத்துப்போக முடியாதது ஆகியவை அச்சமூகஅமைப்பை அழித்தன. என்றாலும் இச்சாதனைகளை நாம் மறுக்கமுடியாது. சுதந்திர ஐரோப்பிய சமூகத்தில் இருக்கும் அன்னியனுக்கு இருக்கும் அதே வரலாற்று மனப்பதிவல்ல ஸ்டாலினிய ருஷ்யாவில் வாழ்ந்த அடித்தள வர்க்க தொழிலாளிக்கு இருக்கக்கூடியது. வரலாற்றெழுத்தில் இந்த வேறுபாடு என்றும் முக்கியமானது
வரலாற்றின் சமகாலப் பயன் என்ன என்ற கேள்வியை இன்று மீண்டும் மீண்டும் வரலாற்றுக்கோட்பாட்டாளர்கள் சந்திக்க நேர்கிறது. ‘சமகால சமூகத்தைப்பற்றி வரலாறு என்ன சொல்ல முடியும்?’ என்ற கட்டுரையில் அந்த வினாவை ஹாப்ஸ்பாம் எழுப்பிக்கொள்கிறார். பொதுவாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரைக்கும் கூட வரலாறென்பது இன்று நாம் நடந்துகொள்வதற்கான நேற்றைய முன்னுதாரணங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒன்றாகவே எண்ணப்பட்டது. முன்மரபுகளின் பெருந்தொகை.
முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதன் விவரிப்பே வரலாறு என இந்த நோக்கை தொகுக்கலாம். அதாவது வரலாற்றெழுத்து என்பது சென்ற காலத்தில் இருந்து இன்றும் செல்லுபடியாகக்கூடிய விழுமியங்களைக் கண்டெடுப்பதும் அதனடிப்படியில் இன்றைய நம் நடவடிக்கைகளைத் தீர்மானித்துக்கொள்வதுமாகும். நீதி,நிர்வாகம் போன்ற தளங்களில் இன்றும்கூட வரலாறு அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்படுகிறது.
இன்னொருவகையில் வரலாறு தேவையாகிறது, அரசியல் காரணங்களுக்காக. இன,மொழி,தேசிய அடையாளங்களை கட்டி எழுப்புவதற்காக. அவை அரசியல் செலாவணிகள். இந்த நோக்கில்தான் பழங்காலம் பொற்காலம் என்ற கற்பிதங்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் அரைகுறை வரலாற்றாய்வுகளால், அவற்றை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளால் இவை உருவாக்கப்படுகின்றன. எரிக் ஹாப்ஸ்பாமைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் அந்த வகையான வரலாற்றுநோக்கு பெரிதும் வழக்கொழிந்துவிட்டது. இந்தியாவில் பிரபலமாக இருப்பது அது என நாம் அறிவோம்.
கடைசியாக, சமகாலக் கொள்கை வகுப்புக்கு வரலாறு தேவையாக ஆகிறது.அரசியல், பொருளியல் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு சமூகச்சூழலை புரிந்துகொள்ள அதன் வரலாற்றைப் பயன்படுத்துகிறார்கள். லெபனான் பற்றிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ருஷ்ய நூல் ஒன்றின் மொழியாக்கத்தை வாசிக்கநேர்ந்த இஸ்ரேலிய ராணுவத்தளபதி ஒருவர் இந்நூலை முன்னரே வாசித்திருந்தால் ஏராளமான ராணுவப்பிழைகளைக் களைந்திருக்கலாம் என்று சொன்னதை எரிக் ஹாப்ஸ்பாம் சுட்டிக்காட்டுகிறார். ஒரு மக்கள்தொகையின் மனநிலைகள், ருசிகள் ,பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் மனதில் உள்ள முன்னுதாரணங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வரலாற்றாய்வு உதவுகிறது.
ஹாப்ஸ்பாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அதிகவரலாறு இல்லாத, தொடர்ச்சியான சமூகக்கொந்தளிப்புகள் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்த, புதிய தேசங்களைப் பற்றிப் பேசும்போது இந்த வரலாற்று உருவகம் எவ்வகையில் பொருள்படுகிறது என்று இக்கட்டுரையில் ஆராய்கிறார். முக்கியமாக அமெரிக்காவை. அமெரிக்காவின் சமகால வரலாற்று நிகழ்வுகள் வரலாற்றுப்பரிணாமத்தைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கக்கூடியவை என்கிறார்
மார்க்ஸிய உபரிக் கோட்பாட்டை வரலாற்றை விளக்குவதற்கான முக்கியமான ஆய்வுக்கருவியாக எரிக் ஹாப்ஸ்வாம் நினைக்கிறார். சென்ற காலகட்டங்களில் உலகமக்கள்தொகையில் 90 சதவீதம்பேரும் உணவுற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள். இன்று வட அமெரிக்க நிலப்பகுதியில் வெறும் 3 சதவீத மக்கள் அந்நாட்டின் 97 சதவீதம் பேருக்கும் உணவை அளிக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிப்படை உழைப்பில் இருந்து வெளியே வரும் மக்கள் மேற்கட்டுமானத்தை மேலும் மேலும் விரிவுபடுத்துகிறார்கள் என்பது ஒரு நடைமுறை உண்மையாகவே நம் கண்முன் உள்ளது என்கிறார்.
மார்க்ஸ் முன்னரே ஊகித்திருந்தும் கூட 1960கள் வரையிலும் இந்த அளவுக்கு உணவுற்பத்தியில் உழைப்புக்குறைவு நிகழும் என்பது கண்கூடாக நிகழ்ந்திருக்கவில்லை. அறுபதுகளுக்குப்பின்னர் மெல்லமெல்ல பிற உற்பத்தித்துறைகளிலும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. மெல்லமெல்ல சேவைத்துறையில் மானுடப்பங்களிப்பு அதிகம் நிகழ்கிற நிலை வந்துள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால், உபரி மூலம் மேலும் மேலும் மேல்கட்டுமானம் வலுப்பெறும் நிலையைத்தான்.
இவ்வாறு மேல்கட்டுமானம் வலுப்பெறும் நிலையில் இரு தளங்கள் செயலூக்கம்பெறுகின்றன. ஒன்று பணப்பரிமாற்ற வணிகம். இன்னொன்று பண்பாட்டு விவாதங்கள். இதை அமெரிக்க சமூகத்தில் காணமுடிகிறது. அமெரிக்காவே இவ்விரு தளங்களில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லமுடியும். அறிவையும் பணத்தையும் அது வியாபாரப்பொருளாக ஆக்கிவிட்டிருக்கிறது இன்று. ஆக இங்கே வரலாற்றாய்வு என்பது சமகால அமெரிக்காவைப் பற்றிய ஆய்வாக உருக்கொள்கிறது.
எரிக் ஹாப்ஸ்பாம் மிக வலுவான நிலையில் நின்று பின்நவீனத்துவ சிந்தனைகளின் ஐயவாதத்தை, வெற்றுத்தர்க்கத்தை எதிர்கொள்கிறார். அவரது சாராம்சம் மார்க்ஸியத்தைச் சார்ந்த இலட்சியவாதமே. எந்தச் சிந்தனையும் மனித மேம்பாட்டுக்கான சிறந்த விழுமியங்களை உருவாக்கக்கூடியதாகவும், மேலான எதிர்காலத்துக்கான கனவைக்கொண்டதாகவும் இருந்தாகவேண்டும். பின்நவீனத்துவ சிந்தனைகள் அவ்வகையான சாரம் அற்றவை, பயனற்றவை என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.
ஓர் ஆசிரியரின் ஒட்டுமொத்தப் பார்வையைக் கச்சிதமான ஒரு சொற்றொடரில் கண்டுகொண்டு அதை நினைவில் மீட்டிக்கொள்வது என் வழக்கம். ’வரலாற்றாசிரியர்கள் தவிர்க்கக்கூடாத கேள்வி என்பது குகைமனிதனில் இருந்து விண்வெளிப்பயணி எப்படி உருவானான் என்பது. அல்லது கொடுவாள் பல்லுள்ள புலியை அஞ்சிய நிலையில் இருந்து அணுகுண்டை அஞ்சும் நிலை எப்படி வந்தது என்பது’ என்ற ஹாப்ஸ்பாமின் வரி என்னை நெடுநேரம் சிந்தனைகளை மீட்டிக்கொள்ளச் செய்தது.
இந்தவரியில் ஹாப்ஸ்பாமின் அணுகுமுறை துல்லியமாக உள்ளது. ஒன்று, அவர் ஒரு மார்க்ஸியர். ஆகவேதான் அந்த முதல் வரி. ஆனால் அவர் ஒரு சம்பிரதாய மார்க்ஸியர் அல்ல. அவருக்கு மானுட விழுமியங்களைப்பற்றிய கவலை எப்போதுமுண்டு. அதுவே அவரது அடிப்படையான நோக்கு. ஆகவே அந்த இரண்டாவது வரி.
[On History. Eric Hobsbawm. ABACUS London