செவ்வாய், 18 அக்டோபர், 2016

(16) ரங்கநாயகம்மாவின் போதாமை!
ரங்கநாயகம்மா நூல் திறனாய்வு!
அம்பேத்காரியம், மார்க்சியம் என்ன வேறுபாடு?
புண்ணுக்குப் புனுகு தடவும் தீர்வுகள்!
--------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
--------------------------------------------------------------------------------------
வருணம் சாதி குறித்த அம்பேத்காரின் ஆய்வு
முடிவுகளில் சரி-தவறு இருக்கலாம். அது ஒரு
பொருட்டல்ல. பின், எது பொருட்டு என்றால்,
அம்பேத்கார் முன்வைத்த அரசியல் தீர்வுகள்தான்.

தலித் முன்னேற்றம், விடுதலை  உள்ளிட்ட
அனைத்துக்கும்  சட்டமன்ற நாடாளுமன்ற
அதிகாரத்தைப் பெறுவதையே ஒரே தீர்வாக
முன்வைத்தார் அம்பேத்கார். எம்.எல்.ஏ ஆவது,
எம்.பி.ஆவது, நீதிபதிகள் ஆவது, அமைச்சர்கள் ஆவது,
அரசாங்கப் பதவிகள் பெறுவது என்று இவ்வாறாக
அவர் முன்வைத்த தீர்வுகள் எல்லாமே, நிலவுகிற
அரசமைப்பைத் தக்க வைப்பது என்ற
குறிக்கோளைக் கொண்டவை. அவர் பெற்றுத்
தந்த இடஒதுக்கீடும், பூனா ஒப்பந்தத்தில் முடிந்த
அவரின் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையும்
இந்தக் குறிக்கோளை அடைவதற்கான வழிகளே.

இந்த நிலைபாட்டில் நின்று கொண்டுதான்,
அம்பத்கார் அரசமைப்புச் சட்டத்தை எழுதினார்.
காங்கிரஸ் அமைச்சரவையில் இரண்டு முறை
பங்கேற்றார்.

புண்ணுக்குப் புனுகு தடவும் தீர்வுகள்!
--------------------------------------------------------------------
அரசு எந்திரத்தின் பிரிக்க முடியாத பகுதியாக
தலித்துகளை ஆக்குவது ஒன்றே அவர் முன்வைத்த
தீர்வு. இது இயல்பாகவே வர்க்கப் போராட்டத்துக்கு
முற்றிலும் எதிரானது. சமூக மாற்றத்திற்கு எதிரானது.
மார்க்சியத்திற்கு அதன் ஒவ்வொரு அம்சத்திலும்
நேர் எதிரானது.

அரசாங்கப் பதவிகளைப் பெறுவதும், ஜனாதிபதி
முதல்வர் பதவிகளை பெறுவதும் கூட தலித்
விடுதலையைப் பெற்றுத் தராது என்பது வரலாற்றில்
ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப் பட்ட ஒன்று.

ஜோதிபாசு முதல்வராகி விட்டதால், மேற்கு வங்கத்தில்
பாட்டாளி வர்க்கம் விடுதலை அடைந்து விடவில்லை.
உ.பி.யில் மாயாவதி முதல்வராகி விட்டதால், தலித்துகள்
விடுதலை அடைந்து விடவில்லை. இவை எல்லாம்
புண்ணுக்குப் புனுகு தடவும் தீர்வுகள்.

அரசு பற்றிய மார்க்சிய போதனை!
----------------------------------------------------------------
"அரசு என்பது உலர்ந்து உதிர்ந்து விடும்"
(The state will wither away) என்றார் எங்கல்ஸ்.

"அரசு எந்திரம் தகர்க்கப் பட வேண்டும்"
(The state machinery should be destroyed) என்றார் லெனின்.
லெனினின் மேற்கூறிய வாக்கியத்தின் மூலம்,
மார்க்சியமானது ஆகச் சிறந்த ஒரு முன்னடியை
எடுத்து வைக்கிறது. அரசு பற்றிய மார்க்சிய
போதனையில் லெனினின் கூற்று மிகவும்
அடிப்படையானது.

அரசு பற்றிய பார்வையில் மார்க்சியத்துடன்
அம்பேத்கார் கடுமையாக முரண்படுகிறார்.
வர்க்கப் போராட்டத்தை அம்பேத்கார் ஏற்கவோ
அங்கீகரிக்கவோ இல்லை. நாடாளுமன்றத்திற்குப்
புறம்பான (extra parliamentary) போராட்டங்களை அவர்
கருத்தில் கொள்ளவில்லை. அவர் சட்ட அமைச்சராக
இருந்தபோதுதான், 1948இல் மகத்தான தெலுங்கானா
விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம்
நடைபெற்றது. அவரது சக அமைச்சரான வல்லபாய்
பட்டேல்தான் ராணுவத்தை அனுப்பி, தெலுங்கானா
எழுச்சியை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

சித்திரவதை செய்து கொல்லப்பட்ட எளிய விவசாயிகளில்
பலர் தலித்துகளும் பழங்குடிகளும் ஆவர். பாலியல்
வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பல பெண்கள்
பழங்குடி இனப் பெண்களே. எனினும் இவை
அம்பேத்காரிடம் சிறிதளவு அசைவைக் கூட
ஏற்படுத்தவில்லை.

நடுத்தர வர்க்கத் தத்துவம்!
--------------------------------------------------
மார்க்சியம் என்பது பாட்டாளி வர்க்கத் தத்துவம்.
அம்பேத்காரியம் என்பது நடுத்தர வர்க்கத் தத்துவம்.
அதிலும் நடுத்தர வர்க்கத்தின் முன்னேறிய
பகுதியினருக்கான (cream of the middle class) தத்துவம். 

கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகிய மூன்று
தளங்களிலும் செயல்படும் இடஒதுக்கீடு காரணமாக
மற்ற சாதியில் உள்ளது போல, தலித்துகள் மத்தியிலும்
ஒரு வலுவான நடுத்தர வர்க்கம் உருவாகி  இருக்கிறது.
இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் அம்பேத்கார்
என்பது வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒன்று.
அதற்கு முன்பு, அண்மைக்கால இந்திய வரலாற்றில்,
தலித்துகள் மத்தியில் நடுத்தர வர்க்கம் என்ற ஒரு
வர்க்கப் பிரிவே கிடையாது என்ற உண்மையை
உணர்ந்த யாருக்கும் அம்பேத்காரின் சாதனையின்
மகத்துவம் புரியும்.

அம்பேத்காரை பின்வருமாறு மதிப்பிட்டார் ராகுல
சாங்கிருத்தியாயன். (இவர் புத்த மதத் துறவியாக
இருந்து மார்க்சியவாதியாக மாறியவர்; அம்பேத்காரின்
சமகாலத்தவர்).

"அம்பேத்காரின் குறைந்த பட்ச லட்சியமும்,
அதிகபட்ச லட்சியமும் இதுதான்: மற்ற சாதிகளில்
உள்ளது போல, தலித்துகள் மத்தியிலும் ஒரு
நடுத்தர வர்க்கத்தை உருவாக்க வேண்டும்
என்பதுதான்".

ஏகாதிபத்திய எதிர்ப்பில் வெறுமை!
----------------------------------------------------------------
இந்த லட்சியத்தை அடைய,  தம் அரசியல் வாழ்வு
முழுவதும்  பாடுபட்டார் அம்பேத்கார்.பிரிட்டிஷ்
அரசுடன் ஒத்திசைவான அணுகுமுறையைக்
கடைப்பிடிப்பதன் மூலமே இந்த லட்சியத்தை
அடைய இயலும் என்று கணித்த அம்பேத்கார்,
காலம் முழுவதும் ஏகாதிபத்திய ஆதரவு நிலையை
எடுத்தார்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய அன்றைய
மதராஸ் மாகாணத்தில், ஈ வெ ரா பெரியார், பிற்படுத்தப்
பட்ட இடைநிலைச் சாதிகளுக்கும் இடஒதுக்கீடு
மூலம் அரசின் ஆளுகையில் பங்கு பெற்றுத் தந்தார்.
அவரும் பல்வேறு சூழல்களில் பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்ட போதிலும்,
தேவையான நேரங்களில் உறுதியான பிரிட்டிஷ்
எதிர்ப்பை மேற்கொண்டார். இதன் விளைவாக,
பலமுறை அவர் அரசால் சிறையில் அடைக்கப் பட்டார்.

ஏகாதிபத்தியத்தால்  அடிமைப் படுத்தப்பட்ட ஒரு நாட்டில்,
ஒரு தத்துவத்தையோ அல்லது அதை முன்மொழிந்த தலைவரையோ மதிப்பிடும்போது, ஏகாதிபத்திய
எதிர்ப்பில் அத்தத்துவத்தின் அல்லது தலைவரின்
பாத்திரம் என்பது உறுதியான இடம் வகிக்கிறது.
"அரசியலை ஆணையில் வை" என்பது மார்க்சியத்தின்
தாரக மந்திரம்.

சாதி ஒழிப்பு என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பில்
உள்ளடங்கியது. ஏனெனில் சாதிப் பிளவுகள் உள்ள
ஒரு நாட்டில், இந்தப் பிளவுகளைப் பயன்படுத்தி,
பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு, ஏகாதிபத்தியம்
தன் ஆட்சியை நீட்டித்துக் கொள்ளும்.

ரங்கநாயகம்மாவின் போதாமை!
--------------------------------------------------------------
இருப்பினும், தமது நூலில் ரங்கநாயகம்மா,
மேற்கூறிய மார்க்சிய அணுகுமுறைகளை முற்றாகப்
பயன்படுத்தி, அம்பேத்காரின் தீர்வுகளை
மதிப்பிடவில்லை. அம்பேத்கார் குறித்தும் அவரின்
தீர்வுகள் குறித்தும் ஒரு மென்மையான
அணுகுமுறையையே கையாண்டுள்ளார். மார்க்சிய
வரையறைக்கு உட்பட்டு, அம்பேத்காரின் தீர்வுகளை
மதிப்பிடுவதில் ரங்கநாயகம்மாவிடம் போதாமை
உள்ளது. அவரின் இந்தப் போதாமை நூலில்
துலக்கமாகத் தெரிகிறது.

சுருங்கக் கூறின், கடிது ஓச்சி மெல்ல எறிந்துள்ளார் ரங்கநாயகம்மா. கடிது எறிய அவரால் இயலவில்லை.

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். (குறள்)

இந்தியாவின் சாதிமைய அடையாள அரசியலின்
திருவுருவாக ஆக்கப் பட்டு விட்ட, அம்பேத்காரை
முற்ற  முழுக்க எவராலும் விமர்சனம் செய்து விட
முடியாது. இது புறச்சூழலின் நிர்ப்பந்தம். தனி
ஒருவராக நின்று, ரங்கநாயகம்மா  மட்டுமே,
இந்தப் புறச் சூழலை வெற்றி கண்டு விட இயலாது.
எனவே ரங்கநாயகம்மாவின் போதாமைக்குக்
காரணம், அவரின் அகநிலை சார்ந்த காரணிகள்
அல்ல.

இறுதியாக, பாசிச எதிர்ப்புக்காக பரந்துபட்ட
ஐக்கிய முன்னணி கட்ட வேண்டிய தேவை தற்போது
நிலவுகிறது என்றும், அந்த நோக்கத்திற்கு
ரங்கநாயகம்மாவின் நூல் துணை புரியுமா என்றும்
சிலர், குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்
சங்க அறிவுஜீவிகள் ஐயம் எழுப்புகின்றனர்.

இந்த ஐயம் நகைப்பிற்கு இடமானது. மார்க்சிஸ்ட்
கட்சியின் புகழ் மிக்க கோட்பாட்டுச் சிந்தனையாளர்களான பிரகாஷ் காரத்தும், சீதாராம் யெச்சூரியும் நடைபெற்று
வரும் பாஜகவின் ஆட்சி பாசிச ஆட்சி அல்ல என்று
தெளிவாக வரையறுத்துள்ளனர். அவர்களின்
கட்டுரைகள் ஆங்கில ஏடுகளில் வெளிவந்துள்ளன.
எனவே, மார்க்சிஸ்ட் கட்சியின் பார்வையில்,
பாசிசமே நிலவாத போது, பாசிச எதிர்ப்பு ஐக்கிய
முன்னணிக்குத் தேவையே இல்லை என்பதுதான்
காரத், யெச்சூரி இருவரின் கருத்துக்கள் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------
முற்றியது.
ரங்கநாயகம்மா நூல் திறனாய்வும், எமது திறனாய்வின்
மீதான விமர்சனங்களுக்கு எமது பதிலுரையும்
இத்துடன் முற்றியது.
****************************************************************
                     


      




   



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக