இந்திய வரலாற்றையும் மார்க்சிய வரலாற்றையும்
நன்கறிந்தோர் தெலுங்கானா போராட்டம் பற்றி
(1946-51) அறிவர். நேருவின் இந்திய ராணுவத்தையும்
ஹைதராபாத் நிஜாமின் ராணுவத்தையும் ஒருங்கே எதிர்த்த
தெலுங்கானா எளிய விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய
போராட்டம் அது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியானது
தலைமையேற்று வழிநடத்திய போராட்டம் அது.
அப்போராட்டம் குறித்து மறைந்த தோழர் சுந்தரய்யா
ஒரு நூல் எழுதி உள்ளார். Telangana People's struggle and its lessons
என்ற நூலே அது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
பொதுச்செயலாளராக இருந்த தோழர் சுந்தரய்யா.
தெலுங்கானா போராட்டத்தின் தளபதிகளில் ஒருவராகவும்
இருந்தார். தோழர் சுந்தரய்யா எழுதிய அந்த நூலில்
ஒரு சம்பவம் குறிப்பிடப் பட்டிருக்கும். அந்தச் சம்பவத்தையே
ஏகப்பட்ட பீடிகைகளுடன் இக்கட்டுரை சொல்கிறது.
எத்தகைய பீடிகையும் இல்லாமல், நேரடியாக
அந்தச் சம்பவத்தை விவரித்துச் சொல்வது தமிழ் வாசகச்
சூழலில் இயலாது. தமிழ் வாசகச் சூழலின் தரம் மிகவும்
substandard ஆக இருக்கிறது. தமிழ் வாசகர்கள் என்போர்,
குறிப்பாக இடதுசாரி வாசகர்கள் intellectually subhuman ஆக
உள்ளனர்.
நூலில் சுந்தரையா வர்ணிக்கும் சம்பவம் என்னவெனில்,
கம்யூனிஸ்டுகளை வேட்டையாடும் நேருவின் ராணுவம்
மற்றும் ஹைதராபாத் நிஜாமின் ராணுவம் இரண்டின்
பார்வையிலும் சிக்காமல் ஒரு வேலையைச் செய்யும்
பொறுப்பு இரண்டு இளம் கம்யூனிஸ்டுகளிடம்
ஓர் இரவு நேரத்தில் ஒப்படைக்கப் படுகிறது.
அப்பொறுப்பை எப்படி நிறைவேற்ற இயலும் என்று
பொறுப்பை ஒப்படைத்த தலைவர்களுக்கும் சரி,
பொறுப்பை ஏற்றுக்கொண்ட இளைஞர்களுக்கும் சரி,
தெரியாது.
மனித முயற்சிகளின் எல்லைகளுக்கு அப்பால்
சென்றுதான் அப்பொறுப்பை நிறைவேற்ற இயலும்.
ஆயினும், 360 டிகிரியில் சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு
ராணுவத்தின் விரித்து வைக்கப்பட்ட வலைக்குள் சிக்காமல்
அப்பொறுப்பை அவ்விரண்டு இளைஞர்களும்
சிறப்பாகச் செய்து முடிக்கிறார்கள். மறுநாள்
சுந்தரையாவும் பிற தலைவர்களும் தாங்கள் ஒப்படைத்த
வேலை கச்சிதமாக முடிக்கப் பட்டிருப்பதைக் கண்டு
வியப்பின் உச்சத்திற்குச் செல்கின்றனர். அந்த வேலை
நிறைவேற்றப்பட்டிருக்க முடியும் என்று தலைவர்கள்
கருதவில்லை.
ஏனெனில் அவ்விரு இளைஞர்களும் அந்த நள்ளிரவில்
நடுக்கும் குளிருடன் பெருவேகத்தில் சென்று
கொண்டிருக்கும் கிருஷ்ணா நதியை நீந்திக்
கடந்துதான் தங்களின் பொறுப்பை நிறைவேற்றி உள்ளனர்.
கிருஷ்ணா நதியை அன்றிரவு அந்தக் குளிரில் நீந்திக்
கடப்பது என்பது அமானுஷ்யமானது என்றே அனைவரும்
கருதினர். ஆனால் அவ்விரு இளைஞர்களும் மானுட
சாத்தியத்தின் உச்சம் தொட்டு அச்சாதனையை நிகழ்த்தி
உள்ளனர்.
அவர்கள் நீந்திக் கடந்த தூரம், அதற்கு ஆன நேரம்,
நீச்சலின் வேகம் ஆகிய parameters அன்று அளக்கப்
பட்டிருக்கவில்லை. அப்படி அளக்கப் பட்டிருக்குமாயின்
இன்றைய ஒலிம்பிக் சாதனைகளுக்கு நிகரானதாக அல்லது
மேலானதாக அன்றைய நீச்சல் சாதனை இருந்திருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------
போல்ஷ்விக் புரட்சி உருவாக்கிய மகத்தான சோவியத்
எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி "இலக்கியத்தில் சோஷலிஸ்ட்
யதார்த்தவாதம்" என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர்.
அக்கோட்பாட்டை விவரிப்பது இக்கட்டுரையின் வரம்புக்கு
அப்பாற்பட்டது. ஆயினும், மானுட வீறு பாடுவதே
இலக்கியத்தின் நோக்கம் என்றார் கார்க்கி. அதாவது
மானுடத்தின் மேன்மையைப் போற்றிப் பாடுவதே
இலக்கியத்தின் நோக்கம் என்று இதற்குப் பொருள்.
மானுடத்தைக் கீழ்மைப் படுத்துவதல்ல இலக்கியம்!
மாறாக மேன்மைப் படுத்துவதே இலக்கியம் என்றார்
கார்க்கி. மானுடத்தின் பலவீனங்களை அல்ல, மானுடத்தின்
வீறார்ந்த ஆற்றலையே இலக்கியம் ஆக்க வேண்டும்
என்றார் கார்க்கி.
தமிழ்ச்சூழலில் மகாகவி கம்பனும் இதையே கார்க்கிக்கு
ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதை
கம்பனைப் பயின்றோர் அறிந்திருக்கலாம்.
"வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்ற தம்மா"
என்று கூறுகையில் கம்பன் மானுட வீறு பாடுகிறான்.
வள்ளுவரும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
என்றே கூறுகிறார்.
-----------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக