வியாழன், 15 ஜூன், 2023

உயிர் என்றால் என்ன? இதன் தத்துவ விளக்கம் என்ன?
---------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------
மொத்தப் பிரபஞ்சத்திலும் தலையாயது உயிர். மனித 
உயிர் மட்டுமல்ல, 'பாரமேசியம்' (paramecium) என்னும் 
ஒரு செல் உயிரியும் உயிர் என்பதில் அடங்கும். 
பொருட்கள் அணுக்களால் ஆனவை என்பதைப்போல, 
வாழும் உயிரினங்கள் அனைத்தும் செல்களால் ஆனவை. 

ராபர்ட் ஹூக் (Robert Hooke 1635-1703) என்னும் ஆங்கில 
விஞ்ஞானியே  செல்களை முதன் முதலில் கண்டறிந்தார்.
கண்டறிந்த ஆண்டு 1665. இன்றைக்கு 350 ஆண்டுகளுக்கு 
முன்பே செல்கள் கண்டறியப் பட்டு விட்டன. ராபர்ட் ஹூக் 
உயிரியல் அறிஞர் மட்டுமின்றி இயற்பியல் அறிஞரும் 
ஆவார். பள்ளி வகுப்புகளில் இவரின் ஹூக்கின் விதி 
(Hooke's law) பற்றிப் படித்தவர்கள் நாம்.    

மனிதன் என்பவன் மிகப்பெரிதும் சிக்கலானதும் 
பல்வேறுபட்ட செல்களைக் கொண்டதுமான 
(multicellular and highly complex) உயிரி ஆவான். 
200 வகையான வேறுபட்ட செல்கள் மனித உடலில் 
உள்ளன என்று கண்டறியப்  பட்டுள்ளது. 

கோடானுகோடி செல்கள்!
----------------------------------------
மனித உடலில் எத்தனை செல்கள் இருக்கின்றன என்று 
அறிந்து கொள்ளும் முயற்சியை  உயிரியல் 
விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இஸ்ரேல் நாட்டின் 
வெயிஸ்மான் அறிவியல் நிறுவனத்தின் 
(Weizmann Institute of Science) கடைசியாக வந்துள்ள 
மதிப்பீடுகளின்படி, மனித உடலில் 
30 டிரில்லியன் செல்கள் (human cells) உள்ளன என்று 
கண்டறியப் பட்டுள்ளது. (1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி).

ஒரு யானையின் உடம்பில் 150 டிரில்லியன் செல்கள் 
உள்ளன என்று மதிப்பிடப் படுகிறது. யானை மனிதனை 
விடப் பெரியது. ஒரு சராசரி ஆசிய மனிதனின் நிறை 
60 கிலோகிராம் என்றால், ஒரு சராசரி  ஆசிய 
யானையின் நிறை 2.25 டன் முதல் 5.5 டன் வரை
இருக்கும். (1 டன் = 1000 கிலோகிராம்). அதிகமான 
செல்களை யானை கொண்டிருப்பதற்கு அதன் 
அதிகமான நிறை பிரதான காரணம் ஆகும்.  .      

மனித உடலின் செல்கள் தனித்தன்மை வாய்ந்த 
கட்டமைப்பும் செயல்பாடும் (structure and function) 
கொண்டவை. மனித உடலின் செல்களில் 
ரத்தச் சிவப்பணு செல்களே (red blood cells) மிகவும் 
அதிகம்; இவை மனித உடலின் மொத்தமுள்ள 
செல்களில் 84 சதவீதம் உள்ளன.

ஒரு செல் பாக்டீரியாக்கள்!
----------------------------------------- 
மனித செல்கள் (human cells) மட்டுமின்றி பாக்டீரியா 
செல்களும் மனித உடலில் உள்ளன. அதிர்ச்சிகரமாக 
இருந்தபோதிலும் இது உண்மையே. கடைசியாக 
வெளிவந்த இஸ்ரேல் விஞ்ஞானிகளின் மதிப்பீட்டின்படி 
மனித உடலில் 38 டிரில்லியன் பாக்டீரியா செல்கள் 
(bacterial cells) உள்ளன. 30 டிரில்லியன் மனித செல்களுடன்
38 டிரில்லியன் பாக்டீரியா செல்களும் மனித 
உடலில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான 
பாக்டீரியாக்கள் தீங்கு செய்யாதவை. சில பக்டீரியாக்கள் 
உடலுக்கு நம்மை செய்பவை. வெகு சிலவே  
தீங்கு செய்பவை.  
-
பாக்டீரியாக்கள் ஒரு செல் உயிரிகள். இவை பல்வேறு 
வகைப்பட்டவை.  பொதுவாக இவை அரை மைக்ரோமீட்டர் 
முதல் 5 மைக்ரோமீட்டர் வரை நீளம் உள்ளவை 
(0.5-5.0 micrometer). இவற்றுக்கு மாறாக மனித செல்கள் 
அளவில் பெரியவை மட்டுமின்றி சிக்கலும் நுட்பமும் 
நிறைந்தவை.  


உயிரின் ஏழு செயல்பாடுகள்!
----------------------------------------------
உயிர் என்பது ஏழு வகையான செயல்பாடுகளை 
மேற்கொள்கிறது என்று விஞ்ஞானிகள் வரையறுத்து 
உள்ளனர். இச்செயல்பாடுகள் அனைத்தும் இயக்கப் 
போக்குகள் (processes) ஆகும். அவையாவன:-
1) உயிரானது வளர்சிதை மாற்றம் அடையும் (Metabolism)
2) தன்னை மறுஉற்பத்தி செய்யும் (Reproduce) 
3) சூழலுடன் எதிர்வினை ஆற்றும்.
 (Sensitive to the environment)
4) புறச்சூழலுக்கு ஏற்றவாறு அகச்சமநிலையைப் பேணும்  
(Homeostasis)   
5) கழிவுகளை வெளியேற்றும் (Excrete)
6) தனக்கான உணவை உண்டாக்கும் (Nutrition).
7) வளரும் (Growth) 

இந்த ஏழு செயல்பாடுகளையும் எளிதில் நினைவில் 
கொள்ள பின்வரும் சொற்சுருக்கத்தை (Mnemonic)
மனத்தில் பதிக்கலாம்: MR SHENG.

உயிர் என்பதன் தெளிவான வரையறை!
---------------------------------------------------------------
உயிர் என்பது புரியாததோ, வரம்புக்குள் அடங்காததோ 
வரைமுறைக்கு ஆட்படாததோ அல்ல. அது புதிரும் அல்ல.
உயிரியல் விஞ்ஞானிகள் மேற்கூறிய ஏழு வகையான 
செயல்பாடுகளை மேற்கொள்கிறது உயிர் என்று 
கண்டறிந்துள்ளனர்.

இவ்வேழு செயல்பாடுகளையும் மனித உயிர்கள் மட்டுமின்றி 
ஒரு செல் உயிரிகளான அமீபா (amoeba), யூக்ளினா (euglena)
போன்றவையும் மேற்கொள்கின்றன. இந்த ஏழு 
செயல்பாடுகளில் ஒன்று குறைந்தாலும் அதை உயிர் 
என்று வரையறுக்க இயலாது. உயிருள்ளவை உயிரற்றவை 
என்னும் இரண்டையும் பிரித்தறிய உதவுபவை இவ்வேழு 
செயல்பாடுகளுமே. ஆக இவ்விதமாக உயிர் என்பதை 
மிகவும் கறாராக வரையறுத்துள்ளது அறிவியல். 

தத்துவம் என்பது என்ன?
-------------------------------------
இனி தத்துவத்துக்குள் இறங்குவோம். உயிர் என்பதன் 
அறிவியல் வரையறையைப் பார்த்தோம். இனி உயிர் 
என்பதை தத்துவம் எவ்வாறு பார்க்கிறது என்று 
அறிந்திடுவோம்.

தத்துவம் (philosophy) என்றால் என?அதன் வரையறை யாது?
அனைத்து இயற்கை அறிவியல் மற்றும் சமூகவியல் 
துறைகளின் பொது விதிகளைக் கண்டறிந்து அவற்றின்
ஒருங்கிணைந்த சாரத்தை எடுத்து இயம்புவதே 
தத்துவம் ஆகும். தத்துவம் என்பது அனைத்து 
இயல்களின் பொதுமையாக்கம் (generalisation) ஆகும்.
சுருங்கக் கூறின், கணிதம் இயற்பியல் முதல் வரலாறு 
இலக்கியம் வரையிலான அனைத்துத் துறைகளின்
சாரத்தைப் பொதுமையாக்கம் செய்தலே தத்துவம் ஆகும்.

பொருள்முதல்வாதம்!
---------------------------------
உலகில் இதுவரை தோன்றிய தத்துவங்கள் அனைத்தையும் 
இரண்டு பெரும் பிரிவுகளாகப்பிரிக்கலாம். அதாவது 
எந்தவொரு தத்துவமும் பின்வரும் இரு வகைமைக்குள் அடங்கும்.
1) பொருள்முதல்வாதம் (materialism)
2) கருத்துமுதல்வாதம் (idealism).

தத்துவங்களை இவ்வாறு இரு பெரும் வகைமைக்குள் 
அடக்கியவர் மார்க்சிய மூல ஆசான்களில் ஒருவரான 
பிரடெரிக் எங்கல்ஸ் (Frederick Engels 1820-1895) ஆவார்.
பொருள்முதல்வாதம் என்பது பொருளை முதன்மையாகக் 
கொண்டாடும் தத்துவம் ஆகும். அதாவது பொருளின் 
விதிகளாலேயே இப்பிரபஞ்சம் இயங்குகிறது என்று 
வரையறுக்கும் தத்துவம். இயற்கை, மனித சிந்தனை,
சமூகம் ஆகிய இம்மூன்றும் பொருளை முதன்மையாகக்
கொண்டவை என்றும் பொருளின் விதிகளால் 
இயங்குபவை என்றும் கூறுவது பொருள்முதல்வாதம் 
(materialism) ஆகும்.


கருத்துமுதல்வாதம்!
-----------------------------
இதற்கு மாறாக, பொருள் அல்ல, சிந்தனையே 
முதன்மையானது என்றும் பொருளின் விதிகளால் அல்ல 
சிந்தனையின் விதிகளாலேயே இவ்வுலகம் இயங்குகிறது 
என்றும் கூறுவது கருத்துமுதல்வாதம் (idealism) ஆகும்.     

கடவுளை ஏற்கும் தத்துவங்கள் அனைத்தும் 
கருத்துமுதல்வாதம் ஆகும். இதற்கு மாறாக கடவுளை 
மறுக்கும் தத்துவங்கள் அனைத்தும் பொருள்முதல்வாதம் 
ஆகும்.

ஆதிசங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் 
கிறிஸ்துவத்தின் படைப்புக் கொளகை (theory of creation) 
ஆகியவை கருத்துமுதல்வாதம் ஆகும். அறிவியல் வழிப்பட்ட 
நாத்திகம் (scientific atheism) பொருள்முதல்வாதம் ஆகும்.

உயிரின் தத்துவம்! 
------------------------------
தத்துவ அரங்கில் உயிர் என்பது கடவுளின் படைப்பே 
என்றும் சிந்தனையே உயிரைப் படைத்தது என்றும் 
மேற்கத்திய படைப்புக் கொள்கை (theory of creation) 
கூறுகிறது. மேற்கத்திய மற்றும் கீழ்த்திசை (oriental)
மதங்கள் அனைத்தும் கடவுளின் சிந்தனையின் 
விளைவாகவே உயிர்கள் படைக்கப்பட்டன என்று
கூறுகின்றன. இவை அனைத்தும் கருத்துமுதல்வாதக் 
கண்ணோட்டம் ஆகும்.

இதற்கு மாற்றாக சார்லஸ் டார்வினின் (Charles Darwin 1809-1882)
பரிணாமக் கொள்கையை (Theory of evolution) நவீன 
அறிவியல் முன்வைக்கிறது. உயிரை எந்தக் கடவுளோ 
அல்லது சாத்தானோ படைக்கவில்லை என்றும் பரிணாம 
வளர்ச்சியே ஓரறிவு உயிரி முதல் ஆறறிவு மனிதன் வரை 
தோன்றுவதற்குக்  காரணம் என்றும்  நவீன அறிவியல்
தெளிவுறுத்துகிறது. இது பொருள்முதல்வாதக் 
கண்ணோட்டம் ஆகும்.

தொடர்ச்சியான தத்துவ  விசாரணையில் உயிர் என்பது 
பொருளா அல்லது சிந்தனையா என்ற கேள்வி 
முதன்மை பெறுகிறது. அதாவது உயிரானது பொருளா 
அல்லது கருத்தா என்பதே இக்கேள்வியின் பொருத்தமான 
வடிவம்  ஆகும். உயிர் என்பது கருத்தே என்று 
கருத்துமுதல்வாதமும், இதை மறுத்து உயிர் என்பது
பொருளே என்று பொருள்முதல்வாதமும் தத்தம் 
தரப்பை முன்வைக்கின்றன. இவ்விரண்டு மாறுபட்ட
நிலைகளில் எது சரி என்று கண்டறிவதே இக்கட்டுரையின் 
நோக்கம் ஆகும்.   

உயிர் என்பது பொருளே!
-------------------------------------
உயிர் என்பது பொருளா கருத்தா (matter or idea) என்ற 
கேள்விக்கு விடையளிக்குமுன் உயிர் என்பதை கறாராக 
வரையறுத்து விடுவோம். உயிர் என்பது என்ன? 
உடலின் பிரதான உறுப்புக்களின் ஒருங்கிணைந்த 
கூட்டுச் செயல்பாடே (integrated whole) உயிர் எனப்படும்.
இங்கு பிரதான உறுப்புக்கள் என்பது கவனத்துக்கு 
உரியது. ஏனெனில் கை கால்களை விபத்தில் இழந்த 
பின்னரும் மனிதனால் உயிர் வாழ முடிகிறது.  எனவே 
உயிர் என்பது மூளை, இதயம் போன்ற பிரதான 
உறுப்புக்களின்  ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடே 
என்பது பெறப்படுகிறது. உடல் இயக்கத்தின் நுண்செயல்கள் 
எல்லாவற்றின் ஒட்டுமொத்தமே (The infinitesimal functions of the body)
உயிர் ஆகும்.

உயிர் என்பது தேங்காய் மாங்காய் போன்றோ அல்லது 
புரோட்டான், எலக்ட்ரான் போன்றோ நோக்கி அறியத்தக்க 
(observable) தனித்த ஒரு பொருள் போன்றதல்ல. எனினும் 
உயிர் என்பது பொருளே! அது ஒருபோதும் கருத்து அல்ல. 

புலச்செயல்பாடே உயிர்!
------------------------------
மின்புலம், காந்தப் புலம் பற்றி அறிவோம். ஒரு மின்னேற்றத்தை
(a single electric charge) ஒரு இடத்தில் வைத்தால் அதைச்சுற்றி
ஒரு புலம் உண்டாகி விடும். அது மின்புலம் ஆகும். அறிவியலின்
வரையறைப்படி மின்புலம் (electric field) ஒரு பொருள் ஆகும்.
எப்படியெனில் மின்புலத்திற்கு ஒரு பௌதிக இருப்பு
(physical existence) உண்டு. அண்ட வெளியில் (space)
மின்புலம் உணரப் படுகிறது. பௌதிக இருப்பு உடைய
எதுவும் ஒரு பொருளே ஆகும். எனவே மின்புலம் ஒரு பொருள் ஆகும்.

இது போலவே ஒரு இடத்தில் ஒரு காந்தத்தை வைத்தால்
அதைச்சுற்றி ஒரு காந்தப்புலம் (magnetic field) உண்டாகி
விடுகிறது. காந்தப் புலத்திற்கு பௌதிக இருப்பு உண்டு.
ஆண்ட வெளியில் அது உணரப்படுகிறது. எனவே
காந்தப்புலமும் ஒரு பொருளே ஆகும்.

மின்னேற்றத்தைச் சுற்றி மின்புலம் உணரப் படுவதைப் போல,
காந்தத்தைச் சுற்றி காந்தப்புலம் உணரப்படுவது போல
உயிரைச் சுற்றி உயிரின் இயக்கம் உணரப் படுகிறது.
அண்ட வெளியில் உயிரின் இயக்கம் உணரப்படுவதால்
உயிருக்கு பௌதிக இருப்பு உண்டு என்று ஆகிறது. எனவே
உயிரும் ஒரு பொருளே ஆகும். மின்புலமும்
காந்தப்புலமும் எவ்வாறு பொருள் என்ற வகைமையில்
கொண்டுவரப் பட்டுள்ளதோ அதைப்போன்றே
உயிரும் பொருள் என்ற வகைமைக்குள் வருகிறது.
ஒரு விஷயம் பொருளா அல்லது கருத்தா என்பதை
எது தீர்மானிக்கிறது? அதற்கு பௌதிக இருப்பு
(physical existence) இருக்கிறதா இல்லையா என்ற அம்சம்தான்
தீர்மானிக்கிறது. உயிருக்கு பௌதிக இருப்பு
(physical existence) இருக்கிறது என்பது பிரத்தியட்சமாக
எவரும் உணரக் கூடியது.
உடலுக்கு மட்டும்தான் பௌதிக இருப்பு உண்டு என்றும்
உயிருக்கு இல்லை என்றும் கருதுவது சரியல்ல.
உடலின் பல்வேறு இயக்கங்களின் ஒருங்கிணைந்த
மொத்தமே (integrated whole) உயிர் ஆகும். உயிரின் இருப்பு
உயிரைச் சுற்றியுள்ள உடலில் உணரப்படுகிறது. அதாவது
அண்ட வெளியில் உணரப்படுகிறது. எனவே உயிர்
என்பது அறிவியலின் வரையறைப்படி பொருளே ஆகும்.
அது ஒருபோதும் கருத்து ஆகாது. ஏனெனில் உயிருக்கு
பௌதிக இருப்பு உண்டு. கருத்துக்கு பௌதிக இருப்பு
அறவே கிடையாது. கருத்து என்பது மானசீகமானது மட்டுமே.

பொருள் என்பது மனத்தைச் சாராமல், மனத்திற்கு
அப்பால் புறநிலையில் நிலவுகிற ஒரு மெய்ம்மை
(an objective reality) ஆகும். உங்கள் வீட்டுக் கொல்லையில்
ஒரு முருங்கை மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அங்கு முருங்கை மரம் இல்லை என்று நீங்கள் நினைப்பதால்
அது இல்லாமல் போய்விடுவதில்லை. அதாவது அம்முருங்கை
மரத்தின் இருப்பு உங்கள் மனத்தைச் சாராமல் சுயேச்சையாக
இருப்பதாகும்.

அதைப்போலவே உயிர் என்பதும் ஒருவரின் மனத்தைச்
சாராமல் மனத்திற்கு அப்பால் சுயேச்சையாக நிலவுவதாகும்
(biological life is an objective reality). மேலும் உயிர் என்பது
பௌதிக இருப்பு உடையதாகும். எனவே உயிர் என்பது
ஒருபோதும் கருத்தாகாது. ஏனெனில் கருத்துக்கு பௌதிக
இருப்பு இல்லை; அத்தோடு கருத்து என்பது புறநிலையில்
இல்லாமல் மானசீகமாக இருப்பது (not an objective reality).
ஆகவே உயிர் என்பது முற்றிலும் பொருளே ஆகும்.
இது அறிவியல் வழியிலும் பொருள்முதல்வாதத் தத்துவ
வழியிலும் இக்கட்டுரையில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
**********************************************************


 

   
           
 
 

    

   


   .

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக