வியாழன், 1 செப்டம்பர், 2022

தோழர் விவேக் தோழர் பத்மா தம்பதியினருக்கு 
தமிழக கியூ பிராஞ்சு போலீசு 
இழைக்கும் மனிதத் தன்மையற்ற கொடுமைகள்!
---------------------------------------------------------------------------
தோழர் விவேக் அவர்களின் முகநூல் பதிவு 
இங்கு மறுபிரசுரம் செய்யப் படுகிறது.
பார்க்க: Vivek Ananthan 
---------------------------------------------------------------  
தோழர்களே...
தோழர் பத்மா கடும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு உடல்நிலை (இதய நோய்) காரணமாகப் பிணை பெற்று ஏப்ரல் 26 ல் வெளிவந்தார். தற்போது மருத்துவம் பார்த்துக் கொண்டு பிணை நிபந்தனைக்காக சென்னையில் தங்கி கையெழுத்திட்டு வருகிறார். அவர் பிணையில் வருவதற்கு சில மாதங்கள் முன் பிணையில் வந்த நானும் அவருடன் வீடு எடுத்து தங்கி வருகிறோம்.சகட்டு மேனிக்கு போடப்பட்ட பொய் வழக்குகளுக்காக நீதி மன்றங்களுக்கு செல்வதே எனக்கு வேலையாக உள்ளது.பொருளியல் ரீதியாக மிகுந்த கடினங்களுக்கு இடையே வழக்குகளை சந்திப்பதே பெரும் தண்டனையாகத் தொடர்ந்து வருகிறது.
இத்தகைய நிலையில் உளவுத்துறை அரசியல் சட்டம் வழங்கியுள்ளதாகக் கதையளக்கப் படும் வாழும் உரிமையை காலில் போட்டு மிதித்து, எங்களது அன்றாட இருத்தலையே நிலையற்றதாக மாற்றி கொடூரமாக நடந்து கொள்கிறது.
கடந்த 2 மாதங்களாக ஒரு வீட்டில் குடியிருக்க முடியாமல் வீடு தேடி ஓடுவதையே எங்களது ஒரே வேலையாக உளவுத்துறை மாற்றி விட்டுள்ளது.
பூந்தமல்வலி நீதிமன்றத்தில் கையெழுத்திட வசதியாக திருமழிசையில் ஜூலை வீடு பார்த்து குடி வந்த 10 நாட்களேக்குள்ளேயே வீட்டு உரிமையாளருக்கு நெருக்கடி தந்து வீட்டை காலி பண்ண ( தங்கள் உறவினருக்கு வீடு அவசரமாகத் தேவைப்படுகிறது என்று கூறி) முயன்றது உளவுத்துறை. நாங்கள் வீட்டு உரிமையாளரிடம் பேசி 2 மாத தவணையில் ஆகஸ்ட் இறுதி வரை அங்கிருந்தோம்.இடையில் இரண்டு வீடுகளில் தந்த முன்பணத்தை திரும்ப தந்துவிட்டனர்.
அவர்கள் கூறியதும் அதே போலிக்காரணம்தான். உளவுத்துறையின் கற்பனைத்திறன் அவ்வளவுதான்!
ஒரு வழியாக ஓரு வீட்டை வாடகைக்கு எடுத்து நேற்றுதான் மிகுந்த சிரமத்துக்கிடையில் 2 வது மாடிக்கு பொருட்களை ஏற்றிவிட்டு, மாலை கீழே வந்தால், "உங்கள் மீது ரிபோர்ட் வந்துள்ளது" என்று வீட்டு உரிமையாளர் கூறினார். என்ன குற்ற சாட்டு, யார் கூறினார்கள் என்று கூற மறுத்துவிட்டார். இன்று காலை கூப்பிட்டனுப்பி உடனே வீட்டை காலி செய்யுங்கள் என்கிறார்.நாம் "இது எப்படி சரி?" என்ற போது, Q பிரிவு கற்றுத் தந்துள்ள "எனது மகனுக்கு அவசரமாக வீடு தேவைப்படுகிறது" என்ற போலிக் காரணத்தைக் கூறுகிறார்.
வீட்டு உரிமையாளரை மிரட்டுவது மட்டுமின்றி, வீடு பார்த்து தருபவர்கள், அதற்காக உதவி செய்யக்கூடிய நண்பர்கள்/தோழர்கள் என அனைவரையும் தொடர்ச்சியாக மிரட்டி வருவது உளவுத்துறையின் தொடர் சட்டவிரோத வேலையாக இருந்து வருகிறது.ஏறத்தாழ யாருடைய உதவியும் இன்றி தனிமைப்படுத்தி,வீடும் இல்லாமல் செய்துகொடூரமாக ஒடுக்க விரும்புகிறது தமிழக 'கியூ' பிரிவுபோலீஸ்.
சட்டபூர்வமாக நீதிமன்றத்தில் பிணை பெற்று நீதி மன்ற நிபந்தனைகளனைத்தையும் நிறைவேற்றி வரும்போதுதான் இந்த சட்டவிரோத அடக்குமுறைகள்!
குடிருப்பு உரிமை வாழும் உரிமையின் பகுதியாக ஒரு மனிதனின் அடிப்படை உரிமை எனஅரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் உளவுப் பிரிவு காவல் துறையினர் வாழும் உரிமையையே பறித்துகொடுமை செய்ய முயற்சிக்கின்றனர். சட்டப்படியாக பிணை பெற்று, தொடர்ச்சியாக நிபந்தனை கையெழுத்திட்டு கொண்டு,போடப்பட்ட பல பொய் வழக்குகளையும் சந்தித்துக் கொண்டுள்ள சூழலில், நான் ஏற்கனவே கூறியுள்ளபடி தனிமைப்படுத்தப்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சிக்கல்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடியிருப்ப உரிமையையும் பறிப்பது என்பதுஎத்தகைய கொடூரமான சட்ட விரோத தண்டனை! .அதிலும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் என்று தெரிந்தும் அவரையும் தொடர்ந்து அலைக்கழிப்பது எத்தகைய கேவலமானஅடக்குமுறை ஆட்சி!!
தனது அரசு தனிமனித உரிமைகளை மிக முக்கியமாகக் கருதுவதாகக் கதை அளந்து கொண்டே, தனது உளவுத்துறை மூலமாக அப்பட்டமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்துவது, திமுக அரசின் கபட வேடத்தையே காட்டுகிறது. தமிழக நிதித்துறை அமைச்சர் ஆங்கிலதொலைக்காட்சி அலை வரிசைகளில் 'அர்பன் நக்சல்கள்' என்ற பெயரில் மைய அரசு சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதாக கதையடித்துக் கொண்டே, தமிழகத்தில் அதே வேலையை உளவுத்துறை மூலம் செய்வது ஜனநாயகமா அல்லது பாசிசத்திற்கு துணை போவதா?
உளவுத்துறைக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் எத்தகைய கொடும் அடக்குமுறைகளை ஏவினாலும் உங்களது பாசிச ஒடுக்கு முறைகளுக்கு முன் எக்காலத்திலும் மணடியிடுவோம் என கனவு காணாதீர்கள்!
Vivek Ananthan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக