ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

ஒலிம்பிக் போட்டிகளும் ஒருங்கிணைந்த அறிவியலும்!

-------------------------------------------------------------------------------------- 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------

காலந்தோறும் தன் உடல் வலிமையின் சாத்தியங்களை 

மானுடம் அளந்து கொண்டேதான் இருக்கிறது.

இவ்வாறு அளவிடும் நிகழ்வுகளின் ஊடேதான்  

மானுட உடல் வலுவின் சாத்தியங்கள் பரிணாம 

வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றின் எல்லைகளும் 

விரிவடைந்துள்ளன.


சமகாலத்திலும் மானுட உடல் வலிமையின் சாத்தியங்கள் 

அளக்கப்பட்டே வருகின்றன. அவற்றை நவீன ஒலிம்பிக் 

போட்டிகள் மிகத் துல்லியமாக அளந்து வருகின்றன.


நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896ல் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் 

தொடங்கி நூறாண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகின்றன. 

பண்டைய ஒலிம்பிக்கில் இருந்து அடிப்படையில் வேறுபட்டது

நவீன ஒலிம்பிக் ஆகும். பண்டைய ஒலிம்பிக்கானது மதத்தின் 

ஒரு கூறாக இருந்து, மத விழாவின் பிரிக்க முடியாத பகுதியாகவே  

நடத்தப்பட்டு வந்தது. அது கடவுளுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. 


நவீன ஒலிம்பிக்கானது "Citius Altius Fortius" என்ற குறிக்கோளைக்  

கொண்டது. இதன் பொருள் "வேகமாக உயரமாக வலிமையாக"

(Faster Higher Stronger) என்பதாகும். இது மத இன மொழி தேச கலாச்சார 

எல்லைகளைக் கடந்து, எல்லாத் தரப்பினருக்கும்  சமஉரிமையை 

உறுதி செய்து, சமத்துவத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. 


141 கோடி மக்கள்தொகையுடன்  முதலிடத்தில் உள்ள சீனாவும்

மக்கள்தொகையாக வெறும் 11,500 பேரை மட்டும் கொண்டு 

கடைசி இடத்தில் உள்ள தென்மேற்கு பசிபிக் பெருங்கடலின் 

தீவான நவுரு (Republic of Nauru) என்னும் சின்னஞ் சிறிய நாடும் 

சம உரிமையுடன் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளன.   


மேலும் 34000 பேரை மட்டுமே மக்கள்தொகையாகக் கொண்ட 

சான் மரினோ (San Marino) என்னும் ஐரோப்பியக் குட்டி நாடு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுள்ளது. அந்நாட்டின் 

வீராங்கனை துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் பெற்றுள்ளார்.  

சின்ன மீனைப் பெரிய மீன் விழுங்காமல், அதையும் வாழவிடும் 

நவீன ஒலிம்பிக்கின் இப்பண்பு பண்டைய ஒலிம்பிக்கில் 

இல்லாதது.


பத்து வினாடியில் வெற்றி!

------------------------------------------

1985 ஜகார்த்தா ஆசியப் போட்டிகளில்  100 மீட்டர் ஓட்டத்தில் 

பங்கேற்ற பி டி உஷா, அத்தூரத்தைக்  கடக்க 

11.39 வினாடிகள் எடுத்துக் கொண்டார். அடுத்தடுத்த 

ஆண்டுகளில் நேரம் குறைந்து கொண்டே வந்து,  ஒரு கட்டத்தில் 

100 மீட்டர் தூரத்தை ஒரு வீரரால் 10 வினாடியில் கடக்க முடிந்தது.  


"பத்து செகண்ட் முத்தம்" என்று 100 மீட்டர் ஓட்டம் குறித்து 

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அப்போது ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்கதை எழுதினார்.  பின்னர் உசேன் போல்ட் இத்தொலைவை 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில்,  9.58 வினாடிகளில் கடந்து 

(2012 லண்டன் ஒலிம்பிக்) புதிய சாதனையை நிகழ்த்தினார். 


ஆக காலந்தோறும் மானுட ஆற்றல் அதிகரித்துக் கொண்டே  

வந்து புதிய சாத்தியங்களை எட்டுவதையும், இந்தச் சாதனைக்கு  

ஒலிம்பிக் போட்டிகள் தலைசிறந்த வாய்ப்பாக அமைவதையும் 

காண்கிறோம். நடப்பு ஒலிம்பிக்கில் (டோக்கியோ 2020) 100 மீட்டர் 

ஓட்டத்தில் தங்கம் வென்ற இத்தாலிய வீரர் மார்செல் ஜேக்கப்ஸ் 

இத்தூரத்தை 9.80 வினாடிகளில் கடந்துள்ளார். 


ஒலிம்பிக்கில் இந்தியா!

------------------------------------ 

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு பற்றிய 

வரலாறு மிகுதியும் இருள் நிறைந்த பக்கங்களையே 

கொண்டிருக்கிறது. இந்த மில்லேனியம் பிறந்தபோது, 2000ல்  

சிட்னி ஒலிம்பிக் நடைபெற்றது. 


இந்தியா சார்பாக 65 பேர் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். 

அவர்களுள் ஒரே ஒருவர் மட்டுமே பதக்கம் வென்றார். 

அவர்தான் கர்ணம் மல்லேஸ்வரி. மகளிர் பளு தூக்குதலில் 

69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இவர். 

சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியா தரவரிசையில் 71ஆவது 

இடத்தைத்தான் பெற முடிந்தது. 


அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகள் 

"டோக்கியோ ஒலிம்பிக் 2020" என்று பெயர் பெற்றிருந்தாலும் 

அவை கொரோனா காரணமாக 2021 ஜூலை-ஆகஸ்டில்தான் 

நடைபெற்றன.  கொரானா காரணமாக பார்வையாளர்கள் 

அனுமதிக்கப் படாமல் நடைபெற்ற ஒலிம்பிக் ஆகும். இது.

அடுத்த ஒலிம்பிக் 2024ல் நடைபெறும். ஒலிம்பிக் 

போட்டிகள் நான்காண்டுக்கு ஒருமுறை நடைபெறுபவை. 


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 70 ஆண் மற்றும் 

54 பெண் என மொத்தம் 124 பேர் பங்கேற்றனர். இவர்களில் 7 பேர் 

மட்டுமே பதக்கம் பெற்றுள்ளனர் (1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்). 

ஆண்கள் 4 பதக்கங்களையும் ( 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்)

பெண்கள் 3 பதக்கங்களையும் (1 வெள்ளி, 2 வெண்கலம்)  

வென்றுள்ளனர். மொத்தம் 206 நாடுகளைச் சேர்ந்த 11,000க்கும் 

அதிகமான  வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக்கில், 

தரவரிசையைப் பொறுத்து இந்தியா 48ஆவது இடத்தில் உள்ளது.  


கடந்தகால இருண்ட வரலாற்றுடன் ஒப்பிடுகையில், இது 

பரவாயில்லை என்றபோதிலும், குறைந்தது 2 தங்கத்துடன், 

மொத்தம் 20 பதக்கங்களையேனும் வென்று, தரவரிசையிலும்  

முதல் 20 இடத்துக்குள்  இருந்தால் மட்டுமே  இந்தியா ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்குப் பொருள் உண்டு. தற்போதைய நிலைமை 

எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்; தேங்காய் மூடி 

வாங்கிண்டு வந்தார் என்பது போல் உள்ளது.  


ஒலிம்பிக்கில் இல்லாத விளையாட்டுக்கள்!

------------------------------------------------------------------ 

உலகில் விளையாடப்படும் விளையாட்டுக்களில் 

பெரும்பான்மையானவை ஒலிம்பிக்கில் அடங்கி விடுகின்றன.

என்றாலும் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தும் சில 

விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை.

உதாரணமாக கிரிக்கெட்டும் மூளை விளையாட்டான 

சதுரங்கமும் இன்றுவரை ஒலிம்பிக்கில் இடம் பெற்றதில்லை. 


மேலும் தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள கபடி, ஒரு விளையாட்டாக 

ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கப் படவில்லை. நான்கு கண்டங்களைச் 

சேர்ந்த 75 நாடுகளில் விளையாடப்பட்டால் மட்டுமே 

ஒரு விளையாட்டானது ஒலிம்பிக்கில் இடம் பெற இயலும் 

என்பது ஒலிம்பிக்கின் பொதுவிதி. இந்தியாவைத் தாண்டி வேறெந்த 

நாட்டிலும் விளையாடப் ,படாத நிலையில், ஒலிம்பிக்கின்  

நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து ஒரு விளையாட்டாக 

இடம் பெறும் வாய்ப்பு கபடிக்கு அறவே இல்லை. 


அதே நேரத்தில் ஒலிம்பிக்கில் கால்பந்து இடம் பெற்றிருந்த 

போதிலும், அதனால் அவ்விளையாட்டுக்குப் பெரிதாக 

எவ்வித ஆதாயமும் இல்லை. இப்போதுதான் டோக்கியோ 

ஒலிம்பிக்கில் கால்பந்து நடந்து முடிந்திருக்கிறது. என்றாலும் 

அது உலகின் கவனத்தை ஒரு சிறிதும் ஈர்க்கவில்லை என்பதைக்  

காண்கிறோம். ஒலிம்பிக் கால்பந்து பற்றிப் பேச நாதியில்லை.


ஆனால்  ஃபிஃபா (FIFA) அமைப்பு நடத்தும் உலகக் கோப்பை

கால்பந்துப் போட்டிகள் மக்களால் திருவிழாவாகக் கொண்டாடப் 

படும்; உலகெங்கும் மக்களின் பேசுபொருளாக மாதக்கணக்கில் 

இருக்கும். இது உணர்த்துவது என்ன? கால்பந்தும் ஒலிம்பிக்கும்  

ஒட்டவில்லை என்பதையே! கால்பந்துக்கு ஒலிம்பிக் தேவையில்லை என்பதையே!


உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) சதுரங்கம் சார்ந்த அனைத்துப்    

போட்டிகளையும், ஒலிம்பியாட் போட்டிகள் உட்பட (Chess Olympiad) 

வெகு சிறப்பாக நடத்தி வருகிறது. அதே போல உலகக் கோப்பைப் போட்டிகளை திருவிழா போன்று நடத்தி 

வருகின்றன சர்தேச கிரிக்கெட் அமைப்புக்கள். எனவே கிரிக்கெட்டும்  

சதுரங்கமும் ஒலிம்பிக்கில் இடம் பெற வேண்டிய தேவையில்லை. 

அவை ஒலிம்பிக்கில் இல்லாததால் அவற்றுக்கு எந்த இழப்பும் இல்லை.


சதுரங்கத்தில் கிராண்ட் மாஸ்டர் என்னும் தகுதிநிலையை அடைவது

ஒரு பெரும் உச்சமாகும். விஸ்வநாதன் ஆனந்தின் வருகைக்கு 

முன்பு இந்தியாவில் ஒருவர் கூட கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் 

பெற்றிருக்கவில்லை. 1988ல் தமது 18ஆவது வயதில் ஆனந்த் 

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்னும் தகுதியைப் 

பெற்றார்.    


உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான

போட்டிகளை இடைவிடாமல் நடத்தி வருகிறது. இப்போதெல்லாம் பன்னிரண்டு வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆகி விடுகிறார்கள். அண்மையில் 2021 ஜூனில் புடாபெஸ்ட் 

நகரில் நடந்த  போட்டியில், இந்தியப் பிறப்புடைய அமெரிக்கச் 

சிறுவன் அபிமன்யு மிஸ்ரா உலகிலேயே மிக்க இளம் வயதில் 

கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றுள்ளான். இச்சாதனையை 

நிகழ்த்தியபோது இச்சிறுவனின் வயது 12 ஆண்டு  4 மாதம் 

25 நாள்  மட்டுமே. ஒலிம்பிக்கின் குறிக்கோள்களில் ஒன்றான

"விரைவாக" (faster) என்பது ஏனைய விளையாட்டுகளை விட 

சதுரங்கத்தில்தான் மிக்க வீரியத்துடன் வெளிப்படுகிறது.


நேரத்தின் துல்லியம்!

--------------------------------

மைக்கேல் ஃபெல்ப்ஸ் (Michael Phelps) என்னும் அமெரிக்க 

அதிமானுட நீச்சல் வீரர் ஒலிம்பிக்கில் இதுவரை 28 பதக்கங்களை 

வென்றுள்ளார். இந்த 28ல் தங்கம் மட்டுமே 23 ஆகும்.


இவர் 2008ல் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில், 100 மீட்டர் நீச்சலில் 

(100 m Butterfly), சக போட்டியாளரான மிலோராட் காவிக் 

(Milorad Cavic) என்னும் செர்பிய-அமெரிக்க வீரரை ஒரு வினாடியில் 

நூற்றில் ஒரு பங்கு குறைவான நேரத்தில் (one hundredth of a second) 

கடந்து தங்கம் வென்றார். அதாவது 100 மீட்டரை நீந்திக் கடப்பதற்கு 

செர்பிய வீரருக்கு ஆன நேரத்தை விட, மைக்கேல் ஃபெல்ப்சுக்கு 

0.01 வினாடி நேரம் குறைவாக ஆனதால், மைக்கேல் ஃபெல்ப்ஸ் 

பதக்கம் வென்றார். 


இதை எதிர்த்தரப்பு ஆட்சேபிக்கவே, உயர்திறன் காமிரா 

உள்ளிட்ட நுண்ணிய கருவிகளின் பதிவுகளைச் சரிபார்த்து, 

மைக்கேல் ஃபெல்ப்ஸ் வென்றது உறுதி செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. ஆக அறிவியல் தொழில்நுட்பத்தின் 

துணையின்றி, இதுபோன்ற உலகளாவிய மாபெரும் 

போட்டிகளை நடத்தவோ, அவற்றின் முடிவுகளை அனைவரும் 

ஏற்கும் விதத்தில் அறிவிக்கவோ ஒருபோதும் இயலாது. 


துல்லியமான நேரப் பராமரிப்பை ஒலிம்பிக் 

அமைப்பாளர்கள் கோருகையில், உலகின் முதல்தர தொழில்நுட்பம் 

இருந்தால் மட்டுமே அவர்களின் கோரிக்கையை 

நிறைவேற்ற இயலும். 2002ல் செய்க்கோ (Seiko) நிறுவனமும்   

பின்னர் ஒமீகா (Omega) நிறுவனமும் ஒலிம்பிக்கின் துல்லியமான 

நேரத் தேவைகளை நிறைவு செய்தன.

 

ஒலிம்பிக்கில் ஓட்டப் பந்தயத்தை எப்படித் தொடக்கி வைப்பது?

வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடுவதும் அந்த 

ஓசையைக் காதால் கேட்ட போட்டியாளர்கள் ஓடத் தொடங்குவதுமாக  

ஒரு நடைமுறை நீண்ட காலமாக உள்ளது. மைதானத்தில் 

ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் சம தூரத்தில் ஒலிபெருக்கிகள் 

வைக்கப்பட்டிருக்கும். அவை துப்பாக்கி சுடும் ஓசையை 

அறிவிக்கும். ஒரு வீரர் மைதானத்தில் முன்னாலோ பின்னாலோ 

எங்கிருந்தாலும்  சரி, அவரால் துப்பாக்கி சுடும் ஓசையை 

மற்ற வீரர்களை விட முன்னதாக, அதாவது ஒரு மில்லி வினாடி 

(millisecond) நேரம்கூட முன்னதாகக் கேட்டுவிட முடியாத அளவுக்கு   

துல்லியம் பேணப்படுகிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் 

இல்லாமல் இத்தகைய அதிதுல்லியம் சாத்தியம் இல்லை.  


நீண்ட மாரத்தான் ஓட்டங்களில், பெரும் எண்ணிக்கையிலான 

வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தொடக்கக் கோட்டைக்

(starting line) கடக்க முனைவர். அதே போல, போட்டியின் இறுதியிலும் 

பத்து இருபது பேர் ஒரே நேரத்தில் முடிவுக்கோட்டை

(finishing line) கடக்க முயல்வர். இச்சூழலில் பொதுவான நேரக் 

கணக்கீட்டை விட, தனிநபரை மையப்படுத்திய நேரக் கணக்கீடு 

தேவைப்படுகிறது. அத்தகைய கணக்கீடு RFID (Radio Frequency IDentification)

எனப்படுகிறது.


மாரத்தான் ஓட்டங்களின்போது ஆட்டம் தொடங்குவதை அறிவிக்கும் 

விதமாக துப்பாக்கி வெடிக்கும் அதே நேரத்தில், நேர அளவீட்டுக்  

கடிகாரமும் இயங்கத் தொடங்கி விடுகிறது. தொடக்கக் கோட்டுப் 

பகுதியிலும் முடிவுக் கோட்டுப் பகுதியிலும் பாய்கள் விரிக்கப் 

பட்டிருக்கும். இவற்றில் உணர்கொம்புகள் எனப்படும் ஆன்டெனாக்கள் இருக்கும். ஓடும் வீரர்களின் காலணியில் RFID டிரான்ஸ்பாண்டர் 

பொருத்தப் பட்டிருக்கும். (டிரான்ஸ்மிட்டர், ரெஸ்பாண்டர் ஆகிய 

இரு சொற்களின் கூட்டே டிரான்ஸ்பாண்டர் ஆகும் ஒரு குறிப்பிட்ட 

சமிக்ஞையைப் பெறுவதும், பெற்றபின் ஒரு குறிப்பிட்ட 

மறுமொழியை உமிழ்வதுமாக வடிவமைக்கப்பட்ட ஒரு 

மின்னணுக் கருவியே டிரான்ஸ்பாண்டர் ஆகும்).


டிரான்ஸ்பாண்டரில் இருந்து தனித்துவமான ஒரு 

அதிர்வெண்ணில் (unique frequency) அந்த வீரர் வெளிப்படுத்தும் 

 சமிக்ஞை வெளிக்கிளம்பி, பாயில் உள்ள ஆன்டெனாவை 

அடைந்து அங்கிருந்து நேரக் கணிப்பகத்துக்குச் செல்லும். 

இவ்வளவு நுட்பம் செறிந்த ஏற்பாட்டின் மூலம் நேரக்கணக்கீடு 

தேவையான அளவு துல்லியத்தை எட்டுகிறது. இவை யாவும் 

நவீன அறிவியலின் கொடை ஆகும்.


ஒலிம்பிக்கில் சாதாரண நிறுத்தக் கடிகாரங்களின்  (stopwatches) சகாப்தம் என்றோ முடிந்து விட்டது. 2012 லண்டன் ஒலிம்பிக்கின்போது முதன் 

முறையாக குவான்டம் நேரக் கணக்கீட்டுக் கருவிகள்  (quantum timers) 

அறிமுகப் படுத்தப் பட்டன. இவை மைக்ரோ வினாடி நேரத்தை, 

அதாவது ஒரு வினாடியில் மில்லியனில் ஒரு பங்கு (one millionth of a second) நேரத்தைத் துல்லியமாக  அளக்க வல்லவை. 


குளிர்கால ஒலிம்பிக்!

----------------------------------

மேற்கூறியவை அனைத்தும் கோடைகால ஒலிம்பிக் பற்றியவை. 

குளிர்கால ஒலிம்பிக்கும் நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.  

பனி ஹாக்கி (ice hockey) போன்ற விளையாட்டுகள் குளிர்கால ஒலிம்பிக்கில் புகழ் பெற்றவை. பனிச்சறுக்கு வாகனப் போட்டியின்போது (sledding)

அதற்கான ஓடுதளம் (track)  மைனஸ் 34 டிகிரி செல்சியஸ் 

வெப்பநிலையில் இருக்கும். வீரர்கள் மணிக்கு 150 கிமீ வேகத்தில் 

தங்கள் வாகனங்களில் பனியில் சறுக்குவார்கள்.


ஆரம்பத்தில் பனிச்சறுக்கு ஓடுதளம் முழுவதும் லேசர் கருவிகளே 

பொருத்தப் பட்டிருந்தன. பனிப்பொழிவும் மூடுபனியும் லேசர் 

கற்றைகளை கணிசமாகச் செயலிழக்க வைத்து விடுவதால்,

லேசருக்குப் பதிலாக அகச்சிவப்புக் கருவிகள் (infrared)

பொருத்தப் பட்டன. 2002ல் அமெரிக்காவின் சால்ட் லேக்கில் 

நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் இந்த மாற்றங்கள் 

முதன்முறையாகச் செய்யப்பட்டு இருந்தன. கோடைகால 

ஒலிம்பிக்கை விட, குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவது மிகக்கடினம். மிகச்சிறந்த அறிவியல் தொழில்நுட்பத்தின் துணையின்றி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது சாத்தியமற்றது.


ஒலிம்பிக்கும் ஒருங்கிணைந்த அறிவியலும் என்று 

பேசும்போது, ஒலிம்பிக் என்பது ஒரு கட்டிடம் போன்றது என்றும் 

அறிவியல் அதனின் ஒரு அறை போன்றது என்றும் புரிந்து கொள்ளக் 

கூடாது. அது பொருத்தமற்ற உவமை. அறிவியலானது

ஒலிம்பிக்கில் சர்வ வியாபகமாக (all pervading) நிறைந்துள்ளது.

செம்புலப் பெயல் நீர் போல இரண்டும் ஒன்று கலந்துள்ளன.

   

ஒலிம்பிக் விளையாட்டுக்கள், போட்டிகள், வீரர்கள். நடுவர்கள்

என்று ஒலிம்பிக்கின் ஒவ்வொரு அம்சத்திலும் அறிவியல்  

இடம்பெற்றுள்ளதோடு மொத்த ஒலிம்பிக்கையும் அறிவியலே 

நெறியாள்கை செய்கிறது. அறிவியலின் அனைத்துத் துறைகளுக்கும் 

ஒலிம்பிக்கில் சிறப்பிடம் உண்டு. அவற்றை விரித்துச் சொல்ல  

முற்பட்டால் ஒரு கட்டுரைக்குள் அடங்காது. முன்கண்ட பத்திகளில் 

ஒலிம்பிக்கின் நேர அளவீட்டு இயற்பியல் பற்றி மட்டுமே

குறிப்பிட முடிந்தது. பிற துறைகளைப் பற்றிக் குறிப்பிட,

கட்டுரையின் பக்க வரம்பு அனுமதிக்கவில்லை.


அமெரிக்க நீச்சல் தேவதை மிஸ்ஸி பிராங்க்ளின் (Missy Franklin) 

நீர்ம இயங்கியலின் (Hydro dynamics) துணை இல்லாமலா 

2012 லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கம்  உட்பட 5 பதக்கங்களைப் 

பெற்றார்? (2016 ரியோடி ஜெனிரா ஒலிம்பிக்கில் பெற்ற 

ஐந்தாவது தங்கத்துடன் இந்த 26 வயது தேவதை ஒலிம்பிக்கில் 

இருந்து ஒய்வு பெற்று விட்டது).  


நடப்பு ஒலிம்பிக்கின் (டோக்கியோ 2020) நீச்சல் தேவதூதன் 

கேலப் டிரசல் (Caeleb Dressel) இந்த ஒரு ஒலிம்பிக்கில் மட்டும் 

நீச்சலில் ஐந்து தங்கங்களை வெல்லவில்லையா? 


டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிகப் பதக்கங்கள் பெற்ற 

முதல் 10 பேரில் 9 பேர் நீச்சலில் பதக்கம் பெற்றவர்களே 

எனும்போது, இந்த ஒன்பது பேரும் நீர்ம இயங்கியலைக் 

கரைத்துக் குடிக்காமலா இவ்வளவு பதக்கங்களைப் 

பெற்றிருக்க முடியும்?


ஆக நீர்ம இயங்கியல் இல்லாமல் நீச்சல் இல்லை அல்லவா!.

அது போலவே அறிவியல் இல்லாமல் ஒலிம்பிக்கும் இல்லை!

ஒலிம்பிக்கை வாழ வைப்பது அறிவியலே! 

**************************************************************************   





  

     . 

  

 


 

 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக