சனி, 8 அக்டோபர், 2016

கூடங்குளம் அணுஉலை:
காந்தி நேரு உயிருடன் இருந்தால் என்ன நடக்கும்?
--------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
--------------------------------------------------------------------------------------------
காந்தி இறந்தது 1948இல். அம்பேத்கார் இறந்தது 1956இல்.
நேரு இறந்தது 1964இல். இம்மூவரும் இப்போது உயிருடன்
இருந்தால், கூடங்குளம் அணுஉலை பற்றி இவர்களின் 
கருத்து என்னவாக இருக்கும்?

குட்டி முதலாளித்துவ நுனிப்புல்லர்கள் "இது ஒரு
கற்பனையான கேள்வி" என்று கடந்து போக
முயலலாம். என்றாலும் இந்தக் கேள்விக்கான
பதிலில் மூவரின் பொருளாதாரக் கோட்பாடுகள்
அடங்கி இருக்கின்றன. இத்தகைய கேள்விகள்
ஒரு வகையான "கற்பித்தல் முறை"யில் அடங்கும்..

மூன்று விதமான பொருளாதாரம்!
-----------------------------------------------------------------
காந்தி, அம்பேத்கார், நேரு மூவருமே அறிஞர்கள்.
இம்மூவரில் கறாரான, வரையறுக்கப்பட்ட
பொருளாதாரக் கோட்பாடுகளை உடையவர்
காந்தி. எனவே அவரின் கோட்பாடுகள் "காந்தியப்
பொருளாதாரம்" (Gandhian economy) என்ற வகைமைக்குள்
வருகின்றன.

நேரு, அம்பேத்கார் இருவரும் பொருளாதாரம் 
குறித்து சில கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
1) மையப்படுத்தப்பட்ட பெருந்தொழில்களை
இருவருமே ஆதரித்தனர்.
2) பெரிதும் நகர்மயமான பொருளாதாரத்தையே
(urbanised economy) இருவரும் ஆதரித்தனர்.
3) மார்க்சிய மொழியில் சொல்வதானால், உற்பத்திக்
கருவிகளின் (instruments of production) வளர்ச்சியை,
நவீனப் படுத்துதலை இருவருமே ஆதரித்தனர்.

நேருவின் பொருளாதாரம் "கலப்புப் பொருளாதாரம்"
(mixed economy) என ஊடகமொழியில் குறிப்பிடப்
படுகிறது. அதாவது முதலாளித்துவப் பொருளாதாரம்,
 சோஷலிஸப் பொருளாதாரம் ஆகிய இரண்டின்
கலப்பு என்று சொல்லப் படுகிறது. சோவியத் ஒன்றியம்
போன்ற சோஷலிச நாடுகளில் பின்பற்றப்படும்
ஐந்தாண்டுத் திட்டங்களைப் பின்பற்றி இந்தியாவிலும்
அதைச் செயல்படுத்தியவர் நேரு. திட்டமிட்ட
பொருளாதாரம் என்பது சோஷலிஸக்  கூறு.

உண்மையில் கலப்புப் பொருளாதாரம் என்பது
பித்தலாட்டமானது. பொதுத்துறையில் சில கனரகத்
தொழில்களைத் தொடங்குவது மட்டும் சோஷலிசம்
ஆகாது. அது அரசு முதலாளித்துவம். எனவே நேருவின்
பொருளாதாரம் உடைமை வர்க்கப் பொருளாதாரமே.
அது அப்பட்டமான முதலாளித்துவப் பொருளாதாரமே.
அதில் சோஷலிசக் கலப்பெல்லாம் கிடையாது.

அம்பேத்கார் நேருவின் பொருளாதாரத்தை
ஆதரித்தார். காந்தியின் கிராமியப் பொருளாதாரத்தை,
கைராட்டை போன்ற நவீனப் படுத்தப்படாத
உற்பத்திக் கருவிகளை  எள்ளி நகையாடினர்.
தொழிலாளிகள் கிராமங்களில் இருந்து இடம்
பெயர்ந்து நகரங்களில் குடியேற வேண்டும் என்றார்.

நேரு, அம்பேத்கார் இருவரையும் விட, திட்டவட்டமான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருந்தவர்
ராஜாஜி. அவரின் பொருளாதாரம் சுதந்திர பூர்ஷ்வா
வர்க்கத்தின் பொருளாதாரம் ஆகும் (pure capitalism).
தொழில் துறையில் அரசின் கட்டுப்பாட்டுக்கள்
அறவே இருக்கக் கூடாது என்பது ராஜாஜியின் கொள்கை.
அவரது சுதந்திராக் கட்சியும், "ஸ்வராஜ்யா"
ஆங்கில ஏடும் அவரின் கொள்கைகளைப்  பிரச்சாரம்
செய்தன.  

காந்தியப் பொருளாதாரம்!
-----------------------------------------------------
காந்தியப்  பொருளாதாரம் 1) முற்றிலும் கிராமியப்
பொருளாதாரம்,  2) மையப்படுத்தப் படாதது
மட்டுமல்ல, பரவலானது (highly decentralised),
3) உற்பத்திக் கருவிகளின் அசுரத் தனமான
வளர்ச்சியை எதிர்ப்பது. 4) பெருந்தொழில்களுக்கு
எதிரானது. 5) சுற்றுச் சூழலைப் பாழாக்காதது. 

வாசகர்கள் இங்கு ஒன்றைக் கவனத்தில் கொள்ள
வேண்டும். 1) காந்தியப் பொருளாதாரம் 2) நேரு,
அம்பேத்காரின் பொருளாதாரம், 3) ராஜாஜியின்
சுதந்திரப் பொருளாதாரம் ஆகிய அனைத்துமே
ஆளும் வர்க்க, உடைமை வர்க்கப் பொருளாதாரமே.
மூலதனத்தின் பக்கம் நிற்கும் பொருளாதாரமே.

காந்தியப்  பொருளாதாரமானது  காந்தியுடன்
பணியாற்றிய காந்தியப் பொருளாதார நிபுணர்
ஜே  சி குமரப்பா எழுதிய நூல்களில் உள்ளது.
அவரின் நூல்களை படிக்காத எவருடனும் காந்தியப்
பொருளாதாரம் பற்றி உரையாட முடியாது. அவரின்
நூலைப் படிப்பது இருக்கட்டும், அவரையே யாரென்று
தெரியாத ஒரு சமூகத்தில், காந்தியப்  பொருளாதாரம்
பற்றி யாருடன் உரையாடுவது?

மாவோவின் பொருளாதாரம்!
------------------------------------------------------
புரட்சிக்குப் பின், 1919 முதல் ரஷ்யாவில் மையப்
படுத்தப்பட்ட பெருந்தொழில்களைக் கொண்ட,
பொருளாதாரம் கட்டப் பட்டது. சீனாவில் மாவோ
இதற்கு நேர் எதிரான ஒரு பொருளாதாரக்
கொள்கையைக் கடைப்பிடித்தார். மாவோவின்
பொருளாதாரம் பரவலான ஒன்று (decentralised).
அது பெரிதும் கிராமம் சார்ந்தது. நகர்ப்புறப்
படிப்பாளிகள் அனைவரையும் கிராமங்களில்
சென்று பணியாற்ற மாவோ வலியுறுத்தினார்.

மாவோவைப் பின்பற்றியே, இந்திய நக்சல்பாரிக்
கட்சிகளில் 70களில், 80களில், கட்சி அணிகளை
கிராமங்களில் பணியாற்றுமாறு வலியுறுத்தினர்.

நிற்க. பல்வேறு பொருளாதாரக் கொள்கைகள்
குறித்து மிகவும் எளிமையாக, பெரிய எழுத்து
விக்கிரமாதித்தன் கதை போல, முன்பத்திகளில்
கூறப் பட்டுள்ளது. இப்போது இக்கட்டுரையின்
ஆரம்பத்தில் கூறப்பட்ட கேள்விக்கு வருவோம்.  

கூடங்குளம் அணுஉலை: ஆதரவும் எதிர்ப்பும்!
----------------------------------------------------------------------------------
மார்க்சியம் கூறும் "உற்பத்திக் கருவிகள்" என்ற
வகையினத்திற்கு வருவோம். உற்பத்திக் கருவிகள்
என்றால் என்ன? எவையெல்லாம் உற்பத்திக் 
கருவிகள்? கைராட்டை என்பது உற்பத்திக் 
கருவிதான். கம்ப்யூட்டரும் உற்பத்திக் கருவிதான்.
அணுஉலையும் உற்பத்திக் கருவிதான்.

உற்பத்திக்  கருவிகள் தொடர்ந்து நவீனம் அடைவதும்
வளர்ச்சி அடைவதும் ஒரு பொருளாதாரத்திற்குத்
தேவை. அணுஉலை என்பது அதிநவீன (highly sophisticated)
உற்பத்திக் கருவி ஆகும்.

இப்போது சொல்லுங்கள்; காந்தி, நேரு, அம்பேத்கார்
மூவரும் கூடங்குளம் அணுஉலையை எப்படி
அணுகுவார்கள்?

நேருவும் அம்பேத்காரும் கூடங்குளம் அணுஉலையைத்
தீவிரமாக ஆதரிப்பார்கள். காந்தி கடுமையாக
எதிர்ப்பார். அநேகமாக கூடங்குளத்துக்கே வந்து
உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விடுவார்.
**********************************************************************   

அணுஉலைகள் குறித்த மார்க்சிய நிலைபாடு என்ன?
அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!
       


 
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக