ஞாயிறு, 9 அக்டோபர், 2016

அணுஉலை எதிர்ப்பு என்பது
பின்நவீனத்துவத்தின் பிற்போக்குக் கோட்பாடே!
----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------------------------
அணுஉலைகளை எவரும் ஆதரிக்கலாம் அல்லது
எதிர்க்கலாம். ஆதரிக்கவோ எதிர்க்கவோ
ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு  இந்த உரிமை
சாதாரண உரிமை அல்ல. மாறாக, இது தங்குதடையற்ற
உரிமை (unfettered right) ஆகும்.

அணுஉலை எதிர்ப்பு என்பது பின்நவீனத்துவம்
பெற்றெடுத்த குழந்தை. அணுஉலையை எதிர்த்துச்
சொல்லப்படும் ஒவ்வொரு கருத்தும்
பின்நவீனத்துவத்தை பிரதிபலிக்கிறது;
பின் நவீனத்துவத்தை வலுப்படுத்துகிறது.
அந்த அளவுக்கு மார்க்சியத்திற்கு எதிராக இருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான ஒரு
தத்துவம் பின்நவீனத்துவம். இங்கு தத்துவம் என்பது
மிகவும் பரந்துபட்ட ஒரு பொருளில்
(in a very broad sense) ஆளப்படுகிறது. மார்க்சியம் என்பது
நவீன தத்துவம் (modernism) ஆகும். மார்க்சியத்திற்குப்
பின் வந்த தத்துவம் என்பதால், இது பின்நவீனத்துவம்
(post modernism) என்று அழைக்கப் படுகிறது. 

பின்நவீனத்துவம் அநேகமாக ஒவ்வொரு அம்சத்திலும்
மார்க்சியத்தை எதிர்க்கிறது. என்றாலும் மார்க்சியத்தை
அதன் சிம்மாசனத்தில் இருந்து அகற்றி விட்டு, அந்த
இடத்தில் தான் அமர்வது பின்நவீனத்துவத்தின்
நோக்கம் அல்ல. அதற்கான வலிமை உடையதல்ல
அது. மார்க்சியத்தை, அதன் பல்வேறு அம்சங்களை
விமர்சனம் செய்வது மட்டுமே பின் நவீனத்தின் ஒரே
நோக்கம். சமுதாய மாற்றத்திற்கான தத்துவம் அல்ல
பின் நவீனத்துவம்.

மார்க்சியத்தின் அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய
கண்ணோட்டத்தை விமர்சித்தது பின்நவீனத்துவம்.
மார்க்சியம் உற்பத்திச் சக்திகளின் தங்குதடையற்ற
வளர்ச்சி என்பதைக் குருட்டுத் தனமாக வழிபடும்
ஒரு தத்துவம் என்றும், சுற்றுச் சூழல் பற்றிய
பிரக்ஞையே மார்க்சியத்தில் கிடையாது என்றும்
மார்க்சியத்தின் மீது பழி சுமத்தியது பின்நவீனத்துவம்.

இன்று தமிழ்நாடெங்கும், ஏன் மொத்த இந்தியாவிலும்
கூட, சுற்றுச் சூழல் போராளிகள் புற்றீசல் போல்
பெருகி, அரசியல் சூழலை மாசு படுத்திக் கொண்டு
இருப்பதைப் பார்க்கலாம். மேத்தா பட்கர், உதயகுமார்,
பியூஸ் மனுஷ் என்று தடுக்கி விழுந்தால் சூழல்
போராளிகள் மீதுதான் விழ வேண்டும் என்ற
அளவுக்கு நிலைமை சீரழிந்து போய்க் கிடக்கிறது.
இதற்கெல்லாம் மூல காரணம் பின்நவீனத்துவம் ஆகும்.

ஆக அணுஉலை எதிர்ப்பு என்பது பின்நவீனத்தின்
கோட்பாடு. இதை எவரும் மறுத்து விட முடியாது.

இன்று நேற்றல்ல, 1985களிலேயே வினோத் மிஸ்ரா
குழுவினர் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துப்
பரப்புரை நிகழ்த்தி வந்தனர். மலைப்பாம்பு
இரையை விழுங்குவது போல, VM கட்சியை,
தொண்டு நிறுவனங்கள் (VOLUNTARY ORGANISATIONS,
இன்றைய பெயரில் NGOக்கள்) விழுங்கிக்
கொண்டிருந்த நேரம் அது. அதன் பிறகு, தோழர்
VM ஆயுதக்  குழுக்களைக் கலைத்து விட்டு,
நாடாளுமன்றப் பாதையில் சரண் அடைந்தார்.
தலைமறைவுக் கட்சி என்ற நிலைமை மாறி கட்சி
வெளிப்படையாக இயங்காத தொடங்கியது.
இப்போது கட்சி தன் புரட்சிகர சாரம் அனைத்தையும்
இழந்து வெறுங்கூடாக மாறியிருந்தது.

எனவே VM கட்சியினரின் நிலைப்பாடு என்பது
NGOக்களின் நிலைபாடே. அது மார்க்சிய லெனினிய
நிலைபாடு அல்ல.

தமிழ்நாட்டில் வேறு ஒரு கட்சியும் அணுஉலைகளைத்
தீவிரமாக எதிர்த்து வருகிறது. தன்னை மார்க்சிய
லெனினியக் கட்சி என்று உரிமை கோரும்
இக்கட்சி, உண்மையில் ஒரு தீவிர திராவிடக்
கட்சி ஆகும் (radical Drvidian party).கிராம்சியக்
கோட்பாடுகளை நடைமுறைப் படுத்தும் இக்கட்சி
மார்க்சிய லெனினியக் கட்சி என்று அறியப் படாமல்,
தனது கலை இலக்கிய அமைப்பின் பெயராலேயே
ஆரியப் படுகிறது. கால்டுவெல் பாதிரியார் முதல்
பழ கருப்பையா வரை இக்கட்சியின் ஆதர்சங்கள்.

மக்களின் பின்தங்கிய உணர்வு நிலைக்கு வால்
பிடிக்கும் இக்கட்சி அணுஉலைகளை எதிர்க்கிறது.
இக்கட்சியும் மார்க்சிய லெனினிய அடிப்படைகளில்
இருந்து அணுஉலைகள் பற்றிய பார்வையைத்
தருவிக்கவில்லை.

ஏனைய அடையாள அரசியல் கட்சி எதற்கும்
பொருளியல் கொள்கைகளே கிடையாது
என்னும்போது அவற்றின் அணுஉலை ஆதரவு
அல்லது எதிர்ப்பு என்பது ஒரு பொருட்டல்ல.

எஞ்சி நிற்பவர்கள் குட்டி முதலாளித்துவர்களும்,
லிபரல் பூர்ஷ்வாக்களுமே ஆவர். அவர்களின்
கருத்துக்கள் கணக்கில் கொள்ளத்  தக்கவை அல்ல.

ஆக மொத்தத்தில், அணுஉலைகள் பற்றிய மார்க்சிய
லெனினியக் கோட்பாடு மட்டுமே களத்தில்
எஞ்சி நிற்கிறது. அது அணுஉலைகளை உறுதியாக
ஆதரிக்கிறது.

இக்கட்டுரை ஒரு கோட்பாட்டுப் பிரச்சினையை
கோட்பாட்டு ரீதியாக அணுகுகிறது. இக்கட்டுரை
அணுஉலை எதிர்ப்பு என்பது மார்க்சிய நிலைபாடல்ல
என்பதை நிரூபிக்கிறது.
******************************************************************* 
                             


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக