வெள்ளி, 8 டிசம்பர், 2017

வெண்ணெய் திரளும் நேரத்தில்
தாழியை உடைக்கும் பேதைமை!
-------------------------------------------------------------
1) விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்ப்பதால்
திமுகவுக்கு கடுமையான நஷ்டமே என்பது திமுகவில்
அனைவரின் கருத்தாக இருக்கிறது.இந்தக் கருத்து
சரிதான் என்பது போல அமைந்து விட்டது அண்மையில்
திருமாவளவன் பேசிய (அல்லது பேசியதாகக்
கூறப்படும்) பேச்சு.

2) திருமாவளவன் பேசியது சரியா தவறா என்று
எவரும் ஆராயப் போவதில்லை. ஒரு முக்கியமான
இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில் அவரின் பேச்சு
என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதுதான்
கவனத்துக்கு உரியது.

3) சரியான கருத்து, உண்மையான கருத்து என்றாலும்
பொதுவெளியில் இடம் பொருள் ஏவல் சந்தர்ப்பம்
சூழ்நிலை ஆகிய அனைத்தையும் அனுசரித்தே
பேச வேண்டும்.

4) நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை, இந்த அர்த்தத்தில்
பேசினேன் என்பதெல்லாம் எடுபடாது.

5) தேனிக்கூட்டில் கல்லெறிவது போல ஆகி விட்டது  திருமாவளவனின் பேச்சு.

6) திருமாவளவன் கடவுள் மறுப்பாளர் அல்ல. மத
நம்பிக்கை உடையவர்தான். மனித சமூகத்துக்கு
மதம் தேவை என்னும் அம்பேத்காரின் கொள்கையையே
திருமாவளவனும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

7) திமுகவும் கடவுள் மறுப்புக் கட்சி அல்ல. திமுகவின்
அத்தனை தலைவர்களும் பூஜை புனஸ்காரம் என்று
இறை வழிபாட்டின் உச்சம் தொட்டு நிற்பவர்கள்தான்.

8) இப்படியிருக்க,  காஞ்சி காமாட்சி கோவிலையும்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலையும் இடித்துத் தரை
மட்டமாக்க வேண்டும் என்ற பேச்சு பொறுப்பற்ற
பேச்சு மட்டுமல்ல சமூக அமைதியை, வகுப்பு
நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கம்
கொண்டதாகும்.

9) கோவில், தேவாலயம், மசூதி ஆகிய எல்லா
வழிபாட்டுத் தலங்களையும் இடிக்க வேண்டும்
என்று தீவிர கடவுள் மறுப்பாளர்கள் கூட என்றும்
பேசியதில்லை. அப்படிப் பேசும் உரிமை
தீவிர கடவுள் மறுப்பாளர்களுக்கு மட்டுமே உரியது.

10) கடவுள் மறுப்பாளர்கள் பேசத்தக்க பேச்சை
மத நம்பிக்கை உடையவர்கள் பேசுவது
மோசடித் தனமானது.

11) எது எப்படியோ, இதனால் ஏற்படும் பாதகங்கள்
திமுகவின் தலையில்தான் விடியும். இதன் உடனடிப்
பாதகத்தை அனுபவிக்கக் கூடிய இடத்தில்
அப்பாவி மருது கணேஷ் இருக்கிறார்.

12) வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழியை
உடைப்பது அறிவுடைமை ஆகாது. மருது
கணேஷுக்கு துரோகம் செய்வதை மன்னிக்க முடியாது.
*********************************************************
ஒரு கிறிஸ்துவராக இருந்த போதிலும், குஜராத்
பிரச்சாரத்தின்போது, கோவில் கோவிலாக ஏறி
இறங்குகிறார் ராகுல் காந்தி. தேர்தல் அரசியல்
என்பது அதற்கே உரிய விதிகளைக் கொண்டது.
இதை அறியாமல் நடந்து கொள்வது அபத்தம்.


டிசம்பர் 21ல் தேர்தல் என்பதை மறந்து விட்டுப்
பேசுவது தவறு.

மெத்தப் படித்த மணிசங்கர் அய்யர் நாக்குத்
தவறி மோடியை அவமதிக்கும் சொல்லைப்
பேசியதற்காக, அவரை கட்சியில் இருந்து
நீக்கியுள்ளார் ராகுல் காந்தி. தேர்தல் பிரச்சார
நேரம் என்பது கொந்தளிப்பான நேரம். மற்ற
நேரத்தில் பேசுவது வேறு; தேர்தல் நேரத்தில்
பேசுவது வேறு.  

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக