புதன், 12 அக்டோபர், 2016

எஸ் வி ராஜதுரை குறித்த சர்ச்சை!
எஸ்.வி.ராஜதுரையும் எஸ்.வி.சேகரும்!
எது சரியான மார்க்சிய நிலைபாடு?
எஸ்.வி.ஆர் ஒரு மார்க்ஸாலஜிஸ்ட் மட்டுமா? எதிர்ப்புரட்சியாளரும்கூட!
-----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------
மூத்த நூலாசிரியர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு
அண்மையில் தமுஎகச அமைப்பு விருது வழங்கி
உள்ளது. தமுஎகச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கம்) என்பது மார்க்சிஸ்டு கட்சியின்
எழுத்தாளர் அமைப்பு ஆகும். இது ஒரு வெகுஜன
அமைப்பே தவிர கட்சி அல்ல. முற்போக்கான
கலை இலக்கியப் பங்களிப்புக்காக எஸ்.வி.ஆருக்கு
வாழ்நாள் சாதனையாளர் விருது என்ற விருது
வழங்கப் பட்டதாகவும் மார்க்சிய அறிஞர் என்ற
புகழாரம் சூட்டப் பட்டதாகவும்  அறிகிறோம். 

எழுபதுகளின் இறுதிகளிலேயே மார்க்சிஸ்ட் கட்சியுடன்
தொடர்பைத் துண்டித்துக் கொண்டதால், தமுஎகச
போன்ற அமைப்புகளுடன் எனக்கு என்றுமே உறவோ
தொடர்போ இருந்ததில்லை. தொழிற்சங்கச்
செயல்பாடுகளில் கூட்டு இயக்கம் என்பது தவிர்க்க
இயலாதது என்பதால், CITU அமைப்புடன் மட்டும்
தொடர்பு உண்டு.

கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகள், கட்சியின்
வழிகாட்டுதல் படிதான் செயல்பட முடியுமே தவிர,
தனித்து இயங்க இயலாது. எனவே எஸ்.வி.ராஜதுரை
அவர்களுக்கு விருது வழங்கியதில் கட்சியின்
ஒப்புதல் முத்திரை இருக்கவே செய்யும் என்பது தெளிவு.

மார்க்சிஸ்டு கட்சியானது  புரட்சியின் எதிர்த் திசையில்
பயணம் செய்யத் தொடங்கி, வெகுதூரம் பயணித்து
விட்ட கட்சி. திரும்ப இயலா இடத்திற்கும் (point of no return)
சென்று விட்ட கட்சி. எனவே அவர்கள் எஸ்.வி.ஆருக்கும்
விருது கொடுப்பார்கள்; எஸ்.வி. சேகருக்கும் விருது
கொடுப்பார்கள். அது குறித்து அக்கறைப் படுவதில்
சமூக நலன் பெரிதாக எதுவும் இல்லை.

1977 தேர்தலில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில்
போட்டியிட்ட, அன்றைய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர்
தோழர் ஏ பி அவர்கள் ( ஏ பாலசுப்பிரமணியன்),
புரட்சித் தலைவரின் அன்புத்தம்பியாகிய தமக்கு
வாக்களிக்கும்படி சுவரொட்டிகள் மூலம் கோரினார்.
சுவரெழுத்துக்களில் புரட்சித் தலைவரின் அன்புத்
தம்பியாக மின்னினார். ராமச்சந்திர மேனனையே
புரட்சித் தலைவர் என்று அங்கீகரித்த பின்னால்,
எஸ்.வி.ஆரை மார்க்சியப் பேரறிஞர் என்று புகழாரம்
சூட்டுவதில் குறை காண என்ன இருக்கிறது?

இருப்பினும், எஸ்.வி.ஆர் குறித்த சர்ச்சை ஒரு
கோட்பாட்டுப் பிரச்சினையை எழுப்பி இருக்கிறது.
அதை முன்னிட்டே இக்கட்டுரை எழுதப் படுகிறது.

"எழுபதின் பத்தாண்டுகளை விடுதலையின்
பத்தாண்டுகளாக ஆக்குவோம்"  என்ற சாரு
மஜூம்தாரின் (இவர்தான் நக்சல்பாரி இயக்கத்தின்
நிறுவனத் தலைவர்; CPI ML கட்சியின் ஸ்தாபகத்
தலைவர்; எல்லா ML கட்சிகளுக்கும் மூலத் தந்தை)
அறைகூவலை ஏற்று, நாங்களெல்லாம் மார்க்சிஸ்டு
கட்சியில் இருந்து விலகி, நக்சல்பாரி இயக்கத்தில்
சேர்ந்தோம். நான் உட்படப் பலர் VM கட்சியில்
சேர்ந்தோம்.(VM = வினோத் மிஸ்ரா).

எங்கள் குழுவை வழி நடத்திய PR தோழர் சிவராம
கிருஷ்ணன் "அந்நியமாதல்" என்ற ஒரு புத்தகத்தைப்
படித்துக் கொண்டிருந்தார். PR என்பது முழுநேரத்
தொழில்முறைப் புரட்சியாளரைக் குறிக்கும்.
(PR = Professional Revolutionary). PR என்ற சொல் புகழாரம்
அல்ல; லெனின் வரையறுத்த சொல். தோழர் சிவராம
கிருஷ்ணன் பின்னாளில் லிபரேஷன் ஆங்கில
ஏட்டின் ஆசிரியரானார்.

திரிபுவாதக் கட்சிகளிலும் முழுநேர ஊழியர்கள் உண்டு.
அவர்களை யாரும் PR தோழர்கள் என்று
அழைப்பதில்லை. அவர்கள் FT என்றே அழைக்கப்
படுவார்கள் (FT =full timer) 

PR தோழரிடம் இருந்து "அந்நியமாதல்" நூலை வாங்கிப்
படித்தேன். அதை எழுதியவர் எஸ்.வி.ராஜதுரை (மனோ).
எஸ்.வி.ஆரின் இயற்பெயர் மனோகரன். அப்போதுதான்
முதன் முதலாக எஸ்.வி.ஆரைப் பற்றி அறிந்தேன்.
அவர் மக்கள் யுத்தக் குழுவைச் சேர்ந்தவர் (Peoples war group)
என்று PR தோழர் மூலமாக அறிந்து கொண்டேன்.

பின்னர், நாங்கள் எல்லாம்  மக்கள் யுத்தக் குழுவில்
பணியாற்றியபோது, எஸ்.வி.ஆர் அக்கட்சியில் இருந்து
விலகி இருந்தார். அவர் கட்சியின் முழுநேர ஊழியராகப்
பணியாற்றியதில்லை. வெகுஜன அமைப்பின் முழுநேர
ஊழியராக மட்டுமே பணியாற்றினார். கட்சி வேறு,
வெகுஜன அமைப்பு வேறு என்பதை வாசகர்கள்
கணக்கில் கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகபட்ச அந்தஸ்தே PM தான்.
(PM = Party Member). தோழர் எஸ்.வி.ஆர் PM அந்தஸ்தைப்
பெற்றிருந்தாரா என்பது பற்றி உறுதியாகக் கூற
என்னால் இயலவில்லை. அவர் CM அந்தஸ்தில்தான்
இருந்ததாக மூத்த தோழர் ஒருவர் கூறினார்.

இங்கு அந்தஸ்து முக்கியமில்லை. மக்கள் யுத்தக்
குழுவில் அவர் பணியாற்றியமைக்காக அவரை
வணங்குகிறேன். ஆனால் சிறிது காலம் மட்டுமே
ம.யு.வில் செயல்பட்ட அவர், தோழர் பாலன் கொல்லப்
பட்ட பிறகு, கட்சியை விட்டு வெளியேறினார்.

விலகிய உடனே, அவர் ரஜனி கோத்தாரியைச் சென்று
சந்தித்தார்; அவரின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்.
அவருடன் இணைந்து மார்க்சியத்தைச் சீர்குலைத்தார்.

எஸ்.வி.ஆர் என்றவுடன் ரஜனி கோத்தாரி என்ற
பெயரும் கூடவே நினைவுக்கு வரும். மார்க்சிய
லெனினியத்திற்கு எதிராகச் செயல்பட்ட,
எதிர்ப்புரட்சியாளர்களின் சித்தாந்தத் தந்தை
ரஜனி கோத்தாரி. பின்னர் ஏகாதிபத்தியத் தொண்டு
நிறுவனங்களின் (Imperialist funded Voluntary Organisations)
சர்வதேச வலைப்பின்னலுடன் எஸ்.வி.ஆருக்குத்
தொடர்பு ஏற்பட்டது. தொடர்ந்து விஷயங்கள்
அவற்றின் தர்க்க ரீதியான முடிவை (logical end)
அடைந்தன. பின்நவீனத்துவம், அடையாள அரசியல்
என்று ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டார்
எஸ்.வி.ஆர்.

ஏகாதிபத்திய நிதி உதவி பெறுகிறார் எஸ்.வி.ஆர்
என்று SOC தோழர்கள் நடத்தும் புதிய ஜனநாயகம்
ஏட்டிலும் வினவு தளத்திலும் ஆதாரத்துடன்
கட்டுரைகள் வெளியிடப் பட்டன. இந்த ஆதாரங்களை
மேற்கோள் காட்டி, எஸ்.வி.ஆரை விமர்சித்து,
தோழர் ஜெயமோகன் ( எழுத்தாளர், NFTE BSNL
தொழிற்சங்கத் தலைவர்) தமது வலைத் தளத்தில்
எழுதினார். அவர் மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்
போவதாக, எஸ்.வி.ஆர் மிரட்டினார். ஜெயமோகனும்
அதை எதிர்கொண்டார்.

எஸ்.வி.ஆருக்கு தமுஎகச தோழர்கள் விருது மற்றும்
புகழாரம் வழங்கியதன் மூலம், ஒரு கேள்விக்குப்
பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள். தமது
நீண்ட பயணத்தின் போது, சிறிது காலம் ம.யு.குழுவில்
இளைப்பாறியதைத் தவிர, அவரின் எஞ்சிய பயணம்
முழுவதும் எதிர்ப்புரட்சிகர வழியிலேயே இருந்துள்ளது.

எஸ்.வி.ஆர் மார்க்சியம் நன்கு கற்றவர்; எனவே அவர்
ஒரு மார்க்ஸாலஜிஸ்ட் (Marxologist). அதாவது தமிழில்
கூறினால், மார்க்சிய அறிஞர். ஆகவே அவரை
மார்க்சிய அறிஞர் என்று வரையறுக்கும்போது,
அவரின் எதிர்ப்புரட்சிகரச் செயல்பாடுகள் குறித்து
எவ்வித விமர்சனமும் இல்லாமல், வெறுமனே
மார்க்சிய அறிஞர் என்று குறிப்பிட்டு விட்டு நிறுத்திக்
கொள்வது சரியா? தமுஎகச இதற்குப் பதிலளிக்க
வேண்டும்.

முன்னெப்போதையும் விட, நமது சமகாலத்தில்
மார்க்சியம் அதிகமாகப் பயிலப் படுகிறது. கட்சிக்கு
அப்பாற்பட்டு மார்க்சியம் கற்போரின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டே போகிறது. இவ்வாறு
மார்க்சியம் கற்றலானது அதிகரித்துக் கொண்டே
போகும் சூழலில், மார்க்ஸாலஜி (Marxology) என்ற புதிய
சொல் உருவாகி விட்டது. கட்சி சாராமல் மார்க்சியம்
கற்ற அறிஞர்கள் மார்க்ஸாலஜிஸ்ட்கள் (Marxologists)
என்று அழைக்கப் படுகின்றனர். (இது குறித்து விரிவாக
அறிய, எமது முந்தைய கட்டுரையைப் படிக்கலாம்).

லெனினுக்கே மார்க்சியத்தைக் கற்றுக் கொடுத்த
பிளெக்கானவ், கட்சிப் பிளவின் போது, மென்ஷ்விக்
நிலை எடுத்தார். இருப்பினும் கடைசி வரை அவரை
லெனின் மதித்துப் போற்றினார். காரணம் பிளெக்கானவ்
எதிர்ப்புரட்சிக்கார நிலை எடுக்கவில்லை. ஆனால்
காரல் காட்ஸ்கியை லெனின் எதிர்ப்புரட்சியாளர்
என்றே மதிப்பிட்டார்.

லெனின் வழிகாட்டுதலையும் கணக்கில் எடுத்துக்
கொண்டு, எஸ்.வி.ஆரை மதிப்பிடுகையில், அவர்
மார்க்ஸாலஜிஸ்ட்தான் (மார்க்சிய அறிஞர்) என்ற
போதிலும், தமது மார்க்சிய அறிவுடைமையை,
எதிர்ப்புரட்சிகர நோக்கத்திற்கு உணர்வுபூர்வமாகப்
பயன்படுத்தியவர் என்பதை எவராலும் மறுக்க
இயலாது.

இதுதான் எஸ்.வி.ஆர் குறித்த துல்லியமான
மார்க்சிய மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீடு
சரியானது என்று நிரூபித்துள்ளோம். QED.
******************************************************

     
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக