ஞாயிறு, 5 டிசம்பர், 2021

அறிவியலாய் ஒளிரும் சதுரங்கம்!

-------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------------
இதுநாள் வரையிலான சதுரங்க வரலாற்றின் மிக நீண்ட 
சதுரங்க ஆட்டத்தை அண்மையில் (03.12.2021) மொத்த 
உலகும் கண்டு களித்தது. டிசம்பர் 3 அன்று இந்திய 
நேரப்படி மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த ஆட்டம் 
நள்ளிரவு 1.45 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 
7 மணி 45 நிமிடம்வரை நீடித்த  இந்த ஆட்டம்  
136 நகர்த்தல்களைக் கொண்டிருந்தது.

உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) நடத்தும் 
"உலக சாம்பியன் போட்டி 2020" துபாயில் 
நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக 
ஓராண்டு தாமதாக 2021ல் நடந்து வரும் இப்போட்டியில் 
நடப்பு சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை (நார்வே) 
சாலஞ்சரான நெப்போ எனப்படும் அயன் நெப்போம்னியாச்சி (ரஷ்யா) 
எதிர்த்து ஆடுகிறார். இவ்விருவருக்கும் இடையிலான ஆறாவது 
ஆட்டம்தான் மிக நீண்ட சதுரங்க ஆட்டமாக (the longest chess game) 
சமகால வரலாற்றில் பதிவாகி உள்ளது.

இந்த ஆட்டத்தில் கார்ல்சன் வென்றார். கார்ல்சன் தமது 
சிப்பாயை ராணி ஆக்குவதைத் தடுக்க இயலாத நிலையில்
தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்டத்தை முடித்துக் 
கொண்டார் நெப்போ.   

ஈலோ புள்ளிகள்!
-------------------------
உலக சாம்பியனாக இருப்பதுடன் மட்டுமின்றி, உலக அளவில் 
சதுரங்கத் தரத்தில் முதல் இடத்திலும் இருந்து வருகிறார் 
கார்ல்சன். இவரை எதிர்த்து ஆடும் நெப்போ உலகத் தரத்தில்
ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். வீரர்களின் ஆட்டத் திறனை 
அளவிட ஈலோ தரநிர்ணயம் (Elo Rating) என்னும் அளவுகோல் 
உள்ளது. 

உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) வெளியிட்டுள்ள 
டிசம்பர் 2021க்கான சதுரங்க வீரர்களின் தரவரிசைப் 
பட்டியலில் முதல் ஐந்து இடங்கள் பின்வருமாறு:-

1) மாக்னஸ் கார்ல்சன் (நார்வே) 2856.
2) அலிரெஸா ஃப்ரவ்ஜா (பிரான்சு) 2804.
3) லிரன் டிங் (சீனா) 2799.
4) ஃ பேபியானா கரௌனா (அமெரிக்கா) 2792.         
5) அயன் நெப்போம்னியாச்சி  (ரஷ்யா) 2782.

ஆட்டத் திறனைத் தக்க வைக்க இயலாதபோது, முன்பு பெற்றிருந்த 
ஈலோ தர நிர்ணயப் புள்ளிகளை காலப்போக்கில் 
வீரர்கள் இழந்து விடுகிறார்கள். ஐந்து முறை உலக 
சாம்பியனாக இருந்த இந்தியரான விஸ்வநாதன் ஆனந்த் 
தமது சதுரங்க வாழ்க்கையில் அதிகபட்சமாக 2817 என்னும் 
ஈலோ புள்ளிகளை 2011 மார்ச்சில் பெற்றிருந்தார். இது அவரின் 
உச்ச நிர்ணயம் (peak rating) ஆகும். ஆனால் அவர் தற்போது
டிசம்பர் 2021ல் 2751 ஈலோ புள்ளிகளுடன் தரவரிசைப் 
பட்டியலில் 16ஆவது இடத்தில் உள்ளார்.

ஆனந்துக்கு முன்நும் பின்னும்!
--------------------------- -------------------
இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு முன் தேசிய 
அளவிலான சதுரங்க வீரராகவும் இந்தியாவின் தேசிய 
சாம்பியனாகவும் இருந்தவர் தமிழரான மானுவல்
ஆரன் (பிறப்பு;1935). இவர் கிராண்ட் மாஸ்டர் அல்லர்.
ஆனந்துதான் இந்தியாவின் முதல் சதுரங்க கிராண்ட் 
மாஸ்டர் ஆவார்.

மானுவல் ஆரன் சதுரங்கத்தில் அனைத்துலக மாஸ்டர்
பட்டம் வென்றவர் (IM = International Master). 1961ல் இவர் 
இப்பட்டத்தை வென்றபோது, இப்பட்டத்தை வென்ற
முதல் இந்தியராக இவரே இருந்தார். இவரின் உச்ச 
ஈலோ புள்ளி 2415 ஆகும் (ஜனவரி 1981).

ஆனந்துக்கு முன்னரான வீரர் மானுவல் ஆரன் என்றால், 
ஆனந்துக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுவது இயற்கையே. 
காலம்  இதற்கு ஓர் விடையைத் தந்திருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த 
விதித் சந்தோஷ் குஜராத்தி (Vidit Santosh Gujarathi,,born October 994) 
என்னும் சதுரங்க கிராண்ட் மாஸ்டரே ஆனந்துக்கு அடுத்து 
இருப்பவர். இந்திய சதுரங்கத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் 
இந்த 27 வயது இளைஞரின் FIDE நிர்ணயித்த ஈலோ 
புள்ளிகள் (டிசம்பர் 2021ல்) 2727 ஆகும். உலக அளவில்  
தரவரிசைப்படி இவர்  22ஆம் இடத்தில் உள்ளார். ஆனந்து 16ஆம் 
இடத்தில் இருப்பதை அறிவோம்.

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் என்றால்,
இந்தியாவின் இரண்டாவது கிராண்ட் மாஸ்டர் திவ்யேந்து 
பரூவா (Dibyendu Baruah, age 55) ஆவார். மேற்கு வங்கத்தைச் 
சேர்ந்த இவர் 1991ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.
இவரின் உச்ச ஈலோ புள்ளிகள் (peak Elo rating) 2003 ஜூலையில் 
2561 ஆகும். திவ்யேந்து பரூவா ஆனந்துக்கு அடுத்ததாக 
கிராண்ட்மாஸ்டர் பெற்ற இந்தியர் என்றும், விதித் சந்தோஷ் 
குஜராத்தி உலக அளவில் தரவரிசையில் ஆனந்துக்கு 
அடுத்து இருப்பவர் என்றும் கவனம் கொள்ள வேண்டும்.

கிராண்ட் மாஸ்டர்களாக சிறுவர்கள்!
-----------------------------------------------------------
ஆனந்த், விதித் சந்தோஷ் குஜராத்தி ஆகியோர் 18 வயதானதும்  
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற்னர்.  மாக்னஸ் கார்ல்சன்,
இந்தியாவின் பரிமெர்ஜன் நெகி ஆகியோர் 13 வயது ஆனதும் 
கிராண்ட் மாஸ்டர் ஆகினர். இன்றெல்லாம் சிறுவர்கள் 
12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர்கள் ஆகி விடுகின்றனர்.
இந்த ஆண்டில் (2021) அண்மையில் கிராண்ட் மாஸ்டர் ஆன 
இரண்டு சிறுவர்களும் 12 வயதிலேயே ஆனவர்கள். இவர்கள் 
இருவரும் இந்தியர்கள்.   

பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு என்னும் சென்னையைச் சேர்ந்த 
சிறுவன் 12 ஆண்டு, 10 மாதம், 13 நாளிலேயே கிராண்ட் 
மாஸ்டர் ஆகியிருப்பது இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் 
பெருமை. அடுத்து அபிமன்யு மிஸ்ரா என்னும் இந்தியாவைச்  
சேர்ந்த ஆனால் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சிறுவன் 
ஓர் உலக சாதனையை நிகழ்த்தி உள்ளான். உலகிலேயே மிக்க 
இளம் வயதில் (12 ஆண்டு, 4 மாதம், 25 நாள்) கிராண்ட் 
மாஸ்டர் பட்டம் வென்றுள்ளான் இச்சிறுவன்.

ஒரு காலத்தில் பாபி பிஷர் (19943-2008) என்னும் அமெரிக்க 
வீரர், 1958ல்,  தமது 15ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் 
வென்றதே உலக சாதனையாக நீண்ட காலம் வரலாற்றில் 
இடம் பெற்று இருந்தது. இந்தச் சாதனையை ஹங்கேரியைச் 
சேர்ந்த ஜுடிட் போல்கர் (Judit Polgar, வயது 45) என்னும் ஒரு யூதப் 
பெண்மணி முறியடித்தார். பாபி பிஷரை விடக் குறைவான
வயதில், 15 ஆண்டு 4 மாதத்தில், 1991ல் ஜுடிட்  போல்கர்
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.  

மிக்க இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வது 
எதைக் காட்டுகிறது? அடுத்து வரும் ஆண்டுகளில் 
10 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆகி விடுவார்களா? 

மானுட சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறையும் தனக்கு முந்திய தலைமுறையின் தோள் மீது ஏறிக் கொண்டு உலகைப் பார்க்கிறது. 
இது அடுத்தடுத்த தலைமுறைகளின் அறிவுத்திறனை 
அதிகரித்து விடுகிறது. இதன் விளைவாகவே ஆனந்த் 
18 வயதிலும், ஜூடிட் போல்கர் 15 வயதிலும், மாக்னஸ் கார்ல்சன்
13 வயதிலும், அபிமன்யு மிஸ்ரா 12 வயதிலும் கிராண்ட் 
மாஸ்டர் ஆகிறார்கள்.      
 

சதுரங்கத்தில் பெண்கள்!
----------------------------------------
ஆனந்துக்கு முன்பு ஒரு கிராண்ட் மாஸ்டர்கூட இல்லாத 
இந்தியாவில் இன்று 72 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.
124 அனைத்துலக மாஸ்டர்கள் உள்ளனர். பெண்களைப் 
பொறுத்தமட்டில் 20 பெண் கிராண்ட் மாஸ்டர்களும்,
42 அனைத்துலக பெண் மாஸ்டர்களும் உள்ளனர்.    

கோனேரு ஹம்பி என்ற இந்திய சதுரங்க 
வீராங்கனையை நாம் அறிந்திருக்கலாம். இவர் 
2001ல் பெண் கிராண்ட் மாஸ்டர் (WGM) பட்டத்தையும் 
2002ல் இருபாலருக்கும் பொதுவான கிராண்ட் மாஸ்டர் 
(GM) பட்டத்தையும் வென்றுள்ளார்.   

துபாயில் நடைபெறும் தற்போதைய உலக சாம்பியன் 
போட்டியை செய்தியாளராக இருந்து வர்ணனை செய்து வரும்  
இந்திய வீராங்கனை டானியா சக்தேவ் (Tania Sachdev) 
பொதுவான IM பட்டமும், பெண் கிராண்ட் மாஸ்டர் (WGM)
பட்டமும் வென்றுள்ளார்.

உலக சாம்பியன் மற்றும் சாலஞ்சரை (champion, challenger)
முடிவு செய்யும் போட்டிகள் ஆண்களுக்கு மட்டுமானவை அல்ல.
அவை ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவானவை.
ஆனால் இதுவரை எந்த ஒரு பெண்ணும் உலக சாம்பியன் போட்டி
வரை வருவதற்கான உரிய வெற்றிகளைப்  பெறவில்லை.

உலக சாம்பியன் போட்டியில் பங்கு பெற வேண்டுமென்றால், 
முதலில் சாம்பியனை எதிர்த்து விளையாடும் சாலஞ்சராகத் 
தேர்வு செய்யப்பட வேண்டும். சாம்பியன், சாலஞ்சர் ஆகிய 
இருவருக்கும் இடையிலான போட்டியே உலக சாம்பியன் போட்டி.
இதுவரை ஒரு பெண் கூட சாலஞ்சராகத் தேர்வு செய்யப்படவில்லை.

ஒரு பெண்ணின் அதிகபட்ச சாதனையாக இதுவரை சதுரங்க 
வரலாற்றில் பதிவாகி இருப்பது என்னவெனில், மே-ஜூன் 2007ல் 
நடைபெற்ற, 2007ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன் போட்டிக்கான சாலஞ்சரைத் தேர்வு செய்யும் வேட்பாளர் 
பந்தயத்தில் (candidates tournament)  ஜுடிட் போல்கர் என்னும் பெண்மணி பங்கேற்றார் என்பதே. ஆனால் அவரால் அதில் 
வெற்றி பெற இயலவில்லை. 


மூளை விளையாட்டு!
---------------------------------
சதுரங்க உலக சாம்பியன் போட்டிகள் எள்முனை அளவும் 
பாரபட்சமற்றவை. எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ இனத்துக்கோ 
மொழியினருக்கோ உரித்தானவையும் அல்ல. என்றாலும் 
உலக அளவில் இதுவரையிலான சதுரங்க வெற்றியாளர்கள் 
மற்றும் கிராண்ட் மாஸ்டர்களில் யூதர்கள் அதிக 
எண்ணிக்கையில் உள்ளனர். சதுரங்கத்தின் கடவுளாகப் 
போற்றப்படும் காரி காஸ்பரோவ் முதல்  சதுரங்கத்தின் மிக 
வலிமையான பெண்மணியான ஜுடிட் போல்கர் வரையிலான 
மிகப்பலரும் யூதர்களே.

ஒரு மூளை விளையாட்டில் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக 
இருப்பதன் காரணிகள் என்னென்ன? பிற இனத்தவரை விட 
யூதர்களின் நுண்ணறிவு ஈவு (IQ) எனப்படும் அறிவுத்திறன்  
அதிகம் என்று கூறப்படுகிறதே! இது சரியா? இக்கேள்விகளுக்கு  
விடை காண வேண்டும். அதற்கு ஆழமான அறிவியல் ஆய்வுகளை 
மேற்கொள்ள வேண்டும்.

ஈலோ தர நிர்ணயம்!
-------------------------------
ஈலோ புள்ளிகளை, ஈலோ தர நிர்ணய முறையை 
உருவாக்கியவர் இயற்பியல் பேராசிரியரான 
ஆர்ப்பட் ஈலோ (Arpad Elo 1903-1992). இவர் ஹங்கேரியில் 
பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்.

சதுரங்க வீரர்களின் ஆட்டத்திறனை அடிப்படையாகக் கொண்டு 
அவர்களுக்கு இடையிலான ஒப்பீட்டுத் தரத்தை (relative merit)
அளவிடுவதே ஈலோ தர நிர்ணய முறை. இந்த முறையானது 
இதை உருவாக்கிய பேராசிரியர் ஈலோவின் பெயராலேயே 
வழங்கப் படுகிறது.

பேராசிரியர் ஈலோ மிகச் சிறந்த சதுரங்க வீரர் ஆவார்.
அமெரிக்க சதுரங்க சம்மேளனத்தில் பெரும் செல்வாக்கு உடையவர்.
அக்காலத்தில் கென்னத் ஹார்க்னெஸ் (Kenneth Harkness) என்பவரின் 
புள்ளியியல் முறையைக் கொண்டு வீரர்களின் திறன் ஒப்பீடு 
செய்யப்பட்டது. இம்முறையானது துல்லியமற்று  இருந்ததால், 
பேராசிரியர் ஈலோ தாமே துல்லியம் மிகுந்த ஒரு முறையைக் 
கண்டறிந்தார்.  
   
உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) 1970ல் இம்முறையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்தியது. 1970ல் தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக 
பேராசிரியர் ஈலோ தாமே நேரடியாக கணக்கீடுகளைச்  செய்து 
சதுரங்க வீரர்களின் தர நிர்ணயத்தைச் செய்து வந்தார்.

நகர்த்தல்களைப் பதிவு செய்தல்!
----------------------------------------------------
சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு நகர்த்தலும் பதிவ செய்யப் 
படுகிறது. தொடக்கத்தில் விவரிப்புக் குறியீடு என்னும் 
(Descriptive Notation) ஒவ்வொரு நகர்த்தலையும் நீட்டி முழக்கி 
விவரிக்கும் குறியீடே பயன்பட்டது. 

உதாரணமாக வெள்ளை ராணியின் பிஷப்புக்குரிய 
சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினால்,,அதை 
Pawn to Queen's Bishop 4 (PQB4) என்று பதிவு செய்ய 
வேண்டும். சர்வதேச சதுரங்க சம்மேளனம் 1980 முதல் 
விவரிப்புக் குறியீட்டைக் கைவிட்டு எளிமையான 
அல்ஜீப்ரா குறியீட்டை (algebraic notation) மேற்கொண்டது.
இதில் ஒவ்வொரு கட்டமும் தனித்துவமானது (unique).
மேலே குறிப்பிட்ட நகர்த்தலை c4 என்று குறித்தால் போதும்.            

சதுரங்கமும் கணிதமும்!
---------------------------------------
கணித விதிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட விளையாட்டே 
சதுரங்கம் ஆகும். சதுரங்கத்தை எங்கு தொட்டாலும் 
கணிதமும் அறிவியலுமே பொலிந்து நிற்கும். 
சதுரங்க நிபுணர்களும்  ஒருவகையில் கணித நிபுணர்களே!
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

2010 ஆகஸ்டில் ஹைதராபாத்தில் 40 கணித நிபுணர்களுடன் 

ஒரே நேரத்தில் (simultaneously) விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கம் விளையாடினார். சர்வதேச கணித நிபுணர்களின் காங்கிரஸ் 

(International Congress of  Mathematicians) இப்போட்டிக்கு ஏற்பாடு 

செய்திருந்தது. 35 கணித நிபுணர்களும் இன்போசிஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர்கள் 5 பேரும் ஆக மொத்தம் 40 பேருடன் ஒரே நேரத்தில் ஆனந்த் விளையாடினார். 


போட்டியின் முடிவில் ஆனந்த் 39.5 புள்ளிகள் பெற்றிருந்தார்.

ஆனந்துடன் விளையாடிய 40 கணித நிபுணர்களில் 39 பேர் தோல்வி அடைந்தனர். கணித மேதையான டி ஸ்ரீகர் (T Srikar) என்னும் 14 வயதுச் சிறுவனுடன் மட்டும் ஆனந்த் டிரா செய்தார்.


சதுரங்கக் காய்களின் நகர்வுகள் கணித விதிகளுக்கு உட்பட்டவையே

சதுரங்கத்தில் இரண்டு பிஷப்புகளை வைத்துக்கொண்டு 

எதிரி அரசனைச் சிறைப்பிடிக்க முடியும். ஆனால் இரண்டு 

குதிரைகளை வைத்துக்கொண்டு சிறைப்பிடித்தல் இயலாது.

இவை கணித ரீதியாக  நிரூபிக்கப்பட்ட உண்மைகள். 

சதுரங்கத்தில் இருந்து கணிதத்தைப் பிரிக்க இயலாது. 

இன்று சதுரங்கத்தில் கணினியின் பயன்பாடு வரம்பற்ற 

விதத்தில் அதிகரித்து விட்டது. உயிருள்ள மனிதனுடன் 

உயிரற்ற கணினி சதுரங்கம் ஆடுகிறது இயல்பாகி விட்டது.

மனிதனையும் வெல்கிறது கணினி. ஐந்து முறை உலக சாம்பியனாக 

இருந்த ஆனந்த் மற்றும்  பாபி பிஷர், காரி காஸ்பரோவ், மாக்னஸ் 

கார்ல்சன் போன்ற சதுரங்க சாம்பியன்கள்  மனிதக் கணினிகளாக 

(human computers) இருந்து வருகின்றனர். 


இமானுவேல் லஸ்கர் (Emanuel Lasker 1868-1941) என்னும் ஜெர்மன் 

கணித மேதை சதுரங்க வீரரும் ஆவார். இவர் 1894 முதல் 1921 வரை 

27 ஆண்டுகள் உலக சதுரங்க சாம்பியனாக இருந்தார்.


டாக்டர் மாக்ஸ் ஊவ் (Dr Max Euwe 1901-1981) என்னும் நெதர்லாந்து நாட்டின் 

கணித மேதை 1935-37ல் உலக சதுரங்க சாம்பியனாக இருந்தார்.

மேலும் இவர் 1970 முதல் 1978 வரை 8 ஆண்டுகள் FIDE அமைப்பின் தலைவராகவும் இருந்தார். இவ்வாறு கணிதமும் சதுரங்கமும் 

செம்புலப் பெயல்நீர் போல ஒன்றிக் கலந்துள்ளன. 


மின்னல் வேகச் சதுரங்கம்!

------------------------------------------

தற்காலத்தில் சதுரங்கம் மூன்று வேறுபட்ட வடிவங்களில் (three formats)

ஆடப்படுகிறது.

1) செவ்வியல் சதுரங்கம்  (Classical Chess)

2) விரைவுச் சதுரங்கம்  (Rapid Chess)

3) மின்னல் சதுரங்கம் (Blitz Chess) 


இம்மூன்று வடிவங்களையும் பிரிப்பது அவற்றுக்கு 

வழங்கப்படும் கால அளவு மட்டுமே.வேறெந்த வேறுபாடும் 

கிடையாது. இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப் 

பட்டது செவ்வியல் ஆட்டம் பற்றியே. இதற்கான 

கால அளவு ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் பின் வருமாறு;-

முதல் 40 நகர்த்தல்களுக்கு 120 நிமிடம்.

அடுத்த 20 நகர்த்தல்களுக்கு 60 நிமிடம்.

பின் ஆட்டம் முடியும்வரை 15 நிமிடம்.

61ஆவது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 

30 வினாடி.


FIDE நடத்தும் விரைவு வடிவ ஆட்டங்களின் (rapid chess ) கால அளவு 

பின்வருமாறு:- ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 15 நிமிடம்.

அத்துடன் முதல் நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு 

நகர்த்தலுக்கும் 10 வினாடி.


FIDE நடத்தும் மின்னல் ஆட்டங்கள் உண்மையிலேயே 

(blitz chess) மின்னல் வேகத்தில் நடப்பவையே. அதற்கான 

கால அளவு வருமாறு:- ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 

3 நிமிடம். அத்துடன் முதல் நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு 

நகர்த்தலுக்கும்  2 வினாடி.


 மும்பையைச் சேர்ந்த அனைத்துலக மாஸ்டரான சாகர் ஷா   

சதுரங்க இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார். ஐந்து லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டு இயங்கும் "Chess Base India" என்னும் இவரின் இணையதளம் FIDEஇடமிருந்து ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்று, உலக சாம்பியன் போட்டியை ஒளிபரப்பி வருகிறது. இதை யாரும் இலவசமாகப் 

பார்க்கலாம். இங்கு கார்ல்சன் (எதிர்) நெப்போ ஆட்டங்களுக்கு 

இந்தியில் நேரடி வர்ணனை சதுரங்க மாஸ்டர்களால் 

அளிக்கப் படுகிறது. ஒரு காலத்தில் தந்தக் கோபுரத்து 

விளையாட்டாக இருந்த சதுரங்கம் இன்று வீதிக்கு இறங்கி 

வந்து எல்லோருக்கும் எட்டுகிறது.

*******************************************************

பின்குறிப்பு:

வாசகர்கள் The Queen's Gambit என்னும் ஆங்கிலத் 

தொலைக்காட்சித் தொடரைப் பார்க்கலாம். 

சதுரங்கத்தில் குழந்தை மேதையான ஒரு அனாதைச் 

சிறுமியின் கதை. The Queen's Gambit என்றால் ராணியின் 

பலிப்பொருள் ஏற்பு என்று பொருள். இது ஒரு சதுரங்கத் 

திறப்பு ஆகும் (chess opening).

----------------------------------------------

  






     
   
  
 
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக