சனி, 24 டிசம்பர், 2022

அத்வைதம் என்னும் 
அகநிலைக் கருத்துமுதல்வாதம்!
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
தத்துவங்களை இரு பெரும் பிரிவுகளாகப் 
பிரிக்கும் மரபு மேலை ஐரோப்பியத் தத்துவ மரபில் 
உள்ளது. இத்தகைய இருபெரும் பிரிவினையை
மார்க்சிய மூல ஆசான் எங்கல்ஸ் அங்கீகரிக்கிறார்.

இதன்படி, தத்துவங்கள் 
பொருள்முதல்வாதம் என்றும் 
கருத்துமுதல்வாதம் என்றும் 
இரு பெரும் பிரிவுகளில் அடங்குவன.

ஆதி சங்கரர் அருளிய அத்வைதம் என்னும் தத்துவம் 
கருத்துமுதல்வாதத் தத்துவம் ஆகும். இத்தத்துவம் 
கருத்தை, பொருளை அல்ல, முதன்மையானதாக
ஏற்கிறது.

இன்னும் நுட்பமாகப் பார்க்கும் இடத்து, அத்வைதம் 
அகநிலைக் கருத்துமுதல்வாதம் ஆகும்.
ஆங்கிலத்தில் subjective idealism என்று குறிப்பிடுவர்.

அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்பது பண்டித 
மொழி! பாமர மொழியில் சொல்வதானால், 
அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்பது 
நூறு சதமும் பொருளை மறைக்கும் தத்துவம்
என்று பொருள்படும். அதாவது இரண்டு கண்களும் 
அவிந்துபோன நிலையே அவைதம் ஆகும்.

புறநிலைக் கருத்துமுதல்வாதம் என்பது 
கருத்துமுதல்வாதத்தின் இன்னொரு பிரிவு.
இதை ஆங்கிலத்தில் objective idealism என்பர்.
இதற்கு ஒரு உதாரணம் சொன்னால், இதை 
வாசகர்களால் விளங்கிக் கொள்ள இயலும்.

ராமானுஜாச்சாரியாரின் விசிஷ்டாத்வைதம் என்னும் 
தத்துவம் பற்றி அறிவீர்களா? இத்தத்துவம் 
புறநிலைக் கருத்துமுதல்வாதத்திற்குச் 
சிறந்த உதாரணம் ஆகும். பண்டித மொழியைத் 
தவிர்த்து விட்டு, பாமர மொழியில் பேசுவதானால்,
விசிஷ்டாத்வைதம் என்பது ஒரு கண் அவிந்த 
நிலையைக் குறிக்கும். அந்த வகையில் இது 
அத்வைதத்தை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது.

கருத்துமுதல்வாதம் பற்றிய எளிய அடிப்படைகள் 
சிலவற்றைப் பார்த்தோம். இனி பொருள்முதல்வாதம்
பற்றி அறிய முற்படுவோம். கருத்து அல்ல, பொருளே 
முதன்மையானது என்கிறது பொருள்முதல்வாதம்.
பொருள் பிரதானமானது; கருத்து இரண்டாம் 
பட்சமானது என்கிறது பொருள்முதல்வாதம்.
கருத்து என்பது பொருளின் பிரதிபலிப்பே 
என்கிறது பொருள்முதல்வாதம்.

பொருள்முதல்வாதம் எங்கெல்லாம் இயங்குகிறது?
எங்கெல்லாம் பயன்படுகிறது?

மொத்தப் பிரபஞ்சத்திலும் மூன்றே மூன்று 
இடங்களில் மட்டுமே பொருள்முதல்வாதம் 
செயல்படுகிறது.

1) இயற்கையில் முற்றிலுமாக பொருள்முதல்வாதம் 
செயல்படுகிறது. இதற்கு ஒரு உதாரணம் சொல்லட்டுமா?
கோள்கள் கெப்ளரின் விதிகளின் பிரகாரமே 
இயங்குகின்றன. வாசகர்கள் 11அம வகுப்பு இயற்பியல் 
புத்தகத்தில் உள்ள கெப்ளரின் கோள்களின் இயக்கம் 
பற்றிய விதிகளை (Kepler's laws of planetary motion)  படிக்க 
வேண்டும்.
  
கருத்துமுதல்வாதத்தினாலோ அல்லது கடவுளின் 
விதிகளாலோ கோள்கள் இயங்குவதில்லை. அவை 
கெப்ளரின் பொருள்முதல்வாத விதிகளைக் கொண்டுதான் 
இயங்குகின்றன.

2) இரண்டாவதாக மானுட சமுதாயத்தில், 
பொருளுற்பத்தியில் பொருள்முதல்வாதம் பயன்படுகிறது.
பொருள்முதல்வாதம் இல்லாமல் பொருளுற்பத்தி 
என்பதே இல்லை. நெல் உற்பத்தி முதல் பெரும் அணுசக்தி 
நீர்மூழ்கிக கப்பலின் தயாரிப்பு வரை பொருள்முதல்வாதம் 
மட்டுமே உற்பத்தியில் பயன்படுகிறது. 
கருத்துமுதல்வாதத்தை வைத்துக் கொண்டு நாக்கு 
வழிக்கக்கூட இயலாது.

3) மூன்றாவதாக மார்க்சியத்தில் பொருள்முதல்வாதம் 
முற்றிலுமாகச் செயல்படுகிறது.  மார்க்சியம் என்பதே 
பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட 
தத்துவம்தான். பொருள்முதல்வாதம் இல்லையேல் 
மார்க்சியம் இல்லை என்ற உண்மையை அனைவரும் 
அறிந்திருக்க வேண்டும்.

ஆக, இயற்கை, மானுட சமூகம், மனித சிந்தனை 
ஆகிய மூன்றிலும் பொருள்முதல்வாதம் 
இருக்கிறது; பொருள்முதல்வாதம் செயல்படுகிறது.
மேற்கூறிய மூன்றில் (இயற்கை, மானுட சமூகம், மனித 
சிந்தனை) மொத்தப் பிரபஞ்சமும் அடங்கி விடுகிறது.
எனவே பொருள்முதல்வாதமானது மொத்தப் 
பிரபஞ்சத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு 
ஆட்சி செலுத்துகிறது.

அப்படியானால் கருத்துமுதல்வாதம்? அது கடைசிப் 
பந்தியில் வந்து எஞ்சியத்தைச் சாப்பிட்டுவிட்டுப்
போகும்.

கருத்தே கூடாது என்பதல்ல பொருள்முதல்வாதம்!
கருத்து இரண்டாம்பட்சமானது (secondary and not primary) 
என்பதுதான் பொருள்முதல்வாதம்!

அப்படியானால் அத்வைதம்? அது மானுட வரலாற்றின் 
மிகவும் உதவாக்கரையான தத்துவம்! யார் எவருக்கும் 
பயனற்ற ஒரு தத்துவம்!
 
பின்குறிப்பு:
இது ஒரு கட்டுரை அல்ல!
Putting centuries into capsules என்பதைப்போல,
ஆயிரம் ஆண்டுகளின் அத்வைதமானது ஒரு 
சிறு குமிழியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.
**************************************************  



 



  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக