திங்கள், 18 டிசம்பர், 2017

குட்டி முதலாளித்துவ அபத்தங்கள் தவிடுபொடி!
குஜராத் தேர்தலின் படிப்பினை!
---------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------
வாஜ்பாய் பிரதமர் ஆவதற்கு முன்பு, காங்கிரஸ்
கட்சி இந்து எதிர்ப்புக் கட்சி என்று பெயர்
வாங்கவில்லை. அதன் பிறகு சோனியா
தலைமையில் காங்கிரஸ் இந்து எதிர்ப்புக்
கட்சி என்று பெயர் வாங்கியது. தொடர்ந்து
டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான
10 ஆண்டு ஐ மு கூ ஆட்சிக்குப் பிறகு,
காங்கிரஸ் கட்சியானது இந்துக்களுக்கு
எதிரான கட்சி என்று பெயர் வாங்கியது.
இந்து எதிர்ப்பு முத்திரை காங்கிரசின் மீது
அழுத்தமாக விழுந்தது.

இதன் விளைவாகவே 2014 தேர்தலில் காங்கிரஸ்
ஆட்சியை இழந்தது மட்டுமின்றி, அங்கீகரிக்கப்பட்ட
எதிர்க்கட்சியாகக்கூட வர இயலாத அளவுக்கு
பின்னடைந்தது.

தற்போது குஜராத் இமாச்சல வெற்றிக்குப் பின்னர்,
இந்தியாவில் 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ்
ஆட்சியில் உள்ளது. மாறாக பாஜக 19 மாநிலங்களில்
ஆட்சியில் இருக்கிறது.

2014 தோல்விக்குப் பின்னர், தோல்வியின்
காரணங்களை அறிய ஏ கே அந்தோணி
தலைமையில் ஒரு குழுவை
காங்கிரஸ் அமைத்தது. அக்குழு தனது
அறிக்கையை சோனியாவிடம் கொடுத்தது.
ஆனால் சோனியா அந்த அறிக்கையை இன்று
வரை வெளியிடவில்லை.

சிறுபான்மையினருக்குச் சார்பாக, காங்கிரஸ்
அதிக அளவில் பாரபட்சத்துடன் நடந்து
கொண்டதாலேயே காங்கிரஸ் தோல்வி
அடைந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

தற்போது ராகுல் காந்தி காங்கிரசின்
தலைவரானதைத் தொடர்ந்து, இதுநாள் வரை
கடைப்பிடித்து வந்த, சிறுபான்மைக்கு ஆதரவான
பாரபட்சமான போக்கை (minority biased) கைவிட
சோனியா முடிவு செய்தார். அதன் காரணமாகவே
தான் தீவிர அரசியலில் இல்லை என்று அறிவிக்கும்
விதமாக ராகுல் காந்தியைத் தலைவர் ஆக்கினார்.

தன மீதான கத்தோலிக்க கிறிஸ்துவ முத்திரை
ராகுல் காந்தி மீது விழுந்து விடக்கூடாது
என்பதற்காகவே ராகுல் காந்தியை கோவில்
கோவிலாகச் சென்று கும்பிட வைத்தார்.

இந்தப் புதிய அணுகுமுறை நிச்சயம் பலனைக்
கொடுத்துள்ளது. இதன் காரணமாகவே குஜராத்தில்
முன்பை விட, ஓரளவு அதிக இடங்களை
இம்முறை காங்கிரசால் பெற முடிந்தது.

25 ஆண்டுகளுக்கு முன், காங்கிரசை மென்மையான
இந்துத்துவக் கட்சி (soft Hinduthva) என்று அரசியல்
விமர்சகர்கள் வர்ணிப்பார்கள். இழந்து விட்ட
அந்தப் பெயரை மீண்டும் பெறுவதே காங்கிரசின்
தற்போதைய போர்த்தந்திரமாக (strategy) உள்ளது.

காங்கிரஸ் மட்டுமல்ல, பெரிதும் சிறுபான்மைச்
சார்பு பாரபட்சம் கொண்ட கட்சிகளும் கூட
தேர்தல்களில் தோல்வியையே தழுவி உள்ளன.
சிறந்த உதாரணம்: உபியில் துடைத்து
எறியப்பட்ட சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்
கட்சிகள்.

தேசிய அளவிலான இந்த நிலைப்பாட்டு
மாற்றத்தை (shift) தமிழ்நாட்டில் திமுகவும்
கணக்கில் கொண்டுள்ளது, திமுக இந்துக்களின்
கட்சி என்று ஸ்டாலின் அறிவிக்கிறார்.
இதுநாள்வரை ரகசியமாக சாமி கும்பிட்டு வந்த
திமுக தலைவர்கள் தற்போது மிகவும்
பகிரங்கமாக சாமி கும்பிட்டு வருவதை
மக்களுக்குத் தெரியப் படுத்துகிறார்கள்.
இதன் மூலம் திமுக இந்துக்களை எதிர்க்கும்
கட்சியல்ல என்ற செய்தியை திமுக
சொல்கிறது.

ஆக மொத்தத்தில் இந்துத்துவ எதிர்ப்பு என்பதை  
இந்தியாவின் எல்லாக்கட்சிகளும் கைவிடக் கூடிய
ஒரு சூழலில் நடப்பு அரசியல் உள்ளது. இதுவே
குஜராத் தேர்தலின் படிப்பினை.
************************************************************  

      

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக