நகலாக்க முறையில் பிறந்த டாலி!
------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
"நான் படைப்பதனால் என் பேர் இறைவன்" என்றார் கவிஞர்
கண்ணதாசன். உயிரியல் ரீதியாகப் பார்த்தால் கவிதை
உயிரற்றது. ஒரு உயிரற்ற கவிதையைப் படைத்தவரே
கடவுள் ஆகிறார் என்றால், உயிருள்ள ஒரு ஆட்டுக்குட்டியை
செயற்கையான முறையில் படைத்தவரும் கடவுள்
ஆவார் அல்லவா! அப்படித்தான் கடவுள் ஆகி விட்டார்
பேராசிரியர் அயன் வில்மட் (Ian Wilmut 1944-2023). பிரிட்டிஷ்
கருவியல் விஞ்ஞானியான (embryologist) இவர் எடின்பர்க்
பல்கலையில் துறைத்தலைவராக இருந்தவர்.
1996 ஜூலையில் அயன் வில்மட் உலகப்புகழ் பெற்றார்.
ஸ்காட்லாந்தில் உள்ள ரோஸ்லின் ஆய்வகத்தில்
(Roslin institute) அவர் தலைமையிலான கருவியல்
விஞ்ஞானிகள் குழுவினர் நகலாக்கம் (cloning) என்னும்
முற்றிலும் செயற்கையான முறையில் ஒரு செம்மறி
ஆட்டுக்குட்டியை உருவாக்கினர். இந்த நகலாக்கத்தில்
கெய்த் காம்பெல் (Keith Campbell 1954-2012) என்னும் ரோஸ்லின்
ஆய்வகத்தின் கருவியல் விஞ்ஞானி அயன் வில்மட்டுடன்
இணைந்து நகலாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.
டாலி என்னும் செம்மறி!
--------------------------------------
ரோஸ்லின் ஆய்வகக் குழுவினர் நகலாக்கம் செய்தது
பெட்டைச் செம்மறி ஆகும். அதற்கு டாலி (Dolly) என்று
பெயரிட்டனர். உலகில் நகலாக்கம் செய்யப்பட்ட
முதல் விலங்கு டாலிதான். டாலி பிறந்த தேதி: 1996 ஜூலை 5.
உலக அறிவியல் வரலாற்றில் இந்த நாள் இடம் பெற்று விட்டது.
செம்மறி ஆடு பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. ஒரு
பாலூட்டியின் உடலில் பல்லாயிரக்கணக்கான செல்கள்
உள்ளன. அவை வெவ்வேறு வகைப்பட்டவை. அவற்றுள்
இனப்பெருக்க செல்களையும் விந்தணு-கருமுட்டை
கொண்ட உயிரணு செல்களையும் தவிர்த்த ஏனைய
செல்கள் உடலியல் செல்கள் (somatic cells) எனப்படும்.
ஒரு விலங்கின் உடலியல் செல்களில் இருந்து, ஒரு
செல்லைப் போன்ற இன்னொரு செல்லையோ அல்லது
மொத்த உயிரினத்தையோ உருவாக்குவதுதான்
நகலாக்கம் ஆகும். பல்லாயிரக் கணக்கான செல்களை
உடைய ஒரு பாலூட்டி இனத்து விலங்கை உருவாக்க
கொஞ்சம் செல்கள் இருந்தால் போதும்.
நன்கு வளர்ச்சி அடைந்த ஒரு பெட்டைச் செம்மறியின்
பால் சுரக்கும் மடுவில் உள்ள செல்களில் இருந்து
டாலியை நகலாக்கம் செய்தனர். அக்காலத்தில்
டாலி பார்ட்டன் (Dolly Parton, பிறப்பு 1946) என்னும்
புகழ்பெற்ற அமெரிக்க நடிகை இருந்தார். அவர்
மார்பகங்கள் பெருத்தவர். எனவே அவரின் பெயரையே
பால் சுரக்கும் மடுவில் இருந்து உருவான டாலிக்குச்
சூட்டினர் ரோஸ்லின் ஆய்வக விஞ்ஞானிகள்.
நகலாக்கம் எப்படிச் செய்யப்படுகிறது?
--------------------------------------------------------------
டாலியின் நகலாக்கம் மறு உற்பத்திக்கான நகலாக்கம்
(reproductive cloning) எனப்படுகிறது. இதற்குப் பயன்பட்ட முறை
SCNT (Somatic Cell Nuclear Transfer) ஆகும். உடலியல் செல்லின்
உட்கரு இடமாற்றம் என்று இதற்குப் பொருள்.
டாலியின் நகலாக்கம் பின்வருமாறு செய்யப்பட்டது.
1) முழு வளர்ச்சி அடைந்த நல்ல உடல்நலம் உடைய
ஒரு பெண் செம்மறியின் பால் சுரக்கும் மடுவில் இருந்து
ஒரு உடலியல் செல் (somatic cell) எடுத்துக் கொள்ளப்
பட்டது.
2) அந்த செல்லில் இருந்து அதன் உட்கரு (nucleus) தனியாகப்
பிரிக்கப் பட்டது.
3) அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு செம்மறியின்
உடலில் இருந்து ஒரு கருமுட்டை செல் (egg cell)
எடுக்கப் பட்டது.
4) அதன் உட்கரு தனியாகப் பிரிக்கப்பட்டு அப்புறப்
படுத்தப் பட்டது. இப்போது உட்கரு நீக்கப்பட்ட
கருமுட்டை செல் மட்டும் உள்ளது.
5) அடுத்து, பால் சுரக்கும் மடியில் இருந்து பெற்ற
உட்கரு (nucleus of the somatic cell) கருமுட்டை
செல்லுக்குள் (egg cell) வைக்கப் பட்டது.
6) இந்த அமைப்பினுள் மிக மெலிதான மின்சாரம்
செலுத்தப்பட்டதும் செல் பிரிவினை (cell division) நிகழ்ந்தது.
இப்போது மூல உயிரினத்தின் (செம்மறி) அச்சு அசல்
போன்ற நகல் கரு (copy of the original embryo) கிடைத்து விட்டது.
இவ்வாறுதான் மேற்கூறிய SCNT முறை செயல்பட்டது.
7) இப்போது ஒரு செம்மறி ஆட்டை வாடகைத் தாயாகக்
கொண்டு (surrogate mother) அதன் கர்ப்பப் பைக்குள்
(uterus) நகல் கரு செலுத்தப் பட்டது.. கரு வளர்ந்து
தாய்ச் செம்மறி டாலியை ஈன்றது. இதுதான் டாலி
பிறந்த கதை.
ரோஸ்லின் ஆய்வகத்தில் அயன் வில்மட்டின் குழுவினர்
தங்களின் முதல் முயற்சியிலேயே டாலியைப்
படைக்கவில்லை. 277ஆவது முயற்சியில்தான் டாலி
பிறந்தது. டாலியின் வெற்றிக்கு முன்பு 276 முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வியில் முடிந்தன.
ஆறரை ஆண்டு வாழ்க்கை!
------------------------------------------
டாலியின் பிறப்பும் வளர்ப்பும் வாழ்க்கை
முழுவதும் ரோஸ்லின் ஆய்வகத்திலேயே நிகழ்ந்தது.
நகலாக்கம் செய்யப்பட்ட பிராணிதான் டாலி என்றபோதிலும்
மற்றப் பிராணிகளுக்கும் அதற்கும் வேறுபாடு
காணப்படவில்லை. டாலியின் பிறந்த தேதி 1996 ஜூலை 5.
என்றாலும் அதன் பிறப்பு ஏழு மாதம் கழித்து
1997 பெப்ரவரியில்தான் உலகிற்கு அறிவிக்கப் பட்டது.
பருவம் அடைந்ததும் "வெல்ஷ் மலை ஆடு"
(Welsh mountain sheep) இனத்தைச் சேர்ந்த ஒரு
ஆண் செம்மறியுடன் டாலி உறவு கொண்டது.
கர்ப்பம் தரித்தது. ஏப்ரல் 1998ல் தன் முதல்
பிரசவத்தில் டாலி ஒரு குட்டியை ஈன்றது.
1999ல் தன் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு
குட்டிகளை ஈன்றது. 2000ல் நடைபெற்ற தன்
மூன்றாவது பிரசவத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது.
ஆக மொத்தம் ஆறு குட்டிகளை ஈன்றது டாலி.
2001ன் இறுதியில் டாலிக்கு வாத நோய் (arthritis)
வந்தது. 2003ல் அதற்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது.
எனவே பெப்ரவரி 14, 2003ல் டாலி கருணைக்கொலை
செய்யப்பட்டது. டாலியின் இனத்தைச் சேர்ந்த
செம்மறிகள் பொதுவாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை
வாழ்வன. ஆனால் டாலி ஆறரை ஆண்டுகளே
வாழ்ந்தது. எனினும் அதன் இறப்புக்கு அதன்
நகலாக்கப் பிறப்பு காரணமல்ல என்று ஆய்வுகளின்
பின் ரோஸ்லின் ஆய்வக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
நகலாக்க வரலாறு!
-----------------------------
டாலிக்கு முன்னரும் நகலாக்க முயற்சிகள் நடைபெற்றன.
அதற்கு ஒரு நெடிய வரலாறு உள்ளது. இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஜெர்மனியைச்
சேர்ந்த உயிரியலாளர் ஹான்ஸ் பெமான்
(Hans Spemann, embryologist, 1869-1941) கருவியல் ஆய்வுகளில்
தீவிரமாக ஈடுபட்டார். 1935ஆம் ஆண்டிற்கான மருந்தியல்
நோபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் தவளை இனத்தைச்
சேர்ந்த ஒரு பிராணியை நகலாக்கம் செய்திருந்தார்.
இவர் கையாண்ட முறை உட்கரு இடமாற்ற (nuclear transfer)
முறை அல்ல. அது கரு பிரிதல் (embryo splitting) முறை ஆகும்.
தற்காலத்திலும் நகலாக்கம் தன் செல்வாக்கை இழக்கவில்லை.
அண்மையில் 2012ஆம் ஆண்டிற்கான மருந்தியல் நோபல் பரிசைப்
பகிர்ந்து கொண்டவர் ஜான் பெர்ட்ரண்ட் கர்டான்
(John B Gurdon born 1933) என்னும் பிரிட்டிஷ் விஞ்ஞானி.
இவர் 1958ஆம் ஆண்டிலேயே ஒரு வகை ஆப்பிரிக்கத்
தவளையின் செல்களில் இருந்த DNAவைப் பயன்படுத்தி
உட்கரு இடமாற்றம் செய்தவர். உட்கரு இடமாற்ற முறையின்
முன்னோடி இவரே!
நகலாக்கம் செய்யப்பட்ட விலங்குகள்!
----------------------------------------------------------
டாலியின் நகலாக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு
விலங்குகள் நகலாக்கத்திற்கு உள்ளாயின.
பன்றி, வெள்ளாடு, எலி, நாய், பூனை, குரங்கு, குதிரை,
கோவேறுகழுதை, ஒட்டகம் ஆகிய விலங்குகள்
நகலாக்கம் செய்யப்பட்டன.
ஒட்டகம் மிகப்பெரிய விலங்கு. ஒரு சராசரி ஒட்டகம்
300 கிகி முதல் 1000 கிகி வரை எடை இருக்கும்.
என்றாலும் இவ்வளவு பெரிய விலங்கு 2009ல்
துபாய் ஆய்வகத்தில் முதன் முதலாக நகலாக்கம்
செய்யப்பட்டது. 2009 ஏப்ரலில் பிறந்த இந்த ஒட்டகம்
2020 ஜனவரியில் இறந்தது. முன்னதாக 2015 நவம்பரில்
இந்த நகலாக்க ஒட்டகம் இயற்கையான முறையில்
கருத்தரித்து ஒரு குட்டியை ஈன்றது. இதனால் நகலாக்க
விலங்குகளும் மற்ற விலங்குகளைப் போல்
இயற்கையாகக் கருத்தரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டது.
மனித நகலாக்கம் நிகழுமா?
--------------------------------------------
தவளை, எலி முதலிய சிறிய பிராணிகளில் தொடங்கி
குதிரை, ஒட்டகம் என்னும் பெரும் விலங்குகள் வரை
தொடர்ந்த நகலாக்கம் எங்கு போய் முடியும்?
மனித நகலாக்கத்தில்தான் போய் முடியும். அப்படித்தான்
முடிந்தது!
மனித நகலாக்கம் என்ற கருத்தை முதன் முதலில்
முன்மொழிந்தவர் ஜே பி எஸ் ஹால்டேன் (J B S Haldane 1892-1964)
என்னும் உயிரியல் விஞ்ஞானிதான். இவர் பிரிட்டனில் பிறந்து
ஆக்ஸ்போர்டில் கல்வி கற்று இந்தியாவில் வாழ்ந்தவர்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் 1964ல் மறைந்தார்.
1963ல் ஒரு கருத்தரங்கில் பேசும்போது மனித நகலாக்கம்
சாத்தியம் என்ற கருத்தை அவர் முன்மொழிந்தார். அதுவரை
வேளாண்மையில் மட்டும்தான் நகலாக்கம் என்ற பதம்
புழக்கத்தில் இருந்தது.
பின்னர் 1998ல் அமெரிக்காவின் மாசச்சூசெட்சில உள்ள
"அட்வான்ஸடு செல் டெக்னாலஜி" என்னும் ஆய்வகத்தைச்
சேர்ந்த சில விஞ்ஞானிகள் மனித நகலாக்கத்தில்
தாங்கள் வெற்றி அடைந்து விட்டதாக அறிவித்தனர்.
ஒரு மனிதனின் காலில் உள்ள செல்லை எடுத்து, அதன்
உட்கருவைப் பிரித்ததெடுத்து, அதை உட்கரு நீக்கப்பட்ட
ஒரு பசுவின் முட்டை செல்லுக்குள் (egg cell) செலுத்தி,
உட்கரு இடமாற்ற முறை (SCNT) மூலம் மனிதக் கருவை
உருவாக்கி விட்டதாகவும் அறிவித்தனர். அப்படி
நகலாக்கம் செய்யப்பட்ட மனிதக்கரு 12 நாட்கள்
கழித்து அழிக்கப் பட்டு விட்டதாகவும் அவர்கள்
அறிவித்தனர். மானுடம் அதிர்ந்து நின்றது.
நகலாக்கம் அறமற்றது!
-----------------------------------
மனித நகலாக்கம் அறத்தின்பாற்பட்டது அல்ல என்ற
குரல்கள் உலகெங்கும் ஓங்கி ஒலித்தன. அநேக நாடுகள்
மனித நகலாக்கத்திற்குத் தடை விதித்தன. 2018ஆம்
ஆண்டு நிலவரப்படி, இதற்கு 70 நாடுகள் தடை
விதித்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
இச்சூழலில் 2005ல் ஐநா சபை ஒரு பிரகடனத்தை வெளியிட்டது.
மனிதர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் மனித
மாண்புக்கு எதிராகவும் இருக்கும் மனித நகலாக்கத்தைத்
தடை செய்யுமாறு உறுப்பு நாடுகளை ஐநா சபை
கேட்டுக் கொண்டது. எனினும் இந்தப் பிரகடனத்தை
ஐநாவின் பல உறுப்பு நாடுகள் பின்பற்றவில்லை.
இது கட்டுப்படுத்தக்கூடிய பிரகடனமும் அல்ல
(Nonbinding declaration).
உலக நாடுகள் தங்களுக்கிடையே ஒப்பந்தங்களைச்
செய்து கொண்டு நகலாக்கச் செயல்பாடுகளை
முறைப்படுத்த (regulatory measures) முன்வர வேண்டும்.
(நகலாக்கத்தின் கடவுள் அயன் வில்மட் கடந்த
செப்டம்பர் 10, 2023ல், தமது 79ஆவது வயதில் மறைந்தார்.
அவருக்கு இக்கட்டுரை மூலம் அஞ்சலி செலுத்துவோம்!
அவரின் புகழ் நிலைக்கட்டும்!
**************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக