செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

உலகில் விளையாடப்படும் விளையாட்டுக்களில் 

பெரும்பான்மையானவை ஒலிம்பிக்கில் அடங்கி விடுகின்றன.

என்றாலும் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தும் சில 

விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை.

உதாரணமாக கிரிக்கெட்டும் மூளை விளையாட்டான 

சதுரங்கமும் இன்றுவரை ஒலிம்பிக்கில் இடம் பெற்றதில்லை. 


மேலும் தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள கபடி, ஒரு விளையாட்டாக 

ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கப் படவில்லை. நான்கு கண்டங்களைச் 

சேர்ந்த 75 நாடுகளில் விளையாடப்பட்டால் மட்டுமே 

ஒரு விளையாட்டானது ஒலிம்பிக்கில் இடம் பெற இயலும் 

என்பது ஒலிம்பிக்கின் பொதுவிதி. இந்தியாவைத் தாண்டி வேறெந்த 

நாட்டிலும் விளையாடப் ,படாத நிலையில், ஒலிம்பிக்கின்  

நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து ஒரு விளையாட்டாக 

இடம் பெறும் வாய்ப்பு கபடிக்கு அறவே இல்லை. 


அதே நேரத்தில் ஒலிம்பிக்கில் கால்பந்து இடம் பெற்றிருந்த 

போதிலும், அதனால் அவ்விளையாட்டுக்குப் பெரிதாக 

எவ்வித ஆதாயமும் இல்லை. இப்போதுதான் டோக்கியோ 

ஒலிம்பிக்கில் கால்பந்து நடந்து முடிந்திருக்கிறது. என்றாலும் 

அது உலகின் கவனத்தை ஒரு சிறிதும் ஈர்க்கவில்லை என்பதைக்  

காண்கிறோம். ஒலிம்பிக் கால்பந்து பற்றிப் பேச நாதியில்லை.


ஆனால்  ஃபிஃபா (FIFA) அமைப்பு நடத்தும் உலகக் கோப்பை

கால்பந்துப் போட்டிகள் மக்களால் திருவிழாவாகக் கொண்டாடப் 

படும்; உலகெங்கும் மக்களின் பேசுபொருளாக மாதக்கணக்கில் 

இருக்கும். இது உணர்த்துவது என்ன? கால்பந்தும் ஒலிம்பிக்கும்  

ஒட்டவில்லை என்பதையே! கால்பந்துக்கு ஒலிம்பிக் தேவையில்லை என்பதையே!


அது போல கிரிக்கெட், சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களும் 

ஒலிம்பிக்கில் இடம் பெறத் தேவையில்லை. அவை ஒலிம்பிக்கில் 

இல்லாததால் அவ்விளையாட்டுகளுக்கு எந்த இழப்பும் இல்லை.

உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) சதுரங்கத்திற்காக தனியான  

ஒலிம்பிக் போட்டிகள் (Chess Olympiad) உட்பட, சதுரங்கம் குறித்த 

அனைத்துப் போட்டிகளையும் வெகு சிறப்பாக நடத்தி வருகிறது. 

உலகக் கோப்பைப் போட்டிகளை திருவிழா போன்று நடத்தி 

வருகின்றன சர்தேச கிரிக்கெட் அமைப்புக்கள்.


சதுரங்கத்தில் கிராண்ட் மாஸ்டர் என்னும் தகுதிநிலையை அடைவது

ஒரு பெரும் உச்சமாகும். விஸ்வநாதன் ஆனந்தின் வருகைக்கு 

முன்பு இந்தியாவில் ஒருவர் கூட கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் 

பெற்றிருக்கவில்லை. 1988ல் தமது 18ஆவது வயதில் ஆனந்த் 

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்னும் தகுதியைப் 

பெறுகிறார்.    


உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான

போட்டிகளை இடைவிடாமல் நடத்தி வருகிறது. இப்போதெல்லாம் பன்னிரண்டு வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆகி விடுகிறார்கள். அண்மையில் 2021 ஜூனில் புடாபெஸ்ட் 

நகரில் நடந்த  போட்டியில், இந்தியப் பிறப்புடைய அமெரிக்கச் 

சிறுவன் அபிமன்யு மிஸ்ரா உலகிலேயே மிக்க இளம் வயதில் 

கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றுள்ளான். இச்சாதனையை 

நிகழ்த்தியபோது இச்சிறுவனின் வயது 12 ஆண்டு  4 மாதம் 

25 நாள்  மட்டுமே. ஒலிம்பிக்கின் குறிக்கோள்களில் ஒன்றான

"விரைவாக" (faster) என்பது உலகிலேயே சதுரங்கத்தில்தான் 

சிறப்பாக நடைமுறைப் படுத்தப் படுகிறது

===========================



    



     

 




   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக