வெள்ளி, 30 டிசம்பர், 2022

 ரிமோட் EVM வரப்போகிறது!

இங்கிருந்து கொண்டே தங்கள் சொந்த ஊரில் 

நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

-------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------

பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்குப் பிழைக்க 

வந்திருப்பவர்கள் ஒரு கணக்கின்படி 

5 லட்சம் பேர். இந்த வெளியூர்த் தொழிலாளர்களால் 

தங்கள் சொந்த ஊரில் தேர்தல் 

நடக்கும்போது வாக்களிக்க முடியவில்லை.


வாக்களிப்பதற்காக ஒரு வார காலம் லீவு எடுத்துக் 

கொண்டு, தங்கள் சொந்த ஊருக்குச் சென்று, 

வாக்களித்து விட்டு மீண்டும் தமிழ்நாடு 

திரும்புவதெல்லாம் மிகவும் கடினமான காரியங்கள்.  

எனவே இத்தகைய தொழிலாளர்கள் தங்கள் ஊரின் 

தேர்தல்களில் வாக்களிப்பதில்லை.


இதன் விளைவாக எந்த ஒரு தேர்தலிலும் 

சராசரியான வாக்குப்பதிவு பொதுவாக 

70 சதவீதம் என்ற அளவில் அடங்கி விடுகிறது.

மிகச்சசிறந்த வாக்குப்பதிவு என்றபோதிலும் அது 

70 சதவீதம் என்ற அளவில்தான் நீடிக்கிறது.


ஆக இந்தியாவின் தேர்தல்களில் சராசரியாக 

30 சதவீதம் பேர் வாக்களிப்பதில்லை என்ற 

உண்மை முகத்தில் அறைகிறது. வாக்களிப்போரின் 

சதவீதத்தை அதிகரிப்பதன் மூலமாகத்தான் 

ஜனநாயகத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க 

இயலும். இல்லையேல் ஜனநாயகம் என்பது 

பெயரளவுக்குத்தான் என்றாகி விடும்.


இந்நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்துள்ள 

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களின் 

சொந்த ஊரின் தேர்தல்களில் பங்கேற்று 

வாக்களிக்க வாய்ப்பளிக்கும் விதமாக 

ரிமோட் வாக்குப்பதிவு முறை அறிமுகப் 

படுத்தப் படுகிறது. இதற்கான வாக்குப் 

பதிவு எந்திரம் ஆர்விஎம் (RVM = Remote Voting Machine)

எனப்படுகிறது.


எதிர்வரும் ஜனவரி 16, 2023 அன்று இந்த ரிமோட் 

EVMகளின் செயல்முறை விளக்கம் அரசியல் கட்சிகளின்

பிரதிநிதிகளுக்கு நிகழ்த்திக் காண்பிக்கப் 

படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் 

அறிவித்து உள்ளது. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 

அரசியல் கட்சிகளான 65 கட்சிகளுக்கு ( 8 தேசியக் 

கட்சிகள் மற்றும் 57 மாநிலக் கட்சிகளுக்கு)

செயல்முறை விளக்க நிகழ்வில் பங்கேற்குமாறு 

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் 

ராஜிவ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

**************************************************** 

       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக