வெள்ளி, 9 செப்டம்பர், 2022

தத்துவம் என்றால் என்ன?
மார்க்சியம் மட்டுமே தத்துவம் ஆகும்!
பெரியார், அம்பேத்கரின் பேச்சுத் தொகுப்புகள் 
தத்துவங்கள் ஆகாது! 
----------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
மார்க்சியம் என்பது மகத்தான ஒரு தத்துவம் 
மட்டுமல்ல அது வெல்லற்கரிய தத்துவமும் 
ஆகும். இது உழைக்கும் மக்களின் தத்துவம்.

இதற்கு எதிரான தத்துவமாக இருப்பது 
முதலாளித்துவம் மட்டுமே. அது ஆளும் 
முதலாளிய ஏகாதிபத்திய வர்க்கங்களின் 
தத்துவம் ஆகும். உலக அளவில் இந்த இரண்டு 
தத்துவங்கள் மட்டுமே இன்று நிலவுகின்றன.

மார்க்சியம் தனது பிரபஞ்சக் கண்ணோட்டத்தை 
பொருள்முதல்வாதத்தில் இருந்து பெறுகிறது.
முதலாளித்துவம் தனது வர்க்க நலனுக்காக 
பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் 
இரண்டையும் பயன்படுத்திக் கொள்கிறது.

பெரியாரியம் என்றும் அம்பேத்கரியம் என்றும் 
அறியப்படுபவை உண்மையில் தத்துவங்கள் 
அல்ல. தத்துவங்களுக்கு என்று கறாரான 
அளவுகோல்கள் உண்டு. அவற்றின்படி 
அளந்தால்  பெரியாரியமும் அம்பேத்கரியமும் 
எள்முனையளவும் தத்துவங்கள் அல்ல.

குறைந்தபட்சமாக தத்துவங்கள் உலகை 
வியாக்கியானம் செய்ய வேண்டும். 
மார்க்சியமானது வியாக்கியானம் செய்வதோடு 
நில்லாமல் உலகை மாற்றியமைக்கவும் 
வழிகாட்டுகிறது. தத்துவத் தன்மையே 
இல்லாத, உலகை விளக்கவே  முற்படாத 
பெரியாரின் பேச்சுத் தொகுப்பையும் 
அம்பேத்காரின் பேச்சுத் தொகுப்பையும் 
தத்துவங்கள் என்று பொருள்படும் விதத்தில் 
அம்பேத்கரியம் என்றும் பெரியாரியம் என்றும் 
வழங்குவதே பெருந்தவறு ஆகும்.

அம்பேத்கரியம் என்பது அப்பட்டமான 
கருத்துமுதல்வாதம்.ஆகும். 

பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது 
மேம்போக்கானதும் கொச்சையானதுமான 
பொருள்முதல்வாதம் ஆகும். அதாவது 
சாராம்சத்தில் பெரியாரியம் என்பது 
கருத்துமுதல்வாதமே ஆகும்.

உற்பத்திமுறையை எடுத்துக்கொண்டு 
அதன் அடிப்படையில் சமூகத்தை அதன் 
இயக்கத்தை மார்க்சியம் விளக்குகிறது. 

அம்பேத்கரியமும் பெரியாரியமும் இந்தப் 
பார்வை கொண்டவை அல்ல. அவை 
சமூகத்தை விளக்க இயலாதவை. 
ஏனெனில்  அவை தத்துவங்கள் அல்ல. 
எனவே மார்க்சியத்துடன் தத்துவத் 
தன்மையற்ற அவற்றைச் சேர்ப்பது, 
கலப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
***************************************
எக்சிஸ்டென்ஷியலிசம் எனப்படும் 
இருத்தலியல் என்றால் என்ன?
இந்தத் தத்துவம் தோற்றுப்போனது ஏன்?
-------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
பெரியாரியமும் அம்பேத்கரியமும் 
உள்ளூர்க் கோமாளித்தனங்கள் என்றால் 
இருத்தலியல் எனப்படும் 
எக்சிஸ்டென்ஷியலிசம் வெளிநாட்டுக்
கோமாளித்தனம் ஆகும்.

ழான் பால் சார்த்தர் முதல் காமு வரை 
பலரின் பங்களிப்பில் உருவானது 
எக்சிஸ்டென்ஷியலிசம் (தமிழில் இருத்தலியல்)
இவையெல்லாம் அதீத தனிமனிதவாதத்தின் 
(hyper individualism) வெளிப்பாடுகள்.

மனிதனால் எப்போதுமே ஒரு தனி மனிதனாக 
வாழ இயலாது. அவன் சமூகமாக மட்டுமே 
வாழக்கூடியவன். இதைத்தான் Man is a social 
animal என்கிறார்கள். ஒரு சமூக மனிதனுக்கு 
ஏற்ற தத்துவம் மார்க்சியமே. மேலை நாட்டு 
வறட்டுவாதமான இருத்தலியல் கீழ்த்திசை 
நாடான இந்தியாவுக்குப் பொருந்தாது.


மேலை ஐரோப்பிய நாடுகளையும் இந்தியாவையும் 
பண்பாட்டுத் தளத்தில் ஒப்பிட்டுப் பார்க்க 
வேண்டும். வேறுபாடுகள் எவ்வளவு 
பாரதூரமானவை என்று உணர வேண்டும்.
ஒருவன் சாகும் வரை ஒரே பொண்டாட்டியுடன் 
வாழ்வது இந்தியாவில் இயல்பு. ஐரோப்பாவில் 
அது சாத்தியமற்றது. 

எனவேதான்  கிட்டத்தட்ட அது தோன்றி 
80 ஆண்டுகள் ஆகியும், இருத்தலியல்
இந்தியாவில் கவனிக்கப் படவில்லை.
சீந்துவார் இல்லாமல் அழுகிச் சீழ் 
பிடித்துப் போனது இருத்தலியல்.
----------------------------------------------------------

     
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக