செவ்வாய், 11 அக்டோபர், 2016

அம்மண ஊரில் கோவணம் கட்டித் திரியும்
ரங்கநாயகம்மா!
"சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு......."
என்ற நூலின் திறனாய்வு!
நூல் மீதான விமர்சனங்களை ஆராயும் பகுதி!
--------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------------------------
ரங்கநாயகம்மாவின் நூல் குறித்த எமது திறனாய்வைப்
படித்தபின் தொடர்பு கொண்ட பல வாசகர்கள்,
ஒருசேர வெளிப்படுத்தியது ஆச்சரியம்தான்.

1) ஆரியப் படையெடுப்பை அம்பேத்கார் மறுக்கிறாரா,
உண்மைதானா?
2) ஆரிய திராவிடப் போர் என்பதெல்லாம் கட்டுக்கதைதானா?
3) சூத்திரர்களும் ஆரியர்களே என்று அம்பேத்கார் சொல்வது
உண்மைதானா?

4) விஜயதசமியை ஒரு நல்ல நாளாகக் கருதி, அன்றுதான்
பௌத்தத்திற்கு மதம் மாறினாரா அம்பேத்கார்?
5) மனிதனுக்கு மதம் வேண்டும் என்று அம்பேத்கார்
வலியுறுத்துகிறாரா? அப்படியானால் அவரும் ஒரு 
மதவாதிதானா?

6) மநுவின் காலத்தில் தீண்டாமை இல்லை என்றும்
மநு தீண்டாமையைச் சட்டம் ஆக்கவில்லை என்றும்
அம்பேத்கார் கூறுவது உண்மையா?

7) அப்படியானால், அம்பேத்காரை ஒரு இந்துத்துவர்
என்று பாஜகவினர் வர்ணித்தது உண்மைதானா?
அம்பேத்கார் ஒரு இந்துத்துவர்தானா?

இவ்வாறு கேள்விகள் நீண்டு கொண்டே சொல்கின்றன.
இந்தக் கேள்விகள் எல்லாம் உணர்த்துவது ஒன்றுதான்.
அம்பேத்கார் என்று இவர்கள் உணர்ந்திருக்கும்
பிம்பத்திற்கும்  மெய்யான அம்பேத்காருக்கும் இடையில்
ஒரு பெர்லின் சுவர் இருக்கிறது என்பதுதான்.

இவர்கள் அனைவருக்கும் நாம் கூறிய பதில்
இதுதான்:- "ரங்கநாயகம்மாவின் நூலைப்
படிக்காதீர்கள். முதலில் அம்பேத்காரின்
எழுத்துக்களைப் படியுங்கள்".

ஆரிய திராவிடப் பகைமை என்ற அடித்தளத்தின்
மீதுதான் பெரியாரியமும் திராவிட இயக்கமும்
கட்டப் பட்டுள்ளன. ஆரிய திராவிடப் போர் என்பதே
மோசடி என்று அம்பேத்கார் கூறுகிறாரே!
விஜயதசமி  என்பதை புனித நாளாகக் கருதினாரே
அம்பேத்கார்!

ஆனால், விஜயதசமி, சரஸ்வதி பூஜை
என்பதையெல்லாம் மலத்துக்குச் சமமாகக்
கருதியவர் பெரியார். இருவரின் தத்துவங்களும்
எலியும் தவளையாக இருக்கும்போது, இருவரின்
பெயரிலான படிப்பு வட்டங்களின் தர்க்கப் பொருத்தமும்
அரசியல் பொருத்தமும் அடிபட்டு விடுகிறதே
என்று பல வாசகர்கள் கேள்வி எழுப்பினர்.

ஜார்-லெனின் படிப்பு வட்டம் என்று யாராவது
ஆரம்பித்தால் அது எவ்வளவு அபத்தமோ, அதைப்
போன்றதுதான் இதுவும்! அடையாள அரசியல்
புதைச் சேற்றில் சிக்கினால், இது போன்ற ஆயிரம்
அபத்தங்களை எதிர்கொள்ள  நேரும்.    

இதற்கு நாம் அளித்த பதில் இதுதான்: "இன்றைய
தேவை மார்க்சியப் படிப்பு வட்டம்தான். எனவே
ஐ.ஐ.டி. முதல் ஆரம்பப் பள்ளி வரை மார்க்சியப்
படிப்பு வட்டத்தை ஆரம்பியுங்கள்; மார்க்சியத்தைப்
பயிலுங்கள்".

ஆளும் வர்க்கத் தலைவர்களை மார்க்சிய
அடிப்படையில் மதிப்பிடுவதும், அவர்களின் மெய்யான
பங்கை அங்கீகரிப்பதும் அவசியம். காந்தி, பெரியார்,
அம்பேத்கார் என்று அனைவரையும் மார்க்சிய
வெளிச்சத்தில்  மதிப்பிடுவதும், அவர்களின்
சீர்திருத்தங்களை அங்கீகரிப்பதுமே மார்க்சியம்.

அந்த வகையில் அம்பேத்கார் ஒரு மகத்தான
சீர்திருத்தவாதி என்பதை மார்க்சியம்
அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில், சீர்திருத்தங்கள்
விடுதலையைப் பெற்றுத் தராது சமூக மாற்றத்திற்கும்,
சாதி உள்ளிட்ட சகல விதமான சமூக ஒடுக்குமுறைகளில்
இருந்தும் மக்களை விடுவிக்க வல்லது மார்க்சியம்
மட்டுமே என்ற ஒப்பற்ற உண்மையைப்
புறந்தள்ளுவோர் மக்கள் விரோதிகளே.

ரங்கநாயகம்மாவின் நூலை ஒரே வரியில்
வர்ணிப்பதானால் இப்படிக் கூறலாம்:
அடையாள அரசியலின் இடத்தில், மார்க்சியத்தை
வைக்கும் ஒரு நூல். மார்க்சியத்திற்குப் பதில்
அடையாள அரசியலைப் பரிந்துரைக்கும்
பிழைப்புவாதக் கனவான்களே இந்த நூலை
எதிர்க்கிறார்கள்.

அதனால்தான், அடையாள அரசியல் மூலம்
பிழைப்பு நடத்துபவர்கள் அடிவயிற்றில் குத்துப்
பட்டது போல அலறுகிறார்கள்.
----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: நமது கவனத்திற்கு வந்த விமர்சனங்கள்
வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றுக்குப்
பதில் தரப்படும்.
*********************************************************************** 

"ராமாயணம் விஷ விருட்சம்" என்ற நூலையும்
ரங்கநாயகம்மா எழுதி இருக்கிறார்.  விஷ விருட்சம்
என்றால் நச்சு மரம் என்று பொருள். இது தெலுங்கில்
எழுதப் பட்டுள்ளது. என்.டி. ராமராவ் தெலுங்கு தேசம்
என்ற கட்சியை ஆரம்பித்து, உடனே ஆட்சியைப்
பிடித்தவர். அதற்கு மூல காரணம் ராமராவிற்கு
உள்ள மக்கள் செல்வாக்கு. அவரை கடவுள் ராமனாகவே
மக்கள் கருதினார்கள்.
**
ராமபக்தி மிக அதிகமாக உள்ள ஆந்திராவில்,
ராமாயணம் ஒரு விஷ விருட்சம் என்று துணிச்சலுடன்
நூல் எழுதியவர் ரங்கநாயகம்மா (தற்போது வயது: 78). 


  

  

  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக