இலக்கியம்!
சின்னவளை முகம் சிவந்தவளை!
கம்பனின் ஒளியில் கண்ணதாசன்!
------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
அது ஒரு நீர்த்துறை! தவளைகள் தண்ணீரில்
ஓடியாடிக் கொண்டிருக்கின்றன. அத் தவளைக்
கூட்டத்தில் ஒரு சூல் கொண்ட தவளையும்
இருக்கிறது.
சூல் கொண்ட தவளையின் கணவன் வேறொரு
பெண் தவளையின் அருகில் அமர்ந்து சிரித்துப்
பேசிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து
விட்ட சூல் கொண்ட தவளை கோபம் கொண்டு
தண்ணீரை அடித்துக் கலக்குகிறது.
இந்தக் காட்சியை கம்பர் காவியமாக்குகிறார்.
"சேற்றவளை தன்கணவன் அருகிருப்பச் சினந்திருகி
சூற்றவளை நீருழக்கும் துறைகெழுநீர் வளநாடா"
இந்த உவமையின் மூலம், சூர்ப்பனகை, ராமனின்
அருகில் இருக்கும் சீதையைக் கண்டு தான்
மனம் பொறுக்காமல் இருப்பதை இலக்குவனிடம்
கூறுகிறாள். முழுப்பாடலையும் இப்போது பாருங்கள்.
ஏற்றவளை வரிசிலையோன் இயம்பாமுன் இகலரக்கி
சேற்றவளை தன்கணவன் அருகிருப்பச் சினந்திருகி
சூற்றவளை நீருழக்கும் துறைகெழுநீர் வளநாடா
மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனமென்றாள்.
இது என்ன காண்டம், என்ன படலம் என்று வாசகர்கள்
தாமே முயன்று அறிதல் வேண்டும்.
இகலரக்கி என்ற பதத்தைக் கருதுக. திருக்குறளில்
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் என்ற ஈற்றடியில்
வரும் இகல் வேந்தர் என்ற பதத்தையும் கருதுக.
"கொடித்தேர் நும்மோரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யுமிவ் விகலே"
என்னும் புறநானூற்றுப்பாடலிலும் வரும் இகல்
என்ற சொல்லையும் கருதுக. இகல் என்றால் என்ன
என்று அறிந்திடுக
இகல் என்பது பகைமை (enmity) என்று பொருள்படும்.
எனினும் hostility என்ற சொல்லே பொருத்தமான
சொல்லாகும். .
இதுவரை கம்பரைப் பார்த்தோம். இனி கண்ணதாசனுக்கு
வருவோம். கம்பரின் இந்தப் பாடலை கண்ணதாசனும்
படித்தார். சேற்றவளை, சூற்றவளை, மாற்றவளை,
ஏற்றவளை என்று எதுகையாகக் கம்பர் அடுக்குவதைப்
பார்த்தார். மனம் பறிகொடுத்தார்.
திரைப்படத்தின் ஒரு காட்சிக்குப் பாடல் எழுத
நேர்ந்தபோது, கம்பரின் தாக்கத்தால் சின்னவளை,
சிவந்தவளை, என்னவளை, பொன்னவளை என்று
அடுக்குகிறார் கண்ணதாசன். பல்லவியில் மட்டுமல்ல,
சரணங்களிலும் வளை வளை என்று அனைத்துமே
வளைதான்.
இதோ பாடல்:
சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் பொன்னவளை நான்
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு.
(படம்: புதியபூமி ஆண்டு 1968)
கம்பரைப் படியுங்கள்; கண்ணதாசனையும் படியுங்கள்.
கூடவே அவர்களை பற்றி விளக்கும் என்னுடைய
கட்டுரைகளையும் படியுங்கள்.
இதெல்லாம் உங்களால் படிக்க முடிகிறதா?
படிக்கும்போது ஒரு textual pleasureஐ நீங்கள்
அனுபவிக்கிறீர்களா? இல்லையா?
இல்லையென்றால் நான் பன்றிக்கூழ்ப் பத்தரில்
தேமா வடிக்கிறேனா? நாலடியார் தெரியுமா?
படித்ததுண்டா?
பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தர்றால்
என்று கூறுகிறதே, அதன் பொருள் அறிவீர்களா?
முயன்று அறிந்திடுங்கள்!
-----------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக