வியாழன், 29 செப்டம்பர், 2016

(4) ஆரியம் திராவிடம் என்பதெல்லாம் கட்டுக்கதை!
ரங்கநாயகம்மாவின் நூல் குறித்த திறனாய்வு!
"ஆரியப்  படையெடுப்பு நிகழவில்லை"  என்று
அம்பேத்கார் உறுதிபடக் கூறுகிறார்!
------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் வரலாறே ஆரிய திராவிடப் போரின்
வரலாறுதான் என்பது ஈவெரா பெரியாரின் கருத்து.
இன்று (இந்த 2016ஆம் ஆண்டிலும்) ஆரிய திராவிடப்
போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அடிக்கடி
கூறுவார் கலைஞர் கருணாதி அவர்கள்.

இந்தியாவிலேயே ஆரிய திராவிடப் பகைமை குறித்து
ஒவ்வொரு நொடியிலும் பேசப்படும் இடம் தமிழ்நாடுதான்.
ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சான
கொள்கையே இதுதான்.

ஆனால் அம்பேத்கார் ஆரிய திராவிடப்போர் என்பதை
அடியோடு நிராகரிக்கிறார். ஆரியப்  படையெடுப்பு
(Aryan invasion) என்ற கோட்பாட்டை முட்டாள்தனமானது
என்கிறார். ஆரியப்  படையெடுப்பு பற்றிப் பேசுபவர்களை
"பாம்பைப் போலக்  கொல்ல வேண்டும்" என்கிறார்.

 இதோ அம்பேத்கார் கூறுகிறார்:
---------------------------------------------------------
"ஆரியர்கள் படையெடுத்து வந்து மற்ற இனங்களை
 அடக்கி ஒடுக்கினார்கள்  என்று கூறினால்தான்
அவர்களது மேம்பாட்டு நிலையை நிரூபிக்க முடியும்
என்பதைத் தெரிந்து கொண்ட மேலைய எழுத்தாளர்கள்,
ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தார்கள்
என்றும், தாசர்களையும்  தசியுக்களையும் வெற்றி
கொண்டார்கள் என்றும் கதை கட்டி விட
ஆரம்பித்தார்கள்"
----- (அம்பேத்காரின் எழுத்தும் பேச்சும்; தொகுதி-13,
பக்கம்-120)
(மேற்கோளுக்குள் அடங்கிய பகுதி ரங்கநாயகம்மாவின்
நூலில் இருந்து; பக்கம்-39, இடது பாதி).

அம்பேத்கார் மேலும் கூறுகிறார்:
------------------------------------------------------------
(ஆரியப் படையெடுப்பு பற்றிய) "மேலைநாட்டுக் கோட்பாடு
சில விஷயங்களைப் போதிய அளவு ஆராயாமல்,
ஆழமாகப் பரிசீலிக்காமல் அவசரக் கோலமாக
மேற்கொள்ளப்பட்ட முடிவே என்பதில் ஐயமில்லை"
(தொகுதி-13, பக்கம்-158,159)
(மேற்கோளுக்குள் அடங்கிய பகுதி ரங்கநாயகம்மாவின்
நூலில் இருந்து; பக்கம்-40, இடது பாதி).

அம்பேத்கார் அறுதியிடுகிறார்:
----------------------------------------------------------
"அப்படிப்பட்டவர்கள் (மேலைநாட்டு எழுத்தாளர்கள்)
இத்தகைய வலுவற்ற, பலவீனமான அஸ்திவாரத்தின்
மீது ஒரு கோட்பாட்டை உருவாக்க முனைந்திருப்பது
வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

இந்த அத்தியாயத்தில் ஏராளமான. அசைக்க முடியாத,
உறுதியான சான்றுகள் தரப்பட்டுள்ள நிலைமையில்,
(ஆரியப் படையெடுப்பு பற்றிய) இந்த மேலையக்
கோட்பாடு இனியும் செல்லுபடி ஆகாது; இதனைக்
குப்பைக் கூடையில்தான் தூக்கி எறிய வேண்டும்".
(அம்பேத்கார் எழுத்தும் பேச்சும்: தொகுதி-13,
பக்கம்-158-159)
(மேற்கோளுக்குள் அடங்கிய பகுதி ரங்கநாயகம்மாவின்
நூலில் இருந்து; பக்கம்-40, வலது பாதி).

தமது நூலில், அம்பேத்காரின் "ஆரியப் படையெடுப்பு
என்பது கற்பனையே" என்ற கருத்தைச் சுட்டிக் காட்டும்
ரங்கநாயகம்மா, அப்பொருள் பற்றித் தமது கருத்து
என்ன என்பதை முன்வைக்கவில்லை. ஏனெனில்,
நூலின் மையக்கருத்து ஆரியப் படையெடுப்பு அல்ல.
எனவே காழ்ப்புணர்வோடு தொட்டதெற்கெல்லாம்
அம்பேத்காரை விமர்சிக்கிறார் என்று சித்தரிக்க
முயல்வதில்லை பொருளில்லை.

"3500 ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ஆசியாவில் வாழ்ந்து
வந்த, மேய்ச்சல் சமுதாயத்தினரான நாடோடிகளான
ஆரியர்கள், கைபர் போலன் கணவாய்கள் வழியாக
இந்தியாவுக்குள் நுழைந்தனர். இங்குள்ள நாகரிகத்தில்
சிறந்து விளங்கிய திராவிடர்களுடன் போரிட்டு,
அவர்களை வீழ்த்தி அடிமைகள் ஆக்கினார்கள்.
கங்கைச் சமவெளியில் குடியேறிய இந்த ஆரியர்கள்
நால்வகை வேதங்களைப் படைத்தார்கள்."  

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள
ஒவ்வொரு பள்ளி மாணவனுக்கும் இந்த வரலாறுதான்
கற்பிக்கப் பட்டு வருகிறது. மாக்ஸ் முல்லர், ஜவாஹர்லால்
நேரு, கால்டுவெல் பாதிரியார் போன்றோர் ஆரியப்
ப்டையெடுப்பு என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள்.

நவீன வரலாற்று ஆசிரியர்களான ரொமிலா தாப்பர்
போன்றோர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள்
அம்பேத்காரின் கருத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த அஸ்திவாரத்தையே
அம்பேத்கார், "ஆரியப்  படையெடுப்பு ஒரு கட்டுக்கதை"
என்று நிரூபித்ததன் மூலம் தகர்த்து விடுகிறார். மார்க்சிய
லெனினிய இயக்கம் என்ற முகாமில், மாறுவேடத்தில்
அமர்ந்திருக்கும் திராவிடக்  கோட்பாட்டின்
ஆதரவாளர்களும் அம்பேத்காரின் இந்த சாட்டையடியில்
இருந்து தப்பவில்லை. குறிப்பாக மார்க்சியத்தின்
பொருளியல் அடிப்படைகளை நடைமுறையில் மறுத்து,
கிராம்சிய வழியில் அமைப்பு நடத்தும்  பண்பாட்டு
மார்க்சிஸ்டுகள் அம்பேத்காரிடம் வாங்கிய அடியில்
மூர்ச்சித்துக் கிடக்கிறார்கள்.

கருத்தியல் தளத்தில் பாரதூரமான விளைவுகளை
ஏற்படுத்த வல்ல அம்பேத்காரின் ஆய்வுகள்
மனம் ஒன்றிப் படிக்க வேண்டியவை. ஒரு திறனாய்வு
நூலின் துணையின்றி, அம்பேத்காரைப் படிப்பது
சுலபமல்ல. ரங்கநாயகம்மாவின் இந்த நூல், அந்த
வகையில் அம்பேத்காரைப் படிக்கப் பெரிதும்
துணை புரிகிறது.
---------------------------------------------------------------------------------------------------
தொடரும்
பின்குறிப்பு: இக்கட்டுரைத் தொடரின் முந்திய பகுதிகள்
அனைத்தையும் படிக்குமாறு வேண்டுகிறோம்.
---------------------------------------------------------------------------------------------------



   
 

  
  
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக