புதன், 5 அக்டோபர், 2022

5G  ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை!
-----------------------------------------------------------------
கடந்த அக்டோபர் முதல் நாளன்று (01.10.2022)
இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடங்கி 
வைத்தார் பிரதமர் மோடி. முன்னதாக தீபாவளியன்று 
(அக்டோபர் 24) 5ஜி சேவையைத் தொடங்க இருப்பதாக  
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 
அறிவித்து இருந்தார். ஆனால் பிரதமர் மோடி அம்பானியை 
முந்திக் கொண்டு விட்டார். அம்பானிக்கு 24 நாட்கள் 
முன்னதாகவே இந்திய அரசின் சார்பில் 5ஜி சேவையைத் 
தொடங்கி வைத்து வரலாற்றில் இடம் பெற்று விட்டார்.

ஆக, இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடங்கியது எந்த 
ஒரு தனியார் நிறுவனமும் அல்ல; மாறாக இந்திய அரசு 
தொடங்கி வைத்துள்ளது. இதன் மூலம் தனியார் 
நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, அரசு 
முந்திக் கொண்டு விட்டது.       

சரி, அரசு நிறுவனமான BSNL எப்போது 5ஜி சேவையை 
வழங்கப் போகிறது? அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15 சுதந்திர 
தினத்தன்று 5ஜி சேவையை BSNL வழங்கும் என்று 
இந்தியத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி 
வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை-ஆகஸ்டில் 5ஜி ஏலம் நடந்தபோது BSNL 
அதில் பங்கேற்கவில்லை. ஏலத்தில் பங்கேற்காமலேயே 
அரசு நிறுவனமான BSNLக்கு அலைக்கற்றை 
வழங்குவது இந்தியாவில் நடைமுறையாக இருந்து வருகிறது.
அதன்படி BSNLக்கு 5ஜி அலைக்கற்றை வழங்குவதற்கான 
நிருவாக ஒப்புதல் (administrative approval) இவ்வாண்டு 
ஏப்ரலிலேயே வழங்கப்பட்டு விட்டது.   

நன்கு கவனிக்கவும். தனியார் நிறுவனங்களுக்கு எப்போது 
5ஜி அலைக்கற்றை கிடைக்கிறது? ஆகஸ்டு 2022ல் ஏலம் 
நடைபெற்று முடிந்து செப்டம்பரில் கிடைக்கிறது.
ஆனால் BSNLக்கு  ஏலம் நடப்பதற்கு முன்னரே ஏப்ரல் 
2022ல் கிடைத்து விடுகிறது.

ரிலையன்ஸ் ஜியோவும் சரி, BSNLம் சரி, பிற தனியார் 
நிறுவனங்களும் சரி, முதலில் இந்தியாவின் நான்கு 
மெட்ரோ நகரங்களில் மட்டும்தான் (டெல்லி, மும்பை, 
கொல்கொத்தா, சென்னை) 5ஜி சேவையை வழங்கப் 
போகின்றன. அதன் பிறகு நகர்ப்புறங்களில் உள்ள 
(urban side) பெரிய மற்றும் சிறிய நகரங்களில் (cities and towns)
வழங்க இருக்கின்றன. கடைசியாகத்தான் கிராமப் 
புறங்களில் 5ஜி சேவை வழங்கப்படும். இதுதான் 
நிலவரம். ஒரே மூச்சில் இந்தியா முழுவதும் 5ஜி சேவை 
வழங்கப்படும் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

மெட்ரோ தவிர்த்த பிற நகரங்களுக்கு 5ஜி சேவை 
வந்து சேரவே ஓராண்டுக்கு மேல் ஆகி விடும் என்ற 
யதார்த்த கள நிலவரத்தை மக்கள் உணர்ந்து 
கொள்ள வேண்டும்.  இந்தியாவில் 5ஜியின் 
வருகையானது பெரிய அளவில் URBAN RURAL DIVIDEஐ 
தொடக்கத்தில் ஏற்படுத்தி விடும் என்பதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும். இந்த DIVIDE காலம் செல்லச் 
செல்லத்தான் மறையும் என்பதையும் நாம் உணர்ந்து 
கொள்ள வேண்டும்.  

5ஜியின் வேகம் என்ன?
-----------------------------------
4Gயை விட பத்து மடங்கு அதிக வேகத்தில்  5G செயல்படும்.
4ஜியின் வேகம் = 1 Gbps (நொடிக்கு 1 கிகா பிட்).

5ஜியின் வேகம் (download speed)  = 20 Gbps (பதிவிறக்க வேகம்)
5ஜியின் வேகம் பதிவேற்றத்தின்போது (upload speed) = 
10 Gbps.  

Gbpsல் உள்ள வேகத்தை எல்லோரும் புரிந்து கொள்ள 
வசதியாக ஒரு கட்டை விரல் விதியைப் பார்ப்போம்.
(கட்டை விரல்  விதி = thumb rule). கட்டை விரல் விதி என்பது 
துல்லியமானதல்ல; தோராயமானதுதான். என்றாலும் 
புரிந்து கொள்ள உதவக்கூடியது.   

நடிகர் மாதவன் இயக்கிய விஞ்ஞானி நம்பி நாராயணன் 
பற்றிய சினிமாவைப் பார்ப்போம். இது இரண்டரை மணி 
நேரம் ஓடக்கூடியது என்றும் 3 GB அளவுள்ளது என்றும் 
வைத்துக் கொள்வோம். இந்தப் படத்தைப் பதிவிறக்கம் 
செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

4ஜி என்றால் 25 நிமிடம் வரை ஆகும். 5ஜி என்றால் 
90 வினாடிகளில் பதிவிறக்கம் முடிந்து விடும்.
4ஜியில் நேரம் நிமிடக் கணக்கில் ஆகுமென்றால் 
5ஜியில் நேரம் நொடிக்கணக்கில் ஆகும். இந்தக் 
கணக்கெல்லாம் எனக்கு வேண்டாம் என்று சொல்பவர்கள் 
4ஜியை விட 5ஜியானது 10 மடங்கு வேகம் என்று 
புரிந்து கொள்ளுங்கள்.

5ஜி என்பது வேகம் மட்டும்தானா?
----------------------------------------------------
5ஜி என்பது அதிகரித்த வேகம் தருவது மட்டுமல்ல.
பல்வேறு புதுமைகளை உள்ளடக்கியது. 5ஜி மென்பொருளைக் 
கொண்டு ஓட்டுநர் இல்லாமலே கார் ஓட்டலாம்.
(DRIVERLESS CAR). விபத்தே இருக்காது.

அணுஉலைகளில் மனிதன் செய்யும் ஆபத்தான வேலையை
இனி ரோபோக்கள் செய்யும். அந்த ரோபோக்கள் 
5ஜி மென்பொருளில் இயங்கும்.

IoT எனப்படும் Internet of Things என்னும் புதுமை 5ஜியுடன் 
சேர்ந்தே வருகிறது. இது பொருட்களின் இணையம் என்று 
தமிழில் கூறப்படுகிறது. இதுவரை இன்டர்நெட் எனப்படும் 
இணையம் எதில் செயல்பட்டது? கணினியிலும் 
அலைபேசியிலும் மட்டுமே செயல்பட்டது. இனி எல்லாப் 
பொருளிலும் இன்டர்நெட் செயல்படும். கடிகாரத்தில், 
குளிர் சாதனப் பெட்டியில், கதவின் பூட்டில் இப்படியாக 
எந்த ஒரு பொருளின் மீதும் இணையம் செயல்படும். 
இதுதான் IoT எனப்படும் Internet of Things ஆகும். இந்த 
IoTயானது 5ஜி மென்பொருள் மூலமாக இயங்கும்.

3ஜியில் இருந்து 4ஜி வந்தபோது அது வெறும் வேக மாற்றம் 
மட்டுமே. ஆனால் 4ஜியில் இருந்து 5ஜிக்குச் செல்வது என்பது 
வேக அதிகரிப்பு மட்டுமல்ல; இதுவரை இல்லாத பல் 
புதுமைகளை உள்ளடக்கியது ஆகும்.         
 ------------------------------------------------------------
 
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக