பொதிகை மலையே முதல் தமிழன் தோன்றிய இடம்!
வால்கா முதல் கங்கை வரை நூலைத் தடை செய்!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
உலகின் முதல் மனிதன் எங்கு தோன்றினான் என்ற
கேள்விக்கு விடை காண 800 கோடி உலக மாந்தரும்
ஆர்வம் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் உலகின்
முதல் தமிழன் எங்கு தோன்றினான் என்பதும் என்று
தோன்றினான் என்பதும் எட்டுக்கோடித் தமிழர்களின்
அக்கறைக்குரிய செறிந்த பொருள் ஆகும்.
இந்தப் பொருளில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர்
குறிப்பாக வீரவநல்லூரைச் சேர்ந்தோர் உட்பட ஓர்
ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். உலகின் முதல்
தமிழன் தோன்றிய இடம் எது என்று கண்டறிவதே
ஆய்படுபொருள் ஆகும்.
இந்த ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை. எந்தவொரு
ஆய்வும் அகழாய்வில் கிடைக்கும் தொல்லியல்
சான்றுகளின் மூலமே முடிவுறும். எனினும் நிலத்தில்
எந்த இடத்தில் நீரோட்டம் இருக்கிறது என்று கண்டறிந்த
பின்னரே அங்கு கிணறு தோண்டப்படும். அதுபோலவே
அகழாய்வுக்கு ஏற்ற இடம் என்று ஓரிடம் நிரூபிக்கப்
பட்ட பின்னர் அங்கு தோண்ட இயலும்.
எமது ஆய்வு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையும்
நிலையில் அகழாய்வுக்குரிய இடத்தை அது சுட்டிக்
காட்டும். எமது ஆய்வு அறிவியல்வழிப்பட்டது. எனவே
அதில் கற்பிதங்களுக்கு இடமில்லை. எமது குழுவிலும்
உட்டோப்பியன்களுக்கு இடமில்லை.
நாங்கள் அடையாளம் காட்டுகிற இடத்தைத்
தோண்டுகிறபோது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட உயிரினங்களின் தடயங்கள் கிடைக்கும்.
அவை உலகின் முதல் தமிழன் தோன்றிய இடம்
தாமிரபரணி ஆற்றங்கரையே என்பதை நிலைநாட்டும்.
ஆறும் மலையும் கூடுமிடமே மாந்தன் வாழ ஏற்ற
இடமாக அன்று இருந்தன. "பஃறுளி ஆற்றுடன் பன்மலை
அடுக்கத்து" என்பது மலையும் ஆறும் ஒருங்கிணைந்த
இடத்தையே குறிப்பிடுகிறது.
எனவே பொதிகை மலையும் தாமிரபரணி ஆறும்
ஒன்றிணைந்த நிலமே உலகின் முதல் தமிழன் தோன்றிய
இடம் என்பது நாங்கள் இதுவரை வந்தடைந்த ஆய்வின்
முடிவு.
2021 ஆகஸ்டு 4ஆம் நாள் தாமிரபரணி ஆற்றங்கரையில்
(அத்தாளநல்லூர்) கூடிய கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள்
விவாதிக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப் பட்டன.
1) ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய "வால்கா முதல்
கங்கை வரை" என்ற நூலைத் தடை செய்யுமாறு எமது
ஆய்வுக் குழு மத்திய மோடி அரசைக் கேட்டுக்
கொள்கிறது.
2) அந்நூலின் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை
என்று யாம் கருதுகிறோம். மானிடனின் பயணம்
வால்காவில் தொடங்கி கங்கையில் முடிந்ததல்ல.
மாறாக தாமிரபரணியில் தொடங்கி வால்கா நோக்கி
நீண்டது என்பதே மெய்யான வரலாறு.
3) மெய்யான ஆய்வு என்பது நீண்டது; நெடியது.
அது இன்ஸ்டன்ட் புளியோதரை போன்றதல்ல.
தடயங்களையும் சான்றாதாரங்களையும் சேகரிக்கும்
பணியில் எமது குழு பெரிதும் அக்கறை காட்டுகிறது.
4) கட்டம் கட்டமான முன்னேற்றத்தை தமிழர்களைக்
கூட்டி வைத்து அவ்வவையில் கூறுவோம்.
*******************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக