புதன், 5 அக்டோபர், 2016

(13) கட்டுரையின் இறுதிப்  பகுதி!
ரங்கநாயகம்மா நூல் திறனாய்வு!
மனிதனுக்கு மதம் தேவை என்கிறார் அம்பேத்கார்!
-----------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------------
மனிதனுக்கு மதம் தேவை என்கிறார் அம்பேத்கார்.
இந்தக் கருத்தில் முதலில் இருந்து கடைசி வரை
உறுதியாக இருந்தார். உலகம் முழுவதும் கோடிக்
கணக்கான மக்கள், முதலாளித்துவ நாடுகளிலும்
சரி, கம்யூனிச நாடுகளிலும் சரி,  மதத்தோடு
தங்களைப் பிணித்துக் கொள்ளாமல் வாழ்கிறார்கள்.
அவர்களில் ஒருவராக  இருக்க அம்பேத்காருக்கு
விருப்பம் இல்லை. மதம் இல்லாத வாழ்க்கையை
அவரால் கற்பனை செய்து பார்க்கவும் இயலவில்லை.

இதோ அம்பேத்கார் கூறுகிறார்:
----------------------------------------------------------
"மதம் என்பது மொழியைப் போன்று சமூகத் தன்மை
வாய்ந்ததாகும் என்பதுதான் சரியான கண்ணோட்டம்
ஆகும். ஏனென்றால் இவ்விரண்டும் சமூக வாழ்க்கைக்கு
அத்தியாவசியமானவை; தனிநபர் அதைப்
பெற்றிருக்க வேண்டும். அதில்லாமல் அவன்
சமுதாய வாழ்க்கையில் பங்கேற்க முடியாது."
( அம்பேத்கார் எழுத்தும் பேச்சும், தொகுதி-1, பக்-449)
(ரங்கநாயகம்மா  நூல், பக்-387)

அம்பேத்காரின் கூற்றைப் பரிசீலிப்போம்:
மதம், மொழி இரண்டுக்கும் சமூகத் தன்மை
இருப்பதாக அவர் கூறுவது உண்மையே. ஆனால்
மொழியின் சமூகத் தன்மை மெய்யானது;
உள்ளார்ந்தது (inherent); ஆழமானது. ஆனால் மதத்தின்
சமூகத் தன்மை மேலோட்டமானது. மதமற்ற
நிலைக்கும் சமூகத் தன்மை உண்டு. மதத்தில்
இருந்து நீங்கி, மதமற்ற நிலைக்கு மனித குலம்
மாறுமேயானால், அப்போதும் அது தன் சமூகத்
தன்மையை இழந்து விடாது. எனவே சமூகத்
தன்மை இருப்பதால் மனிதன் மதத்தைக்
கைவிடக் கூடாது என்ற அம்பேத்காரின் கருத்து
ஏற்கத்  தக்கதல்ல.

அம்பேத்காரின் இந்த வாதம் ஆபத்தானது. ஏனெனில்
சாதிக்கும் சமூகத் தன்மை உண்டு. சமூகத் தன்மை
இருப்பதால், சாதியையும் கைவிடக் கூடாது என்ற
இடத்துக்கே அது இட்டுச் செல்லும்.

அம்பேத்கார் புத்த மதத்திற்கு மாறினார். புத்த
மதமும் பிற மதங்களைப்  போன்றே மூட
நம்பிக்கைகள் நிறைந்த மதம்தான் என்கிறார்
ரங்கநாயகம்மா.(பக்கம்-399)

அம்பேத்கார் மதம் மாறிய 1956இலும் சரி, இன்றும் சரி,
புத்த மதமானது புத்தர் தோற்றுவித்த காலத்தில்
உள்ள புத்த மதமல்ல. அதில் உள்ள முற்போக்கான
கூறுகள் அனைத்தையும் இழந்து, சாரமற்ற
பிற்போக்கான ஒன்றாகவே அது இந்தியாவில்
உள்ளது. மேலும் இந்து மதத்தின் ஒரு கிளை
மதமாகவே புத்த மதம் இந்தியாவில் உள்ளது.

பௌத்தரான சிங்கள ராஜபக்சே திருப்பதிக்கு
வந்து வெங்கடேசப்  பெருமாளை வணங்கிச்
செல்கிறார். இன்னொரு பௌத்தரான சிங்கள
மைத்ரிபாலாவும் அதே போல அண்மையில் வந்து
வணங்கிச் சென்றார். எனவே புத்தர் இயற்றிய
புத்த மதம் எங்கே உள்ளது?

ஆக, அம்பேத்காரின் பௌத்த மத மாற்றம் எந்தப்
தீர்வையும் தரவில்லை.

நூல் முழுவதும், ரங்கநாயகம்மா  அம்பேத்காரின்
கோட்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு,
ஒவ்வொரு அத்தியாயத்திலும் பரிசீலிக்கிறார்.
அவற்றின் வெறுமையைச் சுட்டிக் காட்டுகிறார்.
சில இடங்களில் மென்மையாகவும் சில இடங்களில்
கடுமையாகவும் அம்பேத்காரை விமர்சிக்கும்
ரங்கநாயகம்ம, சில இடங்களில் மௌனமாகக்
கடந்து போய் விடுகிறார்.

பெரும் மேதாவிலாசத்தின் வெளிச்சத்தோடு இந்த
நூல் எழுதப் படவில்லை. சிக்கலானதும்
அழுத்தமானதுமான வாதங்கள் வைக்கப்
படவில்லை. புரிந்து கொள்ளக் கடினமானது
என்று ஒரு வாக்கியம் கூட இல்லை.

எளிய உண்மைகள் வைக்கப்பட்டுள்ளன. சராசரி
வாசகனை மனதில் கொண்டு, அவனைச்
சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்
நூல் எழுதப் பட்டுள்ளது.Small is beautiful!

"Greatest things in one's life are the simplest truths"  என்று ஓர்
ஆங்கிலப் பழமொழி உண்டு. அது போல
ரங்கநாயகம்மா முன்வைக்கிற விஷயங்கள்
எளியவைதான் என்றாலும் அவை மாபெரும்
உண்மைகள். இதுவே இந்த நூலின் வெற்றிக்கு
வழி வகுத்து இருக்கிறது.

அம்பேத்கார் பற்றிய மார்க்சிய மதிப்பீடு!
--------------------------------------------------------------------------
நூலின் இறுதியில், அப்படியானால் அம்பேத்கார் யார்
என்ற கேள்வியை எழுப்பி, "அவர் பாதை தவறிப் போன
ஒரு அறிவுஜீவி" என்று விடையளிக்கிறார்
ரங்கநாயகம்மா. அதாவது தலித் விடுதலைக்கான
பாதையில் பயணிக்க வேண்டிய அம்பேத்கார்,
பாதையைத் தவற விட்டு, ஆளும் வர்க்கப் பாதையில்
பயணம் செய்தவர் என்கிறார். இதை நூலாசிரியரின்
ஆதங்கம் என்று கொள்ளலாம். இது அம்பேத்கார்
பற்றிய மார்க்சிய மதிப்பீடு ஆகாது.

ஆயிரம் குறைகள் இருந்தாலும், அம்பேத்கார்
இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு மாபெரும்
சீர்திருத்தவாதி. (Greatest Reformist of India). மார்க்சியம்
முழுமையான சமூக மாற்றத்திற்கு நிற்கிறது.
என்றாலும் மார்க்சியம் சீர்திருத்தங்களை
எதிர்ப்பதில்லை.

சீர்திருத்தம் என்பது இருக்கும் அமைப்பை அப்படியே
தக்க வைத்துக் கொண்டு, அதில் சிற்சில
மாற்றங்களை, குறிப்பாக உடனடித் தேவைக்கான
மாற்றங்களைச் செய்வது. சீர்திருத்தவாதிகள் நிலவுகிற
சமூக அமைப்பை மாற்றுவதற்கு முயல்வதில்லை.

ஆனால் புரட்சி என்பது நிலவுகிற சமூக அமைப்பைத்
தகர்த்து, அதன் இடத்தில் புதியதொரு சமூக
அமைப்பைக் கட்டி எழுப்புவது. மார்க்சியத்தின்
நோக்கம் புரட்சியே. அதாவது சமூக மாற்றமே.

உலகெங்கும் உள்ள சீர்திருத்தவாதிகளைப் போலவே,
அம்பேத்காரும் நிலவுகிற சமூக அமைப்பைத்
தக்க வைத்துக் கொண்டே, அதில் சில
சீர்திருத்தங்களைச் செய்ய முயன்றவர். அதில்
வெற்றியும்  கண்டவர். இது மறுக்க முடியாத உண்மை.

அம்பேத்கார்  சமூக மாற்றத்திற்காக
நிற்கவில்லை. ஆனால் சமூக சீர்திருத்தத்திற்காக
நின்றார். ஆக, மார்க்சிய லெனினிய
அளவுகோலின் படி, அம்பேத்கார் ஒரு சீர்திருத்தவாதி.

"பாதை தவறிப்போன அறிவுஜீவி"  என்ற ஆதங்கத்தை
வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, "ஒரு மகத்தான
சீர்திருத்தவாதி" என்ற மார்க்சிய மதிப்பீட்டை
கடைசி வாக்கியமாக எழுதி இருந்தால் நூலின்
finishing நன்றாக இருந்திருக்கும்.

.....கட்டுரைத் தொடர் முற்றியது..............

கட்டுரை ஆக்கம்: பி இளங்கோ சுப்பிரமணியன்.
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
பதிப்புரிமை; ஆசிரியர்க்கு.

பின்குறிப்பு: இக்கட்டுரைத் தொடர், மேலும் சிறிது
விரிவடைந்து, பிரசுர வடிவில் வெளிவர உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
முற்றியது.
இத்தொடர் குறித்த காத்திரமான கருத்துச் செறிந்த
விமர்சனங்கள் இருப்பின், அவற்றுக்கு விடை
அளிக்கப் படும்.
**********************************************************************  









       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக