வெள்ளி, 30 டிசம்பர், 2022

கெடுக சிந்தை! கடிதிவர் துணிவே!
-------------------------------------------------------
பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார் 
ஹீராபென் அம்மையார் நூறாண்டு நிறைவாழ்வு 
வாழ்ந்து இன்று (30.12.2023) இயற்கை எய்தியுள்ளார்.

இன்று அதிகாலை இறந்த தமது தாயரின் உடலை 
சில மணி நேரம் கூட பொதுமக்களின் அஞ்சலிக்கு 
வைக்காமல், காலை 9.30 மணிக்கே தகன மேடைக்கு
கொண்டுசென்று எரியூட்டி விட்டார் பிரதமர் மோடி.

குஜராத் கடற்கரையில் தமது தாயாரின் பூதவுடலைப் 
புதைத்து ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி இருக்க 
வேண்டும் மோடி. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாகத் 
தொடர்கிறது பாஜக ஆட்சி. அண்மைய தேர்தலில் 
குஜராத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களைக் 
கைப்பற்றி ஏழாவது முறையாக ஆட்சியைத் தக்க 
வைத்துக் கொண்டுள்ளது பாஜக.

எனவே குஜராத் கடற்கரையில் மோடியின் தாயாருக்கு 
ஒரு சமாதியும் நினைவுச் சின்னமும் எழுப்புவது
மிக மிக எளிதில் முடிந்து விடும் வேலை. குஜராத் 
என்னும் மாநிலம் மோடிக்கும் பாஜகவுக்கும் பட்டா 
போட்டுக் கொடுக்கப்பட்ட இடம். என்றாலும் 
தமது தாயாரின் சமாதி நினைவுச் சின்னம் போன்ற 
நினைப்புக்கே இடம் கொடுக்கவில்லை 
மோடி. பொழுது விடிந்த மூன்றே மணி நேரத்தில் 
தமது தாயாரின் உடலுக்கு எரியூட்டி விட்டார்,

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மகத்தான மனிதனை 
நானோ வேறு யாருமோ கேள்விப்பட்டதே இல்லை.
கருணாநிதி குடும்பத்துக்கு லட்சக் கணக்கான ஏக்கர் 
சொந்த நிலமே இருந்தபோதிலும், கருணாநிதியைப் 
புதைப்பதற்கு மெரீனா கடற்கரைதான் வேண்டும் 
என்று மானமே இல்லாமல் கெஞ்சிக் கூத்தாடி
அரசாங்க இடத்தில் கருணாநிதியைப் 
புதைத்தனர் ஸ்டாலின் போன்றோர்.

புதுடில்லியில் இந்திரா ராஜிவ் நினைவிடங்களில் 
மறைந்த காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவைப்  
புதைக்க சோனியா காந்தி அனுமதிக்கவில்லை.
எனவே நரசிம்மராவின் சடலம் அவரின் சொந்த 
மாநிலமான ஆந்திரத்துக்குக் கட்டாயத்துடன் 
கொண்டு செல்லப்பட்டது.

திமுகவில் உள்ள ஒரு பகுதிச் செயலாளரின்
வைப்பாட்டி செத்துப் போய்விட்டால்கூட ஊரே 
அல்லோல கல்லோலப்படும். பந்த்தும் கடையடைப்பும்
கட்டாயமாக்கப்பட்டு இருக்கும். ஆட்டோ ஓடாது.
இதுதான் நாட்டு நடப்பு!

ஆனால் பிரதமர் மோடி, தமது தாயாரின் உடலுக்கு 
பொதுமக்களின் அஞ்சலியைக்கூட அனுமதிக்காமல் 
காலை 9 மணிக்கெல்லாம் சடலத்துக்கு 
எரியூட்டி விட்டார். இதையெல்லாம் எந்த ஒரு சராசரி 
மனிதனாலும் செய்ய இயலாது. மாமனிதனால்,
மகோன்னதத்தின் சிகரத்தில் ஏறியமர்ந்து கொண்ட 
மனிதனால்தான் இப்படி அசாதாரணமாக நடந்து 
கொள்ள இயலும்.

மோடி பற்றுக்களையெல்லாம் விட்டவர்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு 
என்ற குறளில் ஒரு மனிதனை, பற்றுகளை 
விட்டொழித்த ஒரு மாமனிதனைக் காட்டுவார் 
வள்ளுவர். வள்ளுவர் காட்டும் அம்மாமனிதன் வேறு 
யாருமல்ல, மோடிதான்!

பகவத் கீதை கூறும் ஸ்திதப்பிரக்ஞன் வேறு யாருமல்ல.
மோடிதான். மோடி இருந்த சூழ்நிலையில் வேறு 
எவரேனும் இருந்தால், மோடி போன்று நடந்து கொள்வரோ 
என்றால் இல்லையென்றே பதில் கிட்டுகிறது.

பாரத வரலாற்றில் மோடிக்கு நிகராகக் கூறப்படத் 
தக்கவர் ஆதி சங்கரர் மட்டுமே. காசியில் இருந்து 
திரும்பும்போது, தம் அன்னைக்கு முடிவு நெருங்குகிறது 
என்பதை உணர்ந்தார் ஆதி சங்கரர். எனவே காலடி 
வந்தடைந்தார். பெற்ற தாய் இறந்ததும் அவருக்குரிய 
ஈமக்கி கிரியைகளை செய்தார் ஆதிசங்கரர். இதைத்தான் 
அப்படியே ரிப்பீட் செய்துள்ளார் மோடி.
************************************************
பின்குறிப்பு:
IQ குன்றியவர்கள் பின்னூட்டம் இட வேண்டாம்
என்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
*************************************************
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே:
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;
5
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
10
ஒரு மகன் அல்லது இல்லோள்,
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!
திணை வாகை; துறை மூதில் முல்லை.
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
 
 
   
 

 
  

 


     
  

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக