புதன், 21 செப்டம்பர், 2016

பூனைக்கு மணி கட்டிய அம்மையார்!
--------------------------------------------------------------------
கரடு தட்டிப் போயும் கடப்பாரையால் தோண்டினால்கூட
மண் மேலெழும்பாமலும் உள்ள, மூர்க்கத் தனமான
ஒரு வழிபாட்டு மனநிலை நிலவும் தமிழ்ச் சூழலில்,
ரங்கநாயகி அம்மையார் தமது நூல் (சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு......) மூலம், இறுகிப்போன  இந்த வழிபாட்டு மனநிலையைத்
தகர்த்து எறிந்துள்ளார் என்று மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
இந்நூல் குறித்து மதிப்பிடுகிறது.
**
மொத்தத் தமிழ்ச் சூழலிலும் வழிபாட்டு மனநிலையை
அகற்றி விட்டு, அதனிடத்தில் ஆய்வு மனநிலையை
அறிமுகப் படுத்தும் ஒரு துணிச்சலான முயற்சியாகவே,
பூனைக்கு மணி காட்டும் முயற்சியாகவே இந்த நூலை
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் எடை போடுகிறது.
**
மகாத்மா காந்தி, புத்தர் பற்றிய நூலாசிரியரின்
மதிப்பீடுகளில் பல்வேறு குறைகள் இருந்த போதிலும்,
சாராம்சத்தில்இந்த நூல் மார்க்சியத்தை உயர்த்திப்
பிடிக்கிறது. தமிழகத்திலும் இந்தியத் துணைக்
கண்டத்திலும்  செல்வாக்குப் பெற்றுத் திகழும்
குட்டி முதலாளித்துவத் தத்துவங்களால் ஒருபோதும்
சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாது என்ற
உண்மையை அம்மையார் ஆணித்தரமாகவும்
ஆதாரங்களுடனும் இந்நூலில் நிரூபித்து இருக்கிறார்
என்று  மார்க்சிய சிந்தனைப் பயிலகம்  அங்கீகரிக்கிறது.
**
பல ஆண்டுகளுக்கு முன்பு புரட்சிப் பண்பாட்டு இயக்கம்
சார்பாக மறைந்த தோழர் இல  கோவிந்தசாமி அவர்களின்
முன்முயற்சியில், சாதியம் குறித்த கருத்தரங்கம்
நடைபெற்று, கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுக்கப்
பெற்று நூல் வடிவம் பெற்றன. சாதியம் குறித்த
முதன் முதல் மார்க்சிய ஆய்வு அதுதான். அந்நூல்
சாதியம் குறித்த மார்க்சியப் பார்வை என்ன என்ற
விவாதத்தை எழுப்பியது.
**
அதன் பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரங்கநாயகி
அம்மையாரின் இந்த நூல்தான் மீண்டும் அதே பொருளில்
ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்
திருமதி கொற்றவை மற்றும் இந்த நூலின் ஆதரவாளர்கள்
பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்புள்ள இந்த
உண்மையை, இந்த வரலாற்றை மார்க்சிய சிந்தனைப்
பயிலகம் நினைவூட்ட விரும்புகிறது.
**
ரங்கநாயகி அம்மையாரின் இந்த நூல் குறித்த,
கறார் ஆனதும் துல்லியமானதுமான ஒரு மதிப்பீட்டை
(திறனாய்வை) ஒரு சிறு வெளியீடு வாயிலாகக்
கொண்டு வருவது என்று மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
முடிவெடுத்து உள்ளது. தற்போது நாங்கள்
மேற்கொண்டிருக்கும் ஒரு பணி முடிந்த பின்னரே,
(அதாவது நவம்பர் மாத வாக்கில்) இந்த வெளியீட்டை
எங்களால் கொண்டு வர இயலும்.
**
மொழிபெயர்ப்பாளர் திருமதி கொற்றவை மற்றும் இந்த
நூலின் ஆதரவாளர்கள் இந்த நூல் சுட்டும் சாதிய
ஒழிப்புக்கான மார்க்சியப் பார்வை குறித்து ஒரு
காத்திரமான விவாதத்தை எழுப்பக் கடமைப்
பட்டுள்ளார்கள். எனினும் அத்தகைய விவாதத்தை
உருவாக்குவதில் அவர்களிடம் மிகப்பெரிதும் போதாமை
நிலவுகிறது என்பது எங்கள் ஆதங்கம். இந்த நூலின்
பயனும், தமிழ் மொழிபெயர்ப்பின் பயனும் அத்தகைய
ஒரு விவாதத்தை உருவாக்குவதுதான் அல்லவா!
காத்திரமானதும் இடைவிடாததுமான polemical debates
மூலமாகவே வழிபாட்டு மனநிலையை அகற்றி,
அவ்விடத்தில் ஆய்வு மனநிலையை வைக்க முடியும்!
.........(தொடரும்)................
**
............தொடர்ச்சி..................
மேற்கூறியவைதான் அம்மையாரின் நூல் குறித்த
மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தின் பார்வை.
இந்நூல் காலத்தின் கட்டாயம் என்பதால், சமகால
மார்க்சிய அரசியலின் மூலாதாரமான ஒரு தேவையை
இந்நூல் நிறைவு செய்கிறது என்பதால், இந்நூலின்
பல்வேறு குறைகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை
என்று மார்க்சிய சிந்தனைப் பயிலகம் கருதுகிறது. 
**
இந்நூலின் ஆதரவாளரான திரு வசு மித்ர என்பவர்,
எமது கருத்துக்குப் பதிலாக எழுதியுள்ள சில
பின்னூட்டங்களில், தமது முதிர்ச்சியற்ற, சிறுபிள்ளைத்
தனமான, குட்டிமுதலாளித்துவ மனநிலையை
வெளிப்படுத்துகிறார். மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தில்
அம்மையார் பேரவை உண்டா என்று கேட்பதன் மூலம்.
இத்தகைய lumpen commentsஐ  மார்க்சிய சிந்தனைப்
பயிலகம் ஒருபோதும் பொருட்படுத்தாது.
**
எனினும்,அவரின் பின்னூட்டத்தில் ஒரு "அறியா வினா"
உள்ளது. அதற்கு விடையளிக்க வேண்டியது கடமை.
தமிழ் இலக்கணமானது,  வினாக்களை அறிவினா,
அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை
வினா என்றெல்லாம் பிரிக்கிறது. (பத்தாம் வகுப்புக்கான
தமிழ் இலக்கணப் புத்தகம் பார்க்கவும்) பல்வேறு
அகவையில் அமைந்த பெண்டிரைச் சுட்டுமாறு
எங்ஙனம் என்பதே அவ்வினா. பேதை, பெதும்பை,
மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்
என்பவையே அவை. இப்பருவங்களைக் கடந்த பெண்கள்
அனைவருமே பொதுவில் பெண்கள் என்றே அழைக்கப்
படுவர். அவர்களுள் அகவையில் மூத்தோர் அம்மை
என்று அழைக்கப் படுவர். சிறப்புக் கருதி ஆர் விகுதி
சேர்க்கையில் அம்மையார் என்ற மரியாதைச்
சுட்டுப் பெயர் கிடைக்கிறது. நன்றி. வணக்கம்.
**
தோழமையுள்ள
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம், சென்னை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக