புதன், 28 செப்டம்பர், 2016

(3) வழிபாட்டு மனநிலை, துதிபாடித்தனம் இவற்றின் மீது
ரங்கநாயகம்மாவின் சம்மட்டி அடி!
ரங்கநாயகம்மா எழுதிய நூலின் திறனாய்வு!
---------------------------------------------------------------------------------------------- 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
--------------------------------------------------------------------------------------------------
                உண்மையைக் கூறுவதே புரட்சிகரமானதுதான்!
                (To tell the truth is revolutionary)
                -----அந்தோனியோ கிராம்சி (1891-1937)
                  (இத்தாலிய மார்க்சிய  அறிஞர்)

ஆந்திரத்தைச் சேர்ந்த ரங்கநாயகம்மா அவர்கள் சாதியம்
குறித்து ஒரு நூல் எழுதி உள்ளார். அந்த நூலில் சாதி
ஒழிப்பிற்கு  அம்பேத்கரியம் தீர்வாகாது என்றும்
மார்க்சியமே தீர்வு  என்றும் நிறுவி உள்ளார். தலித்திய
மார்க்சிய வட்டாரங்களில் அறிவு பூர்வமான விவாதத்தை
உருவாக்க வல்லது அண்மையில்  வெளிவந்த இந்நூலின்
தமிழ் மொழிபெயர்ப்பு.

ரங்கநாயகம்மாவின் நூலைப் புரிந்து கொள்ள
வேண்டுமென்றால், அம்பேத்காரைப் படித்திருக்க
வேண்டும். அம்பேத்காரின் நூல்கள் முழுவதையும்
படித்திருக்காவிட்டாலும், அவர் எழுதிய
1) சாதி ஒழிப்பு 2) புத்தரும் அவர் தம்மமும் 3) புத்தரா
காரல் மார்க்சா என்ற கட்டுரை 4) சாதி குறித்த
அவரின் கருத்துக்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகப்
படித்து இருக்க வேண்டும்.

மார்க்சியத்துக்கு முன்னும் பின்னும் உலகெங்கும்
பல்வேறு குட்டிமுதலாளித்துவத் தத்துவங்கள் தோன்றி
உள்ளன. புருதோன் போன்ற குட்டி முதலாளித்துவ
அறிஞர்களின் கற்பனையான சோசலிசத்தை
மார்க்ஸ் தம் காலத்திலேயே எதிர்கொண்டு முறியடித்து
உள்ளார். சமூக முரண்பாடுகளுக்குத் தீர்வு தரும்
ஆற்றல் இல்லாதவையே குட்டிமுதலாளித்துவத்
தத்துவங்கள். இவற்றில் பல வெறும் சீர்திருத்தவாத
(reformism) எல்லைக்குள் முடங்கிப் போய்விட்டவை.

ரங்கநாயகம்மா தமது நூலில், இடஒதுக்கீடு என்னும்
சீர்திருத்த எல்லையை அம்பேத்கரியம் தாண்டவில்லை
என்பதை நிரூபித்து இருக்கிறார். சமூக மாற்றத்தை
மார்க்சியம் மட்டுமே சாதிக்க இயலும் என்றும்
நிறுவி உள்ளார்.

வழிபாட்டு மனநிலையும் துதிபாடலுமே எங்கும்
வியாபித்து இருக்கும் தமிழ்ச் சூழலில், அரசியல்
சூழலில், ரங்கநாயகம்மாவின் இந்த நூல் உண்மையைப்
பேசுகிறது. உண்மையைப் பேசுவதே புரட்சிகரமானது
என்கிறார் கிராம்சி. மிகுந்த துணிச்சலுடன் பூனைக்கு
மணி கட்டி இருக்கிறார் ரங்கநாயகம்மா இந்த நூலில்.

குறுகிய காலத்தில் மூன்றாம் பதிப்பைக் கண்டுள்ள
போதிலும், இந்நூல் இன்னும் அறிவுலகில் போதிய
கவனிப்பைப் பெறவில்லை. சம்பிரதாயமான ஓரிரு
அறிமுகக் கூட்டங்கள் இந்த நூலை முன் வைத்து
நடந்துள்ளன; என்றாலும் நூலின் பேசுபொருள் குறித்த
காத்திரமான விவாதங்கள் இன்னமும் தமிழ்ச்சூழலில்
எங்கும் நடைபெறவே இல்லை என்பதுதான் உண்மை.

விவாதங்களுக்கு அஞ்சுகிற, விவாதம் என்னும்
நடைமுறைக்கே தலைமுழுகி தர்ப்பணம் செய்துவிட்ட
பல்வேறு தமிழக மார்க்சிய அமைப்புகள் திட்டமிட்டே 
இந்த நூலைப் புறக்கணிக்கின்றன. மார்க்சியத்தின்
பெயரிலான தங்களின் பிழைப்புவாதமும் வாக்குவங்கி
அரசியலும் பாதிப்பு அடையக் கூடாது என்ற அழுக்கான
அக்கறை அதில் தெரிகிறது.

அடையாள அரசியலை மேற்கொண்டுள்ள அனைவரும்
விதிவிலக்கின்றி, மக்களிடம் தாங்கள் நீண்டகாலமாகவே 
உருவாக்கி வைத்துள்ள வழிபாட்டு மனநிலை மீது
இந்த நூல் கத்தியைப் பாய்ச்சி விடுகிறதே என்ற
கலக்கத்தில் உள்ளனர். எனவே அவர்களும் இந்த நூலை
எதிர்க்கின்றனர்.

எனினும், இந்த நூலை எதிர்ப்பவர்கள் அனைவரும்,
நூலை எதிர்ப்பதை விட, அதைப்  புறக்கணிப்பதே
சிறந்த உபாயம் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். 
"கண்டனம் என்பது அறிமுகத்தின் அடையாளம்"
என்ற அரசியல் பாலபாடத்தை அவர்கள் அறியாதவர்களா
என்ன!

அடையாள அரசியலை எவ்விதத்திலும் சாராமலும்,
ஆதாயம் கருதிய உள்நோக்கம் எதுவும் இல்லாமலும்,
வெறுமனே கல்வியியல் ரீதியாக (academically) இந்த நூலை
மென்மையாக விமர்சித்தவர்களைக்கூட, நூலின்
ஆதரவாளர்கள் எதிரியாகப் பாவித்து கடித்துக் குதறி வைத்துள்ளனர். இதன் மூலம் இந்த நூலின் மீதான
அறிவார்ந்த விவாதம் எழுவதை முளையிலேயே
கிள்ளி விட்டனர். இருப்பினும் இத்தகைய தற்காலிகத்
தடைகளைத் தாண்டி, காத்திரமான விவாதம் எழுந்தே
தீரும். அதை உருவாக்குவது ஒன்றே மார்க்சியத்தின்
மீது பற்றுக் கொண்டோரின் கடமை ஆகும்.
----------------------------------------------------------------------------------------------
தொடரும்
---------------------------------------------------------------------------------------------- 

  


   
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக