புதன், 7 டிசம்பர், 2022

உடன்கட்டை ஏறும் வழக்கம் தமிழ்ப் பெண்களிடம் 
இல்லை! அனந்த கோடி இலக்கியச் சான்றுகள்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
காவிரியில் புனல் விழா! பெருவெள்ளம்! கரிகால் 
பெருவளத்தானின் மகள் ஆதிமந்தி. அவளின் 
கணவன் ஆட்டன் அத்தி! அவன் ஆடல் வல்லான்
என்பதால் ஆட்டன் ஆனான்.  

காவிரியில் மூழ்கி மாண்டு போனான் அத்தி!
தன் கணவனைத் தேடி ஊரெங்கும் அலைகிறாள் 
ஆதிமந்தி. அவளின் சோகம் ஒரு சிறு பாடலாய் 
சங்க இலக்கியத்தில் பதிவாகி உள்ளது.

சங்க இலக்கியம் என்றால் மொத்தம் 18 நூற்கள்.
பத்துப் பாட்டும் எட்டுத்தொகையுமே சங்க 
இலக்கியம் ஆகும். ஆதிமந்தியின் பாடம் 
சங்க இலக்கியத்தில் எந்த நூலில் உள்ளது என்று 
எவருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் 
சரியான விடை அளிக்கவும்.

இனி பாடலைப் பார்ப்போம்.

மள்ளர் குழீஇய விழவி னானும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.   

தன் கணவனை இழந்த ஆதிமந்தி அரச மகள்.
கரிகால் பெருவளத்தானின் மகள். 
தன கணவனை இறந்ததும் அவள் உடன்கட்டை 
ஏறிவிடவில்லை. ஏனெனில் அக்காலத்தில் 
உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை.

கடையேழு வள்ளல்களில் ஒருவன் பாரி.
மூவேந்தர் அவனை வென்றனர். பாரி 
இறந்தான். பாரியின் மனைவியர் உடன்கட்டை 
ஏறவில்லை. உடன்கட்டை ஏறியதாக 
கபிலர் கூறவில்லை.

"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்"
என்ற புறப்பாடலைப் படியுங்கள். படிக்க விருப்பம் 
இல்லையா? செத்துத் தொலையுங்கள்.

இன்னொரு பாட்டு! புறப்பாட்டு!
ஒல்லையூர் கிழான் மகன் சாத்தன் மறைந்தபோது 
புலவர் குடவாயில் கீர்த்தனார் பாடியது.
பொதுவியல் திணை: கையறுநிலைத் துறை.

இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
 வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

இந்தப்பாடலில் எங்காவது சாத்தன் மாய்ந்த பின் 
அவன் மனைவி உடன்கட்டை ஏறினாள் என்று 
சொல்லப் பட்டுள்ளதா?

அப்போது 1968 அல்லது 69ஆம் ஆண்டு. மேலே கூறிய 
பாடல் 11ஆம் வகுப்பு பாடத்தில் இருந்தது. நாங்கள் 
அப்போது 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம்.

11ஆம் வகுப்பில் தமிழாசிரியர் மகா வித்துவான் 
சு தி சங்கர நாராயணன் மேற்கூறிய புறப்பாடலை 
பாடம் நடத்திக் கொண்டிருந்தார். எங்கள் வகுப்பு 
முடிந்து நாங்கள், 11ஆம் வகுப்பு இருந்த தாழ்வாரத்தின் 
வழியாக வந்து கொண்டிருந்தோம். அங்கேயே நின்று 
விட்டோம்.

தமிழாசிரியர் நடத்திய பாடம் எங்களை 
அவ்விடத்திலேயே கட்டிப் போட்டது.
கூட்டமாக நின்று பாடத்தை வகுப்பறைக்கு 
வெளியே இருந்தவாறே கேட்டோம். அன்று 
பசுமரத்தாணியாக இப்பாடல் மனதில் பதிந்தது.

நான் 11ஆம் வகுப்பு முடித்து வெளியேறும்போது 
எனக்கு 10,000 தமிழ்ப்பாடல்கள் தெரியும்.
ஆங்கிலத்தில் சில நூறுகள் தேறும்.

தமிழில் அன்று நான் அறிந்திருந்த பத்தாயிரம்
பாடல்களில் ஒன்றில் கூட உடன்கட்டை பற்றி 
எதுவும் இல்லை. என்னால் இலக்கியச் சான்றுகள் 
அனந்த கோடி எடுத்துக் காட்ட இயலும்.

ஆக, தமிழ்நாட்டில் எப்போதுமே உடன்கட்டை 
ஏறும் வழக்கம் இருந்ததே இல்லை என்பதை 
இவ்வாறு நிரூபித்துள்ளேன்.QED.
*****************************************
 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக