சனி, 17 ஜூன், 2023

 Biological life
--------------
உயிர் என்றால் என்ன?
உயிர் என்பது பொருளா அல்லது கருத்தா?
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
பொருள் குறித்த மார்க்சிய வரையறை என்பது
லெனின் கூறியதே. பொருள் என்பது புறநிலை
யதார்த்தம் (objective reality) என்கிறார் லெனின்.
இது பொருளைப் பற்றிய தத்துவார்த்த வரையறை
ஆகும். பொருள் குறித்த நவீன அறிவியலின்
வரையறை இன்று மிகவும் கறாராக உள்ளது. நிற்க.
பொருளுக்கு பௌதிக இருப்பு உண்டு. ஆனால்
கருத்துக்கு பௌதிக இருப்பு எதுவும் கிடையாது.
உயிர் என்பது என்ன? எலக்ட்ரான் போன்றோ
நியூட்ரான் போன்றோ புள்ளியியல் விதிகளுக்குக்
கட்டுப்படுகிற துகள் போன்றதல்ல உயிர்.
எனினும் உயிர் என்பது ஒரு பொருளே (matter).
மின்புலம், காந்தப் புலம் பற்றி அறிவோம்.
ஒரு எலக்ட்ரிக் சார்ஜை ஒரு இடத்தில் வைத்தால்
அந்த சார்ஜைச் சுற்றி ஒரு புலம் உண்டாகி விடும்.
அது மின்புலம் ஆகும். அறிவியலின் வரையறைப்படி
மின்புலம் (electric field) ஒரு பொருள் ஆகும்.
எப்படியெனில் மின்புலத்திற்கு ஒரு physical existence உண்டு. இந்த வெளியில் (space) ஒரு இடத்தில் மின்புலம் உணரப் படுகிறது.
எலக்ட்ரிக் சார்ஜைச் சுற்றி மின்புலம் உணரப் படுவதைப் போல, உயிரைச் சுற்றி உயிரின் இயக்கம் உணரப் படுகிறது. எனவே உயிர் ஒரு பொருளே.
ஒரு விஷயம் பொருளா அல்லது கருத்தா என்பதை
எது தீர்மானிக்கிறது? அதற்கு physical existence
இருக்கிறதா இல்லையா என்ற அம்சம்
தீர்மானிக்கிறது. உயிருக்கு பௌதிக இருப்பு
(physical existence) இருக்கிறது என்பது பிரத்தியட்சமாக
எவரும் உணரக் கூடியது.
உடலுக்கு மட்டும்தான் பௌதிக இருப்பு உண்டு என்றும்
உயிருக்கு இல்லை என்றும் கருதுவது சரியல்ல.
உடலின் பல்வேறு இயக்கங்களின் ஒருங்கிணைந்த
மொத்தமே (integrated whole) உயிர் ஆகும். எனவே உயிர்
என்பது அறிவியலின் வரையறைப்படி பொருளே ஆகும்.
அது ஒருபோதும் கருத்து ஆகாது. ஏனெனில் உயிருக்கு
பௌதிக இருப்பு உண்டு.
உயிர் என்பது கருத்து என்றால், அது கருத்தின்
விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி இல்லை
என்று எவரும் உணரலாம். உங்கள் தோட்டத்தில்
ஒரு தென்னை மரம் இருக்கிறது என்று வைத்துக்
கொள்ளுங்கள். அந்தத் தென்னை மரம் முறிந்து
விட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது
முறிந்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி
நடக்கிறதா? இல்லை. உங்களின் விருப்பத்துக்கு
அப்பாற்பட்டு அந்த மரம் இருக்கிறது.
அது போல, ஒரு உயிர் என்பது நமது விருப்பத்துக்கு
அப்பாற்பட்டு இயங்குவது. அது கருத்தின் விதிகளால்
இயங்குவதில்லை. அது பொருளின் விதிகளால்
இயங்குகிறது. எனவே உயிர் என்பது பொருளே.
************************************************
உயிர் என்பது பொருளே என்பதற்கான நிரூபணம்!
உயிர் என்பது பொருளா? கருத்தா?
பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
ஒளியும் இருளும் இருமைகள் (binaries). அதாவது
வெளிச்சமும் இருட்டும் இருமைகள் என்று புரிந்து
கொள்க. இது போன்றதே உயிரும் உயிரின்மையும்.
இப்பிரபஞ்சத்தில் பல அடிப்படையான விஷயங்கள்
(அனைத்தும் அல்ல) பைனரியாக இருக்கின்றன.
இன்னுமொரு உதாரணம்: காந்தத்தின் கவர்தல்
மற்றும் விலக்கல் (attraction and repulsion) விசைகள்.
காந்தத்தின் கவர்ச்சி விசையும் விலக்கல் விசையும்
mutually exclusiveஆக இருக்கின்றன. அதாவது அவை
இரண்டும் ஒன்றையொன்று விலக்கும் தன்மை
உடையவை. ஒன்று நிகழும்போது
மற்றொன்று நிகழாது; நிகழ இயலாது. ஒன்றின்மீது
ஒரு காந்தத்தின் கவர்ச்சி விசை செயல்படும்
அதே நேரத்தில் அதன் மீது அதே காந்தத்தின் விலக்கல்
விசை செயல்படாது. இவ்விரு விசைகளும்
mutually exclusiveஆக இருக்கின்றன. இதைப்போலவே
உயிரும் உயிரின்மையும் ஒன்றையொன்று
விலக்குபவை (mutually exclusive). நிற்க.
பொருட்கள் அணுக்களால் ஆனவை; அணுக்கள்
துகள்களைக் கொண்டிருப்பவை என்று நாம்
அறிந்திருக்கிறோம். இது அணுக்கரு இயற்பியல்
கற்பித்த, பொருட்களைப் பற்றிய தொடக்கநிலை
அறிவு.
1920கள் முதற்கொண்டு குவாண்டம் விசையியல்
திரட்சி அடைந்து, குவாண்டம் புலக்கொள்கை
(quantum field theory) பிறந்தது. இது அதுகாறும் நிலவி
வந்த துகள் கொள்கைக்கு முடிவு கட்டியது.
அ) Quantum Electro Dynamics
ஆ) Quantum Chromo Dynamics
ஆகியவை நிரூபிக்கப்பட்ட குவாண்டம் புலக்
கொள்கைகள்.
இவற்றின்படி, துகள்கள் அல்ல, புலங்களே
பிரதானமானவை. துகள்கள் என்பவை
புலங்களின் மீதான கிளர்ச்சியுறுதல்கள்
(excitations) மட்டுமே!
உயிரைப் பற்றிய இக்கட்டுரையில் குவாண்டம்
கொள்கைக்கு என்ன தேவை என்று வாசகர்கள்
வியப்புறலாம். பொருட்களைப் பற்றிய நமது
பார்வையை, அறிவை குவாண்டம் புலக்கொள்கை
மாற்றி அமைத்திருக்கிறது என்பதை நாம்
உணர வேண்டும்.
முன்பு அணுக்களும் துகள்களும் பெற்றிருந்த
முக்கியத்துவத்தை இன்று புலங்கள் பெற்றிருக்கின்றன.
மின்புலம் (electric field)
காந்தப் புலம் (magnetic field)
ஈர்ப்புப் புலம் (gravitational field)
ஹிக்ஸ் புலம் (Higgs field)
ஆகிய புலங்கள் பற்றி நாம் அறிவோம்.
உயிர் என்றால் என்ன? உடலின் பிரதான உறுப்புகளின்
ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடுதான் உயிர் ஆகும்.
இக்கூட்டுச் செயல்பாடு தொடர்ச்சியாக இருப்பதால்
உயிர் என்பதை உடலின் பிரதான உறுப்புகளின்
ஒருங்கிணைந்த நிகர இயக்கம் (the resultant) என்று
வரையறுக்கலாம்.
தீப்பற்றி எரிதலை நாம் அறிவோம். தீப்பிடித்து எரிவது
என்பது ஒரு நிகழ்வு; ஒரு process; ஒரு வேதியியல் வினை
(chemical reaction). உயிரின் இயக்கம் என்பதும் தீயின்
இயக்கம் போன்றதே; அதாவது தீப்பிடித்து எரிவது
போன்றதே. எரிபொருளோ அல்லது ஆக்சிஜனோ
தீர்ந்து போனால், தீ அணைந்து விடும்.
அது போலவே உயிரின் இயக்கத்திற்குத் தேவையான
ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் உயிர் போய்விடும்.
ஆக்சிஜன் மட்டுமின்றி, உடலின் இயக்கத்திற்குத்
தேவையான எந்த ஒன்றும் கிடைக்காவிட்டாலும்
அல்லது உறுப்புக்களின் செயல்பாடு முடங்கி
விட்டாலும் உயிர் எனப்படும் நிகர இயக்கம்
நின்று விடும். The infinitesimal functions of the body என்பவையே உயிரின் இயக்கத்தின் அடையாளம்
நிழல் விழுதல், கிரகணம் ஏற்படுதல் ஆகியவை
நிகழ்வுகள். இவற்றுக்கு பௌதிக இருப்பு உண்டு.
இவற்றின் செல்வாக்கை (influence) அண்ட வெளியில்
உணர இயலும். புலங்கள் அனைத்துக்கும் பௌதிக
இருப்பு உண்டு.
பொருள் பற்றிய அறிவியலின் இலக்கணம் இதுதான்:
பௌதிக இருப்பு உடையதே பொருள் என்பதுதான்
பொருளின் இலக்கணம். எனவே மின்புலம், காந்தப்
புலம் போன்ற புலங்கள் ஆகட்டும், நிழல் விழுதல்
கிரகணம் போன்ற நிகழ்வுகள் ஆகட்டும் இவை
அனைத்தும் பௌதிக இருப்பு உடையவை. எனவே
இவை பொருள் எனற வகைமையில் வரும்.
அது போலவே உயிரும் ஒரு புலச் செயல்பாடுதான்.
மின்புலம் போன்றதே உயிர்ப்புலம் ஆகும்.
முன்புறம் என்பது பொருள் ஆகும். எனவே உயிரும்
பொருளே ஆகும். உயிர் என்பது பொருள் அல்ல
என்று கொண்டால், உயிர் என்பது கருத்து என்றாகி
விடும். இது அபத்தமான முடிவு ஆகும்.
பொருள் என்பதைப் பற்றிய வரையறையில்
பிரதான அம்சம் பௌதிக இருப்பு என்பதுதான்.
உயிறானது பௌதிக இருப்பை உடையது
என்பதால் அது பொருளே; பொருளன்றி வேறெதுவும்
அல்ல. QED.
*****************************************
சிறப்பான விளக்கம் ஐயா 👌.
அதே சமயம் உயிர் என்பது மெய்யியலாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உயிரைப் பொருளாக வரையறுப்பது ஒருபுறமிருக்க, உடலின் இயக்கமே உயிர், உடல் இயங்குவதை நிறுத்தி விட்டால் உயிர் அற்றுப் போய்விடுகிறது என்கிறோம்.
புவியீர்ப்பு விசை ஓர் இயக்கம், காந்தப்புலம் என்பது ஓர் இயக்கம், ஓடுவது, பறப்பது, சுற்றுவது இயக்கங்கள் என்பது போல உயிரும் இயக்கமே !
இயக்கங்களைப் 'பொருள்' (matter) என்கிற வரையறைக்குள்ளா கொண்டு வருகிறோம் ? பொருள்முதல் வாதத்துக்கான ஆதாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இயக்கம் என்பது physically existent , it is not just an idea என்பதால் அது கருத்து (idea) ஆகாது என்பது சரி. ஆனால் உடலின் ஒருங்கிணைந்த இயக்கத்திற்கான பெயர்தான் உயிரே தவிர, உயிர் எனத் தனியாக ஒன்றில்லையே ! 🤔
உடலின் இயக்கங்களெல்லாம் நின்று போய் விட்டால் உயிர் போய்விட்டது என்கிறோம் (பொருள்முதல் வாதம்). உயிர் போய்விட்டதால் உடலின் இயக்கங்கள் நின்று போய்விட்டன என்கின்றனர் எதிர்சாரார் (கருத்துமுதல் வாதம்).
உயிர் என்று ஒன்று தனியாக இருப்பதாக ஒத்துக் கொண்டால்தானே அது கருத்தா பொருளா என்கிற விவாதம் எழும் ?
ஒரு கூட்டியக்கத்திற்கு உண்டான பெயர் அவ்வளவுதான் என்றால் இந்தக் கேள்வியே எழாதே ! 🤔
(காந்தப்புலம் போன்றதன்று உயிர் என்று சொல்ல வருகிறேன். காந்தப்புலத்திற்கு எனத் தனிக் குணநலன்கள் உண்டு. ஆனால் உயிருக்குத் தனி குணநலன் கிடையாது. உடலின் இயக்கம் என்பதைத் தவிர அதற்கு வேறு எந்த குணநலனும் கிடையாது).
3
-------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக