வோட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு சாத்தியமா?மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பற்றி சுஜாதா:-
"BEL நிறுவனத்தில் அந்த எந்திரங்களைத் தொடக்க காலத்திலிருந்து வடிவமைத்த குழுவின் தலைவன் , அவற்றை கேரளா, பீகார்,நாகாலாந்து என்று பல இடைத்தேர்தல்களில் கூவி விற்றவன் என்ற தகுதியில் இது தவறான குற்றச்சாட்டு என்பதை எளிதாக விளக்குகிறேன்.
ஒரு கால்குலேட்டரில் 2 +2=? என்று கேட்டால், சிந்தாதிரிப் பேட்டையில் 'ஐந்து': உடுமலைப் பேட்டையில் 'பதினைந்து' - என்று ஊருக்கு ஊர் மாறுபட்ட விடை வருமாறு மாற்றிவிட்டார்கள் என்று சொல்வது போல இது!
இந்திய மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் PC போல 'ஜெனரல் பர்ப்பஸ்' கம்ப்யூட்டர் அல்ல. அதன் செயல்பாடு EMBEDDED PROGRAM என்னும் வகையில் ஃபாக்டரியில் தயாரிக்கும் போதே, அதன் நிரல் கல் எழுத்தில் போல, சிலிக்கன் சில் எழுத்தில் READ ONLY MEMORYயில் எழுதப்பட்டது. அதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி, எஸ்.பி ஒரு புடலங்காயும் தெரியாது - கிடையாது.
அமெரிக்க எந்திரங்கள் வடிவமைப்பில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். இந்தியாவில் நாடெங்கும் ஒரே வகைதான். அவர்கள் ஜார்ஜியா, மேரிலேண்ட் மாநிலங்களில் Diebold Touch Screen எந்திரங்களைப் பயன் படுத்துகிறார்கள். மற்ற மாநிலங்களில் Optical scanner, Card reader, Marked card censor என்று பல வகையான டெக்னாலஜிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவற்றின் நம்பகத் தன்மை கடுமையாக விமர்சிக்கப்பட்டு, வோட்டுப் போட்டதும் பிரிண்ட் அவுட் எடுத்து, அதை வாக்காளர் சரி பார்த்ததும் ஒரு பெட்டியில் போட்டுவிட வேண்டும் என்றெல்லாம் சுற்றி வளைத்து யோசிக்கிறார்கள்.
இந்திய முறையின் சிறப்பம்சம் அதன் எளிமைதான். எந்திரங்களைத் தயாரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மைய அரசு நிறுவனங்கள். அமெரிக்க முறையுடன் இதை ஒப்பிடவே முடியாது. எனவே... தோல்விக்கு உண்மையான காரணத்தை சொல்ல முடியவில்லை என்றால், இதர காரணங்களைத் தேடலாம் - நிச்சயம் எந்திரம் காரணமல்ல!"
(சுஜாதா - 'கற்றதும் பெற்றதும்' - பாகம் III - விகடன் பிரசுரம் - பக்கம் 10 & 11)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக