வெள்ளி, 7 அக்டோபர், 2016

version-2 சர்வரோக நிவாரணி இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை!
-----------------------------------------------------------------------------------
மார்க்சியம் ஒரு சர்வரோக நிவாரணி என்ற கற்பிதம்
உண்மையன்று. மார்க்சியத்தை இஸ்லாம் கிறித்துவம்
போன்ற ஒரு மதமாகப் பார்க்கிற பார்வையே இக்கற்பிதத்தை
தோற்றுவித்தது. கணிதம் படிக்கிற  ப்ளஸ் டூ மாணவன்
கையடக்கமான ஒரு ஃபார்முலா புத்தகத்தை வைத்திருப்பான்.
அதுபோலவே குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்கள்
பலரும், ஒரு சில மார்க்சிய வாய்ப்பாடுகளை மனனம் செய்து
கொண்டு, அதைத் தாண்டிய எதுவும் மார்க்சியம் இல்லை
என்று குதிக்கிறார்கள். இவர்களில் பலர் எந்த விதமான
நடைமுறையும் அற்றவர்கள். அதாவது மார்க்சியத்தைப்
பிரயோகம் செய்து பார்க்காதவர்கள். நிற்க.
**
சமூகத்தின் உற்பத்தியில் பங்கெடுக்காத எந்த ஒரு பிரிவு
மக்களும் சமூக அந்தஸ்தில் பின்னுக்குத் தள்ளப்
படுவார்கள் என்பது சமூக இலக்கணம். இதையே
எங்கல்ஸ் கூறுகிறார். இது உண்மையில் மார்க்சிய
பால பாடம் ஆகும். எனவே பெண்கள் சமூகத்தின்
உற்பத்தியில் பங்கெடுக்கும்போது, பெருமளவிலான
சுரண்டலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.
அன்றாட வாழ்க்கையில் இருந்தே இதை எவர் ஒருவரும்
அறிய இயலும்.
**
ஒரு சமூக அமைப்பில் பல்வேறு விதமான ஏற்றத் தாழ்வுகள்
இருக்கின்றன. பொருளாதாரத் தற்சார்பை அடைவது என்பது
பிற வகைச் சுரண்டல்களில் இருந்து போராடி விடுபடுவதற்கு
முன் நிபந்தனை ஆகும்.
**
மூலதனத்தின் சுரண்டலில் இருந்து விடுபட்ட உடனே
பிற வகையான  அடிமைத்தனங்கள் யாவும் தாமாகவே
அகன்று விடும் என்று கருதுவது மார்க்சியப் பார்வை அல்ல.
சீனத்தில் மாவோ ஏன் பண்பாட்டுத் துறையில் ஒரு
புரட்சியை நடத்தினார் என்று சிந்திப்பது அவசியம்.
அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம் மேல்கட்டிலும் தானாகவே
மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என்பது உண்மையல்ல.
**
சமூகத்தின் உற்பத்தியில் பெண்கள் பங்கெடுப்பதன் மூலம்
பெண் விடுதலையை நோக்கி தீர்மானகரமான அடி எடுத்து
வைக்க முடியும் என்று எங்கல்ஸ் கூறுகிறார். எங்கல்ஸ்
கூறியதன் பொருள் இவ்வளவே. இதற்கு மேலும் எங்கல்ஸ்
கூறியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைப்புக்கு
உரியது. கி.பி 3015 வரைக்கும் எங்கல்ஸ் சொல்வது
பொருந்தும் என்று குதிப்பது நகைப்புக்கு உரியது
மட்டுமின்றி மடமையும் ஆகும்.  
**
பதிவும் பின்னூட்டங்களும் மார்க்சியம் ஒரு சர்வரோக
நிவாரணி அல்ல என்று காட்ட முயல்வதாகவும், "இல்லை
இல்லை, மார்க்சியம் ஒரு சர்வரோக நிவாரணிதான்" என்று
நிரூபிக்க முயல்வதாகவும் அமைந்துள்ளது. இது மிகவும்
துரதிருஷ்ட வசமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக