புதன், 21 செப்டம்பர், 2016

சாலச் சிறந்தது எது என்பதற்கான நிரூபணம்!
----------------------------------------------------------------------------------
கொற்றவை அம்மா,
ரங்கநாயகி அம்மையார் என்னினும் அகவையில்
பல்லாண்டுகள் மூத்தவர். அகவை  எண்பதைக் கடந்தவர்.
அவரை அம்மையார் என்று சொல்வது கூடாது எனில்,
பின் எவரைத்தான் அம்மையார் என்று கூற இயலும்?
பல்லாயிரம் ஆண்டு மரபில் செறிந்த செம்மொழித்
தமிழில், அம்மையார் என்ற சொல் தேவையற்றுப்
போய்விட்டதா? இல்லையே.
**
எந்த ஒரு பெண்ணையும் (சிறு குழந்தையாயினும் கூட)
மற்றவர்கள் விளிக்கும்போதோ அல்லது சுட்டும்போதோ
அம்மா என்று விளிப்பது பல்லாயிரம் ஆண்டுக்கால
மரபின் தொடர்ச்சியாக இன்றும் நிலவும் நடைமுறை.
அவ்வாறு விளிக்கப்படும் பெண் அகவையில் பெருமூப்பு
எய்தியவராய் இருப்பின், அவர் அம்மையார் என்று
விளிக்கப் படுகிறார். மூத்த பெண்மையை மதிப்புடன்
பார்ப்பதும், மரியாதையுடன் விளிப்பதும் அம்மையார் என்ற
சொல்லால் இயல்கிறது. இதுவே இச்சொல்லின் பண்பும்
பயனும் ஆகும்.
**
காரைக்கால் அம்மையார், "அம்மையார்" என்று விளிக்கப்
பட்டபோது, அவர் ரங்கநாயகி அம்மையாரை விட,
அகவையில் குறைந்தவராக இருந்தார் என்பதைத்
தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
......(தொடரும்).......
**
......தொடர்ச்சி.............
"காம்ரேட்" என்ற சொல் ஐபீரிய மொழிச் சொல்லாகும்.
ஓர் இடத்தில் அல்லது அறையில் உடன் பணியாற்றுபவரைக்
குறிப்பிடும் சொல்லாக அம்மொழியில் இருந்தது.
பிரெஞ்சுப்  புரட்சியின் பின்னர், அச்சொல் சமத்துவ
உணர்வைத் தரும் சொல்லாகப் பயன்பட ஆரம்பித்தது.
தொழிற்சங்க இயக்கங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும்
செயல்படுவோரைக் குறிக்கும் சொல்லாக இச்சொல்
காலப்போக்கில் நிலைபெற்று விட்டது.
**
ஆனால், தமிழ் மரபில் தோழன், தோழி ஆகிய சொற்கள்
மூவாயிரம் ஆண்டுகளாக ஆட்சி பெற்று நின்று நிலைத்து
விட்டன. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்
ஐரோப்பாவில்  உருவாகிய தோழர் (comrade) என்ற சொல்
வேறு; தமிழ் மரபில் நிலைத்து விட்ட தோழன், தோழி,
தோழர் ஆகிய சொற்கள் வேறு. எனினும், ஓர் அமைப்பிலோ
அல்லது இயக்கத்திலோ ஒன்றாக இயங்குவோரை மட்டுமே
இச்சொற்கள் குறிக்கும் என்பதில் ஐரோப்பிய காம்ரேடு
என்ற சொல்லும் தமிழ் மரபின் தோழன், தோழி ஆகிய
சொற்களும் ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
**
ரங்கநாயகி அம்மையாரை நான் அறியேன். நான்
இயங்கிய, இயங்குகிற அமைப்புகளில், ஒரு பரந்து பட்ட
பொருளில் கூட (in a broad sense)  அவர் என்றுமே
இருந்ததில்லை. பின் அவரை "தோழர்" என்று
விளிப்பது எங்ஙனம் இயலும்?
**
மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்ற மூல ஆசான்களோ அல்லது
பெரியார், அம்பேத்கார் போன்ற சீர்திருத்தவாதிகளோ
இன்று உயிருடன் இல்லை. மறைந்த தலைவர்களை
விளிக்கும் அல்லது சுட்டும் முறை வேறு. இன்று நம்முடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் ரங்கநாயகி அம்மையார்
போன்றோரை விளிக்கும், சுட்டும் முறை வேறு.
மொழியியல், சொற்பொருளியல் (semantics) ஆகிய
துறைகளில் ஓர் எளிய பரிச்சயம் கொண்டிருக்கும்
எவரும்  இதுகாறும் கூறிய எனது கருத்துக்களில்
முரண்பட இயலாது.
**
அடுத்து, ஒரு விளிப்பில் "தத்துவார்த்தம்" என்பதை விட,
பண்பாடே மேலோங்கி இருக்கும். பொருளுற்பத்தி உறவுகள் மாறினாலும்கூட, மொழி அதற்குத்தக
மாறுவதில்லை  என்று ஸ்டாலின் கூறியதை ஈண்டு
நினைவு கூருமாறு வேண்டுகிறேன். 
**
ஆக, ரங்கநாயகி அம்மையாரை, அவரோடு தொடர்பற்ற
மூன்றாம் மனிதர்கள் அனைவரும்  "அம்மையார்" என்று
விளிப்பதே சாலச் சிறந்தது என்பதை ஈண்டு நிரூபித்து
உள்ளேன்.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்,
சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக