வியாழன், 6 அக்டோபர், 2016

ரோசா லக்சம்பர்க்!
காரல் மார்க்சின் மூலதனம் நூலைப் போன்று 
சிறந்த நூலைப் படைத்தவர்!
ராசாவும் சில சிந்தனைக் குள்ளர்களும்! 
----------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.  
----------------------------------------------------------------------------- 
ரோசா லக்சம்பர்க் ( 1879-1919 ) மகத்தான 
மார்க்சியச் சிந்தனையாளர். சர்வதேசக் கம்யூனிச 
இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர். இவர் ஒரு பெண்மணி. 

போலந்தில் பிறந்தவர்; ஜெர்மனியில் வாழ்ந்தவர்.
காரல் மார்க்சைப் போன்றே இவரும் ஒரு யூதர்.
மார்க்சைப் போன்றே இவரும்  டாக்டர் பட்டம் 
பெற்றவர். மார்க்ஸ் தத்துவத்தில், இவர் பொருளாதாரத்தில்.
ஜெர்மனி அரசு இவரைப் பல முறை சிறையில் 
தள்ளியது. ஜெர்மனி வலதுசாரிகள் 1919இல் 
இவரைப் படுகொலை செய்தனர்.  

இவர் பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.
அவற்றுள் இவரது மகத்தான படைப்பாகக் 
கருதப் படுவது, "மூலதனக் குவிப்பு"  என்ற நூல் 
( ACCUMULATION OF  CAPITAL).

மார்க்சின் மூலதனம் என்ற நூலைப் படிப்பது என்பது 
ரோசா லக்சம்பர்க்கின் மூலதனக் குவிப்பு என்ற 
நூலைப் படிக்காமல் முழுமை அடையாது.
மூலதனம் கற்கிற, கற்பிக்கிற தோழர்கள் 
இதை உணர்ந்து, ரோசா லக்சம்பர்க்கின்  
மூலதனக் குவிப்பு நூலையும் கற்பார்கள், 
கற்பிப்பார்கள் என்றே நான் கருதுகிறேன்.

ரோசா,  மார்க்சின் காலத்தவர் அல்ல. மார்க்ஸ் 
இறக்கும்போது இவர் பள்ளிச் சிறுமி. அதே நேரத்தில்,
இவர் லெனின் காலத்தவர். லெனினோடு இணைந்து 
சர்வதேசக் கம்யூனிஸ்ட் அகிலத்தின் வரைவு 
அறிக்கையைத் தயாரித்தவர். எனினும், இவரின் 
மூலதனக் குவிப்பு என்ற நூலின் கருத்துக்களை 
லெனினும் புகாரினும் ஏற்கவில்லை.

1913இல் இந்நூல்  பதிப்பிக்கப் பட்டது. இதன் ஆங்கில 
மொழிபெயர்ப்பு கன்னிமாரா,பிரிட்டிஷ் கவுன்சில் 
நூலகம் உள்ளிட்ட சில நூலகங்களில் கிடைக்கிறது. 
இந்நூல் மூன்று பாகங்களைக் கொண்டது.

மார்க்சுடன் முரண்படும் ரோசா 
-------------------------------------------------- 
இந்நூலில் மார்க்சுடன் முரண்படுகிறார் ரோசா.
குறிப்பாக, மூலதனம் நூலின் இரண்டாம் பாகத்தில் 
மார்க்ஸ் கூறியுள்ள மூலதனக் குவிப்பு என்ற 
கோட்பாட்டில் ரோசா கடுமையாக முரண்படுகிறார்.
மார்க்சின் இக்கோட்பாடு தவறு என்று தமது நூலில் 
நிரூபித்து உள்ளார் ரோசா.

உதாரணத்துக்குச் சில.
-----------------------------------------  
ரோசா லக்சம்பர்க் தமது நூலில் கூறுகிறார்:

"விரிவடைந்த மறு உற்பத்தியால், இறுதியில் 
  பயன் அடையப்போவது யார் என்ற பிரச்சினையை 
  மார்க்ஸ் வரைந்த மூலதனக் குவிப்பின் கணிதச் 
  சித்திரம் தீர்க்கவில்லை. இதை நாம் நமது நூலின் 
  முதல் பாகத்தில் உறுதிப் படுத்தி உள்ளோம்"
...... அத்தியாயம் :25,  விரிவடைந்த மறு உற்பத்தியின் 
       கணிதச் சித்திரத்தில் உள்ள முரண்பாடுகள் .......  
          (தமிழாக்கம்:   இக்கட்டுரை ஆசிரியர்)
  
"IN THE FIRST SECTION, WE ASCERTAINED THAT MARX's 
DIAGRAM OF ACCUMULATION DOES NOT SOLVE THE 
QUESTION OF WHO IS TO BENEFIT IN THE END BY 
ENLARGED REPRODUCTION"
 ............ CHAPTER; 25, CONTRADICTIONS WITHIN THE 
                                        DIAGRAM OF ENLARGED REPRODUCTION....... 

ரோசா லக்சம்பர்க் தமது நூலில் மேலும் கூறுகிறார்:

" விரிவடைந்த மறு உற்பத்தி குறித்த மார்க்சின்
   கணிதச் சித்திரம் மெய்யானதும் வரலாற்று 
   வழிப்பட்டதுமான  மூலதனக் குவிப்பை 
   விளக்கவில்லை. இச்சித்திரத்தின் செயற்கையான 
    கற்பிதங்களே இதற்குக் காரணம் ".

            .... அத்தியாயம்:26
                 மூலதனத்தின் மறு உற்பத்தியும் அதன் 
                 சமூகப் பிடிமானமும்.....
                     (தமிழாக்கம்: இக்கட்டுரை ஆசிரியர்......

"MARX's DIAGRAM OF ENLARGED REPRODUCTION 
CANNOT EXPLAIN THE ACTUAL AND HISTORICAL 
PROCESS OF ACCUMULATION. AND WHY?  BECAUSE 
OF THE VERY PREMISES OF THE DIAGRAM".
.................... CHAPTER :26     
                         THE REPRODUCTION OF CAPITAL 
                          AND ITS SOCIAL SETTING.............. 
                       
மேலும் பலவற்றைக் கூறலாம். ஓர் மாதிரிக்காக 
மட்டுமே இவை கூறப்பட்டன. வாசகர்கள் 
முழு நூலையும் படிக்க வேண்டும்.

இன்று, உலகமயமாக்கல் சூழலில், ரோசா லக்சம்பர்க்கின் 
கருத்துக்களே பாட்டாளி வர்க்கத்தின் சிக்கல்களுக்குத் 
தீர்வாக அமைகின்றன என்று மார்க்சியப் பொருளாதார 
நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இன்று, உலகமயம் ஆக்கலும் மூலதனக் குவிப்பும் 
ரோசா லக்சம்பர்க் கணித்தபடிதான் நிகழ்கின்றனவே 
தவிர, மார்க்ஸ் கணித்தபடி அல்ல என்று மார்க்சியப் 
பொருளாதார நிபுணர்கள் மேலும் கருதுகிறார்கள். 

மேற்கூறிய வாக்கியம் மார்க்சின் மரியாதையைக் 
குறைத்து விடுகிறது என்று எவரேனும் கருதினால்.
அவர் ஒரு சிந்தனைக் குள்ளர் என்பது நிரூபிக்கப் 
படுகிறது.

மார்க்சியத்தைக் கற்பது இன்று, குறிப்பாக 
இந்த மில்லேனியத்தின் பின், உலகெங்கும் 
வெகு வேகமாகப் பெருகி வருகிறது. கம்யூனிஸ்ட் 
கட்சி உறுப்பினர்களால் மட்டுமே படிக்கப் பட்ட 
மார்க்சிய இலக்கியங்கள் இன்று கட்சிக்கு 
அப்பாலும் அனைவராலும் படிக்கப் படுகின்றன.

அதன் ஒரு கூறாகவே, ரோசா லக்சம்பர்க் படிக்கப் 
படுகிறார்; அவரின் கருத்துக்கள் மார்க்சுடன்
ஒப்பிடப் படுகின்றன. மார்க்சியம் கற்பது இன்று 
உலகளாவிய ஒரு நிகழ்வாக (trend) ஆகிப் போனது.
------------------------------------------------------------------------------------------------------ 
  ************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக