சனி, 1 அக்டோபர், 2016

(7) விவேகானந்தரின் கண்ணில் சுண்ணாம்பையும்
அம்பேத்காரின் கண்ணில் வெண்ணெயையும் வைக்கும்  ரங்கநாயகம்மா!
ரங்கநாயகம்மாவின் நூல் திறனாய்வு!
------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------
அம்பேத்கார் வாழ்ந்த காலத்தில் நிறைய சம்ஸ்கிருத
அறிஞர்கள் இருந்தனர். அம்பேத்காரே சம்ஸ்கிருத
அறிஞர்தான். அம்பேத்காரின் சம காலத்தவரான
மறைமலை அடிகள் யாரினும் கூடுதலான சம்ஸ்கிருத
அறிஞராகத் திகழ்ந்தார்; மேலும் அவர் சிறந்த தமிழ்
அறிஞரும்கூட. காளிதாசரின் சாகுந்தலம் நாடகத்தைத்
தமிழில் மொழிபெயர்த்தவர் மறைமலை அடிகள்.

காரல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி அறிய விரும்பி,
இந்தியா பற்றிய நூல்களைத் தேடியபோது,
பிரிட்டிஷாரும் பிற ஐரோப்பியர்களும் எழுதிய
நூல்களே அவருக்குக் கிடைத்தன. அடிமை நாட்டைப்
பற்றி, அடிமைப் படுத்தியவர்களே எழுதிய நூல்களில்
உண்மைக்குப் பஞ்சம் இருக்கும் என்று கருதிய காரல்
மார்க்ஸ், இந்தியாவைப் பற்றி இந்தியர்களே எழுதிய
நூல்களைப் படிக்க விரும்பினார். அவை யாவும்
சமஸ்கிருதத்தில் மட்டுமே இருக்கின்றன என்று
அறிந்த மார்க்ஸ், அவற்றைப் படிக்கும் பொருட்டு,
சமஸ்கிருதத்தைக் கற்க விரும்பினார்; கற்றார்.

மார்க்ஸ் தம் அந்திம காலத்தில் மேற்கொண்ட முயற்சி
இது என்பதால், சமஸ்கிருதம் கற்று முடிக்கும் முன்பே
மார்க்ஸ் மறைந்து விட்டார்.

சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றை ஆழ்ந்து கற்ற
அம்பேத்கார் சமஸ்கிருதத்தைப் பெரிதும் நேசித்தார்.
அரசியல் நிர்ணய சபையில், இந்தியாவின் ஆட்சிமொழி
பற்றிய விவாதத்தின்போது, சமஸ்கிருதத்தை
ஆட்சிமொழியாக்க முயன்ற சிலரில் அவரும் ஒருவர்
என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

மறைமலை அடிகள், அம்பேத்கார் இருவருமே
சமஸ்கிருதப் புலமை உடையவர்கள். இருவரில்
மறைமலை அடிகளே ஆழ்ந்த புலமை உடையவர்.
என்றாலும் மறைமலை அடிகள் தீவிர சம்ஸ்கிருத
எதிர்ப்பாளர். சமஸ்கிருதத்தைப் பேசினால்
மூச்சுத்  திணறல் ஏற்பட்டுச் செத்துப் போவார்கள்
என்று கட்டுரை எழுதியவர். அறிஞர் அண்ணா
காலத்தில் அக்கட்டுரை பள்ளி மாணவர்களுக்குப்
பாடமாக இருந்தது. ஆனால் அம்பேத்காரோ
அதிதீவிர சம்ஸ்கிருத ஆதரவாளர்.

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையில்
சமஸ்கிருதத் திணிப்பு இருப்பதாகக் கூறி,
அதை எதிர்த்து அண்மையில் நடைபெற்ற ஒரு
ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்காரின் படங்களைத்
தாங்கிய பதாகைகளுடன்  சிலர் சமஸ்கிருதம்
ஒழிக என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.
தங்கள் தலைவரான அம்பேத்கார் ஓர் அதிதீவிர
சம்ஸ்கிருத ஆதரவாளர் என்ற எளிய உண்மையைக்
கூட அறிந்திராத, இந்த அப்பாவித் தொண்டர்களின்
பேதைமையை என்ன சொல்ல?

மேற்கூறிய நிகழ்வு அபூர்வமான ஒன்றல்ல. எந்தக்
கொள்கைகளுக்காக அம்பேத்கார் நின்றாரோ,
அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவைக் கூடப்
பெறாத பலர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவரைப்
பின்பற்றுவதாக உரிமை கோரும் மிகப் பலர்
பல்வேறு விஷயங்களில் அவரின் கருத்துக்கள்
என்ன என்றே அறியாதவர்களாக உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் ரங்கநாயகம்மாவின்
திறனாய்வு நூல் அம்பேத்காரின்  கருத்துக்களை
அறியும் முயற்சியில் பெரிதும் துணை நிற்கிறது;
அறிய வேண்டும் என்ற வேட்கையை எழுப்புகிறது.
சுருங்கக் கூறின், அறியாமையின் இடத்தில்
அறிதலை வைக்கிறது. ஒரு முக்கியமான சமூகத்
தேவையைப் பூர்த்தி செய்கிறது. அந்தமட்டில்
பெரிதும் முற்போக்கான ஒரு பாத்திரத்தை
வகிக்கிறது.

அம்பேத்காரின் சமஸ்கிருத மோகம் குறித்து,
இந்த நூலில் ஆங்காங்கே குறிப்பிடும்
ரங்கநாயகியம்மா, அதை விமர்சனப் பார்வையுடன்
அணுகாமல் கழன்று கொள்கிறார். உழைக்கும்
மக்களைப் பொறுத்தமட்டில், சமஸ்கிருதம் என்பது
ஆதிக்கத்திற்கான ஒரு மொழி. கோடானுகோடி
உழைக்கும் மக்களை அடிமைப் படுத்த, ஆளும்
வர்க்கத்திற்கு உதவும் ஒரு கொடுங்கருவி. அத்தகைய
சமஸ்கிருதத்தின் மீதான அம்பேத்காரின் மோகம்
உழைக்கும் மக்களான தலித்துகளுக்கு எந்த
விதத்திலும் நன்மை பயக்காது.

கீழ்சாதியினர் சமஸ்கிருதம் கற்பதன் மூலமாகவே
மேனிலை எய்த முடியும் என்று தீர்வு சொன்ன
விவேகானந்தரை நார்நாராகக் கிழித்துத்
தொங்கப் போடும் ரங்கநாயகம்மா ( பக்கம்-116),
அம்பேத்காரின் சம்ஸ்கிருத மோகம் குறித்து
ஒரு மெல்லிய கண்டனத்தைக் கூடத்
தெரிவிக்காமல் கடந்து போகிறார்.

அம்பேத்காரின் மீது கறாரான விமர்சனம் வைக்க
வேண்டிய இடம் இது. விவேகானந்தரின் கண்ணில்
சுண்ணாம்பு வைக்கும் ரங்கநாயகம்மா,
அம்பேத்காரின் கண்ணில் வெண்ணையை
வைக்கிறார். இது போன்ற உதாரணங்களை
நிறையவே இந்த நூலில் இருந்து எடுத்துக்
காட்ட முடியும். விரிவு கருதித் தவிர்க்கப் படுகிறது.

அம்பேத்காரின் மீது காழ்ப்புணர்ச்சியுடனும்
வன்மத்துடனும் இந்த நூலை எழுதி இருக்கிறார்
ரங்கநாயகம்மா என்ற குரல்கள் பொய்மையில்
தோய்ந்தவை; அருவருப்பானவை. சமஸ்கிருதத்தை
ஆதரிக்கும் விவேகானந்தரின் மீதான ரங்கநாயகம்மாவின் கண்டனமும்,
அதே சமஸ்கிருதத்தை ஆதரிக்கும் அம்பேத்காரின்
மீதான பரிவும் எதை உணர்த்துகின்றன?

மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் அமைந்த,
நியாயமானதும் சமூக அவசியம் கருதியதுமான
எமது திறனாய்வு மக்களைச் சென்றடைய அடைய,
உண்மை துலங்கும். இதன் விளைவாகவே,
அடையாள அரசியல் பிழைப்புவாதியான ஒரு
கவிஞரின் தொண்டையில் இருந்து முதன் முதலில்
கிளம்பிய இத்தகைய அருவருப்பான குரல்கள்
தற்போது சமிக்ஞைத் தேய்வு (attenuation) அடைந்து
மங்கி வருகின்றன.
------------------------------------------------------------------------------------------
தொடரும்; விரைவில் முற்றுப் பெறும்.
*****************************************************************   


  









  


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக