வெள்ளி, 14 அக்டோபர், 2016

மார்க்ஸாலஜிஸ்டுகளைக் கம்யூனிஸ்ட் கட்சிகளால்
கட்டுப் படுத்த முடியுமா? முடியாது!
மார்க்சிஸ்டு மற்றும் மார்க்ஸாலஜிஸ்ட் வேறுபாடு!
மார்க்சிய அறிஞர்கள் எங்கிருந்து தோன்றுகிறார்கள்?
கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் சிந்தனைக்கு!
------------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------
மார்க்சியம் கற்பது என்பது கட்சியைச் சார்ந்து
இருந்தது. மார்க்சியத்தைக் கற்பிப்பது என்பது
கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோகமாக இருந்தது.
மார்க்சிய மூல நூல்கள் அனைவரும் படித்துப்
புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. எனவே
மார்க்சிய அடிப்படைகளை விளக்கி, கம்யூனிஸ்ட்
தலைவர்கள் மிகவும் எளிமையாகப் பல நூல்களை
எழுதினர். சிங்காரவேலர் தொட்டு பல மூத்த
தலைவர்கள் தமிழில் நூல்களை எழுதினர்.

தமிழில் மட்டுமல்ல, இப்போக்கு உலகளாவியதாக
இருந்தது. ஐரோப்பிய நாடுகளில், ஜார்ஜ் புலிட்சர்,
மோரிஸ் கான்பிரெத் ஆகியோர் மார்க்சிய
அடிப்படைகளை விளக்கி நூல்கள் எழுதினார். அவை
உலக மொழிகளில், தமிழிலும், மொழிபெயர்க்கப்
பட்டு, பரவலாகப் படிக்கப் பட்டன. ஜெர்மனியில்
தோழர் லீப்னஹெட் எழுதிய "சிலந்தியும் ஈயும்"
என்ற சிறு நூல், படிப்பறிவு இல்லாத
தொழிலாளர்களுக்கும் மார்க்சியத்தைப் புரிய
வைத்தது.

இந்த மில்லேனியத்தில், நடப்பு நூற்றாண்டில், முன்
எப்போதையும் விட மார்க்சியம் உலகெங்கும்
கற்கப் படுகிறது. எனினும் மார்க்சியம் கற்பதற்கு
கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்திருக்கும் போக்கு
வெகுவாக மாறிவிட்டது.

எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையும் சாராமல், எந்தக்
கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினர் ஆகாமல்,
மார்க்சியத்தைக் கற்றுத் தேர்ந்த பலர் உலகின்
பல நாடுகளில் உருவாகி உள்ளனர்.

இவர்களை  மார்க்சிஸ்டுகள் என்று அழைக்க முடியாது.
1848இல் மார்க்ஸும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட்
அறிக்கையைப் பின்பற்றி, தங்கள் சொந்த நாட்டின்
பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்றவாறு,
கட்சித் திட்டத்தை (party programme) வகுத்து, அத்திட்டத்தின்
அடிப்படையில் வேலை செய்பவர்களே கம்யூனிஸ்டுகள்
அல்லது மார்க்சிஸ்டுகள் ஆவர். இதுதான் உலகம்
முழுவதும் உள்ள இலக்கணம்.

தற்போது, எந்தக் கட்சியிலும் இல்லாமல், கட்சித்
திட்டம் பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல்,
வெறுமனே மார்க்சியத்தைக் கற்று வைத்திருக்கும்
இவர்களை எப்படி அழைப்பது?

பரவலாக மார்க்சியம் கற்கப் படுதலின் விளைவாக,
மார்க்ஸாலஜி (Marxology) என்ற சொல் புதிய சொல்
உருவாக்கி புழக்கத்தில் உள்ளது. தொடர்ந்து,
மார்க்ஸாலஜிஸ்ட் (Marxologist) என்ற சொல்லும்
புழக்கத்தில் வந்துள்ளது.

எனவே, கட்சி சாராமல் மார்க்சியம் கற்ற அனைவரும்
மார்க்ஸாலஜிஸ்ட்கள் என்று அழைக்கப் பட வேண்டும்.
(இது குறித்து மார்க்சிய சிந்தனைப் பயிலகம் தனது
முந்திய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளது).

மார்க்ஸாலஜிஸ்ட்கள் மீது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு
எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. எவர் ஒருவரும்
மார்க்சியம் கற்பதை, கட்சிகள் வரவேற்க வேண்டும்.
அதற்குத் துணை நிற்க வேண்டும். அவ்வாறு மார்க்சியம்
கற்றவர்களைக் கட்சிக்குள் கொண்டு வர முயல வேண்டும்.

மார்க்ஸாலஜிஸ்டுகள் சிலரோ அல்லது பலரோ
கற்ற மார்க்சியத்திக் கேடாகப் பயன்படுத்தி,
மார்க்சிய எதிர்ப்பாளர்களாக மாறலாம்.
எதிர்ப்புரட்சிக்குத் துணை போகலாம். இதை
கட்சிகள் எதிர்கொள்ள வேண்டும். இல்லையேல்,
மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தை இழிவு
செய்யும் போக்கு தொடங்கி விடும்.

தமிழ்ச் சூழலில், எஸ்.வி.ராஜதுரை ஒரு மார்க்ஸாலஜிஸ்ட்
ஆவார். அதே நேரத்தில் அவர் எதிர்ப்புரட்சிக்குச்
சேவை செய்தவர் என்பதை மறந்து விடக் கூடாது.

மார்க்சிய அறிஞர்கள் கட்சியில் இருந்தே
தோன்றுகிறார்கள். கட்சிக்கு வெளியே
மார்க்ஸாலஜிஸ்ட்கள் தோன்றலாமே தவிர,
மார்க்சிய அறிஞர்கள் தோன்ற முடியாது, 

கம்யூனிஸ்டின் இலக்கணம்!
கம்யூனிஸ்ட் என்பவன் யார்?
-----------------------------------------------------
1848இல் மார்க்ஸும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட்
அறிக்கையைப் பின்பற்றி, தங்கள் சொந்த நாட்டின்
பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்றவாறு,
கட்சித் திட்டத்தை (party programme) வகுத்து, அத்திட்டத்தின்
அடிப்படையில் வேலை செய்பவர்களே கம்யூனிஸ்டுகள்
அல்லது மார்க்சிஸ்டுகள் ஆவர். இதுதான் உலகம்
முழுவதும் உள்ள இலக்கணம்.


யாரெல்லாம் கம்யூனிஸ்ட்கள் அல்ல?
-------------------------------------------------------------------
எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையும் சாராமல், எந்தக்
கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினர் ஆகாமல்,
மார்க்சியத்தைக் கற்றுத் தேர்ந்த பலர் உலகின்
பல நாடுகளில் உருவாகி உள்ளனர். இவர்கள்
கம்யூனிஸ்டுகள் (அல்லது மார்க்சிஸ்டுகள்) அல்ல.
இவர்கள் மார்க்ஸாலஜிஸ்ட்கள் (Marxologists) ஆவார்கள்.
இவர்களை உதிரிகள் என்று அழைக்கக் கூடாது.
இவர்கள் மார்க்ஸாலஜிஸ்டுகளே.
 
********************************************************************     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக