வெள்ளி, 30 செப்டம்பர், 2016

(6) மகாத்மா காந்தி மீது தர்ம அடி போடும் நூலாசிரியர்!
ரங்கநாயகம்மாவின் நூல் பற்றிய திறனாய்வு!
------------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------------
சாதியம் பற்றிய அம்பேத்காரின் கோட்பாடுகளையும்
தீர்வுகளையும் விமர்சிக்கும் தமது நூலில், மகாத்மா
காந்தி மீது விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளை
அள்ளித் தெளித்து இருக்கிறார் ரங்கநாயகம்மா.

தமது நூலின் 8, 9, 14 அத்தியாயாயங்களில் மகாத்மா
காந்தியை விமர்சிக்கும் ரங்கநாயகம்மா, மலையாகக்
குவிந்து கிடைக்கும் காந்தியின் ஆவணப் படுத்தப்பட்ட
எழுத்துக்களில் இருந்தோ, அவரின் நூல்களில் இருந்தோ
ஒரு வரியைக் கூட மேற்கோள் காட்டவில்லை. மாறாக,
அம்பேத்காரின் எழுத்துக்களில் கூறப்பட்ட, அம்பேத்காரின்  
தேவைக்கேற்பக் குறுக்கப்பட்ட  மேற்கோள்களையே எடுத்தாள்கிறார். இது விமர்சன முறைமை அல்ல.

மூல ஒளி (original light) வேறு; பிரதிபலிக்கப்பட்ட ஒளி
(reflected light) வேறு. சூரிய ஒளியை ஒவ்வொரு கிரகமும்
வெவ்வேறு அளவில் பிரதிபலிக்கின்றன. இந்தப்
பிரதிபலிப்பு ஆற்றல், வானியலில் 'அல்பெடோ மதிப்பு'
(albedo value) எனப்படும். மகாத்மா காந்தியைப் பொறுத்து,
அம்பேத்காரின் அல்பெடோ மதிப்பு மிகவும் குறைவு.

தமது நூலில் ரங்கநாயகம்மா கூறுகிறார்:
--------------------------------------------------------------------------
"தீண்டப் படாதோர் குறித்து காந்தியே அதிகாரத்துடன்
பேச முடியும் என்றால், அம்பேத்கார் தன்னளவில் ஒரு
தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அவர் அதைவிட
அதிகாரத்துடன் பேச முடியும்; இல்லையா?" 
(ரங்கநாயகம்மாவின் நூல், தமிழ், பக்கம்-124)

தீண்டத்தகாதவர்களைப் பொறுத்து, மகாத்மா காந்தியை
விட, அம்பேத்காருக்கு அதிகமான பிரதிநிதித்துவப்
பண்பு (representative character) உண்டு என்பது விஷயத்தை
மேலெழுந்தவாரியாக மட்டும் பார்க்கும் எவருக்கும்
எளிதில் புலப்படுவது. ஆனால் பிரதிநிதித்துவப் பண்பு
மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வைத் தேடித் தந்து
விடுவதில்லை. தீர்வைத்  தீர்மானிக்க வேறு பல
காரணிகளும் உள்ளன. அவற்றையும் கருத்தில்
கொள்வது அவசியம்.

சற்றுக் கண்ணயர்ந்து, ரங்கநாயகம்மா முன்வைத்த
இந்த வாதத்தைத்தான் அடையாள அரசியல் சேற்றில்
புரள்வோர் எப்போதுமே முன்வைத்து வருகின்றனர்.
"தலித் விடுதலை தலித்துகளால் மட்டுமே சாத்தியம்"
"பெண் விடுதலை பெண்களால் மட்டுமே சாத்தியம்"
ஆகிய முழக்கங்கள், பிரதிநிதித்துவப் பண்பு என்ற
மணல் மீது கட்டப்பட்ட மாளிகைகளே. இவற்றை
மார்க்சிய லெனினியம் நிராகரிக்கிறது.

மகாத்மா காந்தி மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராளி. அவரின் வருகைக்கு முன்பு தேச விடுதலை
என்பது இந்திய மக்களின் கோரிக்கையாக
இருக்கவில்லை; அது வெகு சில மேட்டுக்குடிச்
சீமான்களின் கனவாக மட்டுமே இருந்தது. காந்தி
ஒருவர்தான் சுயராஜ்யம் (சுதந்திரம்) என்ற
கோரிக்கையின்பால் ஒட்டு மொத்த மக்களையும்
திரட்டியவர்.

மகாத்மா காந்தி அனைத்தையும் ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்ற மையமான முழக்கத்திற்குக்
கீழ்ப் படுத்தினார். அவரின் சமூக சீர்திருத்த
இலக்குகள், தீண்டாமை ஒழிப்பு ஆகிய அனைத்தும்
ஏகாதிபத்திய எதிர்ப்புக்குக் கீழ்ப்படுத்தப் பட்டன.
அவரின் முன்னுரிமைகள் வேறு.

அம்பேத்காரின் முன்னுரிமைகள் வேறானவை.
அவரின் மைய முழக்கம் வேறு. ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்பது அவரின் நிகழ்ச்சி நிரலில்
என்றுமே மையமாக இருந்ததில்லை.

மகாத்மா காந்தியைப் பற்றிய மாவோவின்
உயர்ந்த மதிப்பீட்டையும், ஸ்டாலின் உள்ளிட்ட
சோவியத் ஒன்றியத் தலைவர்களின்
மதிப்பீட்டையும் கருத்தில் கொள்ளாமல்
காந்தியின் பாத்திரம் குறித்து சரியான ஒரு முடிவுக்கு
வர முடியாது. (இது குறித்துப் பின்னர் பார்ப்போம்).

இந்நிலையில் இருவரையும் ஓப்பிடுவதும்,
ஓப்பிடுவதாகக் கூறி, மகாத்மா காந்தியை
அவதூறு செய்வதையும் ஏற்க இயலாது.
ரங்கநாயகம்மாவின் நூலின் இருண்ட
பக்கங்களாக, மகாத்மா காந்தியைப் பற்றிய
தவறான மதிப்பீடு அமைந்து விடுகிறது. என்றாலும்,
இதை வைத்துக் கொண்டு, நூல் முழுமையுமே
இப்படித்தான் என்று சித்தரிக்க எவரேனும்
முயல்வார்கள் என்றால், அது நேர்மையற்றதாகும்.

மகாத்மா காந்தியை மதிப்பிடுவதில் ரங்கநாயகம்மா
-------------------------------------------------------------------------------------------------
ஏன் தவறு இழைத்தார்?
------------------------------------------
இதற்கான காரணங்களை
அவரின் உள்ளே ( subjective factors) தேடுவதை விட,
அவர் மீது தாக்கம் செலுத்திய, சக்தி வாய்ந்த
புறச்சூழலின் யதார்த்த (objective reality) நிலையில்
தேடினால் கண்டு பிடிக்க இயலும்.

இந்த நூலை, ஆரம்பத்தில் தெலுங்கு வார ஏடான
ஆந்திரஜோதி என்ற ஏட்டில், தொடராக வாரந்தோறும்
எழுதினார் ரங்கநாயகம்மா. வார ஏட்டின் வாசகர்கள்
தம்மளவில் ஒன்று திரண்டவர்கள் (well organised).
எழுத்தாளர் மீதும் ஏடு மீதும் செல்வாக்கும்
நிர்ப்பந்தமும் செலுத்த வல்லவர்கள். எனவே
வாசகர்களின் ஏற்பைப் பெற வேண்டிய அவசியத்துக்கு
ஆட்படாமல் எந்த எழுத்தாளரும், சர்வ சுதந்திரமாக
தான் நினைத்தை அப்படியே எழுதி விட முடியாது.

அதிலும் அம்பேத்கார் கோடிக்கணக்கான மக்களால்
போற்றப் படுபவர். அவர் மீதான விமர்சனம் என்பது,
அது எவ்வளவு சரியானதாக இருந்தாலும், எவ்வளவு
நியாயமானதாக இருந்தாலும், வாசகர்களின்
ஏற்புடைமைக்கு (acceptability) உட்பட்டே வெளிவர
முடியும். இந்தச் சூழலில் தமது நேர்மையையும்
காழ்ப்புணர்ச்சியற்ற தன்மையையும் அனைவருக்கும்
புலப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டே
ரங்கநாயகம்மா இந்த நூலை எழுதினார் என்பதில்
நமக்குத்  தெளிவு வேண்டும்.

அம்பேத்காரை மட்டும் தனிமைப் படுத்தி விமர்சனம்
செய்கிறார் என்கிற அவதூறு எழுந்து விடாமல்
தடுக்கும் பொருட்டு, மகாத்மா காந்தி, விவேகானந்தர்,
தத்துவஞானி ராதாகிருஷ்ணன் என்று எல்லோரையும்
ஒரு பிடி பிடித்து விடுகிறார். அதிலும் இந்தியாவைப்
பொறுத்த மட்டில் மகாத்மா காந்தி ஒரு soft target. எனவே
எல்லோருடனும் சேர்ந்து மகாத்மா காந்தி மீது
தர்ம அடி போட்டு விடுகிறார் ரங்கநாயகியம்மா.
  
ரங்கநாயகியம்மா ஒரு தமிழராக இருந்து, தமிழ்நாட்டில்
வாழ்பவராக இருந்தால், அவரால் இப்படி ஒரு தொடரை
எந்த ஒரு ஏட்டிலும் எழுத முடியுமா? எழுதினாலும்
எந்த ஏடாவது அதைப் பிரசுரிக்க முன்வருமா?

தென்னிந்திய மாநிலங்களிலேயே, வாசகத்தன்மை
குறைந்த, நுனிப்புல் வாசகர்களை மட்டுமே கொண்ட
மாநிலம் தமிழ்நாடுதான். காத்திரமான எந்த ஒரு
பொருளையும் பற்றி, இங்கு எந்த ஒரு எழுத்தாளரும்
ஜனரஞ்சகமான வார ஏடுகளில் தொடர் எழுதிவிட
முடியாது. Polemical debates என்ற விஷயத்துக்கே தமிழ்
எழுத்துலகில் இடம் கிடையாது.
காணாக்குறைக்கு, அடையாள அரசியல் ரவுடித்
தனங்களின் சொர்க்கம் தமிழ்நாடு. 

எனவே, மேற்கூறிய அனைத்துக் காரணிகளையும்
கருத்தில் கொள்ளாமல், இலக்கு இல்லாமலும்,
ஏனோதானோ மனநிலையிலும் ரங்கநாயகம்மாவின்
நூலை விமர்சனம் செய்வது மக்களுக்குப் பயன்
தராது.
-------------------------------------------------------------------------------------------------
தொடரும்
---------------------------------------------------------------------------------------------------
அடுத்து: புத்தர் குறித்த ரங்கநாயகம்மாவின் பார்வை.
******************************************************************   

        





               


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக