புதன், 14 மார்ச், 2018

இந்த மகா பிரபஞ்சம் ஆதியில் ஒரேயொரு சிறு புள்ளியிலிருந்து தோன்றி பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துப் பின்பு ஒருகட்டத்தில் பெரும் வெடிப்பாக நிகழ்ந்தது என்பது உண்மையா? விளங்கிக்கொள்ள முடியவில்லையே!!? விளக்க முடியுமா?
- சு.புருஷோத்தமன் -
✍️ ஆமாம். உண்மைதான். அந்தக் கொஞ்சம் கொஞ்சமாய் என்பது பெரிய நேர இடைவெளி அல்ல. ஒருசில நொடிகளுக்கு உள்ளேதான். அந்த ஒருசில நொடிகளில் ‘பிக்பாங்’ எனப் பெரிதாக விரிந்தது. அது வெடிப்பல்ல, விரிவுதான்.
13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எதுவுமே இருந்திருக்கவில்லை. பொருள், சக்தி, காலம், இடம் என்று எதுவும் உருவாகியிருக்காத ஒரு நிலை. இன்றுள்ள மனிதனால் கற்பனை செய்த முடியாத நிலை. ஈர்ப்புவிசை, மின்காந்த விசை, திட அணுவிசை, திடமற்ற அணுவிசை ஆகிய நான்கு அடிப்படை விசைகளும் ஒன்றுசேர்ந்து, ஒரு விசேசமான விசையாகச் சிறு புள்ளியொன்றில் சீறியெழக் காத்திருந்தன. ஒரு குறித்த கணத்தில், மாப்பெரும் விரிவாய் விரிந்தன. முதல் செக்கனிலேயே ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் வரைபடமும் அங்கு வரையப்பட்டுவிட்டது. பிரபஞ்ச வரலாற்றிலேயே முதன்மையானதும், மிகப்பெரியதுமான மிஸ்டரி இதுதான்.
பிரபஞ்சம் தோன்ற இருந்த அந்தக் கணத்தின், முதலாவது பிளாங்க் செக்கன் (Planck Second) நேரத்தில், நான்கு விசைகளில் ஒன்றான ஈர்ப்புவிசை அவற்றிலிருந்து தனியாகப் பிரிந்தது. பின்னர், திடமற்ற அணுவிசையும், திட அணுவிசையும், மின்காந்த விசையும் பிரிந்தன. அதன்மூலம் தோன்றிய சக்தி (Energy) அளவில்லாமல் பெருக ஆரம்பித்தது. இது ஒவ்வொரு பிளாங்க் செக்கன்களாகத் தொடர்ந்து, முதலாவது செக்கன்வரை நடைபெற்றது. அணுத்துகள்களின் சிதைவினால் அணுகுண்டொன்று அளவில்லா ஆற்றலை எப்படி வெளியிடுகிறதோ, அதன் நேர்மாற்றுச் செயலாக அதிகளவு ஆற்றல், அளவில்லா அணுத்துகள்களை உருவாக்கத் தொடங்கியது.
பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருட்களுக்கான அணுக்களின் அடிப்படைத் துகள்கள் அனைத்தும் அந்த ஒரு செக்கனுக்குள்ளேயே உருவாகிவிட்டன. ஆனால், அங்கேயிருந்த பெருவெப்பத்தின் காரணமாக அவை அணுக்களாக உருவாகி விடவில்லை. அணுக்களற்ற, அணுத்துகள்களால் மட்டும் நிறைந்து கலந்திருந்த அந்தக் கலவையைக் ‘குவார்க் சூப்’ (Quark soup) என்பார்கள்.
இந்தக் குவார்க் சூப் நிலையிலிருந்தே பெருவிரிவு நிகழ்ந்தது. விரிவின் காரணத்தினால் மெல்ல மெல்ல வெப்பம் குறைய ஆரம்பித்ததால், அணுக்கள் தோன்றும் சூழ்நிலை உருவாகியது. தொடர்ச்சியாய்ப் படிப்படியாக நட்சத்திரங்களும் பிற விண்வெளிப் பொருட்களும் உருவாகின. இப்போதுகூட, பிக்பாங்கின் ஆரம்பக் கணத்தின் சற்றுப் பின்னரான குழந்தைப் பிரபஞ்சத்தை (Baby Universe) தொலைநோக்கிகள் முலம் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
பிக்பாங் கணத்தில் ‘துகள்கள்’ (Matter) மட்டும் தோன்றவில்லை. அவற்றுடன் ர்ந்து ‘எதிர்த்துகள்களும்’ (Anti matter) தோன்றின. இந்தத் துகள்களும், எதிர்த்துகள்களும் ஒரே இடத்தில் ஒன்றாக இருக்க முடியாதவை. ஒன்றையொன்று அழித்து, இல்லாமையை உருவாக்குபவைகள். ஒன்றுடன் ஒன்று சேரும்போது பெருத்த வெடிப்புடன் இல்லாமல் போகின்றவை. ஆரம்பத்தில் எத்தனை துகள்கள் தோன்றினவோ, அதேயளவு எதிர்த்துகள்களும் தோன்றின. அவை ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒன்றையொன்று அழித்தன. 96 சதவீதமான துகள்கள் இதனால் அழிக்க்கப்பட்டன. ஆச்சரியகரமாக, நான்கு சதவீதத் துகள்கள் எஞ்சியிருந்தன. உண்மையில் துகள்கள், எதிர்த்துகள்கள் இரண்டுமே இல்லாமல் அழிந்து போயிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், பிரபஞ்சம் என்ற ஒன்றே இருந்திருக்காது. அல்லது வேறு வகையினதாக இருந்திருக்கும். எப்படி நூறு சதவீத எதிர்த்துகள்களும் அழிந்து போயின, நான்கு சதவீதம் துகள்கள் எஞ்சின என்ற மர்மம் இன்னும் விளக்க முடியாமலே இருக்கின்றது. கடவுள் நம்பிக்கையாளர்கள் சொல்வார்கள் பிக்பாங் மூலம் பிரபஞ்சத்தைக் கடவுள் தோற்றுவித்தார் என்று. ஆனால், உண்மை அதுவல்ல. அப்படியொன்று இருந்தால், எதிர்த்துகள்களால் அழிக்கப்படாமல் நான்கு சதவீதத் துகள்களைக் காப்பாற்றியதுதான் கடவுளின் பணியாக இருந்திருக்க வேண்டும்.
எஞ்சிய நான்கு சதவீத துகள்களே, இன்றிருக்கும் பேரண்டத்தின் நட்சத்திரங்கள், காலக்ஸிகள், குவார்க்குகள், கருந்துளைகள், குவேசார்கள் என்று உருப்பெற்றிருக்கின்றன. எதிர்த்துகள்களில் நான்கு சதவீதமும் அழிந்துவிடாமல், இப்போதும் எங்காவது இருக்கலாம் என்று விஞ்ஞானிகளில் சிலர் நம்புகிறார்கள். அவற்றைத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள்.
*பிளாங்க் செக்கன் என்பது தசமப் புள்ளிக்குப் பின்னர் 43 பூச்சியங்களுக்குப் பின்னர் வரும் 1 என்னும் மிகமிகமிகச் சிறிய நேரமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக