செவ்வாய், 27 செப்டம்பர், 2016

பொருள்முதல்வாதப் பார்வை இருக்கிறதா இல்லையா?
ரங்கநாயகம்மா எழுதிய நூலின் திறனாய்வு!
வாழை குலை தள்ளுவது போல், ரங்கநாயகம்மாவின்
நூலில் பொருள்முதல்வாதம் குலை தள்ளுகிறதா?
-----------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதத்தை நன்கு கற்று, புரிந்து கொண்டு.
அதை உள்வாங்கிக் கொண்டு, அந்தரங்க சுத்தியோடு
அதைப் பின்பற்றுகிற எவர் ஒருவருக்கும் காலப்போக்கில் பொருள்முதல்வாதப் பார்வை மிக இயல்பாகக் கைவந்து  விடும். எனவே அவரின் சிந்தனையின்
வெளிப்பாடுகளிலும் செயல்பாடுகளிலும் பொருள்முதல்வாதப்
பார்வை இயல்பாகவே செல்வாக்குச் செலுத்தும்;
தீர்மானிக்கும். இது பொருள்முதல்வாதத்தின் பண்பு.

தத்துவம் மக்களைப்  பற்றிக் கொள்ளும்போது, அது
மாபெரும் பௌதிக சக்தி ஆகி விடுகிறது என்று மார்க்ஸ்
கூறியதை இங்கு நினைவு கூரலாம்.
ஆகவே, ரங்கநாயகம்மா அவர்களின் நூலில் காணப்படும்
(சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு..........), அம்பேத்கார் பற்றிய
அவரின் விமர்சனங்களில்  பொருள்முதல்வாதப் பார்வை
இல்லை என்று முரட்டடியாக நிராகரித்து விட முடியாது.
அவர் மார்க்சியம் கற்காதவர் என்று கூற முடியாது.

ஒரு நூலிலோ அல்லது விமர்சனத் தொகுப்பிலோ,
பொருள்முதல்வாதப் பார்வையானது வாழை
குலை தள்ளுவது போல குலைதள்ளப் படுவது அல்ல.
அது பாலுக்குள் நெய் போன்று உள்ளுறைந்து நிற்பது.
வெண்பாவில் செப்பலோசை பயில்வது போன்று
பயின்று நிற்பது அது.

அடுத்து வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையில்
தமது நூலை ரங்கநாயகம்மா எழுதவில்லை என்ற
குற்றச்சாட்டு. பொருள்முதல்வாதம் தொன்மையானது;
மார்க்சுக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தியது. ஆனால்
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) என்பது
மார்க்சின்  உருவாக்கமே. வரலாற்றைப் பொருள்முதல்வாத
வழியில் விளக்குவது அது.

மார்க்சுக்கு முந்தி எவருமே வரலாற்றைப்
பொருள்முதல்வாத நோக்கில் விளக்கியதில்லை.
ஒரே வரியில் சொல்வதானால், மக்கள்தான்
வரலாற்றைப் படைக்கிறார்கள் என்பதே வரலாற்றுப் பொருள்முதல்வாதம். அதே நேரத்தில் வரலாற்றில்
தனிநபருக்கு உள்ள பாத்திரத்தையும் மார்க்சியம்
மறுக்கவில்லை. (பார்க்க: மார்க்சிய அறிஞர் பிளக்கானவ்
எழுதிய "வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்"
என்ற நூல்). மார்க்சியத்தின் இந்த வரையறுப்பை
மறுத்து, அம்பேத்கார் எழுதி இருக்கிறார். அம்பேத்காரின்
மார்க்சிய எதிர்ப்புக் கருத்துக்கள் இது போல் நிறைய
உள்ளன. அவை சம்பிரதாயமாகக் கூட
மார்க்சியர்களால் மறுக்கப் படவில்லை.

ரங்கநாயகம்மாவின் இந்த நூல், பிரதானமாக
அம்பேத்காரின் சாதியம்பற்றிய பார்வை, சாதி ஒழிப்பு
குறித்த அம்பேத்காரின் தீர்வுகள் ஆகியவற்றைப்
பற்றியே பேசுகிறது.

அம்பேத்கார் நம் சமகாலத்தவர்.
அவர் கி.மு காலத்தவர் அல்லர். அவரின் பேச்சும் எழுத்தும்
முறையாக ஆவணப் படுத்தப்பட்டு, அநேகமாக
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மலிவு விலையில்
கிடைக்கின்றன.

அம்பேத்கார் எழுதிய அரசமைப்புச் சட்டம்தான் இன்று
நம்மை ஆளுகை செய்கிறது. அச்சட்டத்தோடு நாம்
கொள்ளுகிற ஒவ்வொரு உறவிலும் நாம் அம்பேத்காரைக்
காண்கிறோம்; உணர்கிறோம்.சுருங்கக்கூறின்,
அவர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக,
அன்றாட வாழ்வில் அம்பேத்காரை ஒவ்வொரு நாளும்
உணர்ந்து கொண்டே இருக்கிறோம்.

அம்பேத்கார் சிந்தனைப்பள்ளியைச் சார்ந்தவர்கள்,
மாயாவதி முதல் திருமாவளவன் வரை,
அவர் பெயரிலான அமைப்புகள், கட்சிகள் வாயிலாக,
ஒவ்வொரு நாளும் அவரின் இருப்பை போதனைகளை
நினைவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆகவே, இந்நிலையில், அம்பேத்காரின் எழுத்துக்களில்
இருந்து, அவரின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு,
அவற்றை விமர்சனம் செய்வது என்பது வரலாற்றுப்
பொருள்முதல்வாதப் பார்வையே. வரலாற்றுப்
பொருள்முதல்வாதப் பார்வை என்பது எங்கோ
கடல் கடந்து ஒரு தனித்தீவில் உள்ள மரத்தின்
பொந்தில் இருப்பது போலவும், அதை ரங்கநாயகம்மா
ராபின்சன் குரூசோவாக மாறி, எடுத்து வரத்
தவறி விட்டார் என்பது போல விமர்சிப்பது
ஏற்புடையதல்ல.

அம்பேத்காரின் எழுத்துக்களில் இருந்து அவரை
விமர்சிப்பது என்பது பழுதுபடாத வரலாற்றுப்
பொருள்முதல்வாதப் பார்வையே.

அதே நேரத்தில், புத்தர் வேறு; அம்பேத்கார் வேறு.
அம்பேத்கார் இருபதாம் நூற்றாண்டின் தலைவர்.
புத்தர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
புத்தர் ஒரு வரலாற்றுப் பாத்திரம். அவர் பிம்பிசார
மன்னனின் காலத்தில் வாழ்ந்தவர். நரேந்திர மோடி
காலத்தில் வாழ்கிற நாம், 2500 ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்த புத்தரைப் பற்றி அறிந்து கொள்ள
வரலாற்றுப் பொருள்முதல்வாத அறிவு தேவை.
புத்தரைப் பற்றிய மெய்யான வரலாற்றுச் செய்திகள்
யாவும் தேவையான அளவில் இன்றும் கிடைக்கவில்லை.
**
எனவே, வரலாற்றுப் பொருள்முதல்வாத வழிமுறை
இல்லாமல், புத்தரை மதிப்பிட முடியாது. அது பற்றி
அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
...........................தொடரும்.....................





  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக