இதிகாசம் என்றால் என்ன?
இராமாயணமும் மகாபாரதமும்
உணர்த்தி நிற்கும் சமுதாய மாற்றங்கள் பற்றி!
வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
இராமாயணமும் மகாபாரதமும் வெறும்
புராணங்கள் அல்ல; அவை இந்நாட்டின்
இதிகாசங்கள். மாவோவின் மொழியில்
சொன்னால், அவை தொன்மங்கள்.
பெரும் சமுதாய மாற்றங்களைத்
தொடர்ந்து அவற்றை மாண்புறுத்தி
(glorify செய்து) மக்கள் படைத்த
காவியங்களே இதிகாசங்கள்.
இராமாயணம் ஒரு இதிகாசம் என்பதால்
அது ஒரு சமுதாய மாற்றத்தைச் சுட்டி
நிற்கிறது. இதிகாசம் என்பது நூறு
விழுக்காடும் உண்மை அல்ல.
அதே நேரத்தில் நூறு விழுக்காடும்
புனைவும் அல்ல. மெய்யும் புனைவும் கலந்த
படைப்பே இதிகாசம் ஆகும். அதாவது
இராமாயணம் ஒரு இதிகாசம் ஆகும்.
அது போலவே மகாபாரதமும் ஒரு
இதிகாசம் ஆகும். அதாவது ஒரு தொன்மம்
ஆகும். அது அக்காலத்தில் நிகழ்ந்த ஒரு
சமுதாய மாற்றத்தைச் சுட்டி நிற்கிறது.
ஆயின் மகாபாரதம் சுட்டி நிற்கும் சமுதாய
மாற்றம் எது?
மகாபாரத காலச் சமுதாயமானது
குடும்பம், குடும்ப உறவுகளின் உன்னதம்,
குடும்ப உறுப்பினர்களுக்கு
இடையிலான பிணைப்பு, குடும்பவாரியான
உழைப்பும் குடும்பவாரியான பங்கீடும்
ஆகிய கூறுகளைக் கொண்டது.
குடும்பமும் குடும்ப அதிகாரமுமே
ஆட்சிமுறை வடிவமாக இருந்தது
அச்சமூகத்தில். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த
முறைமையினால் உபரியை அதிகரிக்க
இயலவில்லை. சமூக வளர்ச்சியானது அன்று
நிலவிய குடும்ப உறவுகளினால் தடைப்பட்டது.
இந்தத் தடையை உடைத்து, சமுதாய
வளர்ச்சியை ஏற்படுத்த ஒரு சமுதாய
மாற்றம் தேவை. குடும்ப
உறவுகளைத் தகர்த்து புதிய உறவுகளை
நிலைநாட்டினால் மட்டுமே சமூக மாற்றம்
சாத்தியம்.
எனவே குடும்ப உறவுகள் தகர்க்கப்
படுகின்றன. சகோதரர்களான பாண்டவர்களும்
கெளரவர்களும் சண்டை இடுகிறார்கள்.
விளைவாக புதிதாக ஓர் அரசு பிறக்கிறது.
குடும்ப உறவுகளுக்குப் பதிலாக
அரசு என்னும் அதிகாரமிக்க அமைப்பு
உற்பத்தியைக் கட்டுப் படுத்துகிறது.
உபரியைப் பெருக்குகிறது.
குடும்பம் என்பது highly decentralised என்று
நாம் அறிவோம். ஆனால் அரசு என்பது
centralised. மையத்தில் இருந்து கொண்டு
ராஜ்ஜியம் முழுமைக்குமான முடிவுகளை
எடுக்க அரசு என்னும் கட்டுமானத்தால்
முடியும். இது குடும்ப அமைப்பில் இயலாதது.
ஆக மாகாபாரதம் என்பது மேற்கூறிய
சமுதாய மாற்றத்தை ஆவணப் படுத்திய
அக்கால மக்களின் படைப்பு. அது மையச் சரடு
எதுவும் இல்லாத வெற்றுக் கற்பனையான
புராணம் அல்ல. மகாபாரதப் போர் என்பது
சமுதாய மாற்றத்துக்கான போர். குடும்ப
அமைப்பை, குடும்பம் மூலமான உற்பத்தி
உறவுகளை அகற்றி விட்டு, அரசு என்னும்
மையப்படுத்தப்பட்ட சமூகக் கட்டுமானத்தை
ஏற்படுத்திய புதிய உற்பத்தி உறவுகளை
உருவாக்கிய போர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக