புதன், 22 டிசம்பர், 2021

போற்றுதலுக்குரிய சுஜாதா!
-------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
1970களில் சுஜாதா எழுதத் தொடங்கினார்.
எழுதியது அனைத்துமே அறிவியல்தான்.
அக்காலத்தில் பெ நா அப்புசாமி மட்டுமே தமிழில்
அறிவியலை எழுதிக் கொண்டிருந்தார்.கலைக்கதிர்
என்ற அறிவியல் பத்திரிகை கோவையில் இருந்து
வந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் அறிவியல் 
எழுத்து என்பது இவ்வளவுதான். அதாவது கடலில் 
காயம் கரைத்த கதைதான்.

இந்த நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் 
போட்டவர் சுஜாதா. வெகுஜன ஏடுகள் அனைத்தையும் 
தம் எழுத்தாற்றலால் ஆக்கிரமித்துக் கொண்டு, 
அங்கெல்லாம் அறிவியலை எழுதினார். அவரின் 
துப்பறியும் கதைகள் அனைத்தும் அறிவியலே.

அறிவியல் எழுத்து என்பது மரபார்ந்த இலக்கிய 
எழுத்தில் இருந்து வடிவம் உள்ளடக்கம் இரண்டிலும் 
மாறுபட்டது. ஜெயகாந்தன், தி ஜானகிராமன் 
போன்றோரின் எழுத்து போன்று அறிவியல் எழுத்து 
அமையாது. அறிவியல் எழுத்தானது 
ஒரு துடிப்பு மிகுந்த நடையைக் கோருவது.

ஆதெள கீர்த்தனாரம்பத்திலே என்று பாகவதர்கள் 
ஒவ்வொரு  கதாகாலட்சேபத்தையும் தொடங்குவது 
போல எழுதப்படும் நத்தை வேக எழுத்து 
அறிவியலுக்குப் பொருந்தாது. எனவே 
வேகமும் துடிப்பும் நிறைந்த ஒருவகையான பாய்ச்சல் 
நடையை (leap style) சுஜாதா அறிமுகப் படுத்தினார்.

"சற்று முன் ஐம்பது காசுக்கு வாங்கிய மக்கள் 
குரலில்  அந்தப் பார்வையற்ற பிச்சைக்காரன் 
மூழ்கி இருந்தான்"  என்று வர்ணிப்பார் சுஜாதா. 
ஒரு பத்தி முழுவதும் சொல்ல  வேண்டிய செய்தியை 
ஒரே வரியில் சொல்லி இருப்பார்.
(மக்கள் குரல் என்பது 1970, 80களில்வெளிவந்த 
ஒரு மாலைச்  செய்தித்தாள்).

ஒரு கதையில் நெரிசலும் ஜன சந்தடியும் நிறைந்த 
ஒரு நகரத்தை இப்படி வர்ணிப்பார்: "நகரின் இயக்கம்
ஒருவித பிரௌனியன் இயக்கம் போன்று இருந்தது".

பிரௌனியன் இயக்கம் ( Brownian Motion) என்றால் 
என்ன? அடுப்பில் உலை வையுங்கள். உலைநீர் 
நன்கு கொதித்ததும் அதில் ஒரு பிடி அரிசியைப்
போடுங்கள். உலை கொதிக்கக் கொதிக்க,
அரிசியானது உலைப்பானையின் உள்ளே
தாறுமாறாக மேலும் கீழும் சென்று கொண்டிருக்கும்.
 அரிசியின் இந்த இயக்கம் ஒருவித பிரௌனியன் 
இயக்கம்தான். (Brownian motion).

போகிற போக்கில் எழுதிச் சென்று விடுவார் சுஜாதா.
ஆனால் அதைப் புரிந்து கொள்ளவும், புரிந்து 
கொண்டு ரசிக்கவும் குறைந்த அளவேனும் 
அறிவியல் அறிவு வேண்டும்.

போட்டித்தேர்வு எழுதப்போகும் ஒருவன் 
ஒரு நோட்ஸ் (guide) வாங்கக் கடைக்குப் போகிறான். 
ஹோலோகிராம் (hologram) முத்திரை உள்ள 
நோட்சைப் பார்த்து வாங்குகிறான். இன்று 
ஹோலோகிராம் பலரும் அறிந்த ஒன்று. 
ஆனால் 80களிலேயே ஹோலோகிராம் பற்றி 
எழுதியவர் சுஜாதா. அவரின் கொலையுதிர்காலம் 
நாவலில் தமிழ்ச் சமூகம் அதுவரை அறிந்திராத 
ஹோலோகிராம் பற்றி விளக்கி இருப்பார்.

வெட்ட வெளியில் சலனத்துடன் கூடிய 
முப்பரிமாண உருவத்தை (3D figure in motion) 
உருவாக்கிக் காட்ட முடியும் என்று விளக்கினார் 
சுஜாதா. நள்ளிரவில் வெட்ட வெளியில்
பேய் நடமாடுவது போன்று ஒரு தோற்றத்தை 
ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியது 
பேய் பிசாசு பற்றிய மூட நம்பிக்கைகளுக்கு
கொள்ளி வைத்தது.

அறிவியலுக்கென்றே உள்ள சிற்றிதழான 
கலைக்கதிரில் அல்லது 'அறிவியல் ஒளி'யில் 
கட்டுரை எழுதுவது போன்று
பெரும் எண்ணிக்கையில் வாசகர்களைக் கொண்ட
வணிக இதழ்களான ஆனந்த விகடன் குமுதம் 
போன்றவற்றில் எழுதுவது இயலாது. 

அறிவியல் வாசகர்களுக்கு மட்டும்
என்று நடத்தப்படும் சிற்றிதழ்கள் தெரிவு செய்யப்பட்ட
வாசகர்களைக் கொண்டவை (selected audience). இவற்றில்
எழுதுவோர் அறிவியலை ஆழமாகச் சொல்ல முடியும்.
வணிக இதழ்களோ தற்போக்கான வாசகர்களை 
(random audience) கொண்டவை. இவற்றில் ஒரு அளவுக்கு 
மேல் அறிவியலைச் சொல்ல இயலாது.

வணிக இதழ்களின் இந்த வரம்புக்குள் நின்று 
கொண்டும் அவ்வப்போது சற்றே இந்த வரம்பை 
மீறியும் அறிவியலைப் பாமரனுக்கும் எடுத்துச் 
சென்றவர் சுஜாதா. கணிதம், தர்க்கம்
பயின்றோர் மட்டுமே அறிந்த பல்வேறு தர்க்கப் 
புதிர்களை வணிக இதழ்களில் அவர் எழுதி வந்தது 
அறிவியல் படித்திராத பெருந்திரளான வாசகர்களை 
அறிவியலின்பால் ஈர்த்தது..

உதாரணமாக, சிறைக்கைதியின் குழப்பம் 
(prisoner's dilemma) என்ற புகழ் பெற்ற புதிரை அவர் 
விளக்கி எழுதியதைக் குறிப்பிடலாம். இது 
விளையாட்டுக் கோட்பாட்டில்  (game theory)
வரும் புதிர் ஆகும்.

இரண்டு குற்றவாளிகளை காவல்துறை சிறையில்
அடைத்துள்ளது. அவர்களின் குற்றத்தை நிரூபிக்கும்
சாட்சியங்கள் இல்லை. அவர்களாகவே ஒத்துக் கொண்டால்தான்
அவர்களைத் தண்டிக்க இயலும். இந்நிலையில் அவர்களாகவே
குற்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்யும் நோக்கில் காவல்துறை
அவர்களுக்கு பின்வரும் வாய்ப்பை வழங்குகிறது. ஒருவருக்கு
வழங்கப்பட்ட வாய்ப்பு பற்றி மற்றவருக்குத் தெரியாது.

1. ஒருவர் மற்றவரைக் காட்டிக் கொடுத்தால், காட்டிக் கொடுத்தவருக்கு
விடுதலை; மற்றவருக்கு ஏழாண்டு சிறை.
2. இருவருமே மற்றவரைக் காட்டிக் கொடுத்தால், இருவருக்கும்
ஏழாண்டு சிறை.
3. இருவருமே ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மறுத்து
விட்டால், இருவருக்கும் ஆளுக்கு ஓராண்டு சிறை.

இந்தச் சூழ்நிலையில் கைதிகள் முடிவெடுக்க வேண்டும்.
கைதிகள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதே கைதியின்
குழப்பம் (prisoner's dilemma) என்னும் புதிர் ஆகும்.
இருவருமே குறைந்த அளவு தண்டனை பெற வேண்டுமெனில்,
ஒருவர் மற்றவருடன் ஒத்துழைத்து ஒருவரை ஒருவர்
காட்டிக் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

இன்றும்  பலரும் அறிந்திராத இந்தப் புதிரை கால் நூற்றாண்டு
காலத்துக்கு முன்பே தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துச்
சொன்னவர் சுஜாதா. இது ஏதோ கல்வியியல் சார்ந்த
வெறும் ஆர்வமூட்டும் புதிர் (academic puzzle) என்று கருதுவது தவறு.
அணுஆயுத நாடுகள் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளைப்
பயன்படுத்தாமல் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம்
கைதியின் குழப்பம் என்னும் புதிர் தரும் இந்தப் படிப்பினைதான்.

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்
கிறிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) 2008ல் வெளிவந்த
டார்க் நைட் (Dark Knight) திரைப்படத்தின் உச்சக் காட்சியாக
கைதியின் குழப்பம் புதிர் அமைந்திருப்பதை அதைப் பார்த்த
ஆங்கிலம் கற்ற  வாசகர்கள்  அறிந்திருக்கலாம். எனினும்
ஆங்கிலம் அறிந்திராத வாசகர்களுக்கும் இப்புதிரை
25 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப் படுத்தியவர் சுஜாதா.

இவ்வாறு சாமானியனிடமும் அறிவியலைக் கொண்டு சென்றவர்
சுஜாதா. தமிழ்ச் சமூகத்தின் மூலை முடுக்குகள்
இண்டு இடுக்குகளிலும் அவர் அறிவியலைக் கொண்டு
சென்றார். தமக்கென ஒரு ராஜபாட்டையை அவர்
உருவாக்கிக் கொண்டார்.

சுஜாதா ஆகச்சிறந்த அறிவியல் பரப்புநர் (science communicator)
ஆவார். அவரின் அறிவியல் பரப்புப் பங்களிப்பை
அகல உழுதலுக்கு (extensive cultivation) ஒப்பிடலாம்.
ஆயின் ஆழ உழுதலை (intensive cultivation) அவர்
மேற்கொள்ளவில்லையா என்றால் பெருமளவுக்கு இல்லை
என்பதே உண்மை.

இது எவ்வாறு நிகழ்ந்தது? ஆழ உழுதல், அகல உழுதல் என்னும்
இரண்டில் சுஜாதா அகல உழுதலையே தேர்வு செய்தார்.
இத்தேர்வு அவரின் சொந்த விருப்பப்படி அமைந்தது என்று
கூறுவதை விட, அவர் எழுதத் தொடங்கிய காலத்திய
சமூக நிர்ப்பந்தம் என்பதுதான் உண்மை. பரந்து பட்ட
தமிழ்ச் சமூகம் 1970களில் ஓர் அறிவியல் அறிவு குறைந்த
(scientifically illiterate) சமூகமாகத்தான் இருந்து வந்தது.

எனவே பொதுச்சமூகத்தின் புரிதல் மட்டத்தில் இருந்துதான்
எவர் ஒருவரும் தொடங்க இயலும். அப்போதுதான்
அறிவியல் எழுத்து மொத்த சமூகத்தையும் சென்றடையும்.
1970களில் பெரும் அக்கறைக்குரிய (serious writing) அறிவியல்
எழுத்தை சுஜாதா தேர்ந்தெடுத்து இருப்பார் எனில், அவரால்
எட்டுக்கோடித் தமிழர்களையும் ஒருபோதும் சென்றடைந்து இருக்க
இயலாது (The reach would have been poor). பள்ளி கல்லூரிகளின்
நூலகங்கள் ஆய்வகங்களைத் தாண்டி, முச்சந்தியில்
நின்று கொண்டிருக்கும் குப்பன் சுப்பனிடமும் அறிவியலை
அவரால் கொண்டு சேர்த்திருக்க இயலாது.

சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை (scientific temper) ஏற்படுத்துவது
ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச்
சட்டம் 51A (h) கூறுகிறது. (to develop the scientific temper, humanism and the
spirit of inquiry and reform). அச்சு அசலாக இதைப் பின்பற்றி தமிழ்ச்
சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை ஏற்படுத்தியவர் சுஜாதா.

உலக அளவில் அறிவியல் புனைவு (science fiction) என்னும்
இலக்கிய வகை ஐரோப்பாவில்தான் முதலில் எழுந்தது.
ஹெச் ஜி வெல்ஸ் (H G Wells 1866-1946) என்னும் ஆங்கிலேயரும்
ஜூல்ஸ் வெர்ன் (Joules Verne 1828-1905) என்னும் பிரெஞ்சு
நாவலாசிரியரும் அறிவியல் புனைவுகளை முதன் முதலில்
எழுதினர். அப்போது அறிவியல் புனைவு என்னும் சொல்லே
உருவாகவில்லை. அறிவியல் வசீகரம் (science romance) என்றுதான்
ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய கண்ணுக்குத் தெரியாதவன்
(The invisible man) என்ற அறிவியல் புனைவு வர்ணிக்கப் பட்டது.
காலப்போக்கில், இருபதாம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில்
அறிவியல் புனைவு என்னும் இலக்கிய வகைமை தோன்றியது.

தமிழ்ச் சூழலில் சுஜாதாவே அறிவியல் புனைவு வகைமையிலான
சிறுகதைகளைத் தொடங்கி வைத்தார். எனினும் அறிவியல்
புனைவுகளை விட அறிவியல் விளக்க எழுத்துக்களாலேயே
சுஜாதா புகழ் பெற்றார். தமிழில் அறிவியல் எழுத்தை சுமு, சுபி
என்று (சுஜாதாவுக்கு முன், சுஜாதாவுக்குப் பின்) என்று
பிரிக்கலாம்.

அவரின் தலைமைச் செயலகம், ஜீனோம்
போன்ற நூல்கள் மனித மூளையின் செயல்பாடுகளை,
உயிரின் ரகசியத்தை அனைவருக்கும் எளிமையாகப்
புரிய வைத்தன. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து
முதன் முதலில் அவரே எழுதினார். சிலிக்கன் சில்லுப் புரட்சி என்ற நூல் மூலம் கணினித் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் புரிய வைத்தார்.

மேற்கூறிய நூல்கள் யாவும் ஆழ உழுதல் வகையைச் சார்ந்த
எழுத்துக்கள். ஆம், சுஜாதா முற்றிலும் அகல உழுதலை
மட்டுமே மேற்கொண்டிருக்கவில்லை.

அவரின் கனவுத் தொழிற்சாலை என்ற நூல் திரைப்பட
உலகை அக்கு வேறு ஆணி வேறு என்பதாக அலசியது.
கற்றதும் பெற்றதும் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில்
அவர் தொடர்ச்சியாக எழுதியவை சராசரி மனிதனை
அறிவுஜீவியாக ஆக்கும் உந்துவிசையைக் கொண்டிருந்தன.
  
கவிஞர் மனுஷ்ய புத்திரன் நடத்தி வரும் உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் நூல்கள் அனைத்தையும் சிறந்த முறையில்
வெளியிட்டு வருகிறது.

தமிழ் இலக்கிய உலகிலும் சரி, தமிழ்ச் சமூகத்திலும் சரி,
சுஜாதா தமக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றாரா என்று
பார்த்தால் இல்லை என்றே கூற வேண்டும். சிறுகதைகளும்
நாவல்களும் எழுதுவோர் மட்டுமே எழுத்தளார்கள் என்ற
பத்தாம்பசலித் தனமான மதிப்பீடே தமிழ் இலக்கிய
உலகில் இன்னமும் ஆட்சி செலுத்துகிறது. எனவே புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் முதலாக ஜெயமோகன் எஸ் ராமகிருஷ்ணன்
ஈறாக உள்ள எழுத்தாளர்களின் பட்டியலில் தமிழ் இலக்கிய
உலகம் சுஜாதாவை வைக்கவில்லை. புகழ்பெற்ற திரைப்பட
இயக்குநர்களை அடுத்து கடைசியில் நிற்கும் ஓர் ஆவணப்பட
இயக்குனர் போன்றே சுஜாதா கருதப் படுகிறார்.

1980களில் சுஜாதாவுக்கு இந்திய அரசு "அறிவியல் பரப்புநர்"
என்ற தேசிய விருதை வழங்கி கெளரவித்தது. இந்த விருதை
முதன் முதலில் பெற்றவர் சுஜாதாவே. தமிழக அரசு
பத்தோடு பதினொன்றாக ஒரு கலைமாமணியை அவரிடம்
தள்ளி விட்டு ஒதுங்கிக் கொண்டது.

தமிழ் எழுத்துலகைத் தம் அறிவியலால் நிறைத்த சுஜாதாவுக்கு
தமிழக அரசு வழங்கிய அங்கீகாரம் என்ன? ஒன்றும் இல்லை.
இது சுஜாதாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அறிவியலுக்குமே
தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிதான்!

எனினும் தடைகளைத் தாண்டி அறிவியல் தேர் ஓடிக்கொண்டுதான்
இருக்கிறது. யார் அங்கீகரிக்க மறுத்தாலும், அறிவியலை
நேசிக்கும் ஒரு பெருங்கூட்டம் சுஜாதாவை இன்னும்
நேசித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவரின் மறைவுக்குப்
பின்னரும் அவர் விண்ணதிரும் முழக்கங்களுடன்
அறிவியல் ஆர்வலர்களால் போற்றப்பட்டே வருகிறார்!
****************************************************
 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக