குற்றவாளிக் கூண்டில்
வினோத் ராயை நிறுத்தும் 2G தீர்ப்பு!
------------------------------ ------------------------------ -----
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
newtonariviyalmantram@gmail.com
------------------------------ ------------------------------ ---
துணைக்கண்டம் மொத்தத்தின் கவனத்தையம் ஈர்த்த
2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு அண்மையில்
வெளியானது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும்
விடுவிக்கப் பட்டனர். அதே நேரத்தில் இந்த வழக்கின்
உண்மையான குற்றவாளி முன்னாள் தலைமைத்
தணிக்கை அதிகாரியான வினோத் ராயே என்பதையும்
தமது தீர்ப்பின் மூலம் அடையாளம் காட்டி இருக்கிறார்
நீதியரசர் ஓ பி ஷைனி.
அன்றைய அமைச்சர் ஆ ராசா 2008இல் மேற்கொண்ட
2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வருவாய் இழப்பு
பூஜ்யமே (zero loss) என்று தீர்ப்பு தெளிவுறுத்துகிறது.
வினோத் ராய் கூறிய ரூ 1,76,000 கோடி இழப்பு என்பது
முற்றிலும் கற்பிதமானதும் உண்மைக்கு நேர் எதிரானதும்
ஆகும் என்பதை தீர்ப்பு வெட்ட வெளிச்சம் ஆக்குகிறது.
தமக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தை
தீய உள்நோக்கத்துடன் (malafide intention) பயன்படுத்தி
மொத்த தேசத்தையும் தவறாக வழிநடத்தினார்
வினோத் ராய் என்பது தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டு
இருக்கிறது.
அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புடன் கூடிய, தந்தக்
கோபுரப் பதவியில் இருக்கும் ஒருவர் எவ்வளவு இழிந்த
பொய்யைக் கூறினாலும், அதை மொத்த தேசமும்
நம்பித் தொலைக்கும் என்ற அவலத்தை அலைக்கற்றை
வழக்கு புலப்படுத்துகிறது. இந்திய மக்களின் அறிவியல்
உளப்பாங்கு (scientific temper) அதள பாதாளத்தில்
இருக்கிறது என்பதே இதற்குக் காரணம்.
மக்களின் அறிவியல் உளப்பாங்கை
உயர்த்தாவிட்டால், எதிர்காலத்திலும் வினோத்ராய்கள்
தோன்றுவார்கள் என்ற அபாயத்தை மறுப்பதற்கில்லை.
எனவே அறிவியல் தொழில்நுட்பப் புரிதலுடன்
அலைக்கற்றை குறித்து அறிந்திடுவோம்.
அலைக்கற்றை என்பது என்ன?
------------------------------ ---------------------------
இந்தியாவில் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட
ஒரு விஷயம் உண்டென்றால் அது 2G அலைக்கற்றைதான்.
படித்தவர்கள் பாமரர்கள் அறிவுஜீவிகள் என்று
அனைவருமே அலைக்கற்றையை ஒரு விற்பனைப்
பண்டமாகவே (saleable commodity) பார்க்கின்றனர்.
ஆனால் அலைக்கற்றை என்பது ஒரு விற்பனைப்
பண்டம் அல்ல.
ஈர்ப்பு விசை போன்று மின்காந்த விசையும் நமது
பூமியில் மட்டுமின்றி இந்த பிரபஞ்சம் முழுவதும்
நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு விசையாகும். அண்ட
வெளியில் இருந்து பூமிக்கு மின்காந்த அலைகள்
வருகின்றன. நமது பூமியைச் சுற்றி ஒரு போர்வை போல
அமைந்திருக்கும் வளிமண்டலம் வழியாக
ஒளி விலகல், ஒளிச்சிதறல் போன்ற பல்வேறு
நிகழ்வுகளுக்கு உள்ளாகி இவை பூமிக்குள் வருகின்றன.
இந்த அலைகளை தக்க ஆன்டெனாக்கள் மூலம் பிடித்து
வைத்துக் கொண்டு மனிதகுலம் பயன்படுத்துகிறது
தொழிலாளர்கள் பலர் சேர்ந்து தங்களின் உழைப்புச்
சக்தியைச் செலவிட்டு, குறிப்பிட்ட அளவு உழைப்பு
நேரத்தில், ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்கிற
பண்டமே விற்பனைக்குரிய பண்டமாகும் என்று
காரல் மார்க்ஸ் வரையறுக்கிறார். ஆனால்
அலைக்கற்றை என்பது அத்தகைய ஒரு விற்பனைப்
பண்டம் அல்ல. அது எந்த ஒரு ஆலையிலும் எந்தத்
தொழிலாளராலும் உற்பத்தி செய்யப்படவில்லை.
அல்லது நெல் கோதுமை போன்று எந்த வயலிலும்
விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட பொருளும்
அல்ல. மாறாக அது ஒரு இயற்கையான ஆற்றல் மூலம்
(natural resource) ஆகும்.
மேலும் 2G, 3G உள்ளிட்ட எந்தவொரு அலைக்கற்றையும்
சர்வதேசச் சந்தையில் யாருக்கு வேண்டுமானாலும்
விற்கப்படும் பொருள் அல்ல. சர்வதேச ஆயுதச் சந்தை
போல அலைக்கற்றைச் சந்தை எதுவும் இந்த உலகில்
கிடையாது. தரகர்கள் மூலம் விற்கப்படும் பண்டமும்
அல்ல அது. லாபம் வைத்து விற்பதற்கு, எந்த ஒரு இந்திய
முதலாளியும் சர்வதேசச் சந்தைக்குச் சென்று அதிக
விலை கொடுத்து வாங்கி வந்த பொருள் அல்ல
அலைக்கற்றை.
ஐநா சபையின் ஓர் உறுப்பு அமைப்பான ITU மட்டுமே
(International Telecommuniction Union) உலக நாடுகள் மற்றும்
நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை வழங்கும் .
அதிகாரம் படைத்த அமைப்பு. அலைக்கற்றையை
அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ITU வழங்கும்.
மின்காந்த நிறமாலையின் (Electromagnetic spectrum)
ஒரு பகுதியான, அதிர்வெண் 3 ஹெர்ட்ஸ் முதல் 3000
கிகா ஹெர்ட்ஸ் (Frequency range from 3 Hz to 3000 GHz)
வரையிலான அலைக்கற்றையை, வசதி கருதி
12 பட்டைகளை (bands) கொண்ட அலைக்கற்றையாகப்
பிரித்து உலக அளவில் தொலைதொடர்புப் பயன்பாட்டுக்கு
ITU வழங்குகிறது.
ஆக இயற்கையின் கொடையான அலைக்கற்றை
வலுவான தொலைத்தொடர்பு வலைப்பின்னலை
உருவாக்கப் பயன்படும் ஒரு பொருள். ஒரு நாட்டின்
அகக்கட்டுமானம் சார்ந்த உயிராதாரமான ஒரு
பொருள். இதை வணிகச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு
உட்படுத்தி அலைக்கழிப்பது சரியல்ல.
வினோத் ராயின் தந்தக் கோபுர சித்தாந்தம்!
------------------------------ ------------------------------ --------------------
விற்பனைப் பண்டமல்லாத அலைக்கற்றையின் மீது
விற்பனைப் பண்டங்களுக்கே உரிய கோட்பாடான
லாப நஷ்டக் கோட்பாட்டைப் பொருத்தக் கூடாது.
லாப நஷ்டம் என்னும் கோட்பாட்டுச் சட்டகத்தின்
வரம்புக்குள் அலைக்கற்றை வரவே வராது. எனவே
ஏலத்தின் மூலம் அலைக்கற்றையை விற்பனை செய்து
லாபம் அடைந்திருக்க வேண்டும் என்று கருதுவது
அறிவியலுக்கு எதிரானதும் சமூகப் பார்வையற்றதுமான
ஒரு கோட்பாடு ஆகும்.
அதிகபட்ச லாபம் அடைதல் (profit optimisation) என்ற
கோட்பாட்டைக் கொண்டு வினோத் ராய் அலைக்கற்றை
ஒதுக்கீட்டை அணுகினார். இது அவரின் மேட்டுக்குடிச்
சிந்தனையின் வெளிப்பாடு. இதற்கு மாறாக
அதிகபட்ச மக்கள் நலன் (welfare optimisation) என்ற
கோட்பாட்டை அளவுகோலாகக் கொண்டு அலைக்கற்றை
ஒதுக்கீட்டை அவர் அணுகியிருக்க வேண்டும்.
இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டுக்குக்
கீழ் வாழும் மக்கள் 21.92 சதம் உள்ளதாக இந்திய
ரிசர்வ் வங்கியின் செப் 16, 2015 தேதியிட்ட அறிக்கை
கூறுகிறது. இதன்படி முப்பது கோடி மக்கள்
வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர் என்று ஆகிறது.
அதிகபட்ச லாபம் என்ற வினோத் ராயின் மேட்டுக்குடிச்
சித்தாந்தம் (elite philosophy) வறுமைக் கோட்டிற்குக் கீழ்
வாழும் முப்பது கோடி மக்களுக்கும் எதிரானது. இது
அலைக்கற்றையின் பயன்பாட்டைப் பெற
முடியாதபடி அம்மக்களை வெளியே நிறுத்தி
விடுகிறது. இது அனைவரையும் உள்ளடக்கிய
வளர்ச்சி (inclusive growth) என்னும் இந்திய அரசு
ஏற்றுக்கொண்டுள்ள கோட்பாட்டுக் கு எதிரானது.
ஆக முற்றிலும் பொருத்தமற்ற ஒரு அளவுகோலால்
அலைக்கற்றை ஒதுக்கீட்டை அளந்த வினோத்ராய்
அரசுக்கு இழப்பு என்று பெருங்கூச்சலிட்டார்.அவரின்
கூற்று ஒவ்வொரு அம்சத்திலும் தவறாகிப் போனதை
அரசின் புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன.
நாட்டில் எத்தனை பேரிடம் தொலைபேசி இருக்கிறது
என்பதை தொலைபேசி அடர்த்தி (tele density) என்ற
காரணி மூலம் அறியலாம். கடந்த ஆண்டான
2016இல் தொலைபேசி அடர்த்தி 86.25 ஆகும்.
(ஆதாரம்: TRAI press release no. 3/17 dtd 9th Jan 2017 ).
இதன் பொருள் 100 பேரில் 86 பேர் தொலைபேசி
வைத்திருக்கின்றனர் என்பதாகும்.
ஆனால் 2001இல் தொலைபேசி அடர்த்தி (சதவீதத்தில்)
3.58 ஆகவும், 2002இல் 4.29 ஆகவும், 2003இல் 5.11 ஆகவுமே
இருந்தது. அன்று நூற்றுக்கு 3 பேர் மட்டுமே தொலைபேசி
வைத்திருந்த நிலை மாறி, இன்று நூற்றுக்கு 86 பேர்
தொலைபேசி வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது இத்துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சியைக்
காட்டுகிறது. அலைக்கற்றையை அதிகபட்ச
லாபத்திற்கு விற்றிருந்தால், இந்த வளர்ச்சி ஏற்பட்டு
இருக்கவே முடியாது. வினோத் ராய் கூறிய ரூ 1,76,000 கோடி
அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருந்தாலும் இந்த வளர்ச்சி
ஏற்பட்டு .இருக்காது. இந்த உண்மை வினோத்ராயின்
சித்தாந்தத்தை அடித்து நொறுக்குகிறது.
2Gயை 3Gயாகக் கருதிய ஆள்மாறாட்டக் குற்றம்!
------------------------------ ------------------------------ -------------------------
தான்தோன்றித் தனத்துடன் கற்பிதமாக தான்
உருவாக்கிய 1,76,000 கோடி என்ற தொகையை அடைய
அறிவியலுக்கு எதிரான வழிமுறைகளைக் கையாண்டார்
வினோத் ராய். ஒதுக்கீடு செய்யப்பட்ட 2G
அலைக்கற்றையை 3G அலைக்கற்றையாகக்
கருதி விலை நிர்ணயம் செய்தார். இது ஒரு சைக்கிளை
காராக கருதும் கோமாளித்தனம் மட்டுமின்றி
ஆள்மாறாட்டத்துக்கு இணையான குற்றமும் ஆகும்.
ஒரு சைக்கிளின் விலை ரூ 2000. ஒரு காரின் விலை
ரூ 20 லட்சம். இந்நிலையில் ஒன்றை மற்றொன்றாகக்
கருதுவது பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.
2G, 3G ஆகிய இரண்டுக்கும் தனித்தனியான தன்மைகள்
(specifications) உள்ளன. ஒரு அலைக்கற்றை எந்தத்
தலைமுறையைச் சேர்ந்தது என்பதை வரையறுக்கும்
அதிகாரம் ஐநா சபையின் அமைப்பான ஜெனீவாவில்
உள்ள ITUவுக்கு மட்டுமே உண்டு. 150 ஆண்டு வரலாறு
உடைய, உலகின் 192 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட
ITU அவ்வப்போது உலக ரேடியோ மாநாடு நடத்தி
வரையறுக்கும் ஒரு விஷயத்தை வினோத் ராய்
தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது.
2010 மே மாதம் நடந்த 3G அலைக்கற்றை ஏலத்தில்
ரூ 67,719 கோடி அரசுக்கு கிடைத்தது. தலைக்கு 5 மெகா
ஹெர்ட்ஸ் வீதம் மொத்தம் 355 மெகா ஹெர்ட்ஸ் அளவிலான
3G அலைக்கற்றை கொண்ட 71 உரிமங்கள் வழங்கப்
பட்டன. இதன்படி பார்த்தால், ஒரு மெகா ஹெர்ட்ஸ் 3G
அலைக்கற்றையின் விலை ரூ 152.3 கோடி வருகிறது.
3G அலைக்கற்றை என்ன விலைக்கு விற்கப் பட்டதோ
அதே விலைக்கு 2G அலைக்கற்றையும் விற்கப்பட்டு
இருக்க வேண்டும் என்ற விசித்திரமான வாதத்தை
வினோத் ராய் முன்வைக்கிறார். கார் என்ன விலையோ
அதே விலைக்கு சைக்கிளையும் விற்க வேண்டும்
என்கிற படு அபத்தமான தர்க்கம்தான் இது. 2G
அலைக்கற்றைக்கும் 3G அலைக்கற்றைக்கும்
பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. சான்றாக
ஒன்றை மட்டும் பார்ப்போம். 3Gயில் வீடியோ அழைப்பை
மேற்கொள்ளலாம். அதாவது பேசும் இருவருக்கும்
அடுத்தவரின் முகம் செல்பேசியில் தெரியும். ஆனால்
2Gயில் வீடியோ அழைப்பை மேற்கொள்ள இயலாது.
2 Mbps வேகம் தரவல்ல 3G அலைக்கற்றையின் விலைக்கு
9.6 Kbps வேகம் மட்டுமே தருகிற 2G அலைக்கற்றையை விற்று
இருக்க வேண்டும் என்று முற்றிய மனநோயாளிகள்
மட்டுமே கூற இயலும். ஒரு வாதத்திற்கு வினோத் ராயின்
கூற்றை நாம் ஏற்றுக் கொண்டாலும், இந்த நாட்டின்
சராசரிக் குடிமகன் ஒரே ஒரு கேள்வியை வினோத் ராயிடம்
கேட்க விரும்புகிறான். வினோத் ராய் அவர்களே,
3G அலைக்கற்றையே ரூ 67,719 கோடி மட்டுமே வருமானம்
தருகிறபோது, 2G அலைக்கற்றை எப்படி ஐயா
ரூ ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி தர இயலும்?
காரை விற்றாலே ரூ 20 லட்சம்தான் கிடைக்கும் என்றால்,
சைக்கிளை விற்றால் எப்படி ரூ 20 கோடி கிடைக்க முடியும்?
இதே கேள்விதான் ஏழு ஆண்டுகளாக நீதியரசர் ஓ பி
ஷைனி அவர்களின் உள்ளத்திலும் குடிகொண்டு
இருந்தது. இந்தக் கேள்விக்கு விடை கிடையாது என்று
இறுதியில் அவர் அறிந்து கொண்டார். வினோத்ராய்
காற்றில் கட்டிய கோட்டையை (castle in the air) அவர்
ஊதித் தள்ளி விட்டார்.
****************************** ****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக