சனி, 24 ஜூன், 2023

சோதிடம் என்பது முன்தீர்மானவாதம் (Predeterminism)!
சோதிடம் மட்டுமல்ல, எந்த ஒரு 
முன்தீர்மானவாதமும் அறிவியலுக்கு எதிரானது!
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
நிகழ்வுகள் அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப் 
பட்டவை என்று நம்புவதுதான் முன்தீர்மானவாதம் 
(Predeterminism). 

நேற்று நடந்தது,
இன்று நடப்பது,
நாளை நடக்க இருப்பது 
இப்படி அனைத்து நிகழ்வுகளும் முன்னரே தீர்மானிக்கப் 
பட்டவை. இந்த உலகில், இந்த பூமியில், இந்தப் 
பிரபஞ்சத்தில் நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் 
எந்த நிகழ்வாயினும் அது முன்னரே தீர்மானிக்கப் 
பட்டது என்று நம்புவதுதான் முன்தீர்மானவாதம்.
மனிதர்களின் செயல்கள் அனைத்தும் முன்னரே 
தீர்மானிக்கப் பட்டு விட்டான். அதன்படிதான் 
மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள் என்கிறது 
முன்தீர்மானவாதம்.  

அந்த வகையில் சோதிடம் என்பது முன்தீர்மானவாதம் 
ஆகும்.  முன்தீர்மானவாதம் அறிவியலுக்கு எதிரானது;
முற்றிலும் தவறானது. இந்தப் பிரபஞ்சத்தின் 
நிகழ்வுகளோ மனிதர்களின் செயல்களோ 
ஒருபோதும் முன்தீர்மானிக்கப் பட்டவை அல்ல.

கடவுள் அனைத்தையும் முன்தீர்மானித்து 
வைத்திருக்கிறார் என்பதோ, பிரம்மன் மனிதனின் 
தலையில் என்ன எழுதி இருக்கிறானோ 
அதன்படிதான் எல்லாம் நடக்கும் என்பதோ 
முற்றிலும் அறிவீனம் ஆகும். இல்லாத கடவுளோ  
அல்லது வேறு யாருமோ பிரபஞ்ச நிகழ்வு எதையும் 
முன்தீர்மானிக்கவில்லை. வானில் உள்ள 
கோள்களின் சஞ்சாரப்படிதான் மனிதனின் 
செயல்கள் அமையும் என்னும் முன்தீர்மானவாதம் 
அடிப்படையிலேயே தவறானது; 100 சதவீதம் 
தவறானது ஆகும்.

முன்தீர்மானவாதம் தவறு என்பதற்கான நிரூபணம்!
--------------------------------------------------------------------------------
இந்த உலகில், பூமியில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் 
மாறிக்கொண்டே இருக்கின்றன; இந்த மாற்றம் 
தொடர்ச்சியானது என்கிறார் ஜெர்மானியத் 
தத்துவஞானி ஹெகல் (Georg W F Hegel 1770-1831).
ஹெகலின் இந்தக் கருத்தையே காரல் மார்க்சும் 
அங்கீகரித்து "மாறும் என்னும் விதியைத் தவிர்த்து 
அனைத்தும் மாறும்" என்கிறார்.

அனைத்தும் மாறும் என்னும் இந்த விதி 
முன்தீர்மானவாதத்தின் மண்டையில் ஓங்கி அடிக்கிறது.
மாறிக்கொண்டே இருக்கும் ஒன்றை எப்படி 
முன்தீர்மானிக்க இயலும்? 

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இயங்கிக் 
கொண்டே இருக்கின்றன. இயக்கத்தின் போக்கில் 
மாறிக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறு மாறிக் 
கொண்டே இருக்கும் ஒன்றை எவர் ஒருவராலும் 
முன்தீர்மானிக்க இயலாது.

18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் லாப்லேஸ் என்னும் 
(Laplace 1749-1827) விஞ்ஞானி இருந்தார்; இவர் 
தத்துவஞானியும்கூட. இவர் படுபயங்கரமான 
முன்தீர்மானவாதியாக இருந்தார். இவரின் 
கோட்பாடு causal determinism ஆகும்.

லாப்லேஸின் முன்தீர்மானவாதம் தவறானது என்று 
அறிவியல் நிரூபித்துள்ளது. இருப்பினும் லாப்லேஸ்
மிகச்சிறந்த விஞ்ஞானி; கணித மேதை.
Laplace Transform படித்திருக்கிறீர்களா? கணிதத்தில் 
மிகப்பெரிதும் பயன்படுகிற ஒரு கருவி அது.

தலைவிதி (fate) என்று சொல்கிறோம். தமிழில் ஊழ் 
என்று சொல்லுகிறோம். 
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
என்கிறார் வள்ளுவர்.

"ஊழ்வினை உருத்து வந்தூட்டும்"  என்கிறார் 
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்.  

தலைவிதி (fate), ஊழ், கர்மா, வினைப்பயன் என்று 
பலவாறாகச் சொல்லப்படும் அனைத்தும் 
முன்தீர்மானவாதமே ஆகும். இவை அனைத்தும் 
தவறானவை! உணமை அற்றவை! அறிவியலுக்கு 
எதிரானவை. எனவே பிற்போக்கானவை!            
   
கயாஸ் தியரி (chaos theory) என்ற ஒன்று உண்டு.
குழப்பவாதக் கொள்கை என்று தமிழில்  இது
மொழிபெயர்க்கப் படுகிறது. 

"வண்ணத்துப்பூச்சி விளைவு" (Butterfly effect) என்ற 
ஒன்றை கயாஸ் தியரியைப் படித்தவர்கள் அடிக்கடி 
குறிப்பிடுவது உண்டு. அது என்ன விளைவு?
ராமன் விளைவு (Raman effect) போல நோபல் பரிசு 
பெற்றதா? இல்லை. வண்ணத்துப்பூச்சி விளைவு 
என்பது ஒரு அனுமானம்! அது என்ன சொல்கிறது?

சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு வண்ணத்துப்பூச்சி
சிறகடித்தால் அதன் காரணமாக சிகாகோவில் 
மழை பெய்யும் என்பதுதான் வண்ணத்துப் பூச்சி 
விளைவு.

வண்ணத்துப்பூச்சி விளைவும் சரி, கயாஸ் தியரியும்
சரி முன்தீர்மானவாதத்தின் மண்டையில் ஓங்கி 
அடிப்பவை. Chaos என்பதே Determinismக்கு நேர் 
எதிரிதான்! கயாஸ் தியரியும் Butterfly effectம் 
ஓங்கி அடித்ததில் சோதிடத்தின் மண்டை 
பிளந்து விட்டது.    

குவாண்டம் தியரி வந்த பின்னால், இயற்கையிலும் 
இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் ஒரு நிச்சயமற்ற 
தன்மை (indeterminacy) இருப்பதை அறிவியல் 
உலகம் உணர்ந்து கொண்டது. பிரபஞ்சம்  
முழுவதிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை இருப்பதை 
குவாண்டம் தியரி நிரூபித்து உள்ளது.

எனவே எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று 
கூறுவதற்கோ அல்லது எதிர்காலத்தில் இன்ன இன்ன 
நடக்கும் என்று கூறுவதற்கோ குவாண்டம் தியரி 
சிறிதளவும் இடமளிக்கவில்லை.

சோதிடத்தை எதிர்ப்பதற்காக இந்தக் கட்டுரை 
எழுதப் படவில்லை. ஏனெனில் சோதிடம் என்பது 
பொய் என்றும் போலி அறிவியல் என்றும் என்றோ 
நிரூபிக்கப் பட்டுவிட்டது. 

ஆனால் உலகளாவிய சமூகத்தில் சோதிடம் மட்டுமே 
ஒரே ஒரு முன்தீர்மானவாதமாக இருக்கவில்லை.
வேறு பலவும் இருக்கின்றன. ஏகப்பட்ட 
முன்தீர்மானவாதங்கள் முற்போக்கு முகமூடியுடன் 
திரிந்து கொண்டிருக்கின்றன. அவை இன்னும் அம்பலப் 
படவில்லை; அவற்றை யாரும் இன்றும் அம்பலப் 
படுத்தவில்லை; அதற்குயாரும் துணியவில்லை.
மேலும் இதர முன்தீர்மானவாதம் பற்றி அறிந்தோர் 
மிகக் குறைவே!

இந்தக் கட்டுரை சகல முன்தீர்மானவாதங்களையும் 
முறியடிக்க விரும்பும் கட்டுரை. அந்த திசைவழியில் 
இது முதல் கட்டுரை! இதன் பேசுபொருளை 
நுண்மாண் நுழைபுலம் மிக்க வாசகர்கள் 
உய்த்து உணர்க!
**************************************************** 

வானிலை அறிக்கை என்பது நமது வளிமண்டலத்தைச்
சார்ந்தது; வளிமண்டலத்துக்குள் அடங்கி விடுவது.
வளிமண்டலத்து மேகங்களின் இயக்கம்,
கடலின் வெப்பம், பிற physical parametersன் இயக்கம் 
ஆகியவை ஒரு வரம்புக்குள் அடங்குபவை.
அவற்றின் இயக்கத்தை நுண்கருவிகளின் 
துணைகொண்டு நம்மால் கணிக்க இயலும்.

குக்கரில் சோறு வெந்து கொண்டு இருக்கிறது.
மூன்று விசில் வந்தால் குக்கரை அணைத்து 
விடலாம், சோறு வெந்திருக்கும் என்று
சமைக்கும் பெண் முடிவு செய்கிறாள். இது போன்ற 
எளிய தன்மை உடைய இயக்கங்களை மனிதனால் 
முன்கணிக்க இயலும். இதெல்லாம் முன்தீர்மானவாதம் 
ஆகாது.

தடையற்ற ஒரு பாதையில் நகரும் ஒரு பொருள் 
இன்ன நேரத்தில் சேர வேண்டிய இடத்தை அடையும் 
என்று அறிவியல் வழியில் கண்டிக்கிறோம். இது 
முன்தீர்மானவாதம் ஆகாது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறோம்.
அதன் பாதையை (trajectory) ஒவ்வொரு கணமும் 
தீர்மானிக்கிறோம். அது சந்திரயான் என்றால் 
சந்திரனைச் சுற்ற வேண்டும். மனிதனால் 
செயற்கைக்கோளை சந்திரனைச் சுற்ற வைக்க 
இயலும். இது முன்தீர்மானவாதம் ஆகாது.


இன்று காலை குவாண்டம் தியரி குறித்தும் 
அதன் தத்துவார்த்த விளைவு குறித்தும் 
ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளேன்.
வாசகர்கள் அந்தக் கட்டுரையையும் 
இந்த நேரத்தில் படித்து விடுவது நல்லது. 
       

 
   
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக