வெள்ளி, 23 டிசம்பர், 2022

சொல்லின் செல்வன் யார்?
------------------------------------------
முன்னெச்சரிக்கை!
(IQ குன்றியவர்களும் கல்லாக் களிமக்களும்
போலி இடதுசாரிகளும் இக்கட்டுரையைப் படிக்க 
வேண்டாம்!) 
----------------------------------------
கட்டுரையாக்கம்:
கலையியல் நிறைஞர்
சொல்லின் செல்வர்  
தண்டமிழறிஞர் நல்லாசிரியர் வீரை மு பிச்சாண்டியார் 
எம்.ஏ பி.டி மகனார்  
புலவர் வீரை பி இளஞ்சேட்சென்னி 
------------------------------------------------------
இல்லாத உலகத் தெங்கும்
  ஈங்கிவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் 
  கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே 
  யார்கொல் இச்சொல்லின் செல்வன் 
வில்லார் தோள் இளைய வீர 
  விரிஞ்சனோ விடை வல்லானோ.     
(கம்ப, கிஷ்கிந்தா, அனுமப்படலம்)

இப்பாடலை ராமனின் கூற்றாய் அமைத்துள்ளான் 
கம்பன். அனுமனைச் சுட்டிக் காட்டி, இச்சொல்லின் 
செல்வன் யார் என்று வில்லார்தோள் இளையவீரன்
இலக்குவனிடம் வினவுகிறான் ராமன்.

பாடல் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது.
கிஷ்கிந்தையில்தான் முதன் முதலில் அனுமன் 
ராமனைச் சந்திக்கிறான். அனுமன் மாருதியின் 
மைந்தன். அஞ்சனையின் மைந்தன். அஞ்சனை 
அனுமனின் அன்னை. அஞ்சனையின் மைந்தன் 
என்பதால், ஆஞ்சநேயன் எனப் பெயர் பெற்றான் 
அனுமன்.

ஹனு என்ற சொல்லுக்கு கன்னத்து எலும்பு என்று 
பொருள். ஹனுமன் என்ற சொல்லுக்கு உடைபட்ட 
கன்னத்து எலும்பினன் என்று பொருள். 
இவன் ஏன் ஹனுமன் ஆனான்? எப்படி ஹனுமன்
ஆனான்? இவற்றுக்கு விடை பின்னர் அறிவோம்.

"அஞ்சனை வயிற்றில் வந்தேன் 
நாமமும் அனுமன் என்பேன்"    
என்று ராமனிடம் ஒரு மாணவனாக 
ஒரு பிரம்மச்சாரியாக தன்னை அறிமுகப் 
படுத்திக் கொள்கிறான் அனுமன்.

அனுமன் பேசப்பேச ராமன் வியப்பின் 
எல்லைக்கே செல்கிறான். அனுமனின் 
கரை காணா அறிவும் புலமையும் 
அவனின் பேச்சில் வெளிப்படுகின்றன.

" இவன் கல்லாத கலை இந்த உலகத்தில் இல்லை!
வேதக் கடலின் கரைகளை அறிந்தவன் இவன்;
இவன் புலமைக்கு இவனின் பேச்சே சாட்சி"
என்று பலவாறாக ராமன் வியக்கிறேன்.

யார் இவன்? யார் இந்தச் சொல்லின் செல்வன்?
சொல்லாலே தோன்றிற்றன்றே! (இவன் பேசப் பேச
இவனின் அறிவு விளங்குகிறதே)!
தம்பி இலக்குவா, யார் இவன்? விரிஞ்சனோ?
(விரிஞ்சன் = வேத வித்தான பிரம்மன்)
விடை வல்லானோ? 
(விடை = காளை; விடை வல்லான் = சிவன்)

"தோடுடைய செவியன் விடையேறி" என்னும் 
தேவாரப் பாடலை ஈண்டு நினைவு கூர்க!

ராமன் அனுமனை எண்ணி எண்ணி வியக்கிறான்.
அனுமனை மட்டுமல்ல, இலங்கைப் போரின்போது 
கும்ப கர்ணனை, அவன் தோள்வலியைக் கண்டு 
வியந்தான் ராமன்! (தோள் வலி = தோள் வலிமை;
தோள்பட்டை வலி (pain) என்று பொருள் கொண்டு 
விடாதீர்கள் என்று இறைஞ்சுகிறேன்).

"தோளோடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறில் 
நாள்பல கழியுமால்..............."  
(கம்ப, யுத்த, கும்பகர்ணன் வதை).

கும்ப கர்ணனின் தோள்களின் அழகைக் 
காணுங்கால், ஒவ்வொரு தோளாகப் பார்த்து 
அதன் அழகைத் துய்த்துக் கொண்டே வந்தால்,
அதற்கே நாட்கள் பல ஆகி விடும்.என்கிறான் கம்பன்.
ஆக ராமன் வியக்கிறான்; "ஆளென உணர்கிலேன்,
ஆர்கொலாம் இவன்" என வியக்கிறேன் ராமன்.

ஆம், கும்ப கர்ணன் பெருவீரன்!
"விண்ணினை இடறும் மோலி!
விசும்பினை நிறைக்கும் மேனி" உடையோன் கும்ப கர்ணன்.

கம்பனைப் படிக்க வேண்டும்!
கம்பனைப் படிக்காவிடில் வாழ்வு நிறைவுறாது!
படியுங்கள்!

கூடவே கமபனைப் பரப்பும், பயிற்றுவிக்கும் 
என்னை ஆதரியுங்கள். அதன் மூலம் உயிர்வாழும் 
தகுதி பெறுங்கள்!

வாசகர்களாகிய உங்களில் சிலரேனும் 
சொல்லின் செல்வர் டாக்டர் ரா பி சேதுப் பிள்ளையை
அறிந்திருப்பீர்கள். திருநெல்வேலிக்காரர்!
பெருந்தமிழறிஞர். சொல்லின் செல்வர் பட்டம் 
பெற்றவர்.

இப்போது சேதுப்பிள்ளை அவர்கள் இல்லை.
ஆனால் சொல்லின் செல்வர் பட்டம் இருக்கிறது.
அந்தப் பட்டத்தை எனக்கு வழங்குங்கள்!

சேதுப்பிள்ளையின் பட்டத்தைப் பெறுவதற்கு 
நான் அருகதை உடையவனே! எனினும் 
இலவசமாகவோ, இடஒதுக்கீட்டின் அடிப்படையிலோ 
சொல்லின் செல்வர் பட்டத்தை எனக்கு வழங்க 
வேண்டாம். அப்படி இலவசமாகவோ இடஒதுக்கீட்டின் 
அடிப்படையிலோ அப்பட்டம் எனக்கு வழங்கப் 
படுமாயின், அதை நான் ஏற்க மாட்டேன்.

அப்பட்டத்தைப் பெறும் தகுதி எனக்கு இருந்தால் 
மட்டுமே எனக்கு அப்படத்தை வழங்கட்டும் 
தமிழ்ச்சமூகம்! அதற்குரிய தேர்வுகளை 
நடத்தி, என் தகுதி அறிந்து, தகுதி இருப்பின் 
சொல்லின் செல்வர் பட்டத்தை எனக்கு வழங்குங்கள்!

சேதுப்பிள்ளையின் மாணவன் யான்! எதிலும் 
வெல்வேன்! எந்த ஒன்றையும் தகுதியின் மூலம் 
மட்டுமே பெறுவேன்.

உங்களின் ஆதரவு இருந்தால், இது போன்ற 
கட்டுரைகள் தொடரும்! The ball is in your court!
*********************************************      
  
  
         



    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக