சனி, 26 பிப்ரவரி, 2022

நாஷ் சமநிலை பேணப்படும்வரை 
உலகப்போர் வராது!
-------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------- 
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 
உலகப்போர் வருமா என்ற கேள்வியை எழுப்பி 
உள்ளது. ஒருவேளை உலகப்போர் வந்தால் அதில் 
அணுஆயுதங்கள் பயன்படுத்தப் படுமா என்ற 
கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. 

இக்கேள்விகளுக்கு அறிவியல் துல்லியமான 
பதில்களை வைத்திருக்கிறது. உலகப்போர் 
குறித்தோ, அணுஆயுதப் பிரயோகம் குறித்தோ 
பேசவேண்டுமெனில், நாஷ் சமநிலை 
(Nash equilibrium) பற்றித் தெரிந்திருக்க வேண்டும் 
என்பது முன்நிபந்தனை ஆகும். உலகப்போரும் 
நாஷ் சமநிலையும் மிகவும் நெருக்கமான தொடர்பு 
உடையவை. எனவே நாஷ் சமநிலை பற்றித் 
தெரியாமல் உலகப்போர் பற்றிப் பேச இயலாது.

நாஷ் சமநிலை பேணப்படும் வரை அணுஆயுத 
உலகப்போர் வராது. நாஷ் சமநிலை 
மீறப்படுமானால் அணு ஆயுத உலகப்போர் வரும். 
இதுதான் நிலவரம்! ஆக உலகப்போரின் 
சூட்சுமம் நாஷ் சமநிலையில் இருக்கிறது. 
எனவே அது பற்றிப் பார்ப்போம். 

மூன்றாம் உலகப்போர் ஏன் இன்னும் நிகழவில்லை?
-----------------------------------------------------------------------------------
முதல் உலகப்போர் 1914 ஜூலையில் தொடங்கி 1918 
நவம்பர் வரை நடந்தது. இரண்டாம் உலகப்போர் 
செப்டம்பர் 1939ல் தொடங்கி செப்டம்பர் 1945ல் 
முடிந்தது. முதல் உலகப்போர் முடிந்த 20 ஆண்டுகளில் 
இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டது.

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில்,  
அதுவரையான  மானுட வரலாறு கண்டிராத 
புதுமையாக அணுகுண்டு வீசப்பட்டது.
1945 ஆகஸ்டு 6ல் ஹிரோஷிமா மீதும், ஆகஸ்டு 9ல் 
நாகசாகி மீதும் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் 
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணம் 
அடைந்தனர். உடனடியாக ஜப்பான் சரண் அடைந்தது. 
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. 
இது வரலாறு.

ஆனால் இரண்டாம் உலகப்போர் 1945ல் முடிவடைந்து, 
இன்று  75 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் 
மூன்றாம் உலகப்போர் எதுவும் உலகில் இன்னும் 
மூளவில்லை. இதன் காரணம் என்ன?  

30 ஆண்டுகளுக்குள் (1914-1945) இரண்டு உலகப் 
போர்களைப் பார்த்த இந்த உலகம், இன்று 
75 ஆண்டுகளாக இன்னொரு உலகப்போர் 
நிகழ்ந்து விடாமல் தவிர்த்து வருகிறதே, அது 
எப்படி சாத்தியமானது? 

அணுகுண்டின் தந்தை ஓப்பன்ஹீமர்!
----------------------------------------------------------
லட்சக்கணக்கான மக்களை ஒரு நொடியில் 
கொன்றுவிடும் பெரும் அழிவு சக்தியான 
அணுகுண்டு 1945ல் பிறந்தது.

ஐன்ஸ்டினின் பொருளும் ஆற்றலும் சமம் என்ற 
கோட்பாடே அணுகுண்டைப் பிறப்பித்தது. 
ஐன்ஸ்டினின் E = mc^2 என்ற சமன்பாடுதான் 
பேராற்றல் மிக்க ஒரு அணுகுண்டை உருவாக்க 
முடியும் என்று கோட்பாட்டு ரீதியாக உலகிற்குப் 
போதித்தது.

1939 ஆகஸ்டில், அன்றைய அமெரிக்க அதிபர் 
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கு (Franklin D Roosevelt 1982-1945)
ஐன்ஸ்டின் எழுதிய கடிதமே உலகின் தலைவிதியை 
மாற்றியமைத்த கடிதம் ஆகும். அக்கடிதத்தில், 
அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஹிட்லர் 
இறங்கியிருப்பதால், அமெரிக்காவும் அணுகுண்டு 
தயாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ஐன்ஸ்டின். 
அவரின் கருத்தை  ஏற்றுக்கொண்ட ரூஸ்வெல்ட், 
அணுகுண்டு தயாரிக்க முடிவு செய்தார். 

அதற்காக மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) 
என்றொரு திட்டத்தை 1942 ஆகஸ்டில் ஏற்படுத்தினார் 
ரூஸ்வெல்ட்.  மூன்று ஆண்டுகள் ஆய்வின் இறுதியில், 
அமெரிக்காவின் தலைசிறந்த அணுக்கரு விஞ்ஞானி 
ராபர்ட் ஓப்பன்ஹீமர் (Robert Oppenheimer 1904-1967) 
உலகின் முதல் அணுகுண்டை வெற்றிகரமாக 
உருவாக்கினார். இவரே அணுகுண்டின் 
தந்தை (Father of Atom bomb) என்று அழைக்கப் படுகிறார். 

நியூ மெக்சிகோவில் இருந்து 56 கிமீ தொலைவிலுள்ள 
ஒரு பாலைவனத்தில் உலகின் முதல் அணுகுண்டை 
அமெரிக்கா வெடித்துச் சோதனை செய்து பார்த்தது. 
டிரினிட்டி சோதனை (Trinity test) என்ற சங்கேதப் 
பெயர் பெற்ற இச்சோதனை ஜூலை 16, 1945ல் 
நடந்தது. அந்நாள் உலக வரலாற்றில் அழியா இடம் 
பெற்று விட்டது. டிரினிட்டி சோதனை நடந்து 
முடிந்த 21ஆம் நாளிலேயே ஆகஸ்டு 6ல் ஹிரோஷிமா மீது 
அணுகுண்டை வீசியது அமெரிக்கா. தான் தயாரித்த 
அணுகுண்டு எப்படிச் செயல்படுகிறது என்று அறியும் 
பொருட்டே அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா.  

காலந்தோறும் அணுகுண்டு!
--------------------------------------------
அணுகுண்டின் காலக்கோட்டை (Timeline) அறிந்திடுவோம்.
1) 1905 செப்டம்பர்: ஐன்ஸ்டின் E= mc^2 ஆய்வறிக்கை 
சமர்ப்பித்தல்.

2) 1939 ஏப்ரல்: யுரேனியம் கிளப் (Uranium Club) என்ற பெயரில் 
ஒரு விஞ்ஞானிகள் குழுவை அமைத்து அணுகுண்டு 
தயாரிக்க ஹிட்லர் முயற்சி.

3) 1939 ஆகஸ்டு: ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டின் கடிதம்.

4) 1942 ஆகஸ்டு: மன்ஹாட்டன் திட்டம் தொடக்கம்.

5) 1945 ஜூலை: அமெரிக்காவின் அணுவெடிப்புச் சோதனை.

6) 1945 ஆகஸ்டு: ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு.

7) 1945 ஆகஸ்டு: அணுகுண்டால் 2 லட்சம் பேர் மரணம்.       

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் வீழ்ச்சியைத் 
தொடர்ந்து, யுரேனியம் கிளப்பைச் சேர்ந்த பத்து 
ஜெர்மானிய விஞ்ஞானிகளைக் கைது செய்து சிறையில் 
அடைத்தனர் நேச நாட்டினர் (The Allies).

வெர்னர் ஹெய்சன்பெர்க் உட்பட அனைவரும் 
இங்கிலாந்தில் சிறையில் தள்ளப் பட்டனர்.பின்னர் 
1946 ஜனவரியில் ஹெய்சன்பெர்க் விடுதலை 
செய்யப்பட்டார். உறுதியின்மைக் கோட்பாட்டை
(uncertainty principle) கண்டறிந்து அதற்காக நோபல் பரிசு 
(1932ஆம் ஆண்டிற்கானது) பெற்றவர் ஹெய்சன்பெர்க் 
என்பது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.            

அணுஆயுத நாடுகள் எவை?
--------------------------------------------
இன்று இக்கட்டுரையை எழுதும் 2022 மார்ச்சு 
நிலவரப்படி, உலகில் எட்டே எட்டு நாடுகளிடம் 
மட்டுமே அணுகுண்டுகள் உள்ளன.

1) அமெரிக்கா 2) ரஷ்யா 3) இங்கிலாந்து 4) பிரான்சு 
5) சீனா  6) இந்தியா 7) பாகிஸ்தான் 8) வடகொரியா 
ஆகிய எட்டு நாடுகள் மட்டுமே இன்றைய உலகின் 
அணுஆயுத நாடுகள். சோவியத் ஒன்றியத்தின் 
தகர்வுக்குப் பின்னர் அதன் முந்நாளையக் 
குடியரசுகளான உக்ரைன் போன்றவை தங்கள் 
நாடுகளில் இருந்த அணுஆயுதங்கள் அனைத்தையும் 
ரஷ்யாவிடம் திரும்ப ஒப்படைத்து விட்டன. 

இஸ்ரேலிடம் அணுஆயுதம் உள்ளதாக ஒரு சந்தேகம் 
உள்ளது. இது வெறும் சந்தேகம்தான்! ஆதாரமோ 
நிரூபணமோ இதற்கில்லை. அடுத்து ஈரான் 
ஆணுஆயுதம் தயாரித்து விடக்கூடாது என்பதற்காக 
அந்நாட்டின் மீதான கண்காணிப்பும் கெடுபிடிகளும் 
அதிகரித்து வருகின்றன.    

எனவே அணுஆயுத நாடுகளின் எண்ணிக்கை 
எட்டுக்கு மேல் செல்ல வாய்ப்பில்லை. 

முதலில் வீசுவது நான் அல்ல!
----------------------------------------------
இந்தியாவின் அணுஆயுதக் கொள்கை No First use policy 
ஆகும். முதல் பிரயோகம் எமதல்ல என்பது இதன் 
பொருள். அதாவது ஒரு போரின்போது, அணு ஆயுதத்தை 
முதலில் பிரயோகிக்கும் நாடாக இந்தியா இருக்காது 
என்பது இதன் பொருளாகும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அணுஆயுதங்கள் 
என்பவை அச்சுறுத்தலுக்கு மட்டுமே ஆனவை 
(for the purpose of deterrence only).  எனவே இந்தியா 
அவற்றை ஒருபோதும் முதலில் பிரயோகிக்காது. 

அதே நேரத்தில் எவரேனும் இந்தியா மீது 
அணு ஆயுதங்களைப் பிரயோகித்தால் மிகக் 
கடுமையாக இந்தியா திருப்பித் தாக்கும். 
இந்தியாவின் இரண்டாவது அணுவெடிப்புச் 
சோதனை (பொக்ரான்-2)  1998ல் நடைபெற்றது. 
1999ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக
இருந்தார். அப்போது இந்தியாவின் அணுஆயுதக் 
கொள்கையாக இக்கொள்கை (No First use policy) 
இந்திய அரசால் வெளியிடப் பட்டது.


காலாவதி ஆகிவிட்ட உலகப்போர்கள்!
------------------------------------------------------------  
ஆக, அணுகுண்டுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள 
வேண்டிய  அடிப்படையான விவரங்களில் 
முக்கியமான சிலவற்றைப் பார்த்தோம். இந்தப் 
புரிதல் இல்லாமல் நவீன ராணுவப் 
போர்த்தந்திரத்தில் (modern military strategy) 
அணுகுண்டுகளின் பாத்திரம் பற்றிப் புரிந்து 
கொள்ள இயலாது.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் 
ஆகியும், மூன்றாம் உலகப்போர் மூளவில்லை. 
அது மட்டுமல்ல, இனி உலகப்போர் என்ற ஒன்றே 
இந்த உலகில் இருக்க இயலாது.

உலகப்போர் என்பது காலாவதியாகிவிட்ட 
ஒரு கோட்பாடாக (a lapsed doctrine) ஆகிவிட்டது. 
நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், 
இதுதான் உண்மை.

இதன் பொருள் போர்களே இல்லாத ஓர் உலகை 
நாம் சமைத்து விட்டோம் என்பதல்ல. போர்கள் 
இருக்கும். ஆனால் ஒவ்வொரு கண்டத்திலும் 
ஒவ்வொரு கடலிலும் நடக்கும் உலகளாவிய 
போர், ஒவ்வொரு நாட்டையும் உள்ளே இழுக்கின்ற  
உலகப் போர் இனிமேல்  ஏற்பட வழியில்லை. 

உலகப் போர்களின் சகாப்தம் (the era of world wars) 
முற்றிலுமாக முடிந்து விட்டது. அதிர்ச்சியில் 
மூச்சடைத்துப் போகிறது, நம்பவே முடியவில்லை 
என்றெல்லாம் சொன்னாலும் மேலே சொன்னது 
தெளிந்த உண்மை ஆகும்.

அமைதியை அருளும் அணுகுண்டு!
-------------------------------------------------------
உலகப் போர்களுக்குக் கொள்ளி வைத்தது யார்?
உலகப்போர் என்ற கோட்பாடே இன்றைய உலகில்
செல்லுபடி ஆகாது என்ற நிலையை ஏற்படுத்தியது யார்?
அணுகுண்டு என்பதுதான் விடை! 

அப்படியானால் கடந்த 75 ஆண்டுகளாக உலகில் 
நிலவும் அமைதிக்குக் காரணம் அணுகுண்டுதானா?
மூன்றாம் உலகப்போர் ஏற்படாமல் இருப்பதற்குக் 
காரணம் அணுகுண்டுதானா? ஓர் அழிவு சக்தியான 
அணுகுண்டு எப்படி அமைதிக்குக் காரணமாக 
இருக்க முடியும்? 

அணுகுண்டால் எப்படி அமைதியை நிலைநாட்ட 
முடியும்? நெருப்பை நெருப்பு அணைக்குமா? 
அணைக்குமென்றால் எப்படி?

அணுகுண்டின் மீதான அச்சம்தான் போர் 
வெறியர்களை சமாதானப் பிரியர்களாக 
மாற்றியுள்ளது  அணுகுண்டின் மிகவும் உக்கிரமான 
அச்சுறுத்தும் தன்மையானது (deterrence)
மொத்த உலகத்தையும் பீதியில் ஆழ்த்தி போருக்கு 
எதிரானவைகளாக எல்லா நாடுகளையும் 
மாற்றியுள்ளது. 

இவ்வாறு அணுகுண்டானது ஒரு எதிர்மறைப் 
பாத்திரத்தை வகித்து போருக்கு எதிரான 
உளவியலை உலக நாடுகளிடம் 
ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.  
  
லிட்டில் பாய், ஃபேட் மேன்!
------------------------------------------   
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட லிட்டில் பாய் (Little Boy) 
என்ற பெயருடைய அணுகுண்டின் ஆற்றல் 
15 கிலோ டன் TNT ஆகும்.  
(TNT = Tri Nitro Toluene என்னும் வெடி மருந்து).  
அதாவது 63 Tera Joule ஆற்றல் ஆகும். 

நாகசாகியில் வீசப்பட்ட ஃபேட்மேன் (Fat Man) என்ற 
பெயருடைய அணுகுண்டு 21 கிலோ டன் TNT ஆற்றலை 
உடையது அதாவது 88 Tera Joule ஆற்றல் ஆகும். இந்த 
அணுகுண்டின் ஆற்றலைப் புரிந்து கொள்ள 
முடிகிறதா? 1 கிராம் TNT வெடித்தால் தோராயமாக 
4000 ஜுல் ஆற்றல் வெளிப்படும் என்று புரிந்து 
கொள்ளவும்.  

1945ல் அணுகுண்டின் ஆரம்பக் கட்டத்தில்   
21 கிலோ டன் TNT என்ற அளவு ஆற்றல் கொண்ட 
அணுகுண்டுகளைத்தான் தயாரிக்க முடிந்தது. 
அப்போது அமெரிக்கா மட்டும்தான் அணுகுண்டுகளை 
வைத்திருந்தது. தொடர்ந்து பிற நாடுகளும் 
அணுகுண்டுகளைத் தயாரித்தன. அணுகுண்டுகளின் 
ஆற்றலும்  எண்ணிக்கையும் அதிகரித்துக் 
கொண்டே சென்றன. 1953ல் 1000 அணுகுண்டுகளை 
மட்டுமே வைத்திருந்த அமெரிக்கா, 1961ல் 
18,000 அணுகுண்டுகளைத் தயாரித்து விட்டது. 

ஹைட்ரஜன் குண்டுகள்!
--------------------------------------
ஆரம்ப கால அணுகுண்டுகள் யாவும் அணுக்கருப் 
பிளவு (nuclear fission) வகையிலானவை.  1952 நவம்பர் 1ல் 
அணுக்கருச் சேர்ப்பு முறையிலான குண்டை 
(Thermonuclear fusion bomb) உலகிலேயே முதன்முறையாக 
அமெரிக்கா உருவாக்கி வெடித்துச் சோதனை 
செய்தது. இது ஹைட்ரஜன் குண்டு என்று மக்களால் 
அழைக்கப் படுகிறது. ஹங்கேரிய அமெரிக்க 
விஞ்ஞானியான எட்வர்ட் டெல்லர் (Edward Teller 1908-2003)
ஹைட்ரஜன் குண்டை உருவாக்கினார். அவரே 
ஹைட்ரஜன் குண்டுகளின் தந்தை என்று கருதப் 
படுகிறார். 
    
அமெரிக்காவைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் 
1953 ஆகஸ்டிலும், இங்கிலாந்து 1957 மேயிலும் 
ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்கின. சீனா 
1967ல், பிரான்சு 1968ல் என்று அடுத்தடுத்து 
ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்கிக் கொண்டன.     

அணுகுண்டுகளை விட ஹைட்ரஜன் குண்டுகள்  
ஆயிரம் மடங்கு ஆற்றல் மிக்கவை. 
குண்டுவெடிப்பின்போது வெளிப்படும் ஆற்றலை 
அணுகுண்டுகளில் கிலோ டன் TNT என்று 
குறிப்பிடுவதும், ஹைட்ரஜன் குண்டுகளில் 
மெகா டன் TNT என்று குறிப்பிடுவதும் வழக்கம். 
இதுவே இவ்விருவகை குண்டுகளின் ஆற்றலை 
உணர்த்தும். 
(1 கிலோ டன் = 1000 டன்; 1 மெகா டன் = 10 லட்சம் டன்).       


அணு ஆயுதம் தந்த படிப்பினை!
-------------------------------------------------
1970களில் அமெரிக்கா தயாரித்த B83 எனப்படும் 
அணுஆயுதம் 1.2 மெகா டன் TNT ஆற்றல் உடையது. 
அதாவது 5.0 Peta Joule ஆற்றல் உடையது. முன்னதாக 
சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா) மிகவும் 
பிரம்மாண்டமான ஒரு அணுஆயுதத்தை 1960களில் 
தயாரித்து இருந்தது. 

அதன் பெயர் ஜார் பம்பா (Tsar Bomba) என்பதாகும். 
இதன் பொருள் குண்டுகளின் அரசன் என்பது. 
100 மெகா டன் TNT ஆற்றலுடன் தயாரிக்கப்பட்ட 
அக்குண்டு பின்னர் நடைமுறை சாத்தியம் 
கருதி, 50 மெகா டன் TNT ஆற்றலுக்கு குறைக்கப் பட்டது. 

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட லிட்டில்பாய் குண்டின் 
ஆற்றலைப் போல 3800 மடங்கு ஆற்றல் உடையதாக 
இது இருந்தது. 

இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் உலகில் 
ஒரே ஒரு நாடு (அமெரிக்கா) மட்டுமே 
அணுகுண்டுகளைக் கொண்டிருந்தது.
காலப்போக்கில் எட்டு நாடுகளிடம் 
அணுகுண்டுகள் வந்து விட்டன. அவற்றின் 
ஆற்றலும் பல்லாயிரம் மடங்கு அதிகரித்து 
விட்டது. அவற்றின் எண்ணிக்கையும் 
அசுரத்தனமாகக் கூடி விட்டது. சுருங்கக் கூறின், 
ஒரே ஒரு அணுகுண்டை வீசினாலே 
கோடிக்கணக்கான மக்களை ஒரே நொடியில்
கொன்று விட முடியும் என்ற நிலை இன்று 
ஏற்பட்டு விட்டது. அதாவது இரண்டு நாடுகளுக்கு 
இடையிலான ஒரு போரில் அணுஆயுதம்  
பிரயோகிக்கப் பட்டால், கண்ணிமைக்கும் 
நேரத்துக்குள் இரு தரப்பிலும் சர்வ நாசம் ஏற்பட்டு விடும் 
என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இது அனைவராலும் 
உணரப் பட்டு விட்டது.

எனவே அணுஆயுதப் பிரயோகம் எந்த நிலையிலும் 
தவிர்க்கப் பட வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு 
அணுஆயுத நாடுகள் இயற்கையாக வந்து சேர்ந்தன. 
இது காலத்தின் கட்டாயம் என்று அனைவரும் 
உணர்ந்தனர். மனித குலத்தின் மொத்தச்  
சிந்தனையில் இவ்வாறு ஒரு அடிப்படை விலகல்  
(paradigm shift)  ஏற்பட்டது. அது அணுஆயுதப் 
பிரயோகத்துக்கு முடிவு கட்டுகிறது. 
இதன் பின்விளைவாக உலகப் போர்களும் 
முடிவுக்கு வருகின்றன.

இவ்வாறு உலகப் போர்கள் ஏற்படுத்தும் பேரழிவை 
அணுகுண்டானது தடுத்து விடுகிறது. அணுகுண்டு 
கண்டுபிடிக்கப் படாமல் போயிருந்தால், தடுப்பதற்கு 
யாருமின்றி உலகப் போர்கள் நடந்து கொண்டே 
இருந்திருக்கும். ஆனால் காலம் மாறிவிட்டது.

இனி உலகப்போருக்கு வாய்ப்பில்லை! உலகப்போர்களின் 
சகாப்தம் முற்றுப்பெற்று விட்டது. ஆக, அமைதியை 
அருளுவது அணுகுண்டே என்ற கூற்று வலுவான 
தர்க்கங்களின் மூலம் நிருபிக்கப் பட்டுள்ளது. 
ஒரு மாபெரும் அழிவு சக்தியாகப் பிறப்பெடுத்த 
அணுகுண்டு ஆக்க சக்தியாக மாறி, மூன்றாம் 
உலகப் போரைத் தடுத்து, கடந்த முக்கால் 
நூற்றாண்டு காலமாக உலக அமைதியை உறுதி செய்துள்ளது.

பேரழிவு உறுதி!
-------------------------
பித்தகோரஸ் தேற்றத்துக்கு மொத்தம் 367 நிரூபணங்கள் 
இருக்கின்றன. அதிர்ச்சி அடைய வேண்டாம். 
367 நிரூபணங்கள்!  அந்த அளவுக்கு இல்லாவிடினும்,  
இனி உலகப்போர்களே இருக்காது என்ற நமது 
தேற்றத்திற்கு மேலும் சில நிரூபணங்களைப் பார்ப்போம்.  

நவீன ராணுவப் போர்த் தந்திரத்தில் (Modern military strategy)
MAD doctrine என்னும் பிரசித்தி பெற்ற ஒரு கோட்பாடு 
உண்டு.(MAD = Mutually Assured Destruction). 

அணுஆயுதம் வைத்துள்ள இரண்டு நாடுகள் ஒரு போரில் 
ஒருவர் மீது ஒருவர் அணுஆயுதங்களைப் 
பயன்படுத்தினால்,இரு தரப்புக்கும் பரஸ்பரம் 
முழுமையான பேரழிவு ஏற்படும். எனவே அணுஆயுதப் 
பிரயோகத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே 
MAD கோட்பாடு. 

அணுஆயுதங்கள் உலகில் இருக்கும்வரை MAD கோட்பாடு 
செல்லுபடியாகும்   உலகின் அணுஆயுத நாடுகள் 
அனைத்தும் உணர்வுபூர்வமாக நடைமுறைப் 
படுத்துகின்ற ஒரு கோட்பாடு இது.

இதன் காரணமாகவே இரண்டாம் உலகப்போருக்குப் 
பின், அணுஆயுதப் பிரயோகமும் இல்லை; உலகப் 
போர்களும் இல்லை.  இவ்வாறு  MAD கோட்பாடு 
உலகப் போர்களை ஒழித்து, மானுடத்தின் மாபெரும் 
சமாதானத் தூதுவனாகத் திகழ்கிறது.

ஜான் வான் நியூமேன்!
----------------------------------
விளையாட்டுக் கோட்பாட்டின் (Game theory) முன்னோடி 
அமெரிக்காவின் கணித, இயற்பியல் மற்றும் பல்துறை 
அறிஞரான ஜான் வான் நியூமேன் (John von Neumann 1903-1957) 
ஆவார்.  

MAD கோட்பாடு, நாஷ் சமநிலை ஆகியவை 
விளையாட்டுக் கோட்பாட்டின் பெறுபேறுகளே 
(derivatives). இங்கு "விளையாட்டு" என்பது கிரிக்கெட், 
கால்பந்து, சதுரங்கம் போன்றவற்றைக் குறிக்காது.

மாறாக, உலகின் சமூக, அரசியல், பொருளியல், 
ராணுவ, வணிகச் சிக்கல்களையே "விளையாட்டு"  
என்ற பதம் குறிக்கிறது.    

நியூமேன் வகுத்தளித்த விளையாட்டுக் கோட்பாட்டின்
அடிப்படைத் தேற்றம் இதுதான். 
"பல்வேறு வகையான விளையாட்டுக்களில் ஒரு 
சமநிலையைக் கண்டறிவது எப்போதுமே 
சாத்தியம் ஆகும். இந்தச் சமநிலையில் 
இருந்து எந்தத் தரப்பு ஆட்டக்காரரும் 
ஒருதலைப் பட்சமாக விலகிச் செல்லக்கூடாது".   

(In a broad category of games it is always possible to find an 
equilibrium from which neither player should deviate unilaterally.
---Fundamental theorem of Game theory) 

நாஷ் சமநிலை!
------------------------
இத்தேற்றத்தின்படியே "நாஷ் சமநிலை" (Nash equilibrium) 
உருவாக்கப் பட்டது. இத்தகைய சமநிலைகளை 
ஏற்படுத்துவது சாத்தியமே என்று நியூமேனின் 
அடிப்படைத் தேற்றம் கூறுகிறது.

அமெரிக்கக் கணித மேதையான ஜான் நாஷ் 
(John Nash Jr 1928-2015) பல்வேறு விளையாட்டுகளுக்குத் 
தீர்வாக முன்வைத்த ஒரு சமநிலை அவரின் பெயரால் 
நாஷ் சமநிலை (Nash equilibrium) என்று வழங்கப் படுகிறது. 

நோபல் பரிசு (1994), ஏபெல் பரிசு (2015) இரண்டையும் 
பெற்றவர் ஜான் நாஷ். அவரின் வாழ்க்கை வரலாறு 
A beautiful mind என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் 
திரைப்படமாக 2001ல் எடுக்கப் பட்டது.
கணித அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் பார்க்க 
வேண்டிய ஒரு திரைக்காவியம் இப்படம். 

நாஷ் சமநிலைக்குப் பல்வேறு வரையறைகள் உள்ளன. 
எல்லோரும் புரிந்து கொள்ள வசதியாக நாம் 
பின்வருமாறு எளிமையாக வரையறுப்போம். 

"எந்த ஒரு முடிவுறு விளையாட்டிலும் அதில் 
பங்கேற்றுள்ள அத்தனை ஆட்டக்காரர்களும் 
அதிகபட்சமான ஆதாயத்தைப் பெற இயலும். 
இந்த அதிகபட்ச ஆதாயமே நாஷ் சமநிலை ஆகும்.
இதைப் பெறுவதற்கு ஒவ்வொரு ஆட்டக்காரரும் மற்ற 
ஆட்டக்காரர்களின் சாத்தியமான நடவடிக்கைகளைக் 
கருத்தில் கொண்டிருக்க வேண்டும்".


ஒத்துழைப்பற்ற விளையாட்டுக்கள்!
----------------------------------------------------------
இந்தியா சீனா போர் வருமா?
போர் வந்தால் இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா?
உலகப்போர் மூளுமா?
அமெரிக்கா ரஷ்யா மீது போர் தொடுக்குமா?

கழுத்தை நெரிக்கும் கேள்விகள் இவை. இவற்றுக்குப் 
பதில் தேடாமல் வெறுமனே கடந்து போக முடியாது.
இக்கேள்விகளை விளையாட்டுக்கள் என்று 
எடுத்துக் கொள்வோம். இவற்றை ஒத்துழைப்பற்ற  
விளையாட்டுக்கள் (non cooperative games) என்கிறார் நாஷ்.
இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா என்ற கேள்விக்கு 
சீனா பதில் சொல்லாது. எனவே இது ஒத்துழைப்பற்ற 
விளையாட்டு. எனவே பதிலை நாம்தான் தேட வேண்டும்.

பதிலை எப்படித் தேடுவது? முடிவெடுப்பவர்கள் அல்லது 
எழுத்தாளர் ஜெயமோகன் பாணியில் சொன்னால் 
விதி சமைப்பவர்கள் (decision makers) என்ன செய்வார்கள் 
என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இங்குதான் நாஷ் சமநிலை பயன்படுகிறது.
கொடுக்கப்பட்ட சூழல் (இந்தியா மீது சீனா அணுகுண்டு 
வீசுமா?)  ஒரு முடிவுறு விளையாட்டு (finite game) 
என்கிறார் நாஷ். ஒவ்வொரு முடிவுறு விளையாட்டுக்கும் 
ஒரு  தீர்வு உண்டு என்கிறார் நாஷ். 
.  
இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 
நயன்தாராவுக்கும் அவனுக்கும் திருமணம் நடக்குமா 
என்று கேட்கிறான் ஒரு இளைஞன்.
இந்தக் கேள்வியை ஒரு விளையாட்டு என்கிறார் நாஷ். 
இது முடிவுறு விளையாட்டு! எனவே இதற்குத் தீர்வு 
உண்டு. மேலும் இது ஒத்துழைப்பற்ற விளையாட்டு. 
ஏனெனில் விதி சமைப்பவரான நயன்தாரா 
இளைஞனின் கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டார். 
எனவே  நாஷ் சமநிலையைப் பயன்படுத்தி நாம்தான் 
இதற்குத் தீர்வு கண்டாக வேண்டும். அன்றாட 
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இதுபோன்ற அத்தனை 
சிக்கல்களுக்கும் ஒரு நாஷ் சமநிலையை 
உருவாக்கித்  தீர்வு காண இயலும். இதுதான் 
விளையாட்டுக் கோட்பாட்டின் மகிமை! 

இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா?
-------------------------------------------------------------
இக்கேள்விக்கு நாஷ் சமநிலையைப் பயன்படுத்தி 
விடை காணலாம். இந்தியா சீனா இரண்டுமே அணுஆயுத 
நாடுகள். அணுஆயுதங்களைப் பிரயோகிப்பது என்றால் 
இருதரப்பும் பிரயோகிக்கும். அத்தோடு இருதரப்பும் 
பரஸ்பரம் சர்வ நாசத்தைச் சந்தித்து மண்ணோடு 
மண்ணாகப் போகும்..

இரண்டு நாடுகளுமே அறிவார்ந்த நாடுகள். எனவே 
இவ்விருவரும் மிகச் சிறந்த முடிவையே எடுப்பார்கள்.
அதாவது அணுஆயுதங்களைப் பிரயோகிக்கக் கூடாது 
என்ற முடிவையே எடுப்பார்கள். அதன் மூலம் நாஷ் 
சமநிலையை இருவரும்  பேணிக் கொள்வார்கள் 

ஒவ்வொரு தரப்பும் நாஷ் சமநிலையில் 
இருக்கும்போதுதான் அதிகபட்ச ஆதாயத்தைப் பெற 
முடியும். நாஷ் சமநிலையில் இருந்து விலகினால் 
இழப்புத்தான் ஏற்படும். 

அணுஆயுதங்களைப் பிரயோகிப்பது என்பது 
நாஷ் சமநிலையில் இருந்து விலகுவதாகும்.
அது இழப்பை ஏற்படுத்துவதால் அதை  யாரும் 
விரும்ப மாட்டார்கள்.

எனவே எந்த நிலையிலும் சீனா இந்தியா மீது 
அணுகுண்டை வீசாது. சீனா மட்டுமல்ல, உலகின் 
எந்த ஒரு அணுஆயுத நாடும் பிறிதொரு அணுஆயுத 
நாட்டின் மீது அணுகுண்டை வீசாது. எந்த ஒரு 
நாடும் நாஷ் சமநிலையில் இருந்து 
விலக முன்வராது. கனியிருப்பக் காய் கவர்ந்து 
இழப்பை ஏற்க  எந்த நாடும் தயாராக இருக்காது.  

ஆக இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் 
நாஷ் சமநிலையைப் பேணுவதையே விரும்பும். 
இவ்வாறு நாஷ் சமநிலை நிரந்தரமாகப் 
பேணப்படுவதால் இனி இந்த பூமியில் 
அணுஆயுதப் பிரயோகம் இருக்காது. 
போர்களும் இருக்காது. 
ஏனெனில் இது புதியதோர் உலகம்!
***********************************----------------
(நன்றி: அறிவியல் ஒளி மார்ச் 2022) 

   
 
 

 

    
       



  

  
 
        
  
 
       
  




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக